×

400 தேனீ பெட்டிகள்… ஏக்கருக்கு ரூ. 84 ஆயிரம் வருவாய்

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் குறிப்பிட்ட பயிர்களை வேளாண் செய்வதை  தன்னகத்தே கொண்டுள்ளது. அந்த வகையில் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதி தேனுக்கு பெயர் பெற்ற ஊர்.  விளவங்கோடு, கல்குளம் பகுதிகள்  தேனீ வளர்ப்பில் முன்னணியில் உள்ளார்கள். சுற்று வட்டாரத்தில் 50 ஆயிரம் தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டு வருகின்றனர் . இவர்கள் மூலம் வருடத்திற்கு 50 லட்சம் கிலோ தேனை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கின்றது குமரி மாவட்டம். தேன்தொழிலை நம்பியுள்ள விவசாயிகள் தரமான நிலங்களை தேர்வு செய்து தேன் பெட்டிகளை வைத்து தேனீயை வளர்க்கின்றார்கள்.  குறிப்பாக இந்த மகரந்தம் நடைபெற்று பயிர் மகசூல் அதிகரிக்கிறது.  குமரி மாவட்டத்தில் உள்ள தேன் உற்பத்தித் தொழிலாளர்கள் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தேனீ வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். தேனீ பெட்டியில் இருந்து 15 கிலோ வரை தேன் கிடைக்கின்றது. ஒரு தேனீ பெட்டியில் 3 முதல் 4 அறைகள் இருக்கும். ஒரு பெட்டியில் ஒரே ஒரு ராணி தேனீ மட்டுமே இருக்கும். ஆயிரக்கணக்கான வேலைக்கார தேனீக்கள் தேன் சேகரிப்புப் பணியில் ஈடுபடும். ராணி தேனீ தேன் சேகரிக்க செல்வதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட ராணி தேனீ ஒரு பெட்டியில் இருந்தால் அவை அந்த கூட்டில் உள்ள ஈக்களை பிரித்து  தனியாக கூடு அமைத்து விடும்.இதனால் தேனீக்கள் முட்டையிடும் காலத்தில் பெட்டிகளை அடிக்கடி சோதனை செய்து, ராணி முட்டையை உடைத்து விடுவார்கள். அல்லது ராணி ஈக்கள் உற்பத்தியாகிவிட்டால் அவற்றை தனியாக பிரித்து பெட்டிகள் அமைத்து ஈக்கள் உற்பத்தியை அதிகரிப்பார்கள். குமரி சுற்றுவட்டாரத்தில் ரப்பர் தோட்டங்கள்தான் அதிகம். அதே  அளவு தேன் உற்பத்தியும் செய்யப்படுகிறது. ரப்பர் பூ பூக்கும் ஜனவரி முதல் மார்ச் வரை தேன் சீசன் காலமாகும். இந்த காலக் கட்டத்தில் ஒரு பெட்டிக்கு 3 கிலோ வரை தேன் கிடைக்கிறது. இதனை அவ்வப்போது பிரித்தெடுகிறார்கள். தோட்டங்களில் வைக்கப்படும் பெட்டியில் தேன் உற்பத்தி நிலவரம் குறித்து தெரிந்து கொள்வதற்காக 10 நாட்களுக்கு ஒரு முறை பெட்டியை திறந்து பார்ப்பார்கள். பெட்டியில் வைக்கப்பட்டுள்ள அறையில் தேனடைகள் நிரம்பியதும் அதனை அறுவடை செய்கிறார்கள். பின்னர் இயந்திரம் மூலம் தேனை பிரித்தெடுக்கிறார்கள். தேன் உற்பத்தி இல்லாத காலங்களில் ஈக்களின் உணவிற்காகவும், அவற்றை பராமரிக்கவும், ஈக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் விவசாயிகள் பெரும் தொகையை செலவிடுகிறார்கள். அதாவது தேனீ பெட்டிக்குள் தேங்காய் சிரட்டை வைத்து அதில் கருப்பட்டி மற்றும் சர்க்கரைக் கரைசல் ஆகியவற்றை வைக்கிறார்கள். மேலும் நோய் தாக்குதல் இல்லாமல் இருக்க இந்த உணவுக் கரைசலில் மருந்துகளும் கலக்கப்படுகிறது. தேன் உற்பத்தியையும் தேனீ பராமரிப்பு நுட்பங்களையும் குலசேகரத்தை அடுத்த மஞ்சகோணம் பகுதி விவசாயி ஜஸ்டினிடம் அவரது தோட்டதில் பேசினோம் ‘‘ஏராளமான விவசாயிகள்  தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்கள் பல்வேறு விவசாய நிலங்களை தேர்வு செய்து, பெட்டி வைத்து, தேனீக்களை வளர்த்து, தேனீக்களால் தேன் கிடைப்பதை தாண்டி, மகரந்தசேர்க்கை நடந்து, விவசாய பயிர்களில் மகசூல் அதிக அளவு கிடைத்து வருகிறது. நான் பல்வேறு பகுதியில் 400 தேனீ பெட்டிகள் வைத்துள்ளேன். ஒரு பெட்டி வைத்து, பராமரிப்புச் செலவு எல்லாம் சேர்ந்து ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2500 வரை ஆகும். ஒரு ஏக்கருக்கு 25 முதல் 100 வரை தேனீ பெட்டிகள் வைக்கலாம். குறைவான அளவு தேனீ பெட்டி வைக்கும்போது உற்பத்தி அதிக அளவு கிடைக்கும். பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, உற்பத்தி குறைவாக கிடைக்கும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை தேன் உற்பத்தி இருக்கும். ஒரு ஏக்கருக்கு 40 தேனீ பெட்டிகள் வைக்கும் போது உற்பத்தி அதிகமாக இருக்கும். இதன் மூலம் 600 கிலோ தேன், மற்றும் 10 கிலோ மெழுகும் கிடைக்கும். பச்சை தேன் ஒரு கிலோ எங்களிடம் இருந்து ரூ.140க்கு கொள்முதல் செய்கின்றார்கள். ஆண்டிற்கு 600 கிலோ வரை தேன் உற்பத்தியாகிறது. ரூ.84 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கின்றது. தேனை பதப்படுத்தி விற்கும் போது கிலோ ரூ.200க்கு போகும். இதனால் கூடுதல் வருமானம் கிடைக்கும். ஒரு ஏக்கரில் வைத்துள்ள தேன் பெட்டியில் இருந்து கிடைக்கும் மெழுகில் இருந்து ரூ.3750 கிடைக்கும். தேன் கிடைத்த பிறகு, தேனீக்களை பாதுகாப்பது பெரிய வேலையாகும். தேனீக்களை தாக்கும் வைரசுகளை அழிக்கும் மருந்து விலையும் அதிகமாக இருப்பதுடன், மருந்தும் போதிய அளவு கடைகளில் கிடைப்பது இல்லை. இதனால் தேன் வளர்ப்பு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேன் வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் குமரி மாவட்டத்தில் தேனீ ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்.’’ என்கின்றார்.இலவச உணவு திட்டத்தில் தேன்குமரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேனில் அதிக அளவு குளுக்கோஸ் சத்துக்கள் இருக்கிறது. இதனால் குமரி மாவட்ட தேன் அடர்த்தி அதிகமாக இருப்பதுடன், குளிர்காலத்தில் தேன் உறைந்தும், வெயில் காலத்தில் தேன் உருகியும் காணப்படும். இங்கு உற்பத்தியாகும் அனைத்து தேனையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். பள்ளியில் இலவச உணவு திட்டத்திலும் தேனை சேர்க்க வேண்டும் என்பது தேன் விவசாயிகளின் கோரிக்கை.தேன்அடையில் இருந்து மெழுகு கிடைக்கிறது. இந்த மெழுகு கடந்த காலங்களில் ஒரு கிலோ ரூ.650க்கு விற்பனை ஆனது. தற்போது இறக்குமதி அதிகமாக இருப்பதால், ஒரு கிலோ தேன்மெழுகு ரூ.375க்கு விற்பனையாகிறது. இதனால் தேன் வளர்க்கும் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர்.தேன் தேங்கும் நிலை குமரி மாவட்டத்தில் தேன் வளர்ப்போர் அதிகம்பேர் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகாவிலும் தேன் வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர். அந்த வகையில் குமரி மாவட்டத்திற்கு சுமார் 50 லட்சம் கிலோ தேன் ஆண்டிற்கு கிடைத்து வருகிறது. அரசு தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் மூலம் 3 லட்சம் கிலோ கொள்முதல் செய்கிறது. மற்ற தேன்கள் தனியார் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் தேனுக்கு 5 சதவீதம் மத்திய அரசு வரி போட்டுள்ளது. இந்த வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மேலும் 18 சதவீதம் வரியுடன் செயற்கைத் தேன் விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தேனுக்கு பெயர் போன மார்த்தாண்டம் தேன் விற்பனையாகாமல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது’’ என்கிறார் தேனீ வளர்ப்போர் சங்க மாவட்ட செயலாளர் ஜூடஸ்குமார்.தொடர்புக்கு:  ஜஸ்டின் – 94878 77282தேனீ வளர்ப்போர் சங்க மாவட்ட செயலாளர் ஜூடஸ்குமார்- 94433 78732தொகுப்பு: எம்.சுபாஷ்

The post 400 தேனீ பெட்டிகள்… ஏக்கருக்கு ரூ. 84 ஆயிரம் வருவாய் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kumari district ,Marthandam ,Dinakaran ,
× RELATED கடும் வெயிலுக்கு இடையே குமரி...