×

மருதத்து மருகனான குன்றத்துக் குமரன்

குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோனை, குன்று தோறாடி வந்த அக்குமரனை இடைக்காலத்தில் மருத நிலத் தெய்வமான இந்திரனின் மருகன் [மருமகன்] ஆக்கிவிட்டது ஏன் என்று இக்கட்டுரை ஆராய்கின்றது. குறிஞ்சி நிலத்தில் மனித இனத்தின் பண்பாடு காதல் வாழ்வு மூன்று மாதம் [களவியல்- தொல்காப்பியம்] மட்டுமே இருக்க வேண்டும். பின்னர் அவ்வாழ்க்கை கற்பு வாழ்க்கையாக இல்லறமாக நல்லறம் [கற்பியல் - தொல்காப்பியம்] காக்கப்பட வேண்டும் என்று தமிழர் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர்.

குறிஞ்சியை விட்டுக் கீழே இறங்கினால் அடிவாரத்தில் மேய்ச்சல் நிலங்கள் அதிகமுள்ள பகுதியில் இனிய இல்லறம் நடைபெற்றது. தலைவன் போருக்குச் சென்றாலும் அவன் விரைவில் மழைக்காலம் வந்ததும் தலைவியுடனுறைய திரும்பி வருவான் என்று தலைவி ஆற்றி இருந்தாள். இங்கு மாயோன்
கடவுளாக வரப்பட்டான். தலைவன் கோ என்று அழைக்கப்பட்டான். இது வளர்ச்சி காலகட்டம் ஆகும். ஆனால், வல்லரசுபோல ஆணாதிக்கமும் அவனது அதிகாரமும் உச்சத்தில் இருந்த இருக்கும் இடம் என்றால் அது மருதம் மட்டுமே.

மனித நாகரிகம் வளர வளர பெண் முதன்மை சமுதாயமாக இருந்தது மாறி ஆண் முதன்மை சமுதாயம் தோன்றி இன்று வரை நிலை பெற்றுள்ளது. இன்றைய நுகர்வு கலாசாரத்தில் பெண்கள் நுகர் பொருளாக அங்கீகாரம் பெற்றதற்கு ஒரே காரணம் ஆணாதிக்கம் உச்சத்தில் இருப்பதாகும். ஆண்களின் விளையாட்டு போட்டிகள் நடக்கும் இடத்தில் இறுக்கமான உடையில் உற்சாகம் ஊட்டும் பெண்களின் ஆட்டம்  இடம் பெறுவது பெண்களை இச்சமுகம் நுகர் பொருளாக  ஏற்றுக் கொண்டதற்கான ஆதாரமாகும். இந்நிலை தோன்றுவதற்கு அடிப்படை வகுத்துக் கொடுத்தது மருதநிலக் கலாச்சாரம் ஆகும். மருத நிலத்தில் பெண்கள் இரு வகைப்பட்டனர். குல மகளிர் தாய் எனப்பட்டனர். பொது மகளிர் பலவகைப்பட்ட பரத்தையராக இருந்தனர். இங்கு பலதார மணம் ஆணின் கௌரவமாகக் கருதப்பட்டது.

குன்றத்தில் தமிழர் அகத்திணை முறைப்படி வள்ளியைக் காதலித்துக் கடிமணம் புரிந்த குமரன் தொல்காப்பியம் காட்டும் களிறு தரு புணர்ச்சி, கூடலும் கூடல் நிமித்தமும் போன்ற  இலக்கணக்கூறுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினான். தென்னகத்தில் ஏற்பட்ட கடல்கோளுக்குப் பிறகு இங்கிருந்து உயிர் பிழைக்கக் கடலில் நீந்தியும் நிலத்தின் வழியாக நடந்தும் வெவ்வேறு திசைகளில் புலம்பெயர்ந்த பல நாடுகளில் வள்ளி முருகனை பச்சை வண்ணமாக பசுமையின் சின்னமாக வேளாண் கடவுளாகப் போற்றி  வழிபட்டனர்.  

ஆற்றுநீருக்கு அணைகட்டி மழை நீரை ஏரி, குளம், கண்மாய்களில் சேமித்து வைத்து ஆண்டு முழுக்க வேளாண் பணிகளைச் செய்து இயற்கையின் சவாலை எதிர்கொண்ட இறுமாப்பினால் நதிக்கரையில் வாழ்ந்த மக்கள் வேளாண் நிலங்களை தமது உடைமையாக்கி அதற்கு வாரிசு
களையும் நியமிக்க எண்ணம் கொண்டு பல மனைவியரை மணந்து குடும்பம் என்ற அமைப்பை தோற்றுவித்தனர்.

இங்கு அவர்களின் தெய்வமாக குழந்தைகளை உற்பத்தி செய்ய மூலகாரணமான ஆண் அவனது அடையாளமாக இந்திரிய தானம் அளிக்கும் இந்திரன் என போற்றப்பட்டான். மக்களின் அருஞ்செயலாகப் போற்றப்படும் கருத்தியல் அந்தந்த சமூகத்தில் நிலத்தில் கடவுளாக்கப்படுவது உலக இயற்கை.  
மருத நிலத்தின் இந்திர விழாவேளாண் தொழிலின்றி ஓய்வாய் இருந்த மருத நிலத்து வேளாண் மக்கள் ஒருமாத காலம் ஆற்றங்கரைகளில் விழா கொண்டாடினர். பங்குனி பவுர்ணமியன்று காமன் விழாவுடன் தொடங்கி சித்திரை பௌர்ணமியன்று இந்திர விழாவுடன் நிறைவு பெற்றது.

இந்திரவிழா மருத நிலத்தின் திருவிழாவாகத் தோன்றி பின்னர் பட்டினங்களில் கடற்கரைகளில் கொண்டாடப்படும் விழாவாகப் தமிழகம் முழுதும் பரவியது. சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இந்திரவிழாவைப் பற்றிய நிறைய தகவல்களைக் கொண்டுள்ளன.  
மருத நிலத்துத் தலைவனான இந்திரனைப் பெருமைப்படுத்தவும் சிறுமைப்படுத்தவும் காலத்துக்கேற்றபடி கதைகள் உருவாகி புராணங்கள் எனப்பட்டன. இந்திரன் மருதநிலத் தலைவன் என்பதும் அவன் மகள் தெய்வயானையை மணந்த குன்றத்துக் குமரன் மருத நிலத்தின் மருமகனாகவும் போற்றப்பட்ட காலத்தில் சைவ சமய எழுச்சி தோன்றியது.

மருத நிலத்திற்குத் தலைவனாக ராஜாவாக வேந்தனாக இந்திரன் இருந்தான். உயர்வு நவிற்சிக் கதைகள் உருவானபோது அவன் தேவ ராஜா என்றும் தேவேந்திரன் என்றும் போற்றப்பட்டான். இந்த அடை மொழி அவனது பெருமையை உணர்த்துவதை விட அவனை வணங்கி வந்த  மக்களின்  வளர்ச்சியையும் உயர்வையும்  எடுத்துக்காட்டுகிறது. அவனது ஒரே மகளும் யானை என்ற பெயரிலே அறியப்பட்டாள். தேவ என்ற சிறப்பு அடைமொழி சேர்த்ததால் அவள் தேவயானை ஆனாள். [அடை மொழி ஆராய்ச்சி மிகவும் பயனளிக்கும். மேலூர் என ஒன்றிருந்தால்  கீழூர் என்கிற ஊர் இருந்திருக்கும் என்று ஊகித்து அறியலாம்.]

தேவயானை குன்றத்துக் குமரனுக்கு மனைவியாக்கப்பட்டு இரு நிலங்களுக்கு இடையே பண்பாட்டுக் கலப்பு உண்டாகி குன்றத்துக் குமரன் மருத நிலத்து மருமகன் ஆக்கப்பட்டான். இதற்கு முன்பு இந்நாட்டை விட்டு அயலகம் சென்றோரும் இலங்கை போன்ற நாடுகளில் பூர்வீகமாகக் குடியிருக்கும் மக்களும் குமரனை வள்ளியோடு மட்டுமே சேர்த்து வணங்கி வர இந்தியாவில் வடக்கே ஸ்கந்தன் தேவகுஞ்சரியை மணந்த கதையாகவும் தெற்கே கந்தன் தேவயானையை மணந்த கதையாகவும் இந்நிகழ்வு விரிவானதற்கான காரணங்களை ஆராயலாம்.

கந்த புராணம் தேவயானைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. பண்டைய தமிழ் மரபினர் இன்றும் வள்ளியை மட்டுமே முருகனின் துணையாகக் கொண்டு வணங்குகின்றனர். கந்த புராணம் எனும் மகாபுராணம் வடக்கே எண்பத்தோரு ஆயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட மஹா புராணம் என்று போற்றப்படும் ஸ்கந்த புராணம் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. அதனைத் தழுவி தமிழ்நாட்டில் கி.பி. பதினான்காம் நுற்றாண்டில்
கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணம் தேவயானை திருமணம் பற்றி உரைக்கின்றது.

இதில் வள்ளி இரண்டாம் மனைவி ஆக்கப்படுகிறாள். சிவனின் நடனம் கண்டு களித்திருந்த திருமாலின் கண்களில் துளிர்த்த ஆனந்தக் கண்ணீர் துளிகளில் இருந்து இருவருமே தோன்றியவர்கள் எனினும் அமிர்தவல்லி என்ற தெய்வயானை மூத்தவள் சுந்தரவல்லி என்ற வள்ளி இளையவள் ஆக்கப்பட்டாள். இது தான் காலம் செய்யும் கதை மாற்றம். மருதநிலத் தலைவன் வேந்தன் இந்திரனான வரலாறுஇனிய இல்லறத்துக்கு எடுத்துக்காட்டாக முல்லைத் திணை விளங்கியது. ஆனால், மருதநிலம் என்பது  நிலவுடைமைத்துவ சமுதாயத்தைக் கொண்டிருந்ததால் அங்கு பெண்களுக்கு பேச்சுரிமை மறுக்கப்பட்டது.

ஆணின் அதிகாரம் கோலோச்சியது. வாரிசுரிமை கொண்ட குடும்பமைப்புத் தோன்றிய இடம் மருதம் என்பதால் அங்குக் குடும்பர்களின் [குடும்பத் தலைவர்களின்] அதிகாரம் வலுப்பெற்றது. உடல் வலிமை பெற்ற மள்ளர்களின் ஆதிக்கம் மிகுந்தது. சங்க இலக்கியத்தில் வீரன் என்ற சொல் காணப்படவில்லை. மல்லன், மள்ளன் என்ற சொற்களே வீரர்களைக் குறிக்கின்றன. மல்லாடலில் [மல் யுத்தம்] சிறந்தவன் மல்லர். வீரத்தில் சிறந்தவர் மள்ளர். மதுரையை சங்க இலக்கியம் மல்லல் மூதூர் என்கிறது. இவர்களின் தலைவனாக மன்னன் இருந்தான்.
 
சங்கம் மருவிய காலத்தில் மூன்றாம் நுற்றாண்டில் பௌத்த சமயம் பரவியபோது இங்கு புத்தருடன் இந்திரனும் உயர் தெய்வமாகப் போற்றப்பட்டான். அப்போது மருத நிலம் தனது  தலைவனை வேந்தன்/ மன்னன் என்ற நிலையில் இருந்து இந்திரன்/ தேவேந்திரன்  என்றாக்கி கொண்டது. இடி வேந்தனானான இந்திரனின் கருத்தியல் மழை வளம் நாடி நிற்கும்  மருத நில மக்களுக்கு மிகவும் ஏற்புடையதாகத் தோன்றியதால் இந்திரன் என்ற பெயரை ஏற்றுக் கொண்டனர்.  மழைக் கடவுளான இந்திரனுக்குக் காமன் விழாவுடன் சேர்த்துப் பெருவிழா எடுத்தனர்.

சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய சிலம்பும் மேகலையும் இந்திரவிழா பற்றி குறிப்பிடும்போது முக்கியமாகத் தெரிவிப்பது அங்குப் பரவியிருந்த பரத்தமை ஒழுக்கத்தை என்பதை மறந்து விடக் கூடாது. ஒரு ஆண் பல பெண்களோடு குடியிருக்கலாம் அது தவறில்லை என்ற கருத்தை வலியுறுத்துவது இந்திர விழாவின் சாராம்சமாக இருந்தது. இந்தக் கருத்தியலை ஏற்றுக்கொண்ட நிலவுடமைத்துவ [மருதம்] பொருள் முதல்வாத [காவிரிப்பூம்பட்டினத்தின் வணிகர்] சமுதாயம் இந்திரனைத் தமது தலைவனாக ஏற்றுக் கொண்டதில் வியப்பில்லை. குறிஞ்சித் தலைவனை சேயோனை தமக்கு உறவாக்கிக் கொண்டனர்.

குறிஞ்சித் தலைவனாகிய முருகனைத் தமது தலைவனாகிய இந்திரனுக்குத் தளபதியாக்கிக் கொண்ட மருத நில சமுதாயம் இந்திரனின் மகளை முருகனுக்கு மனைவியாக்குகிறது. எட்டாம் நூற்றாண்டில் வடக்கே புராணங்கள் என்ற பெயரில் பக்தி ஆற்றுப்படை நூல்கள் தோன்றின. அவற்றில் மகாபுராணம் எனப்பட்டது கந்த புராணம். அப்போது தமிழகத்திலும் புராணக் கதைகள் செல்வாக்கு பெறத் தொடங்கின. கி.பி. ஆறாம் நுற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை பௌத்தத்தின் செல்வாக்கு இருந்த காலத்தில் இந்திர வழிபாடும் தமிழகத்தில் தழைத்தோங்கியது.

மருத நிலத்தின் வீரமும் காதலும் மருத நிலத்தில் முல்லை நிலத்து மாயோனைத் தெரிவு செய்யாமல் குறிஞ்சி நிலத்து சேயோனை தெரிவு செய்து இந்திரன் மகளுடன் மணம் செய்வித்து  தங்கள் மருமகனாக்கிக் கொண்டது ஏன் என்ற வினா எழுகின்றது. மருத நிலத்தில் வீரமும் காதலும் முக்கியப் பண்புகளாக விளங்கின. வீர விளையாட்டுகள் மருத நிலத்தில் ஆண்டில் பாதி மாதங்கள் நடைபெற்றன. ஆடி மாதத்தில் விதைப்பு தொடங்கி மார்கழிப் பனிக்கு முன்பாகவே  முடித்து விட்டு தை முதல் வைகாசி வரை நடைபெற்றன. மல்லாடல் வேளாண் மக்களின் விருப்ப விளையாட்டாக இருந்தது. ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம் நடத்தி மகிழ்ந்தனர்.

காளை மாடு இவர்கள் வாழ்வின் ஓர் அங்கமாயிற்று. வீரத்தின் சின்னமாயிற்று. முருகன் நேர்மையான வீரத்துக்கும் நியாயமான காதலுக்கும் அடையாளமாகப் போற்றப்பட்டான். எனவே, மாயோனை விட  சேயோனே  மருத நிலக் கடவுளான இந்திரனுடன் சம்பந்தம் வைத்து கொள்ளத் தகுதியுடையவனாக தெரிவு செய்யப்பட்டான்.

முருகனுக்கு தெய்வயானையை மணம் செய்வித்ததால் மருதநில மக்கள் அவளுக்கு முதல் மனைவி என்ற தகுதியை வழங்கினர். இந்திராணிக்குக் கணவனாக வருபவனுக்கு இந்திர பதவி கிடைத்ததைப்போல தெய்வயானைக்குக் கணவனாக வந்தவன்  மருத நிலத்தின் சேனைத் தலைவனாகும் தகுதியைப் பெற்றான். முருகன் தெய்வயானை திருமணம் மருதை என்று பலகாலத்தில் அழைக்கப்பட்ட மருத மரங்கள் நிறைந்த மதுரை நகரின் தென்புறத்தே உள்ள தென்பரங்குன்றில் நடந்தது என்று ஐதீகக் கதைகள் கூறுகின்றன.

அங்குள்ள குகைக் கோவிலில் புடைப்புச் சிற்பங்களும் செதுக்கப்பட்டன. முருகன் மருத நிலத்தின் மருமகன் ஆன  நிகழ்வு எட்டாம் நுற்றாண்டுக்குள் நடந்திருக்க வேண்டும்.குன்றக் குமரனின் வள்ளிக் குறத்திஆசியவியல் ஆய்வியல் நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் Murugan and Valli  என்ற கட்டுரையில் மேனாட்டறிஞர் கமில் சுவலபில் வள்ளி முருகன் திருமணத்தை மிகச் சிறந்த திராவிடத் தொன்மம் என்பார் வள்ளி முருகன் திருமணத்தை [ Lovely myth of Murugan and Valli as an indigenous - autochthonous myth, A Dravidian myth, pg 40-41, 1981]வள்ளி இருக்கும் தமிழகக் கோயில்கள் வள்ளி தமிழகத்தில் வள்ளி மலை, வேளிர் மலை போன்ற இடங்களில் வழிபடு தெய்வமாக முருகனுடன் உடனுறை நாயகியாகக் காட்சி  அளிக்கிறாள். திருவண்ணாமலையில் ஒரு வள்ளி மலை உண்டு. இங்கு வள்ளியுடன் மட்டும் முருகன் காட்சி தருகிறார்.

குமரி மாவட்டத்தில்  நாகர் கோவிலுக்கு வடக்கே பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  திருவேரகம் என்ற ஊரில் புனச் சோலை, வள்ளி சோலை, கிழவன் சோலை என்ற சோலைகள் உள்ளன. இங்கு உலகத்தில் மிக உயர்ந்த வள்ளி முருகன் சிலைகள் இடம்பெற்றுள்ளன. இந்த எட்டடி உயரச் சிலையில் காட்சி தரும் முருகனை இலட்சண குமரன் என்று இங்குள்ளோர் குறிப்பிடுவர்.

திருவேரகத்தில் வள்ளி திருமணம் ஆண்டுதோறும் சிறப்பாக நடக்கும். வள்ளித் திருமண நிகழ்ச்சி ஒவ்வொன்றும் ஒரு விழாவாக நடத்தப்படும். வள்ளி குமரனைத் திருமணம் செய்வதை எதிர்த்த குறவர்களைக் குமரன் போரிட்டுக் கொன்றதை விளக்கும் வகையில்; குறவர் படுகளம் நிகழ்ச்சி நடக்கும். குறவர்கள் இவ்விழாவில் அதிக எண்ணிக்கையில் வந்து பங்கு பெறுவர்.

முனைவர் செ. ராஜேஸ்வரி

Tags : doctor of medicine ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?