×

கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள்!

அக்காலத்தில்  மனிதர்கள்  பூமியில்  பெருகத் தொடங்கினார்கள். மனிதர்களின் கீழ்ப்படியாமையும் பெருகத் தொடங்கியது. இதனால் கடவுள் மிகவும் வேதனையடைந்தார். அவரது மன வேதனையைக் குறித்து, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காக கர்த்தர் மனஸ்தாபப்பட்டார் (ஆதியாகமம் 6 : 6) என்று திருமறை கூறுகிறது. எனினும் நோவா என்னும் இறைமனிதரின் வாழ்வு கடவுளின் இருதயத்துக்கு மகிழ்வைக் கொடுத்தது. ஏனெனில் நோவா கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, அவருக்குப் பிரியமாக வாழ்ந்து வந்தார்.நோவா அப்படியே செய்தான். தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான் (ஆதியாகமம் 6 : 22) என்று திருமறை கூறுவதற்கேற்ப கடவுளுடைய வார்த்தையின்படியே கொப்பேர் என்னும் மரத்தால் பெரிய பேழை ஒன்றை உண்டு பண்ணினார். அப்பேழை முழுவதும் உள்ளும் புறம்புமாகக் கீல் என்னும் திரவத்தைக் கொண்டு பூசினார். அப்பேழையின் நீளம், உயரம், அகலம் அனைத்தையும் கடவுள் கூறியவாறே அமைத்தார். அப்பேழையை மூன்று அடுக்குகளாக ஏற்படுத்தினார்.

விலங்குகள்,பறவைகள், நீர் வாழ் உயிரினங்கள் அனைத்தையும் இரண்டிரண்டாக பேழைக்குள் கொண்டு வந்தார். அத்தனை உயிரினங்களுக்கும் ஆகாரங்களை சேகரித்து வைத்தார் ( ஆதியாகமம் 6 : 21).இவ்வாறு நோவாவின் கீழ்ப்படிதலும், அவர் பேழையை உண்டுபண்ணின விதமும் நமக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது. கீழ்ப்படிதல் நிறைந்த வாழ்வு வாழ நோவா நமக்கு நல்லதொரு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.அவரது கீழ்ப்படிதல் அவருக்கும்,அவரது குடும்பத்திற்கும் தேவனுடைய முழுமையான பாதுகாப்பைக் கொண்டுவந்தது. ஆம் ! அனைத்து உயிரினங்களும், அவரது குடும்பத்தினரும் பேழைக்குள் சென்ற பின்பு நோவாவை பேழைக்குள் அனுப்பி, கர்த்தரே கதவை அடைத்தார் (ஆதி. 7:16) என்று திருமறை கூறுகிறது.நோவாவின் காலத்தில் பாவம் பெருகியிருந்தது போல நாம் வாழ்கின்ற இக்காலக்கட்டத்திலும் பல்வேறு பாவங்கள் பெருகிக் கொண்டேயிருக்கிறது. எனினும் இம்மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் கடவுளின் சத்தத்தைக் கேட்டு, அவருக்குப் பிரியமான வாழ்வு வாழ்ந்த நோவாவைப் போன்ற மனிதர்களை கடவுள் தேடுகிறார். அவ்விதம் நாம் கடவுளுக்குப் பிரியமான வாழ்வு வாழ்ந்தால் நோவாவைக் பாதுகாத்த கர்த்தர் நம்மையும் பாதுகாப்பார்.கடவுளின் சத்தத்தை நாம் எப்படிக் கேட்க முடியும் ? எங்கே கேட்க முடியும் ? என்ற கேள்வி எழலாம்.

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசிப்பேன் (வெளிப்படுத்தல் 3. 20) என்று கர்த்தர் கூறுகிறார். ஆம் ! நமது இதயத்தை அவர் தட்டிக் கொண்டே இருக்கிறார். நமது இதயத்தைத் திறந்து, அதில் அவருக்கு இடங்கொடுத்தால் அவர் நம்மோடு பேசுவார். மேலும், கடவுளுடைய பாதத்தில் அமர்ந்து, பயபக்தியுடன் திருமறையை வாசித்தால் நோவாவோடு பேசின கடவுள் நம்மோடும் பேசுவார். அவரது சத்தத்தைக் கேட்டு, அவரது விருப்பத்தை நாம் நிறைவேற்றினால் கடவுள் நம்மை அவரது கண்மணியைப் போலப் பாதுகாப்பார்.நீ  உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்தது உனக்குப் பலிக்கும். ( உபாகமம். 28.2) என்ற திருமறை வசனத்திற்கேற்ப, அவருக்கு செவிகொடுத்து, அவருக்குப் பிரியமாக நாம் வாழ்ந்தால் வியாதிகளோ, பெலவீனங்களோ, எந்தவொரு ஆபத்துக்களோ ஒன்றும் நம்மை அணுகாத வண்ணம் அவர் நம்மை அற்புதமாகப் பாதுகாப்பார். ஆசீர்வாதமாக வழிநடத்துவார்.

Rt. Rev.Dr.S.E.C. தேவசகாயம்
பேராயர், தூத்துக்குடி -
நாசரேத்  திருமண்டலம்.

Tags : Lord ,
× RELATED ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் ஊர்வலம்