பன்னிரெண்டு ராசிகளுக்கான கோயில்கள்: மேஷம்

பழநி

கால புருஷனின் கபாலமாக விளங்குவது மேஷம். வான் மண்டலத்தில் முதல் வீடு இதுதான். இந்த கபாலத்தைத்தான் செவ்வாய் ஆள்கிறது. இவரே இந்த வீட்டின் தலைவர். இப்படிப்பட்ட செவ்வாயின் ஆட்சி வீட்டில் பிறந்த நீங்கள் ஆளப் பிறந்தவர்கள். ஆங்கிலத்தில் ரூலர் என்பார்களே அதுதான் மேஷ ராசியின் இயல்பு. மேஷம் வேஷம் போடும் என்பார்கள். சில நேரங்களில் நீங்கள் பொடிவைத்துப் பேசுவீர்கள். இதற்குக் காரணம் உங்களின் வாக்கு அதிபதியாக சுக்கிரன் இருப்பதால்தான். அதனால்தான் ஒரு நிறுவனத்தில் சாதாரண வேலைக்குச் சேர்ந்தால்கூட திரும்பிப் பார்ப்பதற்குள் தலைமைக்கு நெருக்கமாகும் அளவிற்கு வளர்ந்து விடுவீர்கள்.

உடன் பிறந்தவர்களை உயிரைவிட அதிகமாக நேசிப்பீர்கள். ஆனால், உடன்பிறந்தவர்கள் ஏனோ உங்களை அதிகம் புரிந்து கொள்வதில்லை. அதை நினைத்து சில நேரங்களில் புழுங்குவீர்கள். அதற்குக் காரணம் உங்களின் எதிர்மறை கிரகமான புதனும், சனியும் உங்கள் ராசியின் சகோதர ஸ்தானத்திற்கு அதிபதிகளாக இருப்பதுதான். பூமிக்காரகன் என்று சொல்லப்படும் செவ்வாயின் ராசியில் பிறந்திருப்பதால் நாலு சென்ட் நிலமாவது ஊருக்கு பக்கத்தில்

வாங்கிப்போடுவீர்கள். சேறு இல்லையேல் சோறு இல்லை என்பதை அறிந்த நீங்கள் விவசாயிகளை வியந்து பார்ப்பீர்கள்.

உழுபவனுக்கே நிலம் சொந்தம், எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற பொதுவுடைமை சிந்தனை உங்களிடத்தில் ஓங்கியிருக்கும். உங்களின் ராசிநாதனாக செவ்வாய் இருப்பதால், தன் கண்ணெதிரே எந்த தவறு நடந்தாலும் பாராமுகமாக இல்லாமல் தட்டிக்கேட்டு தண்டிப்பீர்கள். மற்ற ராசிக்காரர்களை விட எதையுமே செயல்படுத்திப் பார்ப்பதில் வல்லவர்கள். பிரச்னையை சொன்னால் தீர்வு காண்பவர்கள். பிரச்னை மீது உடனே தீர்மானம் நிறைவேற்றி அதை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வைப்பீர்கள்.

நீங்கள் கலையை ரசிப்பீர்கள். ஆனால், உங்கள் துணையோ கலைஞராகவே இருப்பார். ஆயகலைகள் அறுபத்து நான்கிற்கும் அதிபதியான சுக்கிரன், ராசிக்கு ஏழாம் வீட்டிற்கும் அதிபதியாக இருப்பதுதான் காரணம். உங்கள் வாழ்வில் எதிரிகள் நீங்கள் முன்பின் அறியாதவர்களாக இருக்கமாட்டார்கள். உங்களுடனேயே பழகி வருபவர்களாகத்தான் இருப்பார்கள். இவர்கள், உங்களுடைய வளர்ச்சி பிடிக்காமல் பொறாமை கொள்பவர்கள். அருகிலேயே எதிரிகள்! உங்களை சுற்றியிருப்பவர்கள், உங்களை நன்றாகத் தெரிந்தவர்கள், உங்களால் பயனடைந்தவர்களே அவ்வாறு உங்களுக்கு எதிராக மாறுவார்கள்.

மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் அந்தரங்க விஷயங்களை அருகிலிருப்பவர்களிடம் சொல்லக் கூடாது. ஏனெனில் நண்பருக்கு உரிய மூன்றாம் வீட்டிற்கும், எதிரிக்குரிய ஆறாம் வீட்டிற்கும் புதன் அதிபதியாக வருவதால் நெருங்கி பழகியவர்களே எதிரியாக இருப்பார்கள். மேஷ ராசிக்காரர்கள் எப்போதுமே வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்த மாட்டார்கள். பிறரிடம் உதவி கேட்கத் தயங்குவார்கள். தன்னம்பிக்கையில் ஆமையிடம் தோற்ற முயல்போல பல விஷயங்களில் கோட்டை விடுவீர்கள். ஆரம்பத்தில் இருக்கும் ஆர்வம் இறுதிவரை நிலைக்காது.

பொதுவாகவே மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலம் உங்களுக்குப் பிடிக்கும். உங்கள் ராசிநாதனான செவ்வாயை வழிநடத்தக் கூடிய தெய்வத்தை நீங்கள் அந்தச் சூழலில் தரிசிக்கும்போது உங்கள் வாழ்வு மலையளவு உயரும் என்பது உறுதி. அப்படிப்பட்ட ஒரு தலம், பழநி. தனித் தன்மை பெற வேண்டும் என்று தாகத்தோடு முருகப் பெருமான் வந்தமர்ந்த தலம் இது. ஆகவே, எப்போதும் உங்கள் உள்ளத்தில் பழநி முருகனை நிறுத்துங்கள். மேஷ ராசிக்காரர்கள் இத்தலத்திற்கு எப்போது சென்று வந்தாலும் ஒரு மாற்றமும், ஏற்றமும் நிச்சயம் உண்டு. தோல்விகள் புறமுதுகிட்டு ஓடுவது உறுதி.

Related Stories: