×

விசாகம்

ஞான பரிபூரணான குருவின் ஆதிக்கத்தில் வரும் நட்சத்திரத்திலேயே நீங்கள்தான் கொஞ்சம் அப்பாவியாக இருப்பீர்கள். எப்போது பார்த்தாலும் அண்ணா, அக்கா, தங்கை என்று ரத்த பந்தங்களைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். தனக்கென்று எதையும் எடுத்து வைத்துக் கொள்ளத் தெரியாது. ‘‘அக்கா.. வந்து அழுதா பாவமா இருந்துச்சு’’ என்று கொடுத்து விடுவீர்கள். பொய் சொல்ல முயன்றாலும் முடியாது. சில சமயம் பொய் சொல்லி எக்குத்தப்பாக மாட்டிக் கொள்வீர்கள். படிக்கும்போது கூட டெக்னிக் சப்ஜெக்ட் படித்துவிட்டு அக்கவுன்ட்ஸில் வேலை பார்ப்பீர்கள். தன்னம்பிக்கையோடுதான் இருப்பீர்கள். ஆனால், அதை நடைமுறைப்படுத்தும்போது தடுமாறுவீர்கள். வெப்பத்தில் பனி உருகுவதுபோல வெதும்பி வருவோரைக் கண்டால் பரிதவித்துப் போவீர்கள். கையிலிருப்பதை கழட்டிக் கொடுத்து விட்டு வெறுங்கையோடு திரும்புவீர்கள். பணம் பண்ணுவதையும், பாதுகாப்பதையும் கஷ்டமான காரியமாக நினைப்பீர்கள்.

யாருக்கும் மனதால்கூட எந்தக் கெடுதலையும் செய்ய மாட்டீர்கள். பயந்த சுபாவம் உள்ளவர்களாக இருப்பீர்கள். நமக்கேன் இந்த வம்பு என்று சில நேரங்களில், பல இடங்களில் ஒதுங்கிக் கொள்வீர்கள். பெற்றோர்களின் மீதுள்ள பக்தியாலும், அவர்களின் ஆசியாலும் நீங்கள் கொஞ்சம் நிம்மதியாக வாழ்வீர்கள். அதேசமயம் வாழ்க்கைத் துணைவர் சொல்வதைக் கேட்பது ஒரு பலவீனம் என்று நினைப்பீர்கள்.  உறவுகள் குனியக்குனிய குட்டினாலும் சகித்துக் கொண்டுதான் போவீர்கள். சிந்தனைவாதிகளாக இருப்பீர்கள். ஆராய்ச்சி மனப்பான்மை அதிகமிருக்கும். எப்போதும், வெற்றியை இழக்காமல் இருக்க கந்தன் குடியிருக்கும் கந்தன்குடி எனும் தலத்திற்கு ஒருமுறை சென்று வாருங்கள். தெய்வானை முருகனை திருமணம் செய்து கொள்வதற்காக இத்தலத்தில் தவமிருந்தாள்.

முருகனும், தவத்தால் தன்னை யாரோ அழைக்கிறார்களே என்று ஓடிச் சென்றான். மணம் செய்து கொள்கிறேன் என்று வாக்கு கொடுத்தான். வேறு எந்த தலத்திலும் இல்லாத அளவுக்கு இங்குதான் தெய்வானை கையில் கிளியை ஏந்திய கோலத்தில் தனிச் சந்நதியில் வீற்றிருக்கிறாள். அழகான கிராமத்திற்கு நடுவில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணியசுவாமி அருள்கிறார். இத்தலம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பேரளத்திற்கு அருகில் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால், மயிலாடுதுறை - காரைக்கால் பேருந்து வழித்தடத்தில் கொல்லாபுரத்தை கடந்தால் கந்தன்குடியை காணலாம்.

Tags : Visakha ,
× RELATED நிர்மலா தேவி வழக்கில் 6 ஆண்டுகளாக...