வேல் தோன்றிய வரலாறு

தண்தமிழ்க் கடவுளாக விளங்கும் முருகப் பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் ஆயுதங்களில் முதன்மைபெற்ற ஆயுதமாக இருப்பது வேலாயுதமாகும். அது சிவபெருமானைப்போலவே உலகம் செயல்படுவதற்கு அடிப்படையாக இருக்கும். படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐம்பெரும் செயல்களையும் ஆற்றவல்லது.

அத்தகைய ஒப்பற்ற சக்திமிக்க தனியாண்மை கொண்ட நெடுவேலாயுதம் தோன்றி, முருகன் கையில் வெற்றி வேலாயுதமாக நிலைபெற்ற வரலாற்றை அனேக புராணங்கள் சிறப்பாகக் குறித்துள்ளன. அவற்றின் தொகுப்பைச் சுருக்கமாக இங்கே காணலாம்.உலகின் தந்தையாகப் போற்றப்படுபவன் காசிப முனிவன். ஆதியில் உலகைப் படைப்பாய் என்ற இறைவனின் ஆணையைப் பெற்ற அவன் தனது அதிதி, திதி முதலான பதின்மூன்று மனைவியர் மூலமாக இந்த உலகத்தைப் படைத்தான். அவனால் உண்டாக்கப்பட்டதால், இந்த உலகத்திற்குக் ‘‘காசினி’’ என்பதும் பெயராயிற்று.

ஒருசமயம் அசுர குலத்தில் தோன்றிய ஆற்றல் மிக்க மங்கையான மாயை என்பவள், உலகை ஆளத்தக்க பிள்ளைகளைப் பெற விரும்பினாள். அவர் காசிபனின் தவத்தையும் ஆற்றலையும் பெருமைகளையும் கேள்விப்பட்டு அவரிடம் சென்று அவருக்குப் பணிவிடைகள் புரிந்து

அவருடைய மனதைக் கவர்ந்தாள்.

காசிபமுனிவர், அவளிடம் ‘‘பெண்ணே, உனது பணிவிடைகள் என்னை மகிழ்விக்கின்றன. உனக்கு வேண்டிய வரத்தைக் கேள். உடனே தருகிறேன்’’ என்றார். அவள், ‘‘உங்கள் மூலமாக மூன்று உலகத்தையும் ஆளவல்ல அசுரகுமாரர்களைப் பெற விரும்புகிறேன். தாங்கள் என்னோடு சேர்ந்து அத்தகைய புதல்வர்களைப் பெற்றுத் தரவேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டாள்.

அவரும், ‘‘அப்படியே ஆகட்டும்’’ என்றார். அதன்படியே கிரக நிலைகளையும் நட்சத்திர இயக்கத்தையும் கணித்து, ஒரு நல்ல நாளைத் தேர்ந்தெடுத்தனர். அன்றிரவு, முதல் ஜாமத்தில் காசிப முனிவர் பேரரசனாக இருந்தார். அவருடன் அழகிய சுந்தரமான பெண் வடிவுடன் மாயை சேர்ந்து மகிழ்ந்தாள். அவளிடம் வலிமையும் திண்மையும் கொண்ட அழகிய குமாரன் தோன்றினான்.

அவனுக்குச் சூரபத்மன் என்று பெயர் சூட்டினார். மாயையும் காசிபனும், இரண்டாம் ஜாமத்தில் வலிய ஆண் யானையாகவும், பெண் யானையாகவும் வடிவங்கொண்டு கலந்தனர். அவர்களுக்கு வலிய யானை முகமும் கட்டு மஸ்தான மனித உடலும் கொண்ட குழந்தை பிறந்தது. அவனுக்குத் தாரகன் என்று பெயர் சூட்டினர்.  மூன்றாம் ஜாமத்தில் இருவரும் பெரிய வலிய சிங்கங்களாக மாறிக் கூடி மகிழ்ந்தனர். அவ்வேளையில் அவர்களுக்கு ஆயிரம் சிங்க முகங்களைக் கொண்ட குழந்தை பிறந்தது. அதற்கு அவர்கள் சிங்கமுகன் என்று பெயர் சூட்டினர்.

நான்காம் ஜாமத்தில் இருவரும் ஆடுகளாக மாறி இன்பம் துய்த்தனர். அவர்களுக்கு ஆட்டு முகத்துடன் கூடிய அஜமுகி என்னும் பெண் பிறந்தாள். இப்படி நான்கு ஜாமங்களிலும் நான்கு குழந்தைகள் பிறந்தன. ஒவ்வொரு குழந்தை பிறந்தபோதும், அதனுடன் கணக்கற்ற வீரர்களும் தோன்றினர். காசிப முனிவரிடம் மாயை விடை பெற்றுக் கொண்டு, தனது நான்கு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தனது இருப்பிடமான மாயாபுரியை அடைந்தாள். அங்கு அவள் தனது குமாரர்களுக்கு அரிய வித்தைகளைக் கற்பித்தாள். பின்னர், அவர்களிடம், ‘‘சிவபெருமானை நோக்கித் தவம் செய்து அரிய வரங்களையும், உலகை ஆளும் திறத்தையும் பெறுக, ’’ என்று ஆசி கூறி அனுப்பினாள்.

சூரபத்மனும் அவனது தம்பியரும் அவளது ஆணைப்படி, சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் மேற்கொண்டனர். அந்தத் தவத்தின் பயனாக, சூரபத்மன் சிவபெருமானிடம் 1008 அண்டங்களையும், 108 யுகங்கள் வரை ஆளும் வரத்தைப் பெற்றான். தம்பியரான தாரகனும் சிங்கமுகனும் வேண்டிய வரங்களைப் பெற்றனர். அவன் தான் பெற்ற வர பலத்தால் எட்டுத் திக்கிலும் படைநடத்தி, எல்லோரையும் அடிமைப்படுத்தினான். அவனைக் கண்டு தேவர்கள் அஞ்சி தேவ லோகத்தை விட்டு ஓடிவிட்டனர். அவர்கள் கடலில் மீனாகவும், காட்டில் பறவைகளாகவும் மறைந்து வாழ வேண்டியதாயிற்று. அவன் இந்திரனின் மகனான ஜயந்தனையும் அவனது தோழர்களையும் கிரௌஞ்ச மலையில் சிறை வைத்தான். அவனது ஆணைக்கு அஞ்சி எல்லோரும் அவனுக்குப் பயந்து அடிபணிந்து வாழ்ந்தனர்.

நாளுக்குநாள் அசுரர்களின் தொல்லை வளர்ந்தது. ஒரு சமயத்தில் அது அளவு கடந்து இனி தாங்க முடியாது என்ற நிலைமை உண்டாயிற்று. அஞ்சி மறைந்து வாழ்ந்து வந்த தேவர்கள் எல்லோரும் கூடிச் சிவபெருமானைச் சரணடைந்தனர்.சிவபெருமான், அவர்களிடம், ‘‘அஞ்சாதீர்! அசுரர்களை அழித்து ஒழிக்கத்தக்க ஒரு மகனைத் தருகிறேன் அதனால், உங்கள் கவலைகள் விரைவில் தீரும்’’ என்று கூறித் தனது நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அதன் வெப்பம் தாங்காது அனைவரும் பயந்து அங்கிருந்து ஓடினர்.

அக்னிதேவன் அந்த ஆறு தீப்பொறிகளையும் எடுத்துச் சென்று கங்கையிடம் அளித்தான். அவள் அவற்றைத் தனது உற்பத்தித் தானமாகிய நாணற்காட்டில் இருந்த சரவணப் பொய்கையில் விட்டாள். அங்கு அவை ஆறும் அழகிய குழந்தைகளாக உருப் பெற்றன. சிவனும், பார்வதியும் அங்கு சென்றனர். பார்வதி தேவியார் அந்தக் குழந்தைகளையும் ஒரு சேர வாரி அணைத்தாள். அக்கணிதத்தில் அந்த ஆறு குழந்தைகளும் ஒன்றாகி, ஆறு திருமுகங்களும் பன்னிரண்டு தோள்களும் இரண்டு திருவடிகளும் கொண்டு அழகிய குமரனாகியது. உமையவள் அவனுக்குக் கந்தன் என்று பெயர் சூட்டினாள். கார்த்திகைப் பெண்களிடம் அவனை அளித்து, ‘‘வளர்த்து வருக,’’ என்றாள். அவனோடு அங்கே நவ வீரர்களும் தோன்றினர்.

கந்தன் நவவீரர்களுடன் சிலகாலம் விளையாடி மகிழ்ந்தான். பிரணவத்திற்குப் பொருள் உரைத்தும். நாரதர் செய்த வேள்வியில் தோன்றிய ஆட்டை வாகனமாக ஏற்றும், அவன் பல திருவிளையாடல்களை நிகழ்த்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் சென்று, முருகனைத் தங்களுக்குத் தலைவனாக அனுப்பிச் சூரனையும், அவனது கூட்டத்தாரையும் அழித்துத் தமக்கு இன்பம் வழங்கி வாழ்விக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

சிவபெருமான் முருகனை அழைத்து, ‘‘குமாரனே! நீ விரைந்து ெசன்று சூரனாதியரை வென்று தேவர்களுக்கு வாழ்வு தருக’’ என்று ஆணை மொழிந்தார். பிறகு, சிவபெருமான் தனது அம்சமான பதினோரு ருத்திரர்களின் அம்சத்திலிருந்து பதினோரு ஆயுதங்களை அளித்தார். பிறகு, உமாதேவியிடம், ‘‘முருகனுக்கு ஆயுதமொன்றை வழங்குக’’ என்றார். அம்பிகை ஒப்பற்ற ஆற்றல் கொண்டதும் விரைந்து செல்வதும், பகைவரை எளிதில் அழித்து வெற்றியை அடைந்து மீள்வதுமான வலிய வேலாயுதத்தைப் படைத்து அவரிடம் அளித்தாள். இதுவே வேல் பிறந்த கதையாகும். சிவசக்தியரின் அம்சமாகவே வேல் தோன்றியது.

கந்தபுராணம் உற்பத்தி காண்டம் விடைபெறு படலத்தில் சிவபெருமான் முருகப் பெருமானுக்கு ஆயுதங்களை அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.

சூரபத்மன் முதலான கொடிய அரக்கர்களின் சேனையை வெல்லப் போர்க்கோலம் பூண்டு நின்ற முருகப் பெருமானிடம் சிவபெருமான் பதினோரு உருத்திரர்களையும் முறையே 1. தோமரம், 2. கொடி, 3. வாள், 4. குலிசம், 5. அம்பு, 6. அங்குசம், 7. மணி, 8. தாமரை, 9. தண்டம், 10. வில், 11. மழு எனும் பதினோரு ஆயுதங்களாக்கி அளித்தார். பின்பு ஐந்து பூதங்களையும் ஒரு சேர அழிக்கக் கூடியதும் எவர் மேல் விடுத்தாலும், அவருடைய வலிமைகளையும் வரங்களையும் கெடுத்து உயிரைப் போக்கக் கூடியதும் அனைத்துப் படைக்கலங்களுக்கும் தலைமையானதும் ஆகிய வேலாயுதத்தைப் படைத்து முருகக் கடவுளிடம் கொடுத்தார். இதனை,

‘‘ ஆயுதற் பின்னர் ஏவில் மூதண்டத்து

ஐம்பெரும்பூதமும் அடுவது

ஏய பல்லுயிரும் ஒருதலை முடிப்பது

ஏவர்மேல் விடுக்கினும் அவர்தம்

மாயிருந் திறலும் வரங்களும் சிந்தி

மண்ணயில் உண்பது எப்படைக்கும்

நாயகமாவது, ஒரு தனிச் சுடர்வேல்

நல்கியே மதலை கைக் கொடுத்தான்.’’

என வரும் கந்தபுராணச் செய்யுளால் அறியலாம். இவ்வாறு சிவபெருமான் முருகனுக்கு வேல் கொடுத்த வரலாற்றைக் கூறுவது புராண மரபு எனப்படும். ஆனால், நடைமுறையில் அன்னை பராசக்தியே முருகப் பெருமானுக்கு வேலாயுதத்தை வழங்கினாள் என்று கூறப்படுகிறது. அதையொட்டியே ஆலயங்களில் அம்பிகையின் சந்நதியில் முருகன் வேல் வாங்கும் ஐதீக நாடகம் நடந்து வருகிறது. முருகனுக்குப் பராசக்தி வேல் தந்ததாகக் கூறும் மரபு ஐதீக மரபு எனப்படும்.

உமாதேவியார் முருகனை அழைத்து, ‘‘வாழ்க வாழ்க’’ என்று சொல்லி, வேல் அளித்ததைப் போற்றித் திருச்செந்தூர்த் திருப்புகழில் ஸ்ரீஅருணகிரிநாத சுவாமிகள்,‘‘எம் புதல்வா வாழி ! வாழி ! எனும்படி வீரானவேல் தர’’ என்று குறிப்பிடுகின்றார்.இப்படி முருகன் வேலாயுதம் பெற்றது பற்றி இரண்டு கருத்துகள் இருப்பினும் இரண்டையும் ஒன்று சேர்த்து முருகனுக்கு சிவபெருமான் வேலாயுதத்தைத் தர, பராசக்தியான உமாதேவியார் அதற்கு அளப்பரிய சக்திகளைக் கொடுத்தாள் என்று ஆன்றோர் கூறுவர்.

(இதற்கு எடுத்துக்காட்டாகத் திருக்கோலக்காவில் திருஞான சம்பந்தருக்குச் சிவபெருமான் பொன் தாளம் தர அதற்குப் பெருமாற்றி ஓசை தந்து ஓசைகொடுத்த நாயகி என்ற பெயர் பெற்று விளங்குவதைக் கூறுவர்.கதைகள் பல இருப்பினும் தாய் தந்தையார் அளிக்க வேலாயுதத்தை முருகப் பெருமான் வேலைப் பெற்றார் என்பதும், பகைவரை அழித்து உலகிற்கு நன்மை பயக்கச் சிவசக்தியர் அருளாக வேல் பிறந்தது என்பதும் எண்ணி மகிழத்தக்கதாகும்.

Related Stories:

>