×

வெளிநாட்டில் கொரோனாவில் பலியான தந்தையின் அஸ்திக்காக 2 ஆண்டு காத்திருந்த பிள்ளைகள்: பாதுகாத்து வைத்திருந்த நண்பர்; பத்திரமாக கொண்டு வந்த சமூக சேவகி; குமரி அருகே நெகிழ்ச்சி

களியக்காவிளை:  குமரி மாவட்டம் அருமனையை அடுத்த குழிச்சல் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார் (44). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். கோவிட் நெறிமுறையின்படி, இறந்த உடலை வீட்டிற்கு கொண்டு வர முடியாததால் ஐக்கிய அரபு எமிரேட்சில் தகனம் செய்யப்பட்டது. பின்னர், தகனம் செய்யப்பட்ட அஸ்தி  அஜ்மானில் உள்ள கலீபா மருத்துவமனையில் வைக்கப்பட்டது. ராஜ்குமார் இறப்பதற்கு முன், அவரது மனைவி லதா புஷ்பம் 2012ல் ஒரு விபத்தில் சிக்கி உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தாயையும் இழந்து, தந்தையையும் கடைசியாகப் பார்க்கும் அதிர்ஷ்டம் இல்லாத அவரது பிள்ளைகள் புக்லீன் ரிக்ஸி (22) மற்றும் அக்லீன் ரகுல் (20) ஆகியோர் அவரது அஸ்தியையாவது பெற்று சடங்குகள் செய்யவேண்டும் என்று விரும்பினர். இதற்கிடையே ராஜ்குமாரின் நண்பரான கோட்டயத்தைச் சேர்ந்த சிஜோ இந்த அஸ்தியை மருத்துவமனையில் இருந்து உரிய ஆவணங்களுடன் வாங்கி துபாயில் உள்ள தனது இல்லத்தில் வைத்திருந்தார். இரண்டு வருடங்கள் சட்ட ரீதியான  பல்வேறு காரணங்களால் அஸ்தியை இந்தியாவிற்கு கொண்டு வர முடியவில்லை. இதையடுத்து சிஜோ தன் நண்பரின் அஸ்தியை இந்தியா அனுப்ப பல்வேறு சமூக ஆர்வலர்களின் உதவியை நாடினார். இது குறித்து சிஜோ துபாய் நண்பர்கள் அதிகம் உள்ள வாட்சப் குழுக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.இதனால் சமூக வலைதளங்களிலும், செய்திகளிலும் இச்சம்பவம் பிரபலமானது. இதை முகநூலில் கவனித்த கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த, துபாயில் மருத்துவ துறையில் பணியாற்றும் சமூக சேவகி தாஹிரா அந்த அஸ்தியை பிள்ளைகளிடம் ஒப்படைக்கும் பணியை மேற்கொள்ள முன் வந்தார். நேற்று மதியம் தாஹிரா விமானத்தில் திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து அருமனை அருகே உள்ள ராஜ் குமாரின் வீட்டிற்கு வந்தார். இங்கே இரண்டு ஆண்டுகளாக தனது தந்தையின் அஸ்தியை எதிர்பார்த்து காத்திருந்த பிள்ளைகளிடம் அஸ்தியை ஒப்படைத்தார் தாஹிரா. அஸ்தியை பெற்றுக்கொண்ட ராஜ்குமாரின் பிள்ளைகள் தங்களது தாயின் கல்லறை அருகே அவரது அஸ்தியை அடக்கம் செய்தனர். …

The post வெளிநாட்டில் கொரோனாவில் பலியான தந்தையின் அஸ்திக்காக 2 ஆண்டு காத்திருந்த பிள்ளைகள்: பாதுகாத்து வைத்திருந்த நண்பர்; பத்திரமாக கொண்டு வந்த சமூக சேவகி; குமரி அருகே நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Eleshchi ,Kumari ,Kaliakkavilai ,Rajakumar ,Kulichal ,Arumanai ,Kumari district ,Eleschi ,
× RELATED குமரி மாவட்டத்தில் பெய்து வரும்...