×

100 ஆண்டு கனவுத்திட்டமான பழநி டூ ஈரோடு அகலரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை

பழநி : திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் நீண்டகால கனவுத்திட்டம் பழநி,ஈரோடு அகலரயில்பாதை திட்டம். 1915ம் ஆண்டு ஆங்கிலேய அரசால் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. திண்டுக்கல் பகுதியில் அதிகளவு நெல், பருத்தி மற்றும் மானாவரி பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இவைகளை விற்பனை செய்ய வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல இதுநாள்வரை லாரி போன்றவைகளே அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. போக்குவரத்து செலவு கட்டுப்படியாகாததால் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை குறைந்த விலைக்கு இங்குள்ள வியாபாரிகளிடம் விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.    அதுபோல் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள அநேக பகுதிகளில் விசைத்தறி தொழில் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள், பெட்ஷீட் மற்றும் ஜமுக்காளம் போன்றவை அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு வெளி மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. அதுபோல் பழநி நகருக்கு வடமாநிலங்களுக்கான இணைப்பு ரயில்கள் இல்லாததால்  தற்போது வடமாநில பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. எனவே, ஆங்கிலேயர் காலத்தில் உண்டாக்கப்பட்ட பழநி, ஈரோடு அகல ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.    இதன் காரணமாக கடந்த 2004ம் ஆண்டு இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து முதல் கட்ட சர்வே பணிக்காக ரூ.2 கோடி ஒதுக்கியது. தொடர்ந்து 2006 மற்றும் 2008ம் ஆண்டுகளில் அடுத்தடுத்த சர்வே பணி நடத்தப்பட்டு ரூ.380 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 2010, 2011 மற்றும் 2012 ஆண்டுகளில் மத்திய அரசு இத்திட்டத்திற்கு முறையே ரூ.40 கோடி, ரூ.33 கோடி, ரூ.12 கோடி என ரூ.85 கோடி ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. இதன்பிறகு ஒன்றிய அரசு இத்திட்டத்திற்கு எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.  பழநியில் இருந்து தாசநாயக்கன்பட்டி, தாராபுரம், நல்லிமடம், ஊதியூர், காங்கேயம், சென்னிமலை, ஈங்கூர் வழியாக 91.5 கிலோமீட்டர் தொலைவில் ஈரோட்டிற்கு ரயில்தடம் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் 6 பெரியபாலம், 42 சிறியபாலம், 23 ரயில்வேகேட் அமைக்கும் வகையில் திட்டமிடப்பட்டது. இந்நிலையில் இறுதிகட்ட சர்வே பணி மற்றும் நில கையகப்படுத்தும் பணி பாதி அளவில் நடந்த நிலையில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இத்திட்டத்திற்கு மாநில அரசு தனது பங்குத்தொகை தர வேண்டும். ஆனால், கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு அதனை கண்டுகொள்ளவில்லையென கூறப்படுகிறது. இதனால் இத்திட்டம் தற்போது முடங்கிப்போய் உள்ளது. தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசு பழநி&ஈரோடு அகல ரயில்பாதை திட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக பழநி, ஈரோடு அகலரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து பழநியைச் சேர்ந்த முருகானந்தம் கூறியதாவது, ‘‘நீண்ட நாட்களாக இத்திட்டம் கிடப்பில் உள்ளது. மாநில அரசின் பங்குத்தொகை தருவதில் இழுபறியாக இருப்பதாகவும், நிலம் கையகப்படுத்துவதில் மெத்தனம் நிலவுவதாகவும் தெரிய வந்துள்ளது. கடந்த திமுக&காங்கிரஸ் கூட்டணி ஆட்சிகாலத்தில்தான் பழநி வழித்தடம் அகலரயில்பாதையாக மாற்றப்பட்டது. சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டது. தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால்  இத்திட்டம் நிறைவேற்றப்படும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும், பழநி வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கவும் தமிழக எம்பிக்கள் ஒன்றிய அரசிடம்  வலியுறுத்த வேண்டும்’’என்றார்….

The post 100 ஆண்டு கனவுத்திட்டமான பழநி டூ ஈரோடு அகலரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Palani ,Erode ,Erodu ,Dindigul ,Tirupur ,Dinakaran ,
× RELATED வெளியாட்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிர ரோந்து: வனத்துறை நடவடிக்கை