×

தங்கக்கை சேஷாத்ரி சுவாமிகள்

ஜெயந்தி பூஜை - 2-2-2021

காஞ்சி மாநகரம் விழாக் கோலம் பூண்டிருந்தது. வைகாசி விசாகம். தேர்த் திருவிழா. ஆடி அசைந்து வரும் தேரை கண்டுகளிக்கவும், வரங்களை வாரி வழங்கி அருள் மழை பொழியும் வரதராஜனைப்  பார்த்து, தங்கள் தேவைகளைச் சொல்லவும் மக்கள் கூட்டம் தேனடை ஈக்களாய் குழுமி இருந்தார்கள். மரகதமும் தனது நான்கு வயது குழந்தையை இடுப்பில் சுமந்தபடி வரதராஜரை தரிசிக்க கோயில்  நோக்கி நடந்தாள். மடியில் அமர்ந்த குழந்தை தம் மழலை வாயால் ஏதேதோ சொன்னபடி இருந்தது. வீதியில் கட்டப்பட்டிருந்த தோரணங்களைப் பார்த்து கை கொட்டி சிரித்தது.

அந்த அகன்ற வீதியில் ஒரு வேப்ப மரத்தடியில் கூடை நிறைய பொம்மைகளை வைத்துக் கொண்டு,  வருவோர் போவோரை எல்லாம் பார்த்தபடி இருந்தான் ஒரு வியாபாரி. யாராவது ஒரு பொம்மையை  வாங்கிக் கொண்டு வியாபாரத்தை ஆரம்பித்து வைக்க மாட்டார்களா என்கிற ஏக்கம் அவனது கண்களில் தெரிந்தது. மரகதம் அந்த வழியே  வந்தாள். கூடையில் சிரித்துக் கொண்டிருந்த வெண்ணெய்  கிருஷ்ணன், மரகதத்தின் மடியிலிருந்த பாலகனைப் பார்த்துச் சிரித்தான். பாலகன் அன்னையின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்த கையை எடுத்து பொம்மைக் கூடையைக் காட்டி, ‘அம்மா... எனக்கு அந்த  கிருஷ்ணன் வேணும்’ என்று கேட்டது. காதில் வாங்கிக் கொள்ளவில்லை மரகதம். அழுது அடம் பிடித்தான் குழந்தை. விசும்பி முகம் சிவந்துவிட்ட அந்தக் குழந்தையைப் பரிவுடன் பார்த்தான் வியாபாரி.  குழந்தை கூடையைத் தொட்டான்.  ஒரு பொம்மையை வாரி எடுத்துக் கொண்டு ‘இது எனக்கு’ என்றான். வியாபாரிக்கு ஏனோ மனம் பொங்கியது. ‘எடுத்துக்கோ ராஜா’ என்றான். அடம் பிடித்து குழந்தை  எடுத்துக்கொண்ட பொம்மைக்கு காசு கொடுக்க முன்வந்தாள், மரகதம். ‘இது முதல் வியாபாரந்தான். ஆனாலும் காசு வேண்டாம்மா. இந்த குழந்தை இவ்வளவு ஆசையா கிருஷ்ணன் பொம்மைய எடுத்துக்  கிட்டதே எனக்கு பேரானந்தமா இருக்கு’ என்றான் வியாபாரி. மரகதத்தின் மகன் வாய் நிறைய சிரித்தான். தன்னைக் கொஞ்சிய வியாபாரியின் தலை முடியைப் பிடித்து இழுத்தான். அதனை ஆனந்தமாய் ஏற்றுக் கொண்ட வியாபாரியின் மனதில் ஏனோ மகிழ்ச்சி பூத்துக் குலுங்கியது.

மறுநாள் அதே வீதியில் மரகதம் மகனோடு வர, வியாபாரி ஓடோடி வந்தான். ‘அம்மா, இவன் தெய்வக் குழந்தை. இது தங்கக்கை. ஆமாம் தாயே, இந்தக் குழந்தை என் கூடையை தொட்ட நேரம் ஆயிரம்  பொம்மைகள் விற்றது தாயே. நூறு பொம்மைகள் விற்றாலே அதிசயம் என்கிற எனக்கு நேற்று போதும் போதும் என்கிற அளவுக்கு கருணை செய்த கை அம்மா இது. இது சாதாரண குழந்தை அல்ல;  தெய்வாம்ச அவதாரம் அம்மா’ என்று ஆனந்தத்தில் கண்ணீர் மல்க கூறினான். அந்த பிஞ்சுக் கரங்களை மெல்ல எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டான். தாய், பரவசத்தில் உதடு துடிக்க கண்கள்  பனித்தாள். அந்தக் குழந்தை எனக்கென்ன ஆச்சு போஎன்பதாய் பராக்கு பார்த்துக் கொண்டிருந்தது.இந்த குழந்தை, அருணாச்சலமே கதியென திருவண்ணாமலை வீதியில், அந்த அக்கினி மலையைச் சுற்றித் திரிந்த சேஷாத்ரி சுவாமிகள்தான். ‘இன்று அவர் என் கடைக்கு வருவாரா? ஒரு வாய் சாப்பிடுவாரா? என் பொருளைத் தொடுவாரா’ என திருவண்ணாமலை வியாபாரிகள் எல்லாம் தவமிருந்திருக்கிறார்கள். திருவண்ணாமலையில் ஜீவசமாதி  கொண்டு அருளும் சேஷாத்ரி சுவாமிகளை தரிசித்து வாருங்கள்.

- நரேன்

Tags : Golden Seshadri Swamis ,
× RELATED சுந்தர வேடம்