27 நட்சத்திரங்களுக்கான பரிகார கோயில்கள்: ரேவதி

இருபத்தேழு நட்சத்திரங்களிலேயே விளையாட்டுத்தனம் நிரம்பிய நட்சத்திரம் இதுதான். எத்தனை வயதானாலும் இளமையாக தோற்றமளிக்க விரும்புவார்கள். அலங்காரப் பிரியர்கள். திட்டமிடும் கிரகமான புதனே ரேவதியை ஆட்சி செய்கிறது. எழுந்துவிட்டால் வேலையை படபடவென்று முடிப்பார்கள். இல்லையெனில் அப்படியே கிடப்பார்கள்.  ஆசிரியர் நடத்தும் பாடத்தில் ஏதேனும் ஒரு விஷயத்தை பிடித்துக் கொண்டு யோசனை செய்து கொண்டிருப்பீர்கள். அதற்குள் ஆசிரியர் வெவ்வேறு விஷயங்களுக்கு தாவியிருப்பார். இதற்குக் காரணம் உங்களின் மிதமிஞ்சிய கற்பனைத்திறன். கோபப்பட்டாலும் குழந்தைத்தனம் கூடவே இருப்பதால் உங்களை கணிக்க முடியாமல் திண்டாடுவார்கள். எது மார்க்கெட்டுக்கு புதியதாக வருகிறதோ அதை உடனே வாங்கி உபயோகித்து விடுவீர்கள். ரேவதி நட்சத்திரக்காரர்களின் முக்கிய பலவீனமே அலட்சியம்தான்.

‘‘நம்மை மீறி என்ன ஆகிடப்போகுது. கடைசி நேரத்துல பார்த்துகலாம்’’ என்றிருப்பீர்கள். உங்களின் தோழமைப் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். பொதுவாகவே இருபத்தோரு வயது வரை சளித் தொந்தரவு இருக்கும். நீங்கள் தைரியசாலிகள்தான். ஆனால், நோயுற்றால் பதறிப் போவீர்கள். சமயோஜித புத்தியால் மற்றவர்களை வசியப்படுத்தக் கூடிய வார்த்தை சாதூர்யம் உள்ளவர். தன்னிடமிருக்கும் பொருளை அவ்வளவு எளிதாக யாருக்கும் கொடுக்க மாட்டார்கள். ‘‘கொஞ்சம் கஷ்டப்பட்டாதான் அதோட அருமை தெரியும்” என்பீர்கள். திருமணம், குழந்தை போன்ற விஷயங்களில் எந்தக் குறைவும் இருக்காது. கொஞ்சம் முன்கோபிகளாக இருப்பீர்கள். பள்ளிப் படிப்பை முடிப்பதில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூட விஷயங்களைச் சொல்லாமல் மனதுக்குள் மறைத்து வைத்திருப்பீர்கள்.

ரேவதி நட்சத்திரத்தை அதிபதியாக புதன் வருகிறார். அதனால் எப்போதுமே பெருமாள் வழிபாடு மிகவும் நல்லது. பட்டாபிஷேகக் கோலத்தில் உள்ள பெருமாளை வழிபடும்போது குரு, சனி சேர்ந்த அமைப்பு கொஞ்சம் சமனப்படுகிறது. அதன் தீவிரமும், வேகமும் தணிக்கப்படுகிறது. உள்ளத்தில் குதூகலம் பெருகுகிறது. எனவே, பட்டாபிஷேகக் கோலத்தில் ஸ்ரீராமர் அருள்பாலிக்கும் கும்பகோணம் ராமஸ்வாமி ஆலயத்திற்கு சென்று வாருங்கள். ராம சேவகனான ஆஞ்சநேயஸ்வாமி இத்தலத்தில் ஆச்சரியமான முறையில் சேவை சாதிக்கிறார். கைகளில் வீணை ஏந்தி, சதாகாலமும் ராமகாவியச் சுவடியை பாராயணம் செய்துகொண்டிருக்கும் கோலம் காணக்கிடைக்காது. இக்கோயில் கும்பகோணத்தின் நகரத்தின் மையத்திலேயே அமைந்துள்ளது.

Related Stories:

>