×

சென்னையில் மட்டும் 27,500 அடுக்குமாடி குடியிருப்புகள் மக்கள் வாழ தகுதியற்ற வீடுகளாக உள்ளது; அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: சென்னையில் நடந்த விழாவில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய பெரியார் நகர் திட்டப்பகுதியில் மறுகட்டுமானம் செய்யப்பட உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 440 குடியிருப்புதாரர்களுக்கு கருணை தொகையாக ரூ.1.05 கோடிக்கான காசோலைகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் வழங்கினர். விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்படும் கட்டிடம் தரமாக இருக்கும். கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய தனியார் தொழில்நுட்ப வல்லூநர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு 3 மாதத்திற்கு ஒரு முறை அறிக்கை சமர்ப்பிக்கும். சென்னையில் மொத்தம் 3845 குடியிருப்புதாரருக்கு கருணைத் தொகையாக ரூ.9 கோடியே 22 லட்சத்து 80 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 27,500 அடுக்குமாடி குடியிருப்புகள் மக்கள் வாழ தகுதியற்ற வீடுகளாக உள்ளது. இக்குடியிருப்புகளை கடந்த பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.1200 கோடியில் 7500 வீடுகளும், நடப்பாண்டு ரூ.1200 கோடியில் 7500 வீடுகளும் என மொத்தம் ரூ.2400 கோடியில் 15000 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இக்குடியிருப்புதாரர்களுக்கு மறுகட்டுமான காலங்களில் வெளியே வாடகையில் தங்குவதற்காக ரூ.8000 வழங்கப்பட்டு வந்த கருணைத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி ஒரு குடும்பத்திற்கு ரூ.24,000 வழங்க உத்தரவிட்டுள்ளார். குடியிருப்புதாரர் அனைவரும் விரைவில் இக்குடியிருப்புகளை காலி செய்யும் பட்சத்தில் புதிய குடியிருப்புகளின் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். குடியிருப்பு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள “நம் குடியிருப்பு நம் பொறுப்பு” திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. குடியிருப்போர் நலச் சங்கங்களால் பராமரிப்பு பணிக்காக வசூலிக்கப்படும் தொகைக்கு இணையாக அரசால் நிதி வழங்கப்படும். இத்திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 462 குடியிருப்பு நலச் சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மேயர் ஆர்.பிரியா, எம்பி கலாநிதி வீராசாமி, எம்எல்ஏ தாயகம் கவி, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ், திரு.வி.க நகர் மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், கவுன்சிலர்கள் அம்பேத்வளவன் (எ) குமாரசாமி, வாரிய தலைமை பொறியாளர் வே.சண்முக சுந்தரம், மேற்பார்வை பொறியாளர் எஸ்.சந்திர மோகன், நிர்வாகப் பொறியாளர் எஸ்..சுடலைமுத்து குமார், தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர் ஜே.அ.நிர்மல் ராஜ் மற்றும் வாரிய பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post சென்னையில் மட்டும் 27,500 அடுக்குமாடி குடியிருப்புகள் மக்கள் வாழ தகுதியற்ற வீடுகளாக உள்ளது; அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister Tha.Mo.Anparasan. ,Tamil Nadu Urban Habitat Development Board ,Periyar Nagar ,Minister Tha.Mo.Anparasan ,
× RELATED தென்சென்னை தொகுதியில்...