மும்பை: பான் இந்தியா நடிகை தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா ஆகியோரின் காதல் திடீரென்று முறிந்துவிட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு காரணம், தன்னை விஜய் வர்மா உடனே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தமன்னா வற்புறுத்தியதாகவும், அதற்கு விஜய் வர்மா சரியான பதில் சொல்லாமல் நழுவியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த வாரத்தில் இருவரும் பிரேக்அப் செய்துவிட்டதாக ஒரு தகவல் வெளியானது. சில நாட்களுக்கு முன்புதான் தமன்னாவும், விஜய் வர்மாவும் ஒரே இடத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடிய வீடியோ வெளியானது.
மும்பையில் ரவீணா டாண்டன் வீட்டில் நடந்த கொண்டாட்டத்தில் அவர்கள் பங்கேற்ற வீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் அதுபற்றி கமென்ட் வெளியிட்டு வருகின்றனர். தமன்னாவும், விஜய் வர்மாவும் ஒரே இடத்தில் இருந்தாலும், தனித்தனியாக ஹோலி பண்டிகையை கொண்டாடினர். அவர்களுக்கு ரவீணா டாண்டன் மகள் ரஷா பொதுவான தோழி என்பதால் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். ஆனால், கடைசி வரை விஜய் வர்மாவிடம் தமன்னா பேசாமல் புறக்கணித்துவிட்டார். தமன்னாவும், விஜய் வர்மாவும் தங்கள் காதல் முறிந்த நிலையில், இனி நண்பர்களாக மட்டுமே இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.
காதல் முறிவுக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் இருந்து விஜய் வர்மாவின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தமன்னா நீக்கிவிட்டார். விஜய் வர்மாவும் தனது இன்ஸ்டாகிராமில் தமன்னாவின் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை நீக்கிவிட்டார்.