×

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசி தரூர் போட்டி? கடைசி வரை ராகுலை சமரசம் செய்ய முயற்சி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே சமயம், கடைசி வரை ராகுலை சமரசம் செய்து போட்டியிட வைக்கவும் முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின்  புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் அக்டோபர் 17ம் தேதி நடத்தப்பட உள்ளது.  சுமார் 22 ஆண்டுக்கு பின் தேர்தல் நடத்தப்படுவதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிடும் பட்சத்தில், மூத்த தலைவர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வர மாட்டார்கள். ஒருவேளை தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிடவில்லை என்றால், ஒன்றுக்கும் மேற்பட்ட தலைவர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிட முன் வரலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ராகுலை பொறுத்த வரையிலும், மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்க அவர் தயாராக இல்லை. எனவே காந்தி குடும்பத்தை சாராத ஒருவரை கட்சித் தலைவராக கொண்டு வருவதற்காக, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை களமிறக்க கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கெலாட் நிறுத்தப்படும் பட்சத்தில் அவரை எதிர்த்து போட்டியிட திருவனந்தபுரம் எம்பியும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் முடிவு செய்திருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின. கட்சி தலைமை குறித்து ஏற்கனவே மூத்த தலைவர்கள் 23 பேர் கொண்ட குழு சோனியாவுக்கு கடிதம் எழுதியிருந்தது. அந்த ஜி-23 குழுவில் இடம் பெற்றுள்ளவர் சசிதரூர். எனவே மூத்த தலைவர்கள் சார்பாக சசி தரூர் களமிறக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதற்கிடையே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் அமைப்பான கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். இது வெளிப்படையான தேர்தல்’  என்று கூறி உள்ளார். ராகுல் மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என சில மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ஜி-23 தலைவர்கள் போட்டி வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம், கடைசி வரை ராகுலை சமரசம் செய்து போட்டியிட வைக்கவும் முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.* தேர்தல் நடப்பது நல்லதுகட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக எழுந்துள்ள ஊகங்கள் குறித்து திருவனந்தபுரத்தில் சசிதரூர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இதெல்லாம் வெறும் ஊகங்கள் மட்டுமே. நான் எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தேர்தல் நடக்க வேண்டும். அதுதான் கட்சிக்கு நல்லது என்று மட்டுமே நான் கூறி உள்ளேன். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டால், அது மக்களின் கவனத்தை ஈர்க்க உதவும். கட்சியின் செயல்பாடு, கொள்கைகள், மதிப்புகள் மற்றும் நாட்டிற்கான அதன் பார்வை மீண்டும் விவாதிக்கப்படும். எனவே, ஜனநாயக ரீதியாக செயல்படும் கட்சியில் பல வேட்பாளர்கள் முன் வந்து தேர்தலில் பங்கேற்க வேண்டும். அது கட்சிக்கு நல்லது. கட்சியில் லட்சக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர். பார்ப்போம்,” என்றார்.* பாஜவில் எப்போது தேர்தல் நடந்தது?காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் கூறுகையில், சசி தரூர் பற்றி எனக்கு எந்த தகவலும் தெரியாது. வேட்பு மனுக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. யாராவது போட்டியிட விரும்பினால் அப்போது தெரியும். இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. பாஜவில் எப்போது தேர்தல் நடந்தது? தேர்தல் பற்றி அதன் அரசியல் சாசனம் என்ன சொல்கிறது? எந்தத் தேர்தலில் ஜேபி நட்டா போட்டியிட்டாரா? அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அத்வானி எந்தத் தேர்தலில் போட்டியிட்டனர்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்….

The post காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசி தரூர் போட்டி? கடைசி வரை ராகுலை சமரசம் செய்ய முயற்சி appeared first on Dinakaran.

Tags : Sasi Tharoor ,Congress ,President ,Rahul ,New Delhi ,Shashi Tharoor ,
× RELATED தங்கம் கடத்திய வழக்கில் காங். எம்.பி. சசி தரூரின் முன்னாள் உதவியாளர் கைது