×

4 மாநில கொள்ளையன் கைது, 10 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் கைவரிசையில் ஈடுபட்டது அம்பலம் 10 சவரன், பல லட்சம் பறிமுதல்; காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

தண்டையார்பேட்டை: தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் 10 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் தொடர் கைவரிசையில் ஈடுபட்ட வழக்கில் கைதான பிரபல கொள்ளையனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசர் முடிவு செய்துள்ளனர். ராயபுரம், அர்த்துன் சாலையை சேர்ந்தவர் ரவிக்குமார். கடந்த 3ம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து 3.7 சவரன் நகைகள் மற்றும் ரூ.1.02 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில், ரவிக்குமாரின் வீட்டில் இருந்து ஒருவர் நகை, பணத்தை கொள்ளையடித்து செல்வது பதிவாகி இருந்தது.அவர் செல்லும் பாதைகளை பின் தொடர்ந்து, மொத்தம் 554 சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், அந்த ஆசாமி, பெரியபாளையத்தில் ஒரு தனியார் விடுதியில் போலி ஆதார் அட்டை மூலம் தங்கியிருப்பது தெரிந்தது. அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், அவர் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியை சேர்ந்த மெஹபூப்கான் (43) என்பது தெரிந்தது. மேலும் விசாரணையில், இவர் ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், கடந்த 10 ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து கைவரிசை காட்டிவந்ததும், கொள்ளையடித்த பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும், கடந்த ஓராண்டாக சென்னை நகரில் வலம் வந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், மாரியப்பன் தலைமையிலான தனிப்படையினரை மெஹபூப்கானை கர்நாடகா அழைத்து சென்று, 10 சவரன் நகைகள் மற்றும் பல லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நேற்று முன்தினம் சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக, வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகே, சென்னையில் அவர் எங்கெல்லாம் கைவரிசை காட்டியுள்ளார் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்….

The post 4 மாநில கொள்ளையன் கைது, 10 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் கைவரிசையில் ஈடுபட்டது அம்பலம் 10 சவரன், பல லட்சம் பறிமுதல்; காவலில் எடுத்து விசாரிக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Ambalam 10 Sawaran ,Thandaiyarpet ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சவுகார்பேட்டையில் ஐபிஎல்...