சூரிய மண்டல பூஜா சக்கரம்

சிவதீட்சை பெற்ற சிவபூஜா துரந்தரர்கள் செய்யும் சிவபூஜையின் முதல் அங்கமாகச் சிவசூர்ய பூஜை திகழ்கிறது. அவர்கள் சூரியனைக் கண்கண்ட கடவுளாக விளங்கும் சிவபெருமானாகவே கருதி உரிய பரிவாரங்களுடன் பூசிக்கின்றனர்.இனி அவர்கள் கூறும் முறைப்படி அமைந்த சூரிய மண்டலத்தில் விளங்கும் பரிவாரங்கள் விரிவாகக் காணலாம்.

சிவபூஜையில் வழிபடப்படும் சூரிய யந்திரம் அல்லது சூரிய சக்கரத்தின் படம் இங்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் அன்பர்கள் பரிவார தெய்வங்கள்

வீற்றிருக்கும் இடங்களை அறிந்து கொள்ளும் வகையில் அடைப்புக் குறிக்குள் எண்கள் தரப்பட்டுள்ளன.இந்த சக்கரத்திற்கு நாற்புறமும் வாயில் இருந்தாலும், சூரியன் மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பதால் இந்த வாயிலே முதலிலே பூசைக்கு, உரியதாகிறது இந்த வாயிலின் தென்புறம் தண்டி(1). என்கிற துவாரபாலகனும், வடபுறம் பிங்களன் (2). என்னும் துவாரபாலகனும் எழுந்தருளியுள்ளனர். இவர்களை பூசித்த பின்னர் வடகிழக்கு முனையில் கணபதியையும் (3). தென் கிழக்கு முனையில் குருமார்களையும் (4) எண்ணி பூசிக்க வேண்டும். பிறகு, தகட்டின் மையத்தின் பிரபூதாசனம் (5) என்கிற வெண்மையான பீடத்தையும்; சக்கரத்தின் நான்கு முனைகளில் அந்த ஆசனத்தைத் தாங்கும் நான்கு சிங்கங்களையும் பூசிக்க வேண்டும்.

அக்னி மூலையாகிய தென்மேற்கில் விமலன் என்னும் வெண்ணிறமான சிங்கத்தையும் (6), நிருதி மூலையாகிய தென்மேற்கில் சாரா (7) எனும் பொன்னிற சிங்கத்தையும், வாயுமூலையாகிய வடமேற்கில் ஆராத்யா (8) எனும் சிவந்த நிறமான சிங்கத்தையும், ஈசான்யமாகிய வடகிழக்கில் பரம சுகம் (9) எனும் பெயருடைய பச்சை நிறம் கொண்ட சிங்கத்தையும் பூசனை செய்ய வேண்டும். அதன்பிறகு அவற்றால் தாங்கப்படும் மகாபத்மம் எனும் (10).

பெரிய தாமரையின் நடுப்பகுதியில் அதன் எட்டு இதழ்களில் எழுந்தருளியுள்ள அஷ்ட சக்திகளான தீப்தா (11) என்பவளை கிழக்கு இதழிலும், சூட்சுமையை (12) தென்கிழக்கு இதழிலும், ரூஜாவை (13) தெற்கு இதழிலும், பத்ரையை (14) தென்மேற்கு இதழிலும், விபூத்யை (15) மேற்கு இதழிலும், விமலாவை (16) வடமேற்கு இதழிலும், அமோகாவை (17) வடக்கு இதழிலும், வித்யுதாவை (18) வடகிழக்கு இதழிலும், இந்தத் தாமரையின் ஈசான பாகத்தில் ஒன்பதாவது சக்தியான சர்வதோமுகியைத் (19) தனியாகவும் போற்றி வணங்க வேண்டும்.

இவர்கள் ஒன்பது பேர்களும் செந்நிறம் கொண்டவர்களாகவும், இரண்டு திருக்கரங்களில் தாமரைப் பூவையும், வெண்சாமரத்தையும் ஏந்தியவர்களாய் பேரழகு படைத்தவர்களாகவும் விளங்குகின்றனர். இவர்களை சௌர நவசக்தியர் என்பர். பின்னர், சூரியனின் சிறப்பான ஆசனமாகிய அர்க்காசனத்தை (20) பூசித்து அதன்மீது இரண்டு திருக்கரங்களுடன் விளங்கும் சூரியனைப் பூசித்து (21) சிவசூரியனைத் (22) தியானிக்க வேண்டும். பின்னர், சூரியனுக்கு வலப் பகுதியில் பிரத்யுஷாவையும் (23), இடப் புறம் உஷாவையும் (24). பூசிக்க வேண்டும்.

அடுத்து தாமரையின் இதழ்களின் முனைகளில் கிழக்கில் சந்திரனையும் (25). தெற்கில் புதனையும் (26). மேற்கில் குருவையும் (27). வடக்கில் சுக்கிரனையும் 28). தென் கிழக்கில் செவ்வாயையும் 29). தென்மேற்கில் சனிச்சரனையும் 30). வடமேற்கில் ராகுவையும் (31). வடகிழக்கில் கேதுவையும் (32) பூசிக்க வேண்டும். பின்னர், சிவபூசையின் இறுதியில் சண்டேஸ்வரரை வணங்குவது போலவே சூரிய சண்டியாகிய தேஜஸ் சண்டேஸ்வரரை வணங்க வேண்டும். இவர்களை வணங்கிப் போற்றித் தியானிக்க தனித்தனி மந்திரங்களும் முத்திரைகளும் உள்ளன.

இவ்வகையில் சூரியனின் துவாரபாலகர்கள், கணபதி, குருமார்கள் சிவசூரியனின் ஆசனமான தாமரை, அதனைத் தாங்கும் நான்கு சிங்கங்கள், தாமரையில் விளங்கும் நவசக்திகள், அவர்களைச் சூழ்ந்துள்ள எட்டு கிரகங்கள் நடுவில் உஷா; பிரத்யுஷா உடன் கூடிய சூரியன் ஆகியோர் வணங்கப்படுவது அறிந்து மகிழத்தக்கதாகும்.

சிவசுந்தரி

Related Stories:

>