×

அமோக வாழ்வருளும் அஹோபில நரசிம்மர்கள்

ஆந்திரப் பிரதேசத்தில், ராயலசீமா பகுதியில் ‘நல்ல மலை’ என்ற மலைத் தொடர் ஒன்றுள்ளது. இந்த மலைத் தொடரில்தான் அஹோபிலம் என்ற  புகழ் பெற்ற வைணவத் தலம் இருக்கிறது. நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் இது ஒரு முக்கியமான க்ஷேத்ரமாகும். வடமொழியில் ‘அஹோ’  என்றால் சிம்மம், ‘பிலம்’ என்றால் குகை. அதேபோல, அஹோபிலம் என்ற சொல் மகாவிஷ்ணுவின் பலத்தை, பக்தி சிரத்தையுடன் வியப்போடு  எடுத்துச் சொல்லும் ஒரு சொல். அதாவது, ‘ஆஹா’ எனும் வியப்புச் சொல்லும், பலம் என்ற பராக்கிரமத்தை குறிக்கும் சொல்லும் இணைந்து  ‘அஹோபிலம்’ என்றாயிற்று என்றும் சொல்வார்கள்.  அதுதவிர சுற்றிலும் காடுகளும், குன்றுகளும் சூழ நரசிம்மர் பல்வேறு திருக்கோலங்களில்  எழுந்தருளியிருப்பதால் அழகுத் தமிழில் இத்தலத்தை ‘சிங்கவேள் குன்றம்’ என்றழைத்தனர்.

இந்த க்ஷேத்ரத்தில்தான் இரண்யகசிபு என்ற கொடூரமான அரக்கன் வாழ்ந்து வந்ததாகவும், ஒரு பெரிய மாளிகையில் இருந்து வந்ததாகவும் புராணங்கள்  சொல்கின்றன. இரண்யகசிபு அந்த மாளிகையினின்று இவ்வுலகையே, ஏன் இப்பிரபஞ்சத்தையே ஆள விரும்பினான். ‘தானே அனைத்திற்கும் அதிபதி’  எனும் ஆணவத்தோடு அலைந்தான். ஆனால், அவனால் அப்படியேதும் செய்ய முடியவில்லை. ஏனெனில், அந்த அரக்கனின் குழந்தை பிரகலாதனின்  கூக்குரலுக்கு இணங்கி மகாவிஷ்ணு அந்த மாளிகையின் விஸ்தாரமான கூடத்தில் ஒரு தூணினின்று ‘ஆளரி’யாக அதாவது, மனித உடல்  சிங்க  முகத்தோடு, அந்திப் பொழுதில் அவதாரமெடுத்தார். இரண்யகசிபுவை அரண்மனையின் வாசற்படிக்கு இழுத்துச் சென்று, மடியில் கிடத்தி தம்முடைய  சிங்கப் பற்களாலும், கூரிய நகங்களாலும் அவனை கிழித்து குடலை மாலையாக்கிக் கொண்டார். அந்த அரக்கனின் கொடுங்கோலாட்சிக்கு ஒரு முடிவு  கொண்டு வந்தார்.

அன்று முதல் இவ்விடம் அஹோபிலம் (‘ஆஹா, என்ன பலம்!’) என்ற பெயரால் வழங்கப்பட்டது. அஹோபிலம் என்பது ஒன்பது நரசிம்மர்  கோயில்கள் மட்டுமல்லாது, ஒட்டு மொத்த அந்த வனத்தையும் சேர்த்ததே ஆகும். ஏனெனில் வனத்திலுள்ள ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு  லீலைகளால் பெருமை பெற்றது. நரசிம்மர் விதவிதமான கோலத்தில் வனம் முழுதும் எழுந்தருளியிருக்கிறார். எம்பெருமானின் திருவடி தாங்கிய  புண்ணிய பூமி இது. இத்தலத்தை திருமங்கையாழ்வார் வியப்பூட்டும் வர்ணனைகளோடு, இன்றைக்கும் பொருத்தம் மிக்கதாக வர்ணித்திருக்கிறார்.  பன்னிரு ஆழ்வார்களில், திருமங்கை ஆழ்வார் கடைசியானவராதலால், ‘கடைக்குட்டி ஆழ்வார்’ என்றழைக்கப்படுகிறார். திருமாலைப் போற்றி 1084  பாசுரங்களைப் பதினோரு பத்துகளில் பாடி நெகிழ்ந்துள்ளார். இப்பாடல் தொகுப்பிற்கு ‘பெரிய திருமொழி’ என்று பெயர்.

அதில் முதல் பத்தில், ஏழாவது திருமொழியாக வரும் பிரசித்தி பெற்றது ‘அங்கண் ஞாலம்’ என்று துவங்கும் பாசுரம். இந்தப் பாசுரத்தில் அஹோபிலம்  என்கிற சிங்கவேள் குன்றத்தையும், நரசிம்மரையும் அதி அழகாக பிரமிக்கத்தக்க வகையில் அனுபவித்து நெகிழ்கிறார். ஆழ்வார், இந்த க்ஷேத்ரத்தை,  ‘சிங்கவேள் குன்றுடைய எங்கள் ஈசன்’ என்கிறார். இவ்விடத்தில் பகவான் சீரிய சிங்க மனிதனாக (ஆளரியாக) அவதாரம் செய்திருப்பதை உறுதி  செய்கிறார். குன்றம் என்றால் சிறிய மலை என்பது பொருள். ஆகவே, இவ்விடத்தை ஒரு மலைத் தொடராக, உடைந்த பாறைகளும், சீர் இல்லாத  கற்களும் நிறைந்திருக்கும் குன்றாக நிர்ணயித்து விளக்குகிறார். அடர்த்தியான மரங்கள் சூழ்ந்த இந்தக் கானகம், யாரும் எளிதில் நுழைந்துவிட  முடியாதபடி பயங்கரமாக விளங்குகிறது. அங்கு மூங்கிலும், நெரிந்த வேய் எனும் நெல்லியும், காய்ந்த வாகையாக பனை மரங்களும் நெருக்கமாக  வளர்ந்திருக்கின்றன.

வேகமான காற்று கானகத்தைச் சுழற்றும்போது வாகை மரங்களில் தொங்கும் காய்களில் கிலுகிலுப்பை போன்ற சப்தங்கள் எழுகின்றன. மூங்கில்கள்  ஒன்றோடு ஒன்று உராய்ந்து  காட்டுத் தீயை  உண்டாக்குகின்றன. அந்த தீ விசும்பு வரை செல்வதால் கானகமே செந்நிறமாக தோற்றமளிக்கிறது என்று  அந்த ஒட்டுமொத்த கானகத்தையும் நம் மனக் கண்ணில் கொண்டு வருகிறார். மேலும், சூர்ய வெப்பமும், காட்டு விலங்குகளின் திரிதலும், வேடர்களின்  ஊடுருவலும் கானகத்தை அதிபயங்கரமானதாகக் காட்டு வதால் மனிதர்கள் செல்ல இயலாதபடி தடையாக இவ்விடம் விளங்குகிறது. ஆனால்,  அதுபோன்ற இவ்விடங்களில் தெய்வங்கள்தான் செல்ல முடியும். அதை ‘தெய்வமல்லால் செல்ல ஒண்ணா...’ என்று   பாசுரத்தில் பரிதவிப்போடு  கூறி, அதனால்தான் இந்த பெரிய பெருமாள் நரசிம்மன் இங்கு எழுந்தருளியிருக்கிறானோ என்று வியந்து கண்ணீரில் கரைகிறார்.

அதுமட்டுமல்லாது நரசிம்மரின் உருவமைப்பைதான் எப்படி வர்ணிக்கிறார்! இவருடைய வாய் மெல்லுவதற்கு ஏற்றவாறு பெரியதாக திறந்துள்ளதை,  அமுதூறும் தமிழில், ‘மென்ற பேழ்வாய்’ என்கிறார். கூர்மையான மிக சக்தி வாய்ந்த சிங்கப் பற்கள் வெண்மையாக மிளிருகின்றன. அவர் கண்களை,  எரிகின்ற தீஞ்சிவப்பை ‘எரிந்த பைங்கண்’ என்கிறார். நகங்கள் கூர்மையாகவும், சிலிர்த்துப் பொங்கிய கோபம் வான் வரை சீற்றமாகப்  பரவியிருந்ததையும், ‘முளைத்த சீற்றம் விண்சுடப்போய்’ என்று விழி விரித்துச் சொல்கிறார். அந்தச் சீற்றத்தால் மூவுலகமும், மற்ற உலகங்களும்  அலறி நடுங்கி பயப்படுகின்றன. அவர் தோற்றம் யாவருக்கும் அச்சத்தை உண்டு பண்ணுகிறது.

மற்ற தெய்வங்கள் என்ன செய்வது என்று அறியாமல் இங்கும் அங்கும் ஓடி இது என்ன உருவம் (‘இது எவ்வுருவென்று?’) என்று ஒருவரை ஒருவர்  கேட்கிறார்கள். நான்முகனும், ஈசனும் இவரது சீற்றத்திற்கு அஞ்சி இந்த உருவை துதி பாடுகிறார்கள். அதனால் அவர்கள் நாக்கு தடித்துவிடுகிறது.  அதை, ‘நாத்தமும்ப நான்முகனும் ஈசனும் முறையால் ஏத்த’ என்று புகழ்கிறார் திருமங்கையாழ்வார். இந்த ஆளரி எனும் நரசிம்மர், இரண்யகசிபுவை  தன் மடியில் வைத்து அவனுடைய மார்பைக் கிழித்தெறிந்து மாய்த்தார். ஆனால், யார் இந்த உருவில் வந்துள்ளது என்று கேட்டால், அவர் வேறு யாரும்  அல்லர், அவர் ஆயிரம் தோளுடையர், அவர் மார்பில் ‘அல்லி பாதர் புகல் நிற்க’ இருக்கிறவர் என்று மிக அழகான வர்ணனைகளோடு ஆனந்தமாகத்  தெரிவிக்கிறார், ஆழ்வார்.

‘‘மென்றபேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் அவுணன்
பொன்றஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்
நின்றபசுந்தீ மொண்டுசூறை நீள்விசும்பூடிரிய
சென்றுகாண்டற்கரிய கோயில் சிங்கவேள் குன்றமே’’  

இந்த செய்யுளை பாராயணம் செய்து பக்தி சிரத்தையோடு யார் பாடுகிறார்களோ அவர்களுக்கு ஒரு தீமையும் ஏற்படாமல் காப்பார் நரசிம்மர் என்று  முடிக்கிறார், ஆழ்வார். திருமங்கை ஆழ்வார் கொடுத்த பிரமிப்பை மனதில் சுமந்து அஹோபிலத்தை தரிசிப்போம்.  அடர்ந்த  காடுகளும், உயர்ந்த  குன்றுகளும் இத்தலத்திற்கு அழகும், பிரமிப்பும் சேர்க்கின்றன. மலையின் அடிவாரத்தில் முதல் கோயிலாக லட்சுமி நரசிம்மரை தரிசிப்போம். அழகிய  ராஜகோபுரத்தோடு விளங்கும் மிகத் தொன்மையான கோயில். பல்வேறு அரசர்கள் பார்த்துப் பார்த்து திருப்பணி புரிந்திருக்கிறார்கள். சிற்பங்கள் நிறைந்த  கலைக்கூடமாக இது திகழ்கிறது. மூலவராக லட்சுமி  நரசிம்மர் வீற்றிருந்த  திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

தாயார் அமிர்தவல்லி எனும் திருநாமத்தோடு அருளாட்சி செய்கிறார். இதனுள்ளே ஒரு குகையினுள் 6வது பட்ட அஹோபில ஜீயர் சுவாமிகள்  இன்னமும் சிரஞ்சீவியாக இருந்து கொண்டு தியானம் புரிவதாக சொல்கிறார்கள். அவ்விடத்தை மூடி கம்பிகள் கட்டி பாதுகாத்து வருகின்றனர்.  பிள்ளைப்பேறு வேண்டி இந்த சந்நதியில் மாவிளக்கு ஏற்ற, உடனே பிள்ளைச் செல்வம் உண்டாவது திண்ணம். இதன் விமானம் குகை விமானம்  என்றழைக்கப்படுகிறது. கருடன் மற்றும் அஹோபில மட முதல் ஜீயர் இருவரும் எம்பெருமானின் காட்சி கண்டு திகைப்புற்றிருக்கிறார்கள். இந்த திவ்ய  தலத்தில் ஆதிசங்கரர் எம்பெருமானை தரிசிக்க வந்த சமயம், காபாலிகர்கள் சிலர் அவரைக் கொல்ல முயற்சித்தனர். அப்போது நரசிம்மனே நேரே  எழுந்தருளி காபாலிகர்களிடமிருந்து ஆதிசங்கரரை காப்பாற்றினான். அதன் காரணமாகவே ஆதிசங்கரரும் நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம் செய்ததாகக்  கூறுவார்கள்.

அடுத்து, வராக நரசிம்மர் கோயிலுக்குச் சென்று தரிசிக்கலாம். இந்த நரசிம்மரை ‘க்ரோட நரசிம் மர்’ என்றழைப்பர். அவ்விடத்திலிருந்து காட்டுப்  பாதையில் பயணித்து ஜ்வாலா எனும் இடத்திற்குச் செல்லலாம். அங்கு மலை உச்சியில் இரண்யன் தூண் பிளந்த இடத்தை தரிசிக்கலாம். ஜ்வாலா  நரசிம்மரின் சிறப்பு என்னவெனில், உக்கிரமாக மாறி இரண்யனை வதைத்து அங்குள்ள தீர்த்தத்தில் தன் ரத்தம் படிந்த கைகளை தோய்த்ததால் இன்றும்  அந்த தீர்த்தம் பார்க்க சிவப்பாக இருக்கும். ஆனால், நீரைக் கையில் எடுத்தால் வெள்ளையாக தெரியும்! அதன்பிறகு, சற்று மலைமேல் ஏற, பிரகலாத  வரதனுக்காக  காட்சி கொடுத்த மாலோலன் சந்நதியை அடைந்து வலம் வரலாம். ‘மா’ என்பது இலக்குமி பிராட்டியையும், ‘லோலன்’ என்றால்  விஷ்ணுவையும் குறிக்கும்.

இந்த மாலோலனையும் தரிசித்துக் கொண்டு அவ்விடத்திலிருந்து பார்க்க பிரகலாத குகை தெரியும். அந்த மலைப் பாதையில்  சற்று  கீழிறங்கி   மலையடிவாரத்தில் காரஞ்ச என்ற இடத்தில் ஆஞ்சநேயருக்கு ராகவனாக காட்சி கொடுத்ததால் ‘ராகவ  சிம்மம்’ என அழைக்கப்படுகிற நரசிம்மரை  சேவிக்கலாம். அங்கு செம்மரத்திற்கு அருகே நரசிம்மர் இருப்பதால் காரஞ்ச நரசிம்மர் எனும் திருநாமம் அவருக்கு ஏற்பட்டது. மீண்டும் மலைப்  பாதையில் செல்ல வேண்டும். அதுவும், கூட்டம் கூட்டமாகத்தான் செல்வது நல்லது. முழுவதும் காட்டுப் பாதையாதலால் வனவிலங்குகள்  எதிர்ப்படக்கூடும். மனதார வழிபட்ட நிறைவோடு மீண்டும் மலையடிவாரத்திற்கே வந்து, மேற்கொண்டு யோகாநந்தனை தரிசிக்கலாம்.

உலகில் எவ்வளவு யோக சாஸ்திரங்கள் உள்ளனவோ அவை யாவும் தன்னுள் அடக்கம் என காட்டுவதுபோல் எழுந்தருளியிருக்கிறார்,  யோக நரசிம்மர்.  அஷ்டமகா சித்திகளை, இவரை வணங்கிப் பெறலாம் என்பது ஆன்றோர்கள் அனுபவித்த உண்மை. இதையடுத்துள்ள சத்ரவட நரசிம்மரை தரிசிக்கலாம்.  இவருடைய தனி விசேஷம் என்னவெனில், ஒரு குடையின் கீழமர்ந்து, ஒரு காலை மடித்தும், ஒரு காலை தொங்கவிட்டுக் கொண்டும், தொடையில்  தாளம் போட்டபடி, இரு கந்தவர்கள் பாடும் கானத்தை ரசிப்பதாக அமைந்திருப்பது மிகவும் சிறப்புக்குரியது. நாமும் மனமாற உள்ளம் உருகி அவன்  நாமங்களை அச்சந்நதியில் பாட மனம் விழைகிறது.

இதன்பிறகு சற்றே இளைப்பாறி மீண்டும் புறப்பட்டு மலையின் மேலுள்ள பார்க்கவ நரசிம்மரின் சந்நதியை அடையலாம். பிருகு மகரிஷிக்கு திருக்காட்சி  அருளியவர் இந்த நரசிம்மர். இதற்கடுத்து, மலையின் உச்சியிலுள்ள பாவன நரசிம்மரை சேவிக்கலாம். தாயாரின் திருநாமம் செஞ்சு லட்சுமி என்பதாம்.  சுற்றிலுமுள்ள கிராம மக்கள் இங்குள்ள நரசிம்மர் உக்கிரமாக இருப்பதால் பலியிடும் வழக்கத்தை கொண் டிருக்கிறார்கள். ஆனாலும், நரசிம்மர்  உக்கிரமானவரல்லர் என்பது ஆன்றோர்களின் கூற்று. ஆகவேதான், திருமங்கையாழ்வார் இவ்வெம்பெருமானை கொண்டாடும்போது கண்ணில் நீர் பனிக்க,  “நல்லை நெஞ்சே! நாம் தொழுதும் நம்முடை நம்பெருமான்” என்கிறார்.

அதாவது, உக்கிரமான உருவம் என்பது இரண்யன் போன்றோருக்கு மட்டுமே. நமக்கெல்லாம் நம்பெருமான் ஆகிறார் என்கிறார். ஆராதிப்பதற்கு  சுலபமானவன். மனதார அழைப்போர் முன் உடனேயே வந்து விடுவான். அமோக வாழ்வைத் தந்தருள்வான். நமக்கு ஒரு நாளும் அவனுடைய உக்ர  பார்வை கிடையாது. தைரியமாக நரசிம்மனை வீட்டில் வைத்து தொழலாம் என்று விநயமாகத் தெளிவிக்கிறார். சென்னை மும்பை இருப்புப் பாதையில்  ஆந்திராவிலுள்ள கடப்பாவில் இறங்கி 130 கி.மீ. பயணித்தால் அஹோபிலத்தை அடையலாம்.

வங்கீபுரம் வேணுகோபாலன்

படங்கள் உதவி: எம்.என்.எஸ்.

Tags : Ahopila Narasimhars ,Amoga ,
× RELATED கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில்...