×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

313. நஹுஷாய நமஹ (Nahushaaya namaha)
(திருநாமங்கள் 301 முதல் 314 வரை -
ஆலிலைக் கண்ணன் பெருமைகள்)
வேதாந்த தேசிகன் என்ற மகான் காஞ்சிபுரத்தில் வாழ்ந்துவந்த காலம். ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் வல்லவராக அறியப்பட்டவர் தேசிகன். ஸ்ரீரங்கத்தில் கோயில்கொண்டிருக்கும் ரங்கநாயகித் தாயார் அவரது ஆற்றலை அங்கீகரித்து ‘சர்வ தந்திர சுதந்திரர்’ என்ற பட்டத்தையே அருளினாள். ‘சகலகலா வல்லவர்’ என்பது இப்பட்டத்தின் பொருள்.

இத்தகைய சகலகலா வல்லவராக இருந்த தேசிகன் மீது காஞ்சீபுரத்தில் வாழ்ந்த சிலர் பொறாமையும் கொண்டார்கள். “இவர் ஏதேனும் மாயாஜாலம் செய்யும் மாயாவியா? இல்லை மந்திரவாதியா? தந்திரவாதியா? யந்திரவாதியா? இவரது ரகசியம் என்ன என்பதை அறிய வேண்டும்!” என்று அவர்கள் தீர்மானித்தார்கள். மாயாஜால வித்தைகளில் வல்லவனான ஒரு மாயாவியை வெளியூரில் இருந்து அவர்கள் காஞ்சீபுரத்துக்குக் கொண்டு வந்தார்கள். தேசிகனின் இல்லத்துக்கு அருகில் அவனை அழைத்து வந்து, “அதோ பார்! அந்த வீட்டுத் திண்ணையில் ஒருவர் அமர்ந்திருக்கிறாரே! அவரைச் சகலகலா வல்லவர் என்று எல்லாரும் புகழ்கிறார்கள்.

பல கலைகளில் அவர் ஆற்றல் மிக்கவராக இருக்கிறார்! அவர் மாயாவியா? மந்திரவாதியா? தந்திரவாதியா? யந்திரவாதியா? என்ன? என்பதை நீதான் கண்டுபிடிக்க வேண்டும்!” என்று அந்த மாயாவியிடம் கூறினார்கள்.“இவ்வளவுதானே! இப்போது பாருங்கள்! அவரது குட்டை உடைத்துக் காட்டுகிறேன்!” என்று சொன்னான். அருகில் இருந்து குளக்கரைக்குச் சென்ற அந்த மாயாவி, குளத்தில் உள்ள நீரைப் பருகத் தொடங்கினான். அவனை அழைத்து வந்தவர்கள், “தேசிகனைப் பரிசோதிக்கச் சொன்னால் நீ குளத்து நீரைப் பருகிக் கொண்டிருக்கிறாயே!” என்று கேட்டார்கள். “ஒன்றும் பேசாதீர்கள்!” என்று சொன்ன மாயாவி, மெல்ல மெல்லக் குளத்தில் உள்ள அனைத்து நீரையும் பருகிவிட்டான்.

இதைக் கண்ட அவர்கள், “நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்க, மாயாவி, “இவ்வளவு நீரை நான் உண்டேனே! என் வயிறு பெரிதாகி இருக்கிறதா பாருங்கள்!” என்றான். “இல்லையே!” என்றார்கள் அவர்கள். “அதோ அந்த வேதாந்த தேசிகனின் வயிற்றைப் பாருங்கள்!” என்று கை காட்டினான் மாயாவி. இவன் குடித்த அத்தனை நீரும் வேதாந்த தேசிகனுடைய வயிற்றில் சென்று சேர்ந்திருந்தது.ஒரு குளத்தின் நீர் முழுவதும் அவர் வயிற்றுக்குள் சென்றதால், வயிறு வீங்கி வலியில் தவித்தார் தேசிகன். மாயாவியும் அவனை அழைத்து வந்தவர்களும் தேசிகனைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தார்கள். ஆனால் மனம் தளராத தேசிகன், மனதாரக் காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாளைத் தியானித்தார். பின் புன்னகை நிறைந்த முகத்துடன், தம் நகத்தாலே தம் வீட்டுத் திண்ணையில் இருந்த தூணைக் கீறினார்.என்ன அதிசயம்! தேசிகனின் வயிற்றுக்குள் சென்ற நீர் அனைத்தும் அந்தத் தூணின் துவாரம் வழியாக வெளியே வந்து காஞ்சீபுர வீதிகளில் ஆறாக ஓடியது. தேசிகனின் வயிறு பழைய நிலைக்குத் திரும்பியது. இதைக் கண்டவுடன், மாயாவியை அழைத்து வந்தவர்கள் அவமானத்தால் தலைகுனிந்து ஓடிவிட்டார்கள்.

“இத்தனை சக்தி வாய்ந்தவரிடம் அபச்சாரப்பட்டு விட்டோமே!” என்று அஞ்சிய மாயாவி, தேசிகனிடம் மன்னிப்பு கோரினான். அதற்கு தேசிகன், “நான் உனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும்! காஞ்சீபுரத்தின் அனைத்து வீதிகளையும் இலவசமாகச் சுத்தம் செய்ய நீ வழிவகை செய்துள்ளாய். ஆம்! இந்தத் தூணில் இருந்து பெருகிய நீர் காஞ்சீபுரத்தையே தூய்மையாக்கி விட்டது!” என்றார்.

மேலும், “உன்னை அழைத்து வந்தவர்கள் என் ஆற்றலின் ரகசியத்தை அறிவதற்காகத்தான் இத்தனையும் செய்தார்கள். அவர்களிடம் சொல்! நான் மாயாவியும் அல்ல! மந்திரவாதியும் அல்ல! தந்திரவாதியும் அல்ல! யந்திரவாதியும் அல்ல! நான் திருமாலின் அடியவன். அவரது அருளால் அனைத்துக் கலைகளிலும் வல்லவனாக உள்ளேன். மந்திரவாதி, தந்திரவாதி, யந்திரவாதி போன்றோரை மாயை செய்து மயக்கலாம். ஆனால் தனது மாயையால் உலகையே கட்டுபவர் திருமால். அந்த மாயனின் அடியவனை எந்த மாயமும் ஒன்றும் செய்யாது!” என்றார் தேசிகன்.

தேசிகன் சொன்னபடி உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் தனது மாயையால் கட்டுகிறார் திருமால். இங்கே மாயை என்பதற்குப் பொய் என்று பொருளல்ல. உலகுக்கு மூலக் காரணமாகவும், இறைவனுக்கு உடலாகவும் இருக்கும் ‘மூலப் பிரகிருதி’யைத் தான் இந்த மாயை என்ற சொல் குறிக்கிறது. ‘நயதி’ என்றால் கட்டுதல், ‘நஹுஷ:’ என்றால் கட்டுபவர். உயிர்களை எல்லாம் உலகில் பிறக்க வைத்து, அவர்களை மூலப் பிரகிருதி என்னும் மாயையால் கட்டும் திருமால் ‘நஹுஷ:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 313-வது திருநாமம்.

ஆலிலைக் கண்ணனுக்குள்ளே புகுந்த மார்க்கண்டேய முனிவர், அனைத்து உலகங்களும் உயிர்களும் அவனுக்குள் இருப்பதைத் தெளிவாகக் கண்டு, அனைவரையும் தனது வசத்துக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் மாயன் அவனே என உணர்ந்தார். “நஹுஷாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் வாழ்வில் அனைத்துக் கட்டுகளும் நீங்கி நன்மை உண்டாகும்படித் திருமால் அருள்புரிவார்.

314. வ்ருஷாய நமஹ (Vrushaaya namaha)
கருடனின் தாயான வினதை, தனது அக்காவான கத்ருவிடம் ஒரு பந்தயத்தில் தோற்றாள். அதன் விளைவாக, வினதையும் அவளது சந்ததியும் கத்ருவின் குடும்பத்துக்கு அடிமையாக இருந்து வந்தார்கள். வினதையின் மகன் கருடன், தன் தாயை எப்படியாவது அடிமைத் தளையில் இருந்து மீட்க வேண்டும் என்று எண்ணினார். பெரியம்மா கத்ருவிடம் சென்று தனது எண்ணத்தைத் தெரிவித்தார்.

கத்ருவும் அவளது பிள்ளைகளான நாகப் பாம்புகளும், “கருடா! நீ தேவலோகத்தில் இருந்து அமுதத்தைக் கொண்டுவந்தால், உன் தாயை அடிமைத்தளையில் இருந்து நாங்கள் விடுவிக்கிறோம்!” என்று சொன்னார்கள். “அமுதத்தோடு வருகிறேன்!” என்று சொல்லி விட்டு மின்னல் வேகத்தில் தேவலோகத்தை நோக்கிப் புறப்பட்டார் கருடன்.

கருடனின் வருகையைக் கண்ட தேவர்கள், அவரைத் தடுப்பதற்காகப் பல ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார்கள். ஆனால் நிறைய நதிகளின் நீரை எடுத்து வந்த தேவர்கள் மூட்டியிருந்த தீயை அணைத்து, சிறிய வடிவம் எடுத்துக் கொண்டு சக்கரங்களின் நடுவே நுழைந்து, கடும்போரில் தேவர்களை வீழ்த்திவிட்டு, அமுதக் கலசத்தைக் கையில் எடுத்தார் கருடன். விச்வரூபம் எடுத்துச் சக்கரங்களை எல்லாம் உடைத்துக்கொண்டு அமுதக் கலசத்தோடு வெளியே வந்தார் கருடன்.நீண்ட தூரம் பயணித்ததாலும், தேவர்களோடு கடும்போர்புரிந்ததாலும் களைத்துப் போயிருந்தார் கருடன். தன் தாயின் இருப்பிடத்தை நோக்கிப் பறந்த கருடன், வழியில் களைப்பாறுவதற்காக ஒரு மரக்கிளையில் அமர்ந்தார்.

அமுதக் கலசத்தில் இருந்து கொஞ்சம் அமுதை எடுத்துப் பருகினார் கருடன். அது தன் களைப்பைப் போக்கும் என்று எதிர்பார்த்த கருடனுக்கு, அந்த அமுதம் எந்தப் பலனும் அளிக்கவில்லை. மேலும், அது சுவையே இல்லாத வெறும் உப்புச்சாறாகவே தோன்றியது.தாயை மீட்க வேண்டும் என்ற ஆவலால்  களைப்பையும் பொருட்படுத்தாமல் அமுதக் கலசத்துடன் கத்ருவிடம் சென்ற கருடன், அமுதைக் கொடுத்துத் தன் தாய் வினதையை அடிமைத் தளையில் இருந்து மீட்டார்.

இனியாவது தனது களைப்பைத் தணித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய கருடன், தன் தந்தையான கச்யப முனிவரிடம் சென்றார். “தந்தையே! நீண்ட தூரம் பயணித்தேன்! தேவர்களுடன் கடும் போர் புரிந்தேன்! களைப்பைத் தீர்த்துக்கொள்ள அமுதைப் பருகிப் பார்த்தேன்! அது வெறும் உப்புச்சாறு தான், அது என் களைப்பைப் போக்கவில்லை! என் களைப்பு தீர வழிசொல்லுங்கள்!” என்று கேட்டார்.

கச்யபர், “கருடா! தேவ லோகத்து அமுதம் உன் களைப்பைப் போக்கவே போக்காது! மேலும் அந்த அமுதைப் பெறுவதற்கு நீ பல முயற்சிகள் எடுத்தாய்! பல போர்களும் புரிந்தாய்! ஆனால் அது பலன் தரவில்லை. ஆனால் ஆராத அமுதம் ஒன்று உள்ளது! அதைப் பெற நீ முயற்சியும் எடுக்க வேண்டாம்! பயணமும் செய்ய வேண்டாம்! போரும் புரிய வேண்டாம்! அது உன் களைப்பையும் போக்கும்!” என்றார்.

“எங்கே உள்ளது அந்த அமுதம்?” என்று கேட்டார் கருடன். “கருடா! நீ கும்பகோணத்தில் கோயில்கொண்டிருக்கும் ஆராவமுதப் பெருமாளைச் சென்று தரிசிப்பாயாக! அந்த ஆராவமுதப் பெருமாள் தான் உண்மையான அமுதம்! அவனைப் பார்த்த மாத்திரத்தில் உனது அனைத்துக் களைப்பும் தீரும்!” என்றார். அவ்வாறே குடந்தையில், ஸ்ரீஆராவமுதப் பெருமாள் கோயிலின் கருவறைக்கு எதிரிலுள்ள பன்னிரண்டு கால் மண்டபத்தில் வந்து கைகூப்பி நின்ற கருடன், ஆராவமுதனின் அழகாகிய அமுதைப் பருகி, களைப்பு நீங்கப் பெற்றார். இன்றும் குடந்தை ஸ்ரீசார்ங்கபாணி திருக்கோயிலில் கைகூப்பியபடி அமுதைப் பருகும் கருடனைக் காணலாம்.

இக்கருத்தை ஆசுகவி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள் ஒரு ஸ்லோகத்தில் அழகாகப் பாடியுள்ளார்:
“ஸ்வர்கே பாதி அம்ருதம் யதர்த்தம் அபவம் யோத்தும் ச யத்னான்வித:
திங்மாம் யத் ரஸனாகதம் விதனுதே கிஞ்சித் ருசிம் சாருஜ:
நிர்யுத்தம் ச நியத்னம் அத்ர நகரே பீதம் மயா ஸர்வதம்
தத்பாதீதி க்ருதாஞ்ஜலி: யத் அம்ருதம் பக்ஷீச்வர: ஸேவதே”

எனவே, களைத்துப் போயிருக்கும் உயிர்களுக்குத் தானே அமுதமாக இருந்து, அவர்களைத் தன் அழகாகிய அமுதத்தில் நனைத்து, அவர்களின் களைப்பைப் போக்குகிறார் திருமால். ஊழிக்காலத்தில் களைத்திருந்த மார்க்கண்டேயர் முன்னே ஆலிலைக் கண்ணனாகத் தோன்றிய திருமால், தன் அருள் அமுதத்தில் மார்க்கண்டேயரை நனைத்து அவரது களைப்பைப் போக்கினார்.

‘வ்ருஷ்’ என்றால் நனைத்தல். ‘வ்ருஷ:’ என்றால் நனைப்பவர். தனது அழகு, ஒளி என்ற அமுதத்தில் அடியார்களை நனைத்து அவர்களின் களைப்பை எல்லாம் திருமால் போக்குவதால், அவர் ‘வ்ருஷ:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 314வது திருநாமம்.
“வ்ருஷாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் தன் அழகாகிய அமுதில் நனைத்து அவர்களின் களைப்பைப் போக்குவார் திருமால்.

315. க்ரோதக்னே நமஹ (Krodhaghne namaha)

ஆயிரம் தோள்கள்கொண்ட அரசனான கார்த்தவீரியார்ஜுனன், மாகிஷ்மதி என்ற பகுதியை ஆண்டுவந்தான். அவன் ஒருமுறை காட்டுக்கு வேட்டையாடச் சென்ற வேளையில், ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில் உள்ள காமதேனு பசுவைக் கண்டான். அது தன்னிடம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய கார்த்தவீரியார்ஜுனன், தனது ஆட்களை அனுப்பி, காமதேனுவைப் பலவந்தமாக இழுத்து வரச் செய்தான். காமதேனுவை அடித்துத் துன்புறுத்தி அரண்மனைக்கு இழுத்துச் சென்றார்கள் அரசனின் ஆட்கள்.

இதைக் கண்டு கோபம்கொண்டு எழுந்த பரசுராமர், கையில் கோடாரியை ஏந்தியபடி கார்த்தவீரியார்ஜுனனோடு போர்புரிந்து, அவனது ஆயிரம் தோள்களையும் துண்டித்தார். அவரைப் பழிவாங்க நினைத்த கார்த்தவீரியார்ஜுனனின் மகன்கள், பரசுராமர் இல்லாத நேரத்தில் தியானத்தில் இருந்த ஜமதக்னி முனிவரைக் கொன்று, அவரது தலையைக் கொய்து எடுத்துச் சென்றுவிட்டார்கள்.

வீடு வந்த பரசுராமர், நடந்தவற்றை அறிந்து, வெகுண்டு, அறவழி தவறி நடக்கும் அனைத்து அரசர்களையும் அழிப்பது எனத் தீர்மானித்தார். கையில் கோடாரியை ஏந்தியபடி இருபத்தோரு தலைமுறை மன்னர்களை மொத்தமாக அழித்து விட்டார்.உலகை ஆண்ட அனைத்து மன்னர்களையும் வென்றுவிட்டதற்கு அடையாளமாக, பெரிய அசுவமேத வேள்வியை நடத்தினார் பரசுராமர். அந்த வேள்வியை நடத்தி வைப்பதற்குக் காசியபர் உள்ளிட்ட பெரிய முனிவர்களை எல்லாம் வரவேற்றார். மிகச்சிறப்பான முறையிலும் பிரம்மாண்டமாகவும் வேள்விக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவந்தன.

அசுவமேத வேள்விக்குரிய குதிரையை உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் படி ஆட்களை அனுப்பினார் பரசுராமர். “அரசகுலத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் உலகில் மீதம் இருந்தால், இந்தக் குதிரையைக் கைப்பற்றி என்னுடன் போர் புரிய வாருங்கள்! அல்லது, நீங்கள் இங்கு வந்து என்னிடம் சரண் அடைந்து, உங்களது அரசை என்னிடம் ஒப்படைத்துவிடுங்கள்!” என்று
எச்சரிக்கை விடுத்தார் பரசுராமர்.

எந்த அரசரும் பரசுராமரை எதிர்க்கத் துணியாத நிலையில், உலகம் அனைத்தும் பரசுராமரின் கட்டுப்பாட்டுக்குள்ளே வந்து விட்டது. காசியபர் தலைமையில் முனிவர்கள் அனைவரும் நல்ல முறையில் பரசுராமரின் அசுவமேத வேள்வியை நிறைவு செய்து கொடுத்தார்கள்.வேள்வி நிறைவடைந்தவாறே, காசியபர், பரசுராமரைப் பார்த்து, “பரசுராமரே! இனியாவது உங்களது கோபம் தணிய வேண்டும்! உலகுக்கு நன்மைகள் நடக்க நீங்கள் அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்.

பரசுராமர், “காசியபரே! அரசகுலத்தை அழிக்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. ஆனால் வேதம் வல்ல முனிவரான என் தந்தையைக் கார்த்தவீரியார்ஜுன மன்னனின் மகன்கள் கொன்றார்கள். அவர்கள் மட்டுமின்றி, பூமியை ஆண்டு வந்த மேலும் பல மன்னர்களும் முனிவர்களை அவமதித்தார்கள். அறநெறியை மறந்தார்கள். கொடுங்கோலாட்சி புரிந்தார்கள். அவர்களை எல்லாம் தண்டிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தனை காலம் கையில் மழு ஏந்தி அந்த மன்னர்களுக்கு மரண தண்டனை கொடுத்தேன். இனி உலகில் அமைதி நிலவட்டும்!” என்று சொன்னார்.

அதன்பின், அசுவமேத வேள்வியை நடத்தித் தந்த காசியப முனிவரிடம் அனைத்து உலகின் ராஜ்ஜியத்தைக் காணிக்கையாகச் சமர்ப்பித்தார் பரசுராமர். “நீங்களும் மற்ற முனிவர்களும் சேர்ந்து பூமியில் சுபிட்சம் நிலவச் செய்யுங்கள்!” என்றார் பரசுராமர்.

“தங்கள் விருப்பப்படியே ஆகட்டும். தாங்களும் கோபம் தணிந்தவராய், சாந்தம் அடைய வேண்டும்!” என்று
காசியபர் பிரார்த்திக்கவே, தனது கோபத்தைத் தணித்துக்கொண்டார் பரசுராமர்.‘க்ரோத:’ என்றால் கோபம் என்று பொருள். ‘க்ரோதஹா’ என்றால் கோபம் தணியப்பெற்றவர் என்று பொருள்.

காசியப முனிவரின் வேண்டுகோளை ஏற்றுக் கோபம் தணியப் பெற்றவராகப் பரசுராமர் திகழ்ந்தபடியால், ‘க்ரோதஹா’ என்று அவர் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 315-வது திருநாமம்.

“க்ரோதக்னே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் கோபம் அனைத்தும் விரைவில் தணிந்து,
மனதில் சாந்தி நிலவும்படி திருமால் அருள்புரிவார்.

316. க்ரோதக்ருதே நமஹ (Krodhakruthe namaha)

அரங்கத்தை அடைந்து அரங்கனைப் பணிந்தார் வேதாந்த தேசிகன் என்ற மகான். அப்போது தேசிகனின் மனத்திலே ஒரு காட்சியைக் காட்டினான் திருவரங்கன். திருவரங்கம் என்ற திருத்தலமே ஒரு நாடக அரங்கம். அந்த அரங்கத்தில் நடிக்கும் கதாநாயகன் அரங்கநாதப் பெருமாள். கதாநாயகி ஸ்ரீரங்கநாயகித் தாயார். அரங்கனும் ரங்கநாயகித் தாயாரும் பத்து விதமான கதாப்பாத்திரங்களை ஏற்று அந்த அரங்கத்திலே நடித்துக் காட்டுகிறார்கள். அரங்கன் ஏற்று நடித்த அந்தப் பத்து கதாப்பாத்திரங்களே நாம் பிரசித்தமாகப் போற்றும் தசாவதாரங்கள் ஆகும்.

இக்காட்சியை மனக்கண்ணால் கண்ட தேசிகனுக்கு, அந்த அவதாரங்களை எல்லாம் துதிக்க வேண்டும் என்ற ஆவல் உண்டானது. அதனால் ஒவ்வொரு அவதாரத்துக்கும் ஒரு ஸ்லோகம் வீதம் பத்து ஸ்லோகங்கள் பாடி தசாவதாரத்தையும் துதித்தார் தேசிகன். தசாவதார ஸ்தோத்ரம் என்று அத்துதி அழைக்கப்படுகிறது. அதைக் கேட்டு மகிழ்ந்த அரங்கன், “வேதாந்த தேசிகரே! பத்துப் பாடல்களால் என் பத்து அவதாரங்களைத் துதித்தீர்கள்! இப்போது அவற்றைத் தொகுத்து ஒரே பாடலில் என் பத்து அவதாரங்களையும் பாடுவீராக!” என்றான்.
அரங்கனின் ஆணையை ஏற்று அவனருளால் ஒரு ஸ்லோகத்தை இயற்றினார் வேதாந்த தேசிகன்:

“இச்சாமீன! விஹாரகச்சப! மஹா
போத்ரின்! யத்ருச்சாஹரே!
ரக்ஷாவாமன! ரோஷராம! கருணாகாகுத்ஸ்த! ஹோலாஹலின்!
க்ரீடாவல்லவ! கல்கவாஹனதசாகல்கின்! இதி ப்ரத்யஹம்
ஜல்பந்த: புருஷா: புனந்தி புவனம்
புண்யௌக பண்யாபணா:”
பத்து அவதாரங்களிலும் இறைவனிடம் எந்தெந்த குணங்கள் பிரதானமாக வெளிப்படுத்தப்பட்டனவோ, அந்த குணங்களையே அந்தந்த அவதாரங்களுக்கு அடைமொழிகள் ஆக்கி இதில் தேசிகன் குறிப்பிட்டுள்ளார்.

இச்சா மீன - உன் விருப்பத்தால் மீனாய் அவதரித்த பிரானே!
விஹார தச்சப - விளையாடல் புரிவதற்காக ஆமை ஆனவனே!
மஹா போத்ரின் - மாபெரும் வடிவம் கொண்ட பன்றியாய்த் தோன்றியவனே!
யத்ருச்சா ஹரே - எதிர்பாராத நேரத்தில் சடக்கெனத் தோன்றிய நரசிம்மனே!
ரக்ஷா வாமன - உலகை எல்லாம் காப்பதற்காக வாமனமூர்த்தி ஆனவனே!
ரோஷ ராம - ரோஷம் எனப்படும் கோபம் கொப்பளிக்க, பரசுராமனாகக் கையில்
மழுவுடன் தோன்றியவனே!
கருணா காகுத்ஸ்த - கருணையே வடி
வெடுத்த ஸ்ரீராமனே!
ஹேலா ஹலின் - கலப்பையை வைத்து விளையாடிய பலராமனே!
க்ரீடா வல்லவ - லீலைகள் செய்வதற்
காகவே அவதரித்த கண்ணனே!
கல்கவாஹன தசா கல்கின் - வெண்குதிரை யில் ஏறி பவனி வரப்போகிற கல்கியே!

“இப்படிப் பத்து அவதாரங்களின் பெயர்களையும் தினந்தோறும் வாயாரச் சொல்லி, புண்ணியத்தைச் சம்பாதித்துக் கொண்ட மனிதர்களாலே இந்த உலகம் தூய்மை அடைகிறது!” என்று ஸ்லோகத்தை முடித்தார் தேசிகன்.

அரங்கனும் மனம் மகிழ்ந்து தன் திருவருளைப் பொழிந்தான்.இத்துதியில் ஒவ்வொரு அவதாரத்திலும் இறைவன் காட்டிய பிரதானமான குணங்களைப் பட்டியலிடும் தேசிகன், பரசுராம அவதாரத்தில் ரோஷம் எனும் கோபமே பிரதானமான குணமாக இருந்ததாகக் காட்டியுள்ளார்.

கோபம் என்பது தீய குணம் அல்லவா? அதைப் போய்
முக்கியக் குணமாகக் கொண்டாடலாமா? என்ற கேள்வி எழலாம். அதற்கு விடை யாதெனில், தீய சக்திகள் மீது இறைவனுக்கு வரும் கோபம் தீய குணம் அல்ல. அறநெறி தவறி, தீய வழியில் ஆட்சிபுரிந்த அரசர்களை அழித்துப் பூமியில் நன்னெறியை நிலைநாட்டும் பொருட்டுப் பரசுராமர் கோபம்கொண்டதால், அக்கோபமும் கூடப் பூமிக்கு நன்மையையே செய்தது.‘க்ரோத’: என்றால் கோபம்.

‘க்ருத்’ என்றால் செயல் செய்பவர். நன்னெறி தவறிய மன்னர்கள் மீது கோபம் (க்ரோத) கொண்டு, அவர்களை அழிப்பதாகிய செயலைப் புரிந்த (க்ருத்) பரசுராமர் ‘க்ரோதக்ருத்’ என்றழைக்கப்படுகிறார். ‘க்ரோதக்ருத்’ என்றால் கோபத்தைக் காட்டியவர் அல்லது கோபத்துடன் செயல்புரிந்தவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 316-வது திருநாமம்.“க்ரோதக்ருதே நமஹ” என்று தினமும் சொல்லி வருபவர்களின் வாழ்வில் வரும் துயரங்கள் மீது திருமால் கோபம் கொண்டு, அவற்றைப் போக்கி அருள்வார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை

டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!