×

வேல் குத்திக்கொள்ளுதல்

தென்னகத்து மக்கள் தங்களுடைய சமய வாழ்வில் கடுமையான நேர்த்திக் கடன்களை நேர்ந்துகொண்டு நிறைவேற்றுகின்றனர். சில சமயம் அவை அஞ்சத் தக்கவைகளாகவும் கடுமைமிக்கவைகளாகவும் உள்ளன. முருக வழிபாட்டில் நிறைவேற்றப்படும் மழுவடி சேவை, தீ மிதித்தல், காவடி எடுத்தல், முள்பாதக் குறடுகளைத் தரித்தல், நாவில் வேல் குத்திக்கொள்ளுதல், கன்னத்தில் வேல்தரித்தல், மார்பிலும் தோளிலும் நூற்றுக்கணக்கில் வேல்களைக் குத்திக் கொள்ளுதல் முதலியன இத்தகையதாகும். இவற்றில் பரவலாகவும், சிறப்பாகவும் போற்றப்படுவது வேல் குத்திக்கொள்ளுதலாகும்.

வேல் குத்திக்கொள்ளுதல் பல வகைப்படுகின்றது. முதல் வகையில் சுமார் 2 அங்குல நீளமுள்ள செப்பு அல்லது வெள்ளியினால் செய்த 108, 308, 1008 எண்ணிக்கையில் அமைந்த வேல்களை மார்பு, தோள், முதுகு ஆகிய இடங்களில் குத்திக்கொள்ளுகின்றனர். இதற்கு அலகு போடுதல் என்பது பெயராகும். இரண்டாவது வகையில் அரைவட்ட வடிவிலான அழகிய இணையான இரும்புச் சட்டங்களைத் தலையைச் சுற்றிக் குறுக்கும் நெடுக்குமாகப் பொருத்திக்கொள்வர்.

அவற்றில் அமைந்த நூற்றுக்கும் மேற்பட்ட துளைகளின் வழியே நீண்ட வேல்களைச் செலுத்தி அவற்றின் முனைகள் மார்பு, தோள், முதுகு ஆகிய இடங்களில் வந்து குத்திக்கொள்ளும்படி செய்வர். இது வேல் காவடி என்றழைக்கப்படுகிறது.மூன்றாவது வகையில் நீண்ட வெள்ளி அல்லது செம்புவேலைக் கன்னத்தில் ஒரு பக்கத்தில் குத்தி மறுபக்கத்தில் வெளி வரும்படி செய்து அதன் முனையில் எலுமிச்சம் பழத்தைச் சொருகி வைப்பர். இது தாள் போடுதல் எனப்படுகிறது. சிலர் நாக்கில் வேலைக் குத்திக்கொண்டு நேர்த்திக் கடன் செலுத்துவர். இதுவும் தாள் போடுதல் என்று அழைக்கப்படுகிறது. மலேசியாவில் நடைபெறும் முருகன் திருவிழாவில் கன்னத்தில் நீண்ட வேலைக் குத்திக் கொண்டு பக்தியுடன் நேர்த்திக் கடன் செலுத்தும் சீனர்களைக் காணலாம்.

Tags : Vail ,piercing ,
× RELATED நெல்லை டவுன் வயல் தெரு பகுதியில்...