விருச்சிகம்

நெரூர்

விருச்சிகத்தில் பிறந்தவர்கள், ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் ஒன்றும் புதிதல்ல என்று தன்னைத்தானே ஆற்றுப்படுத்திக்கொண்டு மேலேறுவீர்கள். எதையும் அவ்வளவு சீக்கிரத்தில் விடமாட்டீர்கள். இதயம் சொல்வதை வடிகட்டாது அப்படியே வார்த்தைகளாக வெளிப்படுத்துவீர்கள். பலநேரம் பேசினாலும் பாலிஷ் ஆக பேசத் தெரியாது. நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல பேசுவீர்கள். உங்களின் ராசியாதிபதியாக பூமிகாரகனான செவ்வாய் வருகிறார். அதனால், சிறிய அளவாயினும் எப்போதும் எங்கேனும் சொத்து இருக்கும். இந்த செவ்வாயின் ராசிக்குள் சனியை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரம் இடம் பெறுவதால் இரும்புச் சத்து குறைபாடு இருக்கும். அதேபோல ஆறாம் இடத்திற்கு அதிபதியாகவும் செவ்வாய் வருகிறது.

உங்களின் பேச்சே உங்களுக்கு எதிரியை கொண்டு வந்து கொடுக்கும். சபையில் சடாரென்று பேசிவிட்டு  தனியாக வந்து மன்னிப்பு கேட்பீர்கள். இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்திற்கு அதிபதியாக தனகாரகன் குரு வருவதால் பின் வயதுகளில் சேமிப்பு, பணவரவு போன்றவை உண்டு. பொறுப்பாக படித்தாலும் தேர்வு நேரத்தில் பயப்படுவீர்கள். மூன்றாம் இடத்திற்கு சனி வருவதால் எதற்கும் அஞ்சாது முடிவெடுப்பீர்கள். சகோதர, சகோதரிகளிடம் அன்பு பாராட்டுவீர்கள்.

ஐந்துக்குரியவராக மீன குரு வருகிறார். மீனம் ஆழமான வீடாக இருப்பதால் உங்கள் பிள்ளைகள் உங்களைவிட ஆழமாக யோசிப்பார்கள். தலைநகரங்களில்தான் வாழ விரும்புவார்கள். சப்தமாதிபதி எனும் ஏழாம் இடத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார்.

வாழ்க்கைத் துணைவரைப்பற்றி இந்த இடம் சொல்கிறது. வாழ்க்கைத் துணைவர் ஏதேனும் ஒரு விதத்தில் பிரபலமாக இருப்பார். கலைகளில் மிக ஆர்வமுடன் ஈடுபடுவார். உங்களின் அனைத்து வெற்றிகளுக்கும் பின்னால் வாழ்க்கைத் துணைவர் இருப்பார். அல்லது அவர் முன்னேறியிருப்பார். எட்டுக்குரியவராகவும், லாப ஸ்தானமான பதினோராம் இடத்திற்கு அதிபதியாக புதன் வருவதால் அலைச்சலும், ஆதாயமுமாக இருக்கும். மூத்த சகோதரரோடு பிரச்னைகள் வந்த வண்ணம் இருக்கும். பூர்விக ஊரைவிட்டு விலகி மீண்டும் சொந்த ஊரில் இடம் வாங்கி செட்டில் ஆவீர்கள். ஒன்பதாம் இடத்திற்கு அதிபதியாக பாக்யாதிபதி சந்திரனாக வருவதால் சந்திரனைப்போல வாழ்க்கையும் வளர்ந்து தேய்ந்து நகரும்.

வருமானமும் மாறிமாறி இருக்கும். எதில் நுழைந்தாலும் படைப்புத் திறனோடு உங்களை அறியாமல் செயல்படுவீர்கள். வேலைக்கு சேர்ந்தவுடனேயே வித்தியாசம் காட்டுவீர்கள். பன்னிரண்டாம் இடத்திற்கு சுக்கிரன் அதிபதியாக வருவதால் சுகபோகியாக இருப்பீர்கள். நான்கு நாட்கள் தொடர்ந்து வேலை செய்துவிட்டு இரண்டு நாட்கள் வெளியூர் சென்று வருவீர்கள். பிரயாணத்திற்கென்றே காசு சேர்த்து வைத்துக் கொள்வீர்கள். விருச்சிக ராசிக்கு அதிபதியாக செவ்வாய் இருப்பதால் ஞானியர்களையும், புனித மகான்களையும் வணங்குவது நலம். அதுதவிர செவ்வாய்க்கு எதிர்குண கிரகங்களாக அனுஷத்திற்கு அதிபதியான சனியும், கேட்டைக்கு அதிபதியாக புதனும் வரும்போது சுகபோகத்தில் இருக்கும்போதே வாழ்க்கையின் நிலையாமை குறித்தும் யோசிப்பீர்கள். ‘‘இதெல்லாம் இன்னும் எத்தனை வருஷம்னு தெரியாதா’’ என்று அடிக்கடி சொல்வீர்கள்.

எப்போதுமே காடு, மேடெல்லாம் திரியும் சித்தர்கள் எனில் உங்களுக்கு கொள்ளைப் பிரியம் இருக்கும். மிகப் பழமையான தலங்களையும், அங்கேயே ஏதேனும் ஜீவ சமாதிகள் இருந்தால் நீங்கள் தரிசிக்கும்போது உங்களுக்குள் மாற்றம் ஏற்படும். அப்படிப்பட்ட தலமே நெரூர் ஆகும். இத்தலத்திலுள்ள சிவாலயத்திற்கு பின்புறத்தில்தான் சதாசிவபிரம்மேந்திரர் எனும் மகாஞானி ஜீவ சமாதியடைந்தார். தன் உடல், மனம் எதுவும் தெரியாது மகாசமாதியில் வெகு காலம் சஞ்சரித்தவர். அவதூதராக இருந்தார். இவருக்கு திசைகளே உடையாக திகம்பரராக திரிந்தார். இப்படிப்பட்ட ஜீவசமாதிகளுக்கு செல்லும்போது மனதிலும், புத்தியிலும் தெளிவு கூடும் என்பது உறுதி. இத்தலம் கரூர் எனும் ஊரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

Related Stories:

>