கனவில் கண்ட சிவலிங்கம் : வாசகர்களின் ஆன்மிக அனுபவம்

சிவாய நம என்று ஜெபிப்போர்க்கு அபாயமில்லை!

நான் ஒரு ஈஸ்வர பக்தன். சிவாலயங்களில் ‘‘திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் உடனுறை அபிதகுஜாம்பாள் ஆலயம் என் உள்ளம் கவர்ந்த ஆலயம் ஆகும். திருவண்ணாமலை மண்ணிலேதான் குகை நமச்சிவாயர் குரு நமச்சிவாயர், இடைக்காடர் சித்தர், சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி, விசிறி சாமியார் யோகிராம் சூரத்குமார் உள்ளிட்ட எண்ணிறைந்த மஹான்கள் வசித்து இறைவன் திருவடியை அடைந்தனர். ஞானத் தபோதனரை வா வென்று அழைக்கும் மலை! ‘‘திருவண்ணாமலை’’ அடிதோறும் லிங்கங்கள் உள்ள இடம் அண்ணாமலை. உலகிலேயே கார்த்திகை தீபத்திற்கு ‘‘மஹா தீபம்’’ ஏற்றப்படுவதற்கு உலகப் பிரசித்தி பெற்றது. ‘‘திருவண்ணாமலை’’ என் வாழ்வின் முக்கிய அங்கம் வகிப்பது திருவண்ணாமலை திருத்தலம்தான். எங்கள் குலதெய்வம் ‘‘திருப்பதி ஸ்ரீவெங்கடாஜலபதி சுவாமி ஆகும்’’. திருப்பதி சென்று வருபவர் வாழ்வில் திருப்பம் நேரும்’’ என்பது உண்மை. ‘‘சிவாய நம!’’ என்று ஜெபிப்போர்க்கு அபாயமில்லை. உண்மை பக்தனுக்கு உருவ, அருவ தெய்வ வேறுபாடு இல்லை. ‘‘சிவா- விஷ்ணு’’ பேதமில்லை ‘‘லோக சமஸ்தா சுகினோ பவந்து!’’ என்று கூறி இறைவனின் திருவடி தொழுவோம்’’ என்றென்றும் நம் வாழ்நாளில் எல்லா செயல்களிலும் ‘‘வெல்வோம்’’?

- வீ. ராமச்சந்திரன், தர்மபுரி - 636807.

சங்கடம் தீர்த்தான்

நான் கடந்த 17 ஆண்டுகளாக சபரிமலை சென்று வருகிறேன். இந்த ஆண்டு 18-ம் ஆண்டு நிறைவாக இந்த மாதம் 5-ம் தேதி சபரிமலை சென்றிருந்தேன். அலைகடலென மக்கள் வெள்ளத்தால் காணப்படும் சபரிமலை கொரோனா காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது. கடுமையான கட்டுப்பாடுகளால் சந்நிதானம் ஆரவாரமின்றி நிசப்தமாக இருந்தது. ஒருமுறைக்கு மேல் சுவாமியை தரிசனம் செய்ய முடியாது. நான் மட்டுமே தனியாக ஒவ்வொரு படியையும் தொட்டு வணங்கி, 18-படிகளைக் கடந்து சுமார் 10-நிமிடங்களுக்கு மேலாக ஐயனை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. மெய்சிலிர்த்து, ஆனந்தக் கண்ணீரோடு ஐயனை தரிசித்தேன். திவ்ய தரிசனம் முடிந்து ஒரு மணி நேரத்தில் பம்பைக்கு புறப்பட்டோம். சுமார் 2 கிலோ மீட்டர் இறங்கியிருப்போம். என்னுடன் வந்த நண்பருக்கு லோ சுகர் கொஞ்சம் பதட்டமடைந்தார். கடைகள் எதுவும் நடைபாதையில் இல்லை. மக்கள் நடமாட்டமும் அறவே இல்லை. கொஞ்சம் சாரல் மழை வேறு. ஒரே ஒரு சிறிய கடை மட்டும் இருந்தது. இனிப்பு மிட்டாய் எதுவும் இல்லை என்று கடைக்காரர் சொல்லிவிட்டார்.

என்ன வியப்பு பாருங்கள் யார்? என்றே தெரியவில்லை! முகத்தையும் பார்க்க முடியவில்லை! என் கையில் ஆரஞ்சு மிட்டாய் அடங்கிய பாக்கெட் ஒன்று திணிக்கப்பட்டது. உடனே நண்பருக்கு கொடுத்தோம். இயல்பு நிலைக்கு திரும்பினார். அப்பொழுதுதான் கடைக்குள் மிட்டாய் பாக்கெட் கொடுத்தது யார் என்று தேடினோம். கடை வெறிச்சோடி காணப்பட்டது. என் ஐயனே! என்னே! உன் கருணை! ஆபத் பாந்தவன் என்பது சரிதான். ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா! என்று சரணம் சொல்லி, உடல் சிலிர்க்க இறங்கினோம். இன்று வரை இந்நிகழ்ச்சி மனதை விட்டு அகலவில்லை.

- நா. சீனிவாசன், கெங்கவல்லி - 636105.

கனவில் கண்ட சிவலிங்கம்

நான் ஒரு ஓவியன் ‘ஸ்ரீஈஸ்வரி ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் ஓவியத்தொழில் செய்து வருகிறேன். சிவனடியார்களைக் கண்டதும் சிவனையே காண்பது போல் மட்டிலா மகிழ்ச்சியடைந்து அவர்களின் பாதத்தைத் தொட்டு வணங்கி உபசரிப்பேன். தினந்தோறும் அதிகாலை எழுந்து நீராடிய பின் மலர்களைப் பறித்து வந்து நான் வரைந்து சிவசக்தி ஓவியத்தை மலர்களால் அலங்கரித்து ‘ஓம் சிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை பக்தியுடன் ஜெபித்துவருவது எனது வழக்கம். எங்கள் ஊர் சிவாலயத்தில் பக்த கோடிகளை ஒன்றிணைத்து தொடர்ந்து பிரதோஷ வழிபாடு செய்து வருகிறேன்.

ஒரு நாள் இரவு எனது கனவில் சிவலிங்கம் ஒளிப்பிழம்பாக காட்சியளித்தது. அதைக் கண்டதும் எனது மேனி சிலிர்த்தது கண்ணீர் மல்கி சிவ சிவ சிவலிங்கம் என்று என் மனதுக்குள் எண்ணினேன். உடனே, லிங்கத்தின் மேலே ஸ்ரீஅருணாசலேஸ்வரர் என்ற எழுத்து தென்பட்டது. மறுநாள் பிரதோஷ தினமாதலால் நான் சிவ தரிசனத்திற்காக ஆலயத்திற்கு சென்றேன். அங்கு சிவாச்சாரியாரிடம் நான் கண்ட கனவைக்கூறி விளக்கம் கேட்டேன். என்னை மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து, ஐயா, நீங்கள் மிகவும் புண்ணியம் செய்தவர். எல்லாம் வல்ல சிவபெருமான் உங்களை திருவண்ணாமலைக்கு அழைக்கின்றார். தவறாமல் நீங்கள் கார்த்திகை தீபம் பார்த்து வாருங்கள் என்று கூறினார்.

அதன்படியே நான் திருவண்ணாமலை ெசன்று ஸ்ரீஅருணாசலேஸ்வரரையும் அன்னை உண்ணா முலையம்மனையும் கண்குளிரக்கண்டு தரிசித்து வந்தேன்.ஒரு சில மாதங்கள் சென்றதும் எனது மகனுக்கு வெளிநாடு செல்ல விசா கிடைத்து, நல்ல இடத்தில் வேலை கிடைத்தது. நல்ல இடத்தில் பெண் கிடைத்தது. எனது மகன் சிவனருளால் இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு தந்தையாகி இன்று சீரும் சிறப்புமாக ஊரார் பாராட்ட வாழ்ந்துவருகிறான். நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தின் மகிமையை நான் உணர்ந்து சிவத்தொண்டராகி மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவருகிறேன்.

- க. நாராயணசாமி, உதயமார்த்தாண்டபுரம்.

மீட்டுத்தந்தாள் மீனாட்சி அம்பாள்

என் அப்பா ரயில்வேயில் வேலை பார்த்தார். நான் மதுரையிலே பியூசி படிப்பிலே பாதியிலே வெளியேறிவிட்டேன். இதனால் என் தந்தையார் என்னைக் கேவலமாகப் பேசினார். இதற்கு இடையே ரயில்வேயில் பயர்மென்கள் ஸ்டிரைக் 1971ல் நடந்தது. அப்போது தற்காலிக ஊழியராக வேலை பார்த்தேன். நான்கு நாட்களிலே வீட்டிற்கு போகச் சொல்லிவிட்டார்கள். அதற்குப் பிறகு திருநெல்வேலியில் தற்காலிக ஊழியராக ஒரு வருட வேலை பார்த்தேன். அதுவும் முடிந்து விட்டது. அதன் பிறகு மதுரையிலே 1972 அமெரிக்கன் ஆஃப் கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்தேன். அதில் சாப்பிட மதியம் 2.00 - 4.30 நேரம் கொடுத்தார்கள். நான் அந்நேரம் சென்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வெளியில் நின்று வணங்கிவருவேன். 1975ல் மதுரை ரயில்வேயில் வேலைக்கு சேர ஆர்டர் வந்தது. இதற்கு காரணமே என் அன்னை மீனாட்சியும், அப்பன் சுந்தரேஸ்வரரின் அருளே என்று கூறுவேன். நான் என்றுமே அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அடிமையே.    எனக்கு மூன்று பெண்கள் ஒரு பையன் அனைவருக்குமே திருமணம் ஆகிவிட்டது. என்னுடைய இப்பொழுது என் வயது 70 என் மனைவி பெயர் சங்கரவடிவு இறைவனை உளப்பூர்வமாக நம்பினால் என்றுமே நம்மைக் கைவிட மாட்டார் என்பது உண்மையே.

- K. சங்கர நாராயணன், திருநெல்வேலி - 627006.

Related Stories:

>