வேல் தந்த ஆறுகள்

சேயாறு

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் நகரை அடுத்துள்ள ஜவ்வாது மலைத்தொடரில் தோன்றி வடாற்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களில் பாய்ந்து, செங்கல்பட்டிற்குச் சற்று மேற்கேயுள்ள திருமுக்கூடல் எனும் தலத்தில் பாலாற்றுடன் கலக்கும் ஆறே செய்யாறு எனப்படும் சேயாறு ஆகும். இது முருகன் வேலால் தோற்றுவிக்கப்பட்ட ஆறாகும்.

இதன் கரையில் சப்த கரைகண்டம், சப்த கயிலாயம், பெருநகர், இளையனார் வேலூர், கடம்பர் கோயில், மாகறல் முதலான திருத்தலங்கள் உள்ளன.

இந்த ஆறு தோன்றியதை விளக்கும் புராணக்கதை ஒன்று வழக்கத்தில் உள்ளது. ஒரு சமயம் பார்வதிதேவியார் சிவபெருமானின் உடலில் இடப்பாகத்தைப் பெறவேண்டி காசி முதலான திருத்தலங்களை வழிபட்ட பின்னர் காஞ்சிபுரத்தை அடைந்தாள்.

அங்கு மாவடியில் முளைத்தெழுந்த ஏகாம்பரநாதரை வழிபட்டு அவருடைய அருட்காட்சியைப் பெற்றாள். சிவபெருமான் அவளைத், திருவண்ணாமலை சென்று தவம்புரியும்படிக் கூறினார். அதன்படி அம்பிகை தனது பரிவாரங்களுடன் திருவண்ணாமலையை நோக்கிப் பயணமானாள். பயணத்தின் நடுவே வந்த உச்சிவேளையில் அவள், சிவபூசையைச் செய்ய விரும்பினாள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை தண்ணீர் இருக்கும் தடமே காணவில்லை. முருகனிடம் தனது பூசைக்கு வேண்டிய தண்ணீரைக் கொண்டு வரும்படி ஆணையிட்டாள்.

முருகன் தன் தாயின் ஆணையைக் கேட்டதும் தன்னுடைய வேலை எடுத்து, மேற்குத் திசையை நோக்கி வீசி, ‘‘விரைந்து நீரை கொண்டு வருக’’ என்று அதற்குக் கட்டளையிட்டார்.அந்த வேல் பாய்ந்து இடைப்பட்ட சிறிய குன்றுகளைத் துளைத்துச் சென்றி ஜவ்வாது மலைத்தொடரில் ஓரிடத்தில் குத்திட்டு நின்றது. அந்த இடத்திலிருந்து நீர் ஊற்று வெளிப்பட்டு தண்ணீர் பொங்கியது. அதன்பின் வேலாயுதம் அவ்வூற்றுநீர் பாய்ந்து வர வழியையும் உண்டு பண்ணியது.

அவ்வாறு வேலால் உண்டாக்கிச் செலுத்தப்பட்ட ஆறே இலக்கியங்களில் சேயாறு என்றழைக்கப்படுகிறது. சேய் முருகன்; சேயால் உண்டாக்கப்பட்ட ஆறு- சேயாறு)அன்னையின் பூசனைக்கு ஆற்றினைத் தோற்றுவித்த வேலாயுதம், பிறகு அந்த ஆறு பாலாற்றுடன் கலக்குமிடத்திற்கு முன்பாக ஓரிடத்தில் அன்பர்கள் வழிபட்டுப் பேறுபெற, கல்லுருவம் பெற்று நிலைபெற்றது. அங்கு அதற்குக் கோயிலும் அந்தக் கோயிலைச் சுற்றி ஊரும் உண்டாயின. இப்படி வேல் நிலைபெற்று உண்டான இடமே இளையனார் வேலூர் என்று இந்நாளில் அழைக்கப்படுகிறது. இங்கு அழகிய முருகன் ஆலயம் உள்ளது. இது அருணகிரிநாத சுவாமிகளின் திருப்புகழ் பாடல் பெற்ற திருத்தலமாகும். காஞ்சிபுரத்திலிருந்து நகரப் பேருந்துகள் இத்தலத்திற்குச் செல்கின்றன.

குமாரதாரை

கன்னட நாட்டில் சுப்ரமண்யா என்னும் தலம் உள்ளது. இங்கு குமாரகிரி என்னும் சிறிய குன்றும், அதில் பிறந்து ஓடும் குமாரதாரை என்னும் சிற்றாறும் உள்ளன. இங்கு முருகன் வேலை ஊன்றி இந்த ஆற்றைத் தோற்றுவித்தான் என்று தலபுராணம் கூறுகிறது. குமரனால் உண்டாக்கப்பட்டதால், இது குமாரதாரை எனப்பட்டது. இதன் கரையில் ஆதி சுப்ரமண்யர் ஆலயம், குக்கே சுப்பிரமண்யர் ஆலயம் போன்ற சிறப்பு மிக்க ஆலயங்கள் இருக்கின்றன. இந்த ஆறு மேற்கு மலைத்தொடரில் உற்பத்தியாகி அருவியாக விழுந்து நதியாக ஓடி நேத்ராவதி ஆற்றில் கலக்கிறது. நேத்ராவதி மங்களூருக்கு அருகில் அரபிக்கடலோடு கலக்கிறது. குமாரதாரை முருகன் புகழ்பாடும் புண்ணிய நதியாக விளங்குகிறது. இது இந்தியாவிலுள்ள மிகத் தூய்மையான நதிகளுள் ஒன்றாகும்.

அனுபாவி அனுமத்குமர தீர்த்தம்

கோயம்புத்தூரிலிருந்து பெரிய தடாகச் சாலையில் பயணித்தால் அனுபாவியை அடையலாம். மலையின் மடியில் முருகன் கோயில் அமைந்துள்ளது. பெரும்பாலும் கொங்கு நாட்டில் தண்டாயுதபாணியாக இருக்கும் முருகன் இங்கு கல்யாண முருகனாகக் காட்சி தருகிறார். அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு இலங்கைக்குச் செல்லுகையில் இவ்விடத்திற்கு நேரே வரும்போது அவருக்குச் சோர்வும் கடும் தாகமும் ஏற்பட்டதாம். அவர் இங்கே இறங்கி இங்குள்ள முருகனை வழிபட்டார்.

முருகன் பாறை இடுக்கில் வேலை ஊன்றி தீர்த்தத்தைத் தோற்றுவித்தார். அதில் பெருகிய நீரை அருந்தி அனுமன் புத்துணர்ச்சி பெற்றார். அன்று முதல் அவ்விடம் அனுமத்குமர மலை என்று அழைக்கப்பட்டு இப்போது மருவி அனுபாவி என்று அழைக்கப்படுவதாகக் கூறுகின்றனர். வேல் உண்டாக்கிய இந்தச் சுவையின் இருப்பிடத்தை அறிய முடியாததால் இதனைக் காணாச்சுனை என்று அழைக்கின்றனர். இந்தத் தீர்த்தம் ஊரின் குடிநீராக இருக்கிறது.

திருவேற்காட்டு வேலாயுத தீர்த்தம்

சென்னையின் மேற்குப்பகுதியில் அமைந்திருக்கும் சைவத் திருத்தலம் திருவேற்காடு. கூவம் என்றழைக்கப்படும் பாலாற்றின் (பழம்பாலாறு) கரையில் இருப்பது. இந்த முருகப்பெருமான் வேல மரங்கள் நிறைந்த காட்டின் நடுவில் வீற்றிருந்து சிவபூஜை செய்தார். அவர் சிவபூசை செய்வதற்காகத் தனது வேலாயுதத்தை ஊன்றி  ஒரு தீர்த்தத்தைத் தோற்றுவித்தார். இந்நாளில் கிணறு வடிவில் காட்சியளிக்கும் அத்தீர்த்தம் வேல்

ஊன்றித் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. வேல்களே இத்தலத்தில் வேலமரங்களாக இருந்து முருகனுக்கு நிழல் பரப்பியதாகவும் கூறப்படுகிறது. இங்குள்ள வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் பிராகாரத்தில் சிவலிங்கத்தைத் தன் முன் வைத்து பூஜை செய்துகொண்டிருப்பவராக முருகன் எழுந்தருளியுள்ளார்.

திருச்செந்தூர் நாழிக்கிணறு திருச்செந்தூரில் கோயிலுக்குத் தெற்கில் மணல் வௌியில் அமைந்துள்ள கிணற்றுக்குள் இருக்கும் பாறையில் ஓரடி ஆழம் ஓரடி நீளமும் அகலமும் கொண்ட குழியில் இருந்து ஊறிவரும் தீர்த்தம் நாழிக்கிணறு தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.முருகன் சிவபூசை செய்வதற்காக இங்குள்ள பாறையில் தனது வேலாயுதத்தை ஊன்றி அதில் தண்ணீரைப் பெருகி வரும்படிச் செய்தார் என்று தலபுராணம் கூறுகிறது. கந்தக நீர் ஊறும் பாறைக்கு நடுவே நன்னீர் ஊற்றாக விளங்கும் நாழிக்கிணறு இயற்கையாக அமைந்த உலக அதிசயங்களில் ஒன்றாகும்.

ஆட்சிலிங்கம்

Related Stories:

>