×

சிவாலய முருகனின் உலாத் திருமேனிகள்


சிவாலயங்களில் நடைபெறும் பெருந் திருவிழாக்களிலும் முருகப் பெருமானைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும், கிருத்திகை, உத்திரம், சஷ்டி ஆகிய பருவ விழாக்களிலும் பெருந் திருவிழாக்களிலும் வீதியுலா காண்பதற்கென முருகனின் பலவகையான உலாத்திரு மேனிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் முதன்மை பெற்றது வள்ளி, தெய்வானையருடன் ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்டவராகக் காட்சிதரும் முருகப்பெருமானின் திருவுருவமாகும். இதில் அவரது மேற்கரங்களில் வஜ்ராயுதமும், சத்தியாயுதமும் இருக்க முன் கரங்கள் அபய, வரத முத்திரைகளைத் தாங்கியுள்ளன. பின்புறம் மயில் நிற்கின்றது. இவரைக் கல்யாண சுப்பிரமணியர் என அழைக்கின்றனர். சிவாலயங்களில் முதன்மை பெற்ற உலாத்திருமேனிகளான பஞ்ச மூர்த்திகளில் ஒருவராக இருப்பவர் இவரே ஆவார். சில தலங்களில் இவரை வில்லேந்திய வேலவராகவும் அமைத்துள்ளனர். சோழ நாட்டுத் தலங்கள் பலவற்றில் முருகன் வில்லேந்திய வேலவனாகவே காட்சி தருகிறான். இவரை தனுசு சுப்பிரமணியர் என்றும் அழைக்கின்றனர்.

திருக்கடையூர் மயானம், மயிலாடுதுறை போன்ற திருத்தலங்களில் வில்லேந்திய வேலவனைக் காண்கிறோம்.பெரிய ஆலயங்களில் கல்யாணசுப்பிரமணியர் இருந்தாலும் தனியே ஆறுமுக சுவாமியும் இருதேவியருடன் இருக்கக் காண்கிறோம். இவர் பிராகாரத்தின் வடகிழக்கு முனையில் அல்லது வடமேற்கு முனையில் தெற்கு நோக்கியவாறு சபா மண்டபத்தில் காட்சி தருகிறார்.வைகாசி விசாக நாளில் இவருக்குப் பெரிய அளவிலான மகாஅபிஷேகமும் இரவில் திருவீதியுலாவும் நடத்தப்படுகின்றன.வைகாசி விசாக நாளில் சண்முகர் தேவேந்திர விமானத்தில் பவனி வந்து அன்பர்களுக்குக் காட்சி தருகிறார். அடுத்தபடியாக, பழனி தண்டாயுதபாணியின் திருவுருவம்அழகிய உலாத்திருமேனியாக அமைக்கப்பட்டுள்ளது. பங்குனி உத்திரத்தில் இவருக்கு காவடி எடுத்து விழா கொண்டாடுகின்றனர்.

சில தலங்களில் செல்வமுத்துக் குமரன் என்னும் பெயரிலான முருகனின் வடிவத்தையும் காண்கிறோம். இவர் தனது இடது காலை நிலத்தில் பதித்து, வலது காலை மயில் மீது ஊன்றியவாறு நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவர் தனது மேற்கரங்களில் வஜ்ஜிரம், சக்தி ஆயுதங்களை ஏந்தி முன் கரங்களில் வில்லையும் அம்பையும் தாங்கியுள்ளார் கந்தர் சஷ்டியில் வீதியுலா காணும் மூர்த்தியாக இவர் விளங்குகிறார். இவரது திருவடியைத் தாங்கி நிற்கும் மயில் நம்மை நோக்கி நிற்கின்றது.

மேலும் விழாக்களில் முருகனுடன் பவனி வரும் துணைத் தெய்வங்களாகச் சுமந்தரீஸ்வரர் எனப்படும் குகச்சண்டி, நவவீரர்கள், அவர்களில் முதல்வனான வீரபாகுதேவர், இடும்பன், சக்தி ஆயுதம் போன்ற உலாத்திருமேனிகளும் ஆலயங்களில் இடம் பெற்றுள்ளன.சிலதலங்களில் பாலசுப்பிரமணியர் வடிவமும் வழிபாட்டில் இருக்கிறது சில தலங்களில் மயில்மீது அமர்ந்த கோலத்திலும் அவர் காட்சி தருகிறார்.இவற்றைத் தவிர பஞ்சமூர்த்திகளில் முதன்மை பெற்ற சிவவடிவமான சோமாஸ் கந்தர் வடிவில் முருகன் சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் இடையில் அழகிய குழந்தையாகக் குதித்தாடும் கோலத்திலும் இருக்கிறார்.சிவாலயங்களில் நடைபெறும் பெருந்திருவிழாக்களில் வீதிகளில் எழுந்தருளி  அருள்பாலிப்பதற்கென்று இருக்கும் உலாத் திருமேனிகளில் முதன்மை பெற்றவையாக இருப்பவை பஞ்சமூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றன.இந்த ஐந்து மூர்த்திகள் முறையே விநாயகர், சிவபெருமான், அம்பிகை, வள்ளி, தெய்வானை உடனாய சுப்பிரமணியர், சண்டேஸ்வரர் என்னும் ஐவராவர்.
இவ்வரிசையில் இடம் பெற்றுள்ளசுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் நின்றகோலத்தில் காட்சி தருகிறார்.

பெரும்பாலும் இவருக்கென தனிச் சந்நதி அமைக்கப்படுவதில்லை உலாத்திருமேனிகள் வரிசையிலேயே இவரை வைத்துள்ளனர். சில தலங்களில் மட்டும் இவருக்குப் பெரிய சபை அமைக்கப்பட்டு அதில் சபாநாயகராக அமைத்துள்ளனர். சிக்கல் நவநீதேஸ்வரர் ஆலயத்து சிங்காரவேலர், புள்ளிருக்கு வேளூர் செல்வமுத்துக்குமார சுவாமி முதலிய உலாத்திருமேனிகள் சபாநாயகராக இருந்து அருட்பாலிக்கின்றனர்.சிக்கல் வேல்நெடுங்கண்ணி உடனாய நவநீதேஸ்வரர் ஆலயத்தில் கோலாகலமாக வீற்றிருக்கும் உலாத் திருமேனியான முருகன் பெரும் புகழ்பெற்றவராக இருக்கின்றார். இவரைச்
சிங்காரவேலர் என்று அழைக்கின்றனர். இவருக்கு நடைபெறும் விழாக்களில் கந்த சஷ்டி பெருவிழா முதன்மை பெற்றதாகும். மகா கந்தர் சஷ்டி என்று அழைக்கப்படும் இவ்விழாவின் ஐந்தாம் நாள் மாலையில் முருகனை அம்பிகை சந்நதிக்கு நேராக நிறுத்தி முருகன் சூரனை வெல்ல அன்னை பராசக்தியிடம் வேலாயுதம் பெற்ற நிகழ்ச்சியை நினைவு கூருவதான ஐதீக விழாவாக நடத்துகின்றனர். இந்த வேல்வாங்கும் விழாவில் இவருக்குதிருமேனியில் வியர்வை அரும்புவது உலக அதிசயமாக இருக்கிறது.

அனைத்து ஆலயங்களிலும் வேல்வாங்கு விழா நடை பெற்றாலும் சிக்கல் தலத்தில் நடைபெறும் விழா பெருமையுடன் பேசப்படுகிறது.சிக்கலில் வேல்வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்பது பழமொழியாகும். சிக்கல் தேவாரப் பாடல்பெற்ற பழம்பதியாக இருந்த போதிலும் இந்த சிங்காரவேலர் எழுந்தருளி இருக்கும்சிறப்பினால் சிறந்த குகத்தலமாகவே பெரும்புகழ் பெற்றுள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் செல்வமுத்துக்குமாரசுவாமி புள்ளிருக்கு வேளூர் என்று தேவாரத்தில் குறிக்கப்படும் தலம் இந்நாளில் வைத்தீஸ்வரன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் தையல்நாயகி உடனாய வைத்தியநாதசுவாமி கோயில் பெரும் சிறப்புடன் திகழ்கிறது. இது முருகன் சிவபெருமானை வழிபாட்டுப் பேறுபெற்ற தலங்களில் ஒன்றாகும். வேலனாகிய முருகன் வழிபட்ட தலம் என்பதாலேயே இது புள் இருக்கு வேளூர் என்றானது என்று புராணம் கூறுகிறது.இத்தலத்தில் உள்ள உலாத்திருமேனியான வள்ளி தெய்வானை உடனான முருகன் முத்துக்குமாரசுவாமி என்று அழைக்கப்படுகிறார். இவரை நவரத்தினங்களாலும் வைர வைடூர்ய மாலைகளாலும் அலங்கரித்துள்ளனர். இவரது செல்வச் சிறப்பு காரணமாக இவர் செல்வ முத்துக்குமாரசுவாமி என்று பெயர் பெற்றுள்ளார்.இவர் சிவபெருமானை வழிபட்டு நாள் தோறும் பூச்செண்டு பெற்றார் என்பது புராணச் செய்தியாகும். அதை நினைவு கூரும் வகையில் தினமும் சுவாமி சந்நதியில் வைத்துப் பூஜிக்கப்பட்ட பன்னீர்ப் பூக்களால் ஆன பூச்செண்டு ஒன்றை இவரது கரத்தில் வைத்து வழிபாடு செய்கின்றனர்.

சிவாலயங்களில் பரிவாரமாக அமையும் முருகன் பிராகாரத்தின் மேற்கு அல்லது வடமேற்கு முனையில் இருப்பார். இவரை ஆறுமுகம் கொண்ட சண்முகராகவோ, ஒருமுகம் கொண்ட கல்யாண முருகனாகவோ அமைக்கின்றனர். இவரை உலாத்திருமேனியாக அமைக்கும் வழக்கம் இல்லை. பரிவார ஆலயத்து முருகனுக்குரிய உலாத்திருமேனி பஞ்ச மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்பட்டாலும் அவருக்கென தனிச் சந்நதி அமைக்கும் வழக்கமில்லை.பஞ்சமூர்த்திகளில் ஒருவரான முருகன் தனிச் சந்நதியில் பரிவார மூர்த்தியாக இருப்பதைக் காஞ்சி ஏகம்பரநாதர் ஆலயத்தில் காண்கிறோம். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் கருவறைக்கு மேற்கில் பெரியவெளியிடம் உள்ளது. இதன் மையத்தில் தழைத்துச் செழித்து வளர்ந்த பெரிய மாமரமும் அதன்கீழ் அமைந்த சிற்றாலயத்தில் சோமாஸ்கந்தரின் பெரிய கல்திருமேனியும் வழிபாட்டில் உள்ளது. மாமரத்திற்குத் தெற்கில் கலையழகு மிக்க சந்நதியில் உற்சவ ஏகாம்பரநாதர் எழுந்தருளியுள்ளார்.

இந்த மாமரத்திற்கு வடக்கில் அடுத்தடுத்து இரண்டு சிற்றாலயங்கள் உள்ளன. இவற்றில் ஒன்றில் முருகப்பெருமானும் அடுத்ததில் இத்தலத்து (சோமாஸ்கந்தரில் இடம் பெற்றுள்ள) தனியம்மனும் எழுந்தருளியுள்ளனர். இத்தலத்தில் முருகனின் கல்திருமேனி பரிவாரமாக அமைக்கப்படவில்லை. உலாமூர்த்தியே பரிவார முருகனாக எழுந்தருளியுள்ளார். இத்தகைய காட்சி வேறெங்கும் இல்லை.இவரைத் தலபுராணம் ‘‘மாவடி வைகும் செவ்வேள்’’ என்று போற்றுகிறது. அன்பர்கள் மாவடிஸ்கந்தர் என்று அழைக்கின்றனர்.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் தெற்குப்பக்கம் அமைந்த ராஜகோபுரத்தின் வாயிலில் வடபுறம் பெரிய சந்நதியில் துவார ஷண்முகர் எழுந்தருளியுள்ளார். ஏறத் தாழ எட்டடி உயரம் கொண்டவராக இவர் காட்சியளிக்கிறார். இம் மாவட்டத்தில் உள்ள பெரிய முருகன் வடிவம் இது என்கின்றனர். சிவாலயங்களில் வீற்றிருக்கும் உலாத்திருமேனி விளங்கும் முருகன் தனிச் சிறப்பு பெற்றிருப்பது சில தலங்களில் மட்டுமே என்றாலும் அவை உன்னதமாகப் பெருஞ்சிறப்புடன் இருக்கின்றன.
    
 - பூசை.ச.அருணவசந்தன்

Tags : Shivalaya Murugan ,Ulad Thirumenis ,
× RELATED சிவாலய முருகனின் உலாத் திருமேனிகள்