×

சென்னையில் ஒரு திருக்கடையூர்.. மகப்பேறு அருளும் முகப்பேர் மாயவன்

முகப்பேர்

சென்னையிலுள்ள முகப்பேர் திருத்தலம் 650 ஆண்டுகளுக்கும் பழமையானது. காஞ்சியை ஆண்ட “மல்லிநாத சம்புவராயன்’’ என்ற மன்னனால் இக்கோயில் கட்டப்பட்டது. எம்பெருமா னும் தாயாரும் “சந்தான பாக்கியம்’’ வேண்டி வரும் பக்தர்களுக்கு அந்த இனியப் பேற்றினை வழங்கி அவர்களுடைய குறையை தீர்ப்பதால் சந்தான ஸ்ரீநிவாசன் என்றும், சந்தான லட்சுமி என்றும் அழைக்கப்படுகிறார்கள். மகப்பேற்றை அளிக்கும் தலமாதலால் இது மகப்பேறு என்றே ஆதியில் பெயர் கொண்டு, நாளடைவில் ‘முகப்பேர்’ என்று திரிபடைந்தது.

மூலவர் சந்தான ஸ்ரீநிவாசன் ஆறடிக்கு மேல் நின்ற திருக்கோலத்தில் பேரருள் பெருக்கி காட்சியளிக்கின்றார். அவரது திருமார்பில் ஸ்ரீதேவி வாசம் கொண்டிருக்க, பூதேவி, ஆதிலட்சுமி  ஆகியோரும் உடன் அருள்பாலிக்கிறார்கள். பெருமாள் அபய ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கின்றார். உற்சவர் சந்தான ஸ்ரீநிவாசன், ஸ்ரீதேவி-பூதேவியுடன் சங்கு, சக்கரம், அபய ஹஸ்தத்துடன் காட்சி தருகின்றார். மேலும், ஆதிசேஷனின் மீது சந்தான கிருஷ்ணனும் தனியாக அருள்கிறார்.தாயார் சந்தான லட்சுமி தனிச் சந்நதியில் அமர்ந்த திருக்கோலத்தில் மேல் இரு கரங்களில் தாமரை மலர்களையும், கீழ் இரு கரங்கள் அபய-வரத ஹஸ்தமாகவும் விளங்க, பெரும்  சாந்நித்தியத்தோடு அருள்கிறார்.

திருச்சுற்றில் சர்வ சித்தி விநாயகர் வலம்புரி விநாயகராக அருள்பாலிக்கின்றார். ஆஞ்சநேயர் தனிச் சந்நதியில் வடக்கு நோக்கி நிலை பெற்றிருக்கிறார். தனியே ஐயப்பன் சந்நதி, நவகிரக சந்நதியும் உள்ளன. சந்தான ஸ்ரீநிவாசன் சந்நதியின் விமானத்தில் க்ஷீராப்திநாதன், காளிங்கநர்த்தன கிருஷ்ணன், வேணுகோபாலன் ஆகிய மூர்த்தங்கள் காணப்படுகின்றன. பரமபத வாசல் உண்டு. அருணாசல மண்டபம் என்று அழைக்கப்படும் சந்நதி மண்டபமும் உள்ளது. இக்கோயிலில் காலை சுப்ரபாத சேவையுடன் தொடங்கி பின்னர் ‘விஸ்வரூ பம்’, ‘தோமாலை’ போன்ற சேவைகளும் நடைபெறுகின்றன.

அர்ச்சனையை அடுத்து ‘ஸ்ரீபாத சேவை’, இரவு ‘ஏகாந்த சேவை’ என்று நாள் முழுவதும் திருமலையைப் போன்றே எம்பெருமானுக்கு சேவைகள் நடைபெறுகின்றன. புரட்டாசி சனிக்கிழமைகளில் இக்கோயிலில் கூட்டம் அலை மோதும். வைகுண்ட ஏகாதசி, திருவாடிப்பூரம், பங்குனி உத்திரம் என்று எல்லா உற்சவங்களும் இக்கோயிலில் நடைபெறு கின்றன. மக்கள் தங்கள் குறைகள் நீங்க பிரார்த்தனை செய்துகொண்டு துலாபாரமும் நடத்துகிறார்கள். இங்குள்ள சந்தான கிருஷ்ணனும் வரப்பிரசாதி. ஆதலால் பிள்ளை பேறுக்காக  இவரை தம்பதியர் மடியில் கிடத்திக் கொள்வார்கள். இது இத்தல சிறப்பு. சென்னை கோயம்பேடு, திருமங்கலம் முதலான இடத்திலிருந்து முகப்பேறு தலத்திற்கு எளிதாகச் செல்லலாம்.

Tags : Tirukkadaiyur ,Chennai ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!