×

நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!

தமிழரின் பண்பாட்டு அடையாளமாய் அமைந்த நாட்களுள் குறிப்பிடத்தக்க நாள் தைத் திருநாள் ஆகும். தமிழ் மாதங்களுள் தை மாதம் சிறப்புடையதாகும். தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வடதிசையில் பயணம் செய்யும் காலம் உத்தராயணம் என்று குறிக்கப்பெறும். ஆடி முதல் மார்கழி வரை சூரியன் தென்திசையில் பயணம் செய்யும் காலம் தட்சிணாயணம் எனப்படும். தைத் திங்கள் முதல் நாளில் சூரியன் தென்திசையில் இருந்து வடதிசைக்குத் திரும்பிப் பயணம் செய்வதாக ஐதீகம்.

ஜோதிடக் கூறுகளின்படியும் சூரியன் இந்த மாதத்தில் கும்ப லக்னத்திலிருந்து மகர லக்னத்திற்கு வருகின்றார். எனவே, இப்பொங்கல் ‘மகர சங்கராந்தி’ என்று அழைக்கப்படுகின்றது. தைத் திங்கள் முதல் நாள் தமிழர்களால் ‘பொங்கல் திருநாள்’ என்று கொண்டாடப்படுகின்றது. தமிழ்நாட்டின் வானியல் அமைப்பின்படி புரட்டாசி மாதம் தொடங்கி கார்த்திகை மாதம் வரைக்கும் மழை பொழியும் காலம் ஆகும். இக்காலத்தில் நீர்நிலைகள் அனைத்தும் ஏற்றம் பெறும். இது வேளாண் தொழிலுக்கு ஏற்றதாய் அமையும்.

இக்காலத்தில் பயிரிடப்படும் பயிரானது தை மாதத்தில் அறுவடைக்குத் தயாராகும். எனவே, புது நெல்லுடன் புத்தரிசி கொண்டு புதுப் பானையில் பொங்கல் வைக்க இது ஏதுவாகிய காலமாகும். எனவே, பொங்கல் பண்டிகை இக்காலத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகின்றது. காலை எழுந்து கழனி நாடிச் சென்று காளை மாட்டின் உதவியுடன் காலமெல்லாம் பணி செய்த ஏழை உழவனும் களித்திருக்கும் திருநாள்அறுவடை நாளான தைத் திருநாள் ஆகும்.

கடும்பனி சூழ்ந்த மார்கழி போய், தை மகள் தரணியில் பூத்த திருநாள் தைத்திருநாள் ஆகும். தைப் பொங்கல் விழா என்பது தமிழர்கள் நெல்லின் அறுவடை கண்ட மகிழ்வில் தனக்கு உதவி செய்த அனைத்திற்கும் நன்றி பாராட்டும் நயமுடைய விழாவாகும்.

விண்ணார் இருளும் விதிர்குளிரும்
போயொடுங்க
மண்ணார் உலகமிது வீழ்துயிலின்

சோர்வகற்றி
கண்ணாள வந்த கனகமணிச் செஞ்சுடரைப்
பண்ணார் தமிழெடுக்கப் பாடிப் பரவுகின்ற
தண்ணாரும் மெல்லோசைச் தங்கக்
செவியுற்றாய்

வண்ணமொளிர் மாக்கோல வாசலெலாம் சீலமுறப்
பெண்ணாம் மதியாய்ப் பிறங்குமொரு சீமாட்டி
எண்ணம் களிக்க எழுந்துவா, தைப்பாவாய்

 - என்று தைமகளை வரவேற்று வாழ்த்தி
யுரைப்பார், கவிஞர் சண்முகம்.

உழவர்கள் ஆடியில் விதைத்த விதை
ஆவணியில் நாற்றாக வளர்ந்து நிற்கும். ஐப்பசி கார்த்திகையில் களையெடுக்கப்பட்டு மார்கழியில் தோள் உயர்த்தி தையில் வளர்ந்து
நிற்கும். நெல் மகள் அழைத்திட நேரிய தைமகள் நிலத்தில் வந்தருள்வாள். இதனை, “ஆடி விதையாக ஆவணியின் பின்கன்னிப்

பாடி நடவுசெய் பைம்நாற்றாய், ஐப்பசிமேல்
கூடிவரும் கார்த்திகையிற் கொய்களைகள் தாம்நீங்கி
வாடித்தளராமல் மார்கழியில் தோள் உயர்த்திக்

தேதிதுடிக்கும் செழும்வையம் காத்ததற்குக்
கோடிப்பொன் முத்தை உமிச்சுவரின்
கோட்டைக்குள்
மூடக்கரந்தே முறுவலிக்கும் நெல்லரசி
நாடியழைக்கின்றாள் நகைத்துவா
தைப்பாவாய்”

 - என்ற கவிதையானது அழகுறவே எடுத்துரைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த அறுவடைத் திருநாளிற்கு அடிப்படையான உழவுத்தொழிலை தமிழர்கள் பெரிதும் போற்றினர். உழவுத் தொழிலுக்கு மழை, நிலம் ஞாயிற்றின் ஒளி ஆகிய மூன்றும் இன்றியமையாதன ஆகும். இம்மூன்றும் இல்லாமல் மண்சார்ந்த தொழில் நடவாது. ஆகவே, இம்மூன்றையும் தமிழ்க் கவிஞர்கள் பெரிதும் போற்றுகின்றனர், சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்,

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு    
மேரு வலந்திரித லான்.
என ஞாயிற்றைப் போற்றுகின்றார்.
அதனை அடுத்து உழவுத்தொழிலுக்குக்
அமைகின்ற மழையினை,
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி யுலகிற்கு அவன்அளிபோல்
மேல்நின்று தான்சுரத்த லான்.

எனப் போற்றுகின்றார். தைத் திங்களில் நோன்பு இருந்தால்
 நாட்டில் நன்கு மழைபெய்து
செந்நெல் வளர்ந்து வளம் பெருகும் என்று கருதப்பட்டது.
இதனை, ஆண்டாள் தனது திருப்பாவையில்,
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
 நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர்
ஆடினால்

தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள்
மும்மாரி பெய்து
ஒங்கு பெருஞ் செந்நெலூடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு

கண்படுப்பத் தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர்
எம்பாவாய் (திருப்பாவை)

 - எனக் குறிப்பிடுவாள். மேற்கண்ட பாடலில் ஓங்கி உலகளந்தவனாகிய கண்ணனை பாவை நோன்பிருந்து வழிபட்டால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து, ஓங்கு பெருசெந்நெல் உயர்ந்து வளரும் என்பன போன்ற குறிப்புகள் காணப்படுகின்றன. பொங்கல் பண்டிகையின் முதல்நாள் ‘போகி’ என்பதாகும். பழையனவற்றை நீக்கிப் புதியனவற்றை வரவேற்கும் மரபின் தொடக்கமாக இப்போகிப்பண்டிகை அமைகின்றது.

போகி என்னும் சொல் வருண பகவானைக் குறிப்பதாயும் அமையும். வருண பகவான் மழையின் கடவுளாக போற்றப்படுகின்றான். பயிர் செழித்து வளர்வதற்கு நீர் தந்த மழைக்கு நன்றி பாராட்டும் நாளாக இந்நாள் கொண்டாடப்படுகின்றது. அடுத்த நிலையில் மண்ணினைப் போற்றும் வண்ணம்...
பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் வீங்குநீர் வேலி யுலகிற் கவன்குலத்தோடு ஓங்கிப் பரந்தொழுக லான்.

 - எனப் போற்றி உரைக்கின்றார், இளங்கோவடிகள். உழவுத்தொழிலைப் பொறுத்தவரை மண்ணினை உழுதல், உரமிடுதல், களையெடுத்தல், நீர் பாய்ச்சுதல், பயிரைப் பாதுகாத்தல் என்ற ஐந்தும் மிகமிக இன்றியமையாதவை ஆகும்.  இதனை,
“ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்று அதன்காப்பு
“தொடிப்புழுதி கஃசா உணக்கின்பிடித்து எருவும்
வேண்டாது சாலப்படும்”. (1037)

 - எனக் குறிப்பார் திருவள்ளுவர். இவ்வாறு நிலத்தின்  தன்மை அறிந்து உழவினைச் செய்து பயன்கொண்ட உழவரைப் பெரும்பாணாற்றுப்படை ,
“செங்சால்உழவர்”

(பெரும்பாண் 196)
 - எனக் குறிப்பிடுகின்றது. அகநானூற்றின் தலைவி, தலைவன் தன்மகனுடன் தன்னைத் தழுவிக் கொண்டபோது உழுத நிலத்து மண் பெருமழைத் துளியை வாங்கிக்கொள்வது போல் தன் உள்ளமானது தலைவன்பால் சென்றது எனக் குறிப்பிடுகின்றாள். தன் வாழ்வின் நிகழ்விற்குத் தலைவி உழவுத் தொழிலில் இருந்து உவமை காட்டி இருப்பது உழவு தமிழர் வாழ்வில் பெற்றிருந்த இன்றியமையாமையை விளக்குகின்றது.
“உறுபெயல்தண்துளிக்கு ஏற்ற பல உழுசெஞ்செய்
மண்போல் நெகிழ்ந்து”

(அகநானுறு, 26:2326)
உழவிற்குப் பின் நிலத்தினைச் சமன்செய்தல் என்பது மிகவும் இன்றியமையாதது ஆகும். இவ்வாறு சமன்செய்தலை,
செறுவின் உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர்”
 - எனப் பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகின்றது. நிலத்தினைச் சமன்செய்த பின் விதைத்தல் என்னும் செயல் தொடங்குகிறது. இதனை.
“….உழவர் விதைக்குறு வட்டி போதொடு பொதுலிப்”

(குறுந்தொகை, 155)
என்ற பாடல் அடிகள்  விளக்குகின்றன. விதைக்கப்பெற்ற விதையானது நாற்றங்காலில் நாற்றாய் வளர்ந்த பின் அந்நாற்றானது பறிக்கப்பட்டு வயலில் நடப்படும். இத்தகு செயல் ‘நடுதல்’ என்னும் பெயரால் குறிக்கப்படும். இதனை,
நீர் உறுசெறுவின் நாறு முடிஅழுத்த
நடுநரொடு சேறி ஆயின்

(நற்றிணை, 60:78)
என நற்றிணை குறித்துரைக்கும். பயிர் நன்கு விளைந்து பயன்தர பருவம் அறிந்து நீர்பாய்ச்
சுதல் என்பது இன்றியமையாதது ஆகும்.இவ்வாறு நெல்லுக்கு நீர் பாய்ச்சப்பெற்ற செய்தியினை,
“நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி.
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்”
 - எனக் குறிப்பார் ஓளவையார். பின் பயிர் நன்கு வளர்வதற்கு எருவிடுதலை,
‘ஏரினும் நன்றாம் எருவிடுதல்’
 - என்ற திருவள்ளுவரின் குறளானது எடுத்துரைக்கும். களையெடுத்தல் என்பது பயிரை வளர்த்தெடுப்பதற்கான அடிப்படைச் செயல் ஆகும். இவ்வாறு களையெடுக்கப்பெற்று பயிர் வளர்க்கப்பெற்ற நிகழ்வினை

“களைகால் கழீஇய பெரும்புன வருகின்”
என்ற அகநானூற்றுப்பாடல் விளக்குகின்றது, இவ்வாறு வளர்க்கப்பெற்ற பயிரானது பிறரால் கொள்ளையிடப்படாமல் பாதுகாக்கப்படல் என்பது இன்றியமையாதது ஆகும். விளைந்த
பயிரானது நன்கு பாதுகாக்கப்பட்டமையை,
“காவல் கண்ணினம் தினையே”

(அகநானூறு, 92)

“சிறுதினைப் படுகிளி கடீஇயா”.

(அகநானூறு, 32)

 - என்ற பாடல்களின் அடிகள் எடுத்துரைக்கின்றன. நன்கு விளைந்த நெல்லானது அறுவடை செய்யப்பட்டமையைப் பெரும்பாணாற்றுப்படையும் அகநானூறும் எடுத்துரைக்கின்றன.
“பைதுஅடி விளைந்த பெருஞ் செந்நெல்லின்
தாம்புடைத் திரள்தாள் துடித்த வினைஞர்”  (பெரும்பாணாற்றுப்படை, 230,231)    
“நீர்சூழ் வியன் களம் பொலிய போர்பு அழித்து
 கள் ஆர் களமர் பகடுதலை மாற்று.”

(அகநானூறு, 366)

அறுவடை செய்யப்பெற்ற நெல்லானது பதர் நீங்கித் தூய்மை செய்யப் பெற்றமையை அகநானூறு எடுத்துரைக்கின்றது,  நெல்லினைத் தூற்றும்பொழுது எழும்பிய தூசு, துரும்புகள் இருண்ட மேகம் போலத் தோன்றியது என்றும் விரைந்து வீசும் காற்றில் உழவர்கள் நெல்லைத் தூற்றுவார்கள் என்றும் அகநானூறு குறிப்பிடுகின்றது.
“பொங்கழி முகந்த தா இல் நுண்துகள்
மங்குல்வானின் மாதிரம் மறைப்ப”

(அகநானூறு, 34:37)

குறுங்கோழியூர் கிழார் அறுவடைநாள் விழாவினை ‘சாறுகண்ட களம்’ என்று குறிப்பிடு
கின்றார். இதனை.அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின்
கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல
(புறநானூறு)

- என்ற புறநானூற்றின் பாடலொன்று
விளக்கியுரைக்கும். ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகிய சீவக சிந்தாமணி என்னும் காப்பியம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டமையை எடுத்துரைக்கின்றது. இக்காப்பியம் பொங்கல் பண்டிகையை,
மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்
(சீவகசிந்தாமணி )

- எனக் குறிப்பிடுகின்றது. இப்பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கு நன்றி பாராட்டும் விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. தமிழ்க்
கவிஞர்கள் ஞாயிற்றைப் போற்றிப் பாடியுள்ளனர்.
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்,
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு    
மேரு வலந்திரித லான்.

என முதலில் ஞாயிற்றைப் போற்றுகின்றார். மதுரையில் உச்சிக்கிழான் கோட்டம் என்று ஞாயிற்றுக்குக் கோயில் இருந்ததையும் அதைத் தமிழர்கள் வழிபட்டுக் கொண்டாடியதையும் சிலப்பதிகாரம் பதிவு செய்யும். மறுநாள் ‘மாட்டுப் பொங்கல்’ என்று அழைக்கப்படுகின்றது. இந்நாள் தமிழர்கள் தங்களது உழவுத் தொழிலுக்கு உதவிய  மாடுகளுக்கு நன்றி சொல்லும் நாள் ஆகும்.  மாட்டுப் பொங்கல் குறித்து ஒரு கதையும் உண்டு.

சிவபெருமான் தன் வாகனமான ‘பஸவா’ எனப்படும் நந்தியிடம் நீ பூலோகம் சென்று மக்களிடம் தினமும் எண்ணெய்க் குளியல் எடுத்து மாதம் ஒருமுறை சாப்பிடும்படிக் கூறிவா என்று அனுப்பினாராம். ஆனால் நந்தியோ, அதனை மாற்றி தினமும் சாப்பிட்டு மாதம் ஒரு முறை எண்ணெய்க் குளியல் எடுக்கும்படிக் கூறி விட்டதாம். இதனால் கோபமடைந்த சிவபெருமான் என் பேச்சினைக் கேட்காத நீ மண்ணில் சென்று மனிதர்களின் வேளாண்மைப் பணிக்கு உதவிக்கொண்டு அங்கேயே இரு! என்று கூறிவிட்டாராம். இதனால்தான் காளை மாடுகள் மண்ணில் வேளாண்மைக்கு உழைப்பதாய் ஒரு கதை சொல்லப்படுவது உண்டு. தமிழர்கள் இந்த மாட்டுப் பொங்கல் நாளில் மாடுகளை அலங்கரித்து அவற்றிற்கு பொங்கலிட்டு வழிபடுகின்றனர்.

பொங்கல் பண்டிகையை யொட்டிக் கொண்டாடப்படும் பிறிதோர் பண்டிகை ‘காணும் பொங்கல்’ என்பதாகும். இப்பொங்கல் பெண்களுக்கு உரியதாய்க் கொண்டாடப்படுகின்றது, தன் வாழ்வின் வளத்திற்கும் உழவுத்தொழிலின் சிறப்பிற்கும் தன்  உடன் இருந்து உழைத்த பெண்களுக்கு நன்றி பாராட்டும் நாளாகவே இந்நாள் அமைந்துள்ளது. இந்நன்நாளில் பெண்கள் பொங்கல் பானையில் கட்டப்பட்டிருக்கும் மஞ்சளினை எடுத்து வீட்டில் இருக்கும் பெரியவர்களிடமோ அல்லது கணவனிடமோ கொடுத்து நெற்றியிலும் தாலியிலும் மூன்று தடவை ஒற்றிக்கொள்வர்.

இந்நாளில் நீர்நிலைகள் இருக்கும் இடங்களுக்குச் சென்று  நீராடி மகிழும் வழக்கம் இருந்தது. மேலும் இந்நாள் திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகின்றது. தைப்பொங்கல் பண்டிகையின் நிறைவுநாளில் மஞ்சுவிரட்டு நடைபெறுகின்றது. இது தமிழர் மரபில் நடைபெற்ற ‘ஏறுதழுவல்’ என்பதே  ஆகும். சங்க இலக்கியங்களில் முல்லைக்கலிப் பாடல்களில்  முதன்முதலாக ஏறுதழுவல்  குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லை நில ஆயர்கள் இதில் பங்குபெற்றனர்.

ஒள்ளிழை வார்உறு கூந்தல் துயில்பெறும் வை மருப்பின்
காரிகதன் அஞ்சான் கொள்பவன்: ஈரரி
வெரூஉப்பினை மான்நோக்கின் நல்லாட் பெறூஉம்இக்
குறுக்கண் கொல்லையேறு கொள்வான்: வரிக்குழை
வேயுறழ் மென்தோள் துயில்பெறும் வெம்துப்பின்
சேஎய் சினன் அஞ்சான் சார்பவன்

- என்ற முல்லைக்கலியின் பாடல் ஏறு தழுவல் என்பதனைக் குறிப்பிடுகின்றது. இவ்வாறு தமிழர் வாழ்வில் எல்லா வளங்களையும் கொண்டு வந்து சேர்ப்பதாய்த் தைத்திருநாள் அமைந்திருந்தது. எனவேதான் தமிழர்கள் வாழ்வில் வளம் கொண்டு வந்து சேர்க்கும் வகையில் நெல் பல பொலிக! என்றும் பொன் பெரிது சிறக்க! என்றும் வேண்டினர். மேலும்  விளைக வயல், வருக இரவலா என்பது தனக்கு மட்டும் வளம் என நினையாமல் பிறருக்கும் கொடுத்து வாழும் உயர்ந்த பண்பாட்டினை விளக்குவதாய் அமைந்துள்ளது. இதனை வெளிப்படுத்தும் ஐங்குறுநூற்றுப்பாடல் அடிகள்,

நெற்பல பொலிக பொன் பெரிது சிறக்க
விளைக வயலே வருக இரவலர்
பால்பல ஊறுக பகடு பல சிறக்க
பகைவர்புல் ஆர்க பார்ப்பார் ஓதுக
பசியில் ஆகுக பிணீகேன் நீங்குக
வேந்துபகை தணிக யாண்டு பல நந்துக
அறநனி சிறக்க அல்லது கெடுக
அரசுமறை செய்க களவில் லாகுக
நன்று பெரிது சிறக்க தீதில் ஆகுக
மாரி வாய்க்க வளநனி சிறக்க.

என்பதாகும். இத்தகைய சிறப்புடைய பொங்கல் திருநாளின் புதுநெல் காரணமாய் அமைவதால் மேற்கண்ட பாடல் நெற்பல பொலிக! என்பதாய்த் தொடக்கம் பெறுகிறது. எனவே புதுநெல் விளைந்து புத்தரிசிப் பொங்கலிடும் இந்த இனிய தைத்திருநாளில் உழவினையும் உழவரையும்  போற்றி இறைவனை வணங்கி இயற்கையைப் பேணி வளம்பெற்று உயர்வோமாக!!

முனைவர் மா. சிதம்பரம்

Tags : Paddy ,
× RELATED சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்!:...