×

விதுரர் : காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்

சகுனியின் மாயச் சூதாட்டத்தில் செல்வங்களை இழந்து, தங்களையும் இழந்து அடிமைகளாகி நின்ற நேரத்தில், ‘‘தர்மா! திரௌபதியைப் பந்தயமாக வைத்து ஆடு!’’ எனச் சகுனி கூற, அதைக்கேட்ட விதுரர் கொதித்தார் எனப் பார்த்தோம். இனி இந்த இதழில்...கொதித்த விதுரர் எழுந்து அவைக்குத் தலைமை தாங்கிய திருதராஷ்டிரனை நோக்கிப் பெருங்குரலில் முறையிடத் தொடங்கினார்; ‘‘மன்னா! விபரீதம்! விபரீதம்! இது நமக்கு அடுக்குமா? உங்கள் பிள்ளைகள் பாண்டவர்களுக்குத் தீங்குகள் செய்த போதெல்லாம், பாண்டவர்களுக்காக உருகுவதைப்போல நடித்தீர்களே தவிர, பாண்டவர்களிடம் உங்களுக்கு உண்மையான அன்பில்லை.

‘‘விலங்குகள் போலவும் பறவைகள் போலவும் இரக்கமில்லாமல் இருக்கும் உங்களிடம் நாங்கள் சேர்ந்திருப்பது, எங்கள் அறிவீனம்! பாண்டவர்களிடம் உங்களுக்கு அன்பில்லாவிட்டாலும்கூட, நீதிமுறைப்படியாவது நடக்கக் கூடாதா? ஐந்து பேர்களையும் வென்ற பின்னும், ‘தர்மபத்தினியை வைத்து ஆடு!’ எனச் சொல்லலாமா? உங்களுக்கு நாசகாலம் வந்து விட்டது’’ என்று எச்சரித்தார் விதுரர்.

கண்கள் இல்லாத திருதராஷ்டிரன் அப்போது, காதுகளும் இல்லாதவர்போல மௌனமாக இருந்து விட்டார்.சூதாட்டம் தொடர, திரௌபதியும் பந்தயப் பொருளாக வைத்துத் தோற்கப்பட்டாள். துரியோதனன் மகிழ்ச்சியில் கத்தினான்; விதுரரை ஏவினான்; ‘‘ஐவருக்கும் பத்தினியான திரௌபதியை இழுத்துக் கொண்டு வரச்சொல்!’’ என உத்தர விட்டான்.

அவனை எச்சரிக்கும் குரலில் விதுரர் அறிவுரை கூறத் தொடங்கினார்; ‘‘துரியோதனா! மாயச் சூதாட்டத்தில் வென்றதற்காக, மனம் போனபடிப் பேசாதே! நீ பெற்ற வெற்றி உன் நாசத்திற்குக் காரணமாகி விடும். அருந்ததியைப் போன்ற திரௌபதியை நீ இழிவாகப் பேசுவதைப் பார்த்தால், முன்பு நான் கேள்விப்பட்ட விஷயத்திற்கு ஒத்துப் போகிறது’’ என்றார்.

‘‘என்ன கேள்விப் பட்டாய்?’’ என்றான் துரியோதனன்.விதுரர் கண்களில் கண்ணீர் வழியச் சொல்லத் தொடங்கினார். ‘‘பூமாதேவி பிரம்மதேவரிடம் போய், ‘முற்பிறவியில் அரக்கர்களாக இருந்து மகாவிஷ்ணுவால் கொல்லப்பட்ட அரக்கர்கள் எல்லாம், இப்போது அரசவம்சத்தில் பிறந்து இரவும் பகலுமாக மக்களைக் கொடுமை செய்கிறார்கள். கொடுமையான அவர்களைச் சுமக்க என்னால் இயலவில்லை. தயவுசெய்து அந்தப் பாரத்தை இறக்கி வைத்து என்னைக் காப்பாற்றுங்கள்! என வேண்டினாள்’’.

பூமாதேவியின் முறையீடு கேட்ட பிரம்மதேவர், அவளையும் அழைத்துக்கொண்டு தேவர்கள் புடைசூழ வைகுண்டம் சென்றார்; பூமாதேவியின் குறையைச் சொல்லிப் பகவானிடம் முறையிட்டார். ‘‘கவலைப்படாதீர்கள்! வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாக நானே அவதரித்து, தீயவர்களை அழித்து பூமாதேவியின் துயரைத் தீர்ப்பேன்’’ என வாக்களித்தார்.

‘‘அதன்படிப் பகவானே வந்து அவதரித்து இருக்கிறார் என உலகம் முழுதும் பேசிக் கொண்டிருப்பதாகத் தகவல் கேள்விப்பட்டேன். என்ன கஷ்டம் வருமோ? என்று பயந்து கொண்டிருந்தேன். நீங்களும் பாண்டவர்களும் ஒற்றுமை இல்லாமல் போரிட்டால், உங்களுக்கு மட்டுமல்ல; உங்களுக்கு நண்பர்களாக உதவும் அரசர்கள் பலரும் இறப்பார்கள். அதற்கான முயற்சியைத்தான், இப்போது நீ செய்து கொண்டிருக்கிறாய்!’’ என்றார் விதுரர். அதைக்கேட்ட துரியோதனன் கைகளைக் கொட்டிச் சிரித்தான். மிகவும் இழிவாகப்பேசி, விதுரரை அவமானப் படுத்தினான்.

திரௌபதி மான சம்ரட்சணம் முடிந்த அந்த நேரத்திலும் விதுரர், திருதராஷ்டிரனுக்குப் பல அறவுரைகள் சொன்னார். திருதராஷ்டிரன் கேட்பதாக இல்லை. சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் வனவாசம்போன உடன், திருதராஷ்டிரன் விதுரரை அழைத்து, ‘‘தம்பி! சுக்கிராச்சாரியாருடைய அறிவைப்போல, தூய்மையான நுட்பமான அறிவு கொண்டவன் நீ. குரு வம்சத்தவர் அனைவருக்கும் பொதுவானவன் நீ! தர்ம விஷயத்தில் பாண்டவர்களுக்கு உதவும்படியாக நான் இல் லையே! நீ ஏதாவது பரிகாரம் சொல்!’’ என வேண்டினார்.

‘‘மன்னா! உங்களால் முடிந்த அளவு உங்கள் பிள்ளைகளையும் பாண்டவர்களையும் காப்பாற்றுங்கள்! பீமனும் அர்ஜுனனும் கோபம் கொண்டால், யாரால் தாங்க முடியும்? துரியோதனன் முதலியவர்களை அடக்குங்கள்! பாண்டவர்களுக்கு, அவர்கள் இழந்த ராஜ்ஜியம் முதலானவற்றைக் கொடுத்து விடுங்கள்! இல்லையேல் உங்களுக்கு ஏற்படும் நாசம் பயங்கரமாக இருக்கும். யாராலும் தடுக்க முடியாது’’ என்றார் விதுரர்.

திருதராஷ்டிரனுக்குக் கோபம் வந்தது; துரியோதனனின் தந்தையல்லவா? எப்படி ஒப்புக் கொள்வார்? ‘‘விதுரா! கபடமானவன் நீ! எப்போதும் பாண்டவர்களுக்கு அனுகூலமாகவே பேசுகிறாய்! உன்னைப் பார்த்தாலே எரிச்சலாக வருகிறது. உன் இஷ்டப்படி நீ எங்கு வேண்டுமானாலும் போகலாம். போ வெளியே!’’ என்று கோபமாகப் பேசி வெளியே விரட்டினார்.

‘‘இனிமேல் இந்தக் குலம் இருக்காது’’ என்று சொன்ன விதுரர் அங்கிருந்து வெளியேறி, பாண்டவர்கள் இருந்த வனத்தைத் தேடிச்சென்று, பாண்டவர்களை அடைந்தார். அதேசமயம் அஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரன், விதுரர்போன பின் விதுரர் நினைவால் சபையின் வாசலிலேயே மயங்கி, நினைவில்லாமல் விழுந்தார்; மயக்கம் தெளிவிக்கப்பட்டவுடன், சஞ்சயனிடம் விரிவாகச் சொல்லி, ‘‘தர்மமே நேருக்கு நேராக வந்ததைப் போன்றவன் விதுரன்.

அவன் எங்கிருந்தாலும், நீ போய் தேடிப் பிடித்து அழைத்து வா!’’ என ஏவினார் திருதராஷ்டிரன். அதன்படியே விதுரர் அழைத்து வரப்பட்டார். அழைத்து வரப்பட்டாரே தவிர, விதுரருக்கு எந்த விதமான மரியாதையும் தரப்பட வில்லை; மாறாக அவமானம்தான் தொடர்ந்தது. அது கண்ணனின் வருகையின்போது பெரும் அழிவிற்கு வழி வகுத்தது.

வனவாசம் முடித்துத் திரும்பிய பிறகும் பாண்டவர்களுக்கு உண்டான ராஜ்ஜியத்தைக் கொடுக்க, துரியோதனன் மறுத்துவிட்டான். பாண்டவர்களுக்காக நியாயம் கேட்கப் பகவானே அஸ்தினாபுரம் நோக்கித் தூது வந்தார். தூது வந்த கண்ணனை ஏமாற்றுவதற்காகத் துரியோதனக் கும்பல் பலவகைகளிலும் விரிவான ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார்கள்.

அவை எல்லாவற்றையும் ஒதுக்கிய கண்ணனோ, தூய்மையான பக்தி நிறைந்த விதுரரின் வீட்டில் தங்கினார். விதுரர் மெய் மறந்தார். ‘‘கண்ணா! என் இல்லத்தையும் ஒருபொருட்டாக எண்ணி நீ வந்தாயே! இந்த இல்லம் என்ன அநாதி காலமாக நீ யோகநித்திரை செய்த பழமையான பாற்கடலா? அல்லது ஆதிசேஷன் எனும் திருப்பள்ளி மெத்தையா? அல்லது நான்கு வகையான வேதங்களா? நீ எழுந்தருளுவதற்கு இந்த இல்லம், பெருந்தவம் என்ன செய்ததோ?’’ என்று அன்பும் பக்தியும் ததும்பக் கூறினார்.

விதுரரின் பக்தியை அனுபவித்த கண்ணனிடம், கண்ணன் வருகைக்கான காரணத்தைக் கேட்டார் விதுரர். ‘‘பாண்டவர்க்காகத் தூது வந்தேன்’’ என்றார் கண்ணன். ‘‘துரியோதனன் எதுவும் தர மாட்டானே’’ என்றார் விதுரர். ‘‘கவலைப்படாதே விதுரா! துரியோதனன் முதலானவரைக் கொன்று, தங்களுக்கு உண்டானதைப் பெறுவார்கள் பாண்டவர்கள்’’ எனப் பதில் சொன்னார் கண்ணன். விதுரரின் இல்லத்திலே தங்கிய கண்ணன், மறுநாள் துரியோதனன் சபைக்குச் சென்றார்.

தெய்வமாகவே இருந்தாலும் கொஞ்சம் இறங்கி வந்தால், அவமானப்படுத்துவது மனித இயல்பு! துரியோதனன் மட்டும் விதிவிலக்கா என்ன? பாண்டவர்க்காகக் கையேந்தி நின்ற பகவானை அவமானப்படுத்தினான் துரியோதனன். அதைப் பொருட்படுத்தாத கண்ணன், விதுரரின் மாளிகைக்குத் திரும்பினார்.

இவ்வளவு அவமானப்படுத்தியும் கண்ணன் அதைப் பொருட்படுத்தவில்லையே என்று எண்ணிய துரியோதனன், தன் கோபத்தை விதுரரிடம் காட்டினான். ‘‘கண்ணனுக்கு ஏன் இந்த விதுரன், விருந்தளிக்க வேண்டும்? என் ராஜ்ஜியத்தைப் பிடுங்கிப் பாண்டவர்களிடம் கொடுக்கவா? என் தந்தைக்குத் தம்பியாகப் பிறந்திருந்தும்; இன்றுவரை என் சோற்றைத் தின்றும்; இந்த விதுரனுக்கு என் மேல் அன்பு இல்லை. செல்வம் கிடைத்தால் ஒருவனை விட்டு, அடுத்தவனை விரும்பும் பொதுப்பட்ட தாசி மகன்தானே இவன்! இப்படிப் பட்டவன் என்னைக் கை விட்டதில் என்னவியப்பு?’’ என்று சபையிலேயே விதுரரை ஏசினான் துரியோதனன்.

தாங்க முடிய வில்லை விதுரருக்கு; எழுந்தார். ‘‘துரியோதனா! என்னை இழிவாகப்பேசிய உன்னை, வாயில் ரத்தம் வரும்படியாக அடித்து, உன் தலையையும் வெட்டிவிட என்னால் முடியும். ஆனால், குரு வம்சத்தில் பிறந்த ஒருவன், புதல்வனின் அருமையான உயிரைக் கவர்ந்து விட்டான்’’ என்று மனிதர்கள் மட்டுமல்ல; தேவர்களும் பரிகாசம் செய்வார்கள். அதனால்தான் உன்னை உயிரோடு விட்டேன்.

இல்லாவிட்டால் என்னை இழிவாகப்பேசிய நாக்கோடு, இன்னும் நீ உயிரோடு இருக்க முடியுமா? முடிவாகச் சொல்கிறேன். இனிமேல், போரில் யார் பக்கமும் சேர்ந்து நான் போரிட மாட்டேன்” என்று தர்ம ஆவேசமாக சபதம் செய்த விதுரர், மிகவும் தலைசிறந்த வில்லான ‘வைஷ்ணவ தனுசு’ எனும், தன் தலைசிறந்த வில்லை இரண்டாக உடைத்துக் கீழே எறிந்து விட்டு, தன் இருப்பிடம் திரும்பினார் விதுரர்.

‘‘அட! விதுரனை விட்டால், வில்வித்தையில் சிறந்தவர்கள் வேறு யாரும் இல்லையா என்ன?’’ என்று அப்போதும் ஆணவத்துடன் பேசினான் துரியோதனன். வில்லை உடைத்துப் போட்டு விட்டு விரக்தியுடன் திரும்பிய விதுரரிடம், ‘‘விதுரா! பிரசித்தி பெற்ற உன் வில்லை ஏன் உடைத்துப் போட்டாய் நீ?’’ எனக் கேட்டார் கண்ணன்.

 ‘‘கண்ணா! பூமியில் வாழும் மனிதர்களில் சிலர், செல்வம் வந்தால் (அது தன்னிடம் வரும்படியாகத் திருவருள் புரிந்த) தெய்வத்தைக் கூட விரும்பிக் கொண்டாட மாட்டார்கள். பேசும்போது, உணர்ந்து பேச மாட்டார்கள். யாரிடமும் தாட்சண்யம் பார்க்க மாட்டார்கள். தாம் வெற்றி பெறுவதிலேயே எண்ணம் கொண்டிருப்பார்களே தவிர, பகைவர்களும் பலம் உள்ளவர்கள் என நினைக்க மாட்டார்கள். வலிமை கொண்ட ஊழ்வினைப் பயனையும் ஆராய மாட்டார்கள்.

‘‘தெய்வமான நீயே வந்து சொல்லியும் கேட்காமல், மனதில் குரோதம் கொப்பளிக்க உன்னையும் என்னையும் வாய்க்கு வந்தபடி, மிகவும் இழிவாகப் பேசினான் துரியோதனன். அதனால்தான், மிகவும் பிரசித்தி பெற்ற என் வில்லை நான் முறித்துப் போட்டேன்’’ எனப் பதில் சொன்னார் விதுரர்.போர் தொடங்கும்போது, விதுரர் பலராமனுடன் தீர்த்த யாத்திரைக்குப் போய் விட்டார். பாரத யுத்தம் முடிந்த பிறகுதான் திரும்பினார்.

போரின் விளைவை எண்ணித் திருதராஷ்டிரன் துயரத்தில் துடித்தபோது, அவருக்கு விரிவாக உபதேசம் செய்து திருதராஷ்டிரனைத் தேற்றினார் விதுரர். அதுவே ‘விதுர நீதி’ எனும் பிரபலமான நீதி நூல். போர் முடிந்தபின் சுதர்மா, இந்திரசேனன், தௌமியர், சஞ்சயன் ஆகியோரை வைத்துக் கொண்டு, போர்க் களத்தில் இறந்துபோய் பிரேத சம்ஸ்காரம் செய்ய நாதியில்லாத வீரர்களின் சடலங்களுக்கு, தானே அகில், சந்தனம் முதலானவைகளின் கட்டைகளை வைத்துச் சிதைகள் அமைத்து, விதிமுறைப்படி ஈமக் கடன்களைச் செய்தார், விதுரர்.

போருக்குப்பின் அரசாட்சி ஏற்ற தர்மர் அசுவமேத யாகம் செய்து முடித்து, நல்ல முறையில் அரசாட்சி செய்து வந்தார். பாண்டவர்களின் பாதுகாப்பில் இருந்த திருதராஷ்டிரன் காடு செல்லத் தீர்மானித்து, விதுரரை அழைத்து விவரங்கள் சொல்லி, தர்மரிடம் அனுப்பினார்.தலைசிறந்த அறிவாளியான விதுரர் தர்மரிடம் சென்று, ‘‘மன்னா! (தர்மர் அப்போது அரசர்.

அதனால் அவ்வாறு அழைத்தார்) திருதராஷ்டிர மகாராஜா வனவாசம் போவதற்காகத் தீட்சை பெற்றிருக்கிறார். வரும் கிருத்திகை நட்சத்திரம் சேர்ந்த பௌர்ணமி அன்று காட்டிற்குச் செல்லப் போகிறார். நீ அனுமதி கொடுத்தால், மகாத்மாவும் கங்காபுத்திரரும் ஆன பீஷ்மருக்கும் துரோணருக்கும் போர்க்களத்தில் இறந்த மற்ற அனைருக்கும் அவர் (திருதாஷ்டிரன்) சிராத்தம் செய்ய விரும்புகிறார்’’ என்று விவரித்தார்.

தர்மர் ஒப்புக்கொண்டார். விதுரர்போய் அத்தகவலைத் திருதராஷ்டிரனிடம் சொல்ல, தர்மர் தந்த பொருட்களை வைத்து, தன் விருப்பப்படி சிராத்தம் செய்த திருதராஷ்டிரன் காடு செல்லத் தயாரானார்; காந்தாரியும் குந்தியும் கூடப் புறப்பட்டார்கள். விதுரரும் சஞ்சயன், சூதன் ஆகியவர்களோடு காட்டிற்குப் புறப்பட்டார். காட்டிற்குச் சென்ற விதுரர் கடுமையான தவம் மேற்கொண்டார். இளைத்த உடம்பும் மரவுறி (மரப் பட்டைகளால் ஆன உடை) யுமாக இருந்து கொண்டு, திருதராஷ்டிரன் முதலானவர்களுக்குப் பணிவிடையும் செய்து வந்தார்.

ஒரு வாரத்திற்கு மேல் காலம் கழிந்தது. தர்மர் தம் தம்பிகள் - திரௌபதி - நகரத்து மக்கள் ஆகியோரோடு, திருதராஷ்டிரன் முதலானோர் வசிக்கும் காட்டிற்குப் பெரும் கூட்டத்தோடு சென்றார். அங்கே, திருதராஷ்டிரன் - காந்தாரி - குந்தி ஆகியோரைக் கண்டார். ஆனால், விதுரர் மட்டும் அங்கில்லை. தர்மருக்கு என்னவோபோல் இருந்தது. ‘‘மன்னா! விதுரர் எங்கே? அவரைப் பார்க்க முடியவில்லையே’’ எனக் கேட்டார்.

‘‘தர்மா! விதுரன் சௌக்கியமாக இருக்கிறான்; கோரமாக தவம் செய்கிறான். காற்றுதான் அவனுக்கு உணவு. இளைத்துப்போய், உடம்பிலுள்ள நரம்புகள் எல்லாம் வெளியே தெரிகின்றன. இந்தச் சூன்யமான காட்டில் எப்போதாவது,  அந்தணர்களின் பார்வையில் தென்படுகிறான்’’ என்று திருதராஷ்டிரன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே...  சடைமுடியுடன் வாயில் கல்லை கௌவியபடி, இளைத்துப் போய், ஆடையில்லாமல், அழுக்கும் காட்டுப்புழுதியும் படிந்த உடம்போடும் தூரத்தில் விதுரர் தெரிந்தார்.

‘‘தர்மாத்மாவான விதுரர் மக்களைக்கண்டு, இதோ திரும்புகிறார்’’ என்று தர்மரிடம் தகவல் சொன்னார்கள். அதற்குள், தர்மருடன் வந்த கும்பலைக்கண்டு விதுரர் வேகமாகத் திரும்பி, கோரமான காட்டிற்குள் நுழைந்து விட்டார்.இதைப் பார்த்த தர்மர், தான் மட்டும் தனியாக விதுரர் பின்னாலேயே அவரைப்பின் தொடர்ந்து ஓடினார். விதுரரோ ஒரு சமயம் பார்வையில் தென்பட்டும். மறுசமயம் பார்வையில் படாமல் மறைந்தும் ஓடிக்கொண்டு இருந்தார்.

‘‘விதுரரே!விதுரரே! நான் தர்மன். உங்களுக்கு மிகவும் பிரியமானவன்’’ என்று கத்திக் கொண்டே ஓடிய தர்மர், பெரும் முயற்சிக்குப் பிறகு விதுரரின் எதிரில் வந்தார். அப்போது விதுரர் அக்காட்டின் நடுவில் தூய்மையும் ஏகாந்தமுமான ஓரிடத்தில் மரத்தில் சாய்ந்தபடி நின்றார். ‘‘நான் தர்மன்’’ என்று சொன்ன தர்மர் விதுரரைத் துதித்து வணங்கினார். விதுரரும் குறிப்பினால் பதில் சொன்னார்.

அதே நேரத்தில்... விதுரர் தன் மனதை ஒருமைப்படுத்திக் கண்களை இமைக்காமல், தன் கண்களைத் தர்மரின் கண்களோடு சேரும்படிச் செய்து, தர்மரை உற்றுப் பார்த்தார். புத்திசாலியான விதுரர் தன் அங்கங்களைத் தர்மர் அங்கங்களுடனும்; பிராணன்களைப் பிராணன்களோடும்; இந்திரியங்களை இந்திரியங்களோடும் பிரவேசிக்கும்படிச் செய்தார்; தேஜசினால் ஜொலித்த விதுரர் தன் யோகபலத்தின் மூலம், தர்மரின் உடம்பில் பிரவேசித்தார்.தர்மரோ, விதுரருடைய உடம்பை அசையாததாக நிலைத்த கண்களுடன் மரத்தில் சாய்ந்தவாறு உயிரற்றதாகப் பார்த்தார். தானும் விதுரரும் ஒரே தர்மத்தின் அம்சத்தில் இருந்து பிறந்தவர்கள் என்பதையும் நினைத்துக் கொண்டார் தர்மர்.

அதன்பின், விதுரருக்கு அங்கேயே பிரேத சமஸ்காரம் செய்ய விரும்பி, விதுரரின் உடலைத் தகனம் செய்யத் தீர்மானித்தார் தர்மர்.அப்போது, ”மன்னா! விதுரர் என்ற பெயர் கொண்ட இந்த உடம்பை, இங்கு தகனம் செய்ய வேண்டாம். இவர் பழமையான தர்மம்! இவருக்கு வைகர்த்தனம் எனும் உலகம் கிடைக்கப் போகிறது. இவர் துறவிகளின் தர்மத்தை அடைந்தவர். இவரைக் குறித்துத் துக்கப்படக் கூடாது” என்று அசரீரி கேட்டது.

அதைக்கேட்ட தர்மர் அங்கிருந்து கிளம்பி மறுபடி, திருதராஷ்டிரன் முதலானோர் தங்கியிருந்த இடம் வந்து, நடந்தவற்றையெல்லாம் திருதராஷ்டிரனுக்குச் சொன்னார். அனைவரும் ஆச்சரியப் பட்டார்கள்.

திருதராஷ்டிரனுக்கும் துரியோதனனுக்கும் எவ்வளவோ அறவுரைகளும் அறிவுரைகளும் சொல்லி, அவர்களால் அவமானப்படுத்தப்பட்ட போதும் அறம் தவறாமல், அடுத்தவர்க்காக என்றே வாழ்ந்தவர் விதுரர். அவருடைய ‘விதுர நீதி’ என்றும் நல்வழி காட்டும்.

(தொடரும்)

பி.என். பரசுராமன்

Tags : Widder ,Characters ,
× RELATED இசைக்கு வயது கிடையாது: வித்யாசாகர்