என்ன சொல்கிறது என் கிரகங்கள்: கட்டங்களும் கல்யாணமும்

என்ன சொல்கிறது என் கிரகங்கள்

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

பெண்ணின் ஜாதகத்தில் இரண்டாம் இடம், ஏழாம் இடம், எட்டாம் இடம், இந்த இடங்கள் சரியாக அமையவில்லை என்றால் வாழ்க்கை போராட்டக்களமாக மாறிவிடுகின்றது. இரண்டாம் வீட்டில் 6, 8, நோக்குடையவர்கள் இருப்பது சில சிக்கல்களுக்கு காரணமாகிறது. இரண்டாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தால் குடும்பம் அமைவதில் சிக்கல். இரண்டாம் வீட்டில் ராகு, கேது, சூரியன், செவ்வாய்  இருப்பது பல குழப்பங்களுக்கு காரணமாகிறது. வார்த்தை, பேச்சு, சொல், செயல்கள் மூலம் இல்லற வாழ்க்கை மனக் கசப்பை தருகிறது.

ஏழாம் வீட்டில் ராகு, கேது, செவ்வாய் இருப்பது நல்லதல்ல எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்படுவார்கள். ஆறாம் அதிபதி, எட்டாம் அதிபதி ஏழாம் வீட்டில் இருப்பதால் எப்பொழுதும் நிச்சயமற்ற தன்மை இருக்கும். எந்த லக்னமாக இருந்தாலும் குரு 2, 7, 8, 12ம் வீடுகளில் தனித்து இருப்பது சரியல்ல. அந்தணன் தனித்து இருந்தால் அவதிகள் மெத்த உண்டு என்பதற்கேற்ப சிலவற்றை கொடுத்து பலவற்றை கெடுத்துவிடுவார்.

பொதுவாக கிரக அமைப்புக்கள், பார்வை, சேர்க்கை என ஒரு பக்கம் இருந்தாலும் வாழ்க்கையில் பெரும்பாலான பிரச்னைகளுக்கு தசாபுக்திகள்தான் காரணமாக இருக்கின்றது. சில தசைகள் மாறும்போது வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடுகின்றது. பெண்கள் ஜாதகத்தில் 2, 7, 8 ஆகிய இடங்கள் சம்பந்தப்பட்ட தசா வரும்போது பிரச்னைகள் தொடங்குகிறது. 6, 7, 8க்கு உரியவர்கள் சம்பந்தப்பட்ட தசா நடக்கும்போது கருத்து வேறுபாடுகள், தற்காலிக பிரிவுகள், நிரந்தர பிரிவுகள், வழக்குகள், நோய்கள், விபத்துகள் என வாழ்க்கைப் பாதை திசை மாறிவிடுகிறது.

பொதுவாக சுக்கிரன் களத்திரகாரகன் அதாவது திருமண வாழ்க்கைக்கு அதிகாரம் செலுத்துபவர். அசுரகுரு என்று அழைக்கப்படும் சுக்கிரன் வாழ்க்கையில் அஷ்டலட்சுமி யோகத்தை அருளக்கூடியவர். சகலவிதமான சுகபோகங்களுக்கும் அதிபதி. இந்தச் சுக்கிரனின் நிலையை ஜாதகத்தில் முக்கியமாகப் பார்ப்பது அவசியமாகிறது. எந்தக் கிரகமாக இருந்தாலும் சுக்கிரன் சுபயோகத்துடன் இருந்தால் சகல சௌபாக்கிய யோக அம்சங்கள் கூடி வரும். அசுப சுக்கிரனால் அமைதி கெடும். வம்பு, வழக்கு, பஞ்சாயத்து, அவமானம் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். முக்கிய ஜாதகங்களை சேர்க்க வேண்டும்.

சுக்கிரன், கேது, சுக்கிரன் ராகு, போன்ற அமைப்புக்கள் இருக்கும். ஜாதகங்களை சேர்ப்பதால் எந்த வகையில் தீய பலன்கள் வரும் என்பதை கணிப்பது மிகமிகக்

கடினம். ஆண்களின் ஜாதகத்தில் சுக்கிரனின் விளையாட்டு காரணமாக காதல், காமம் அரங்கேறுகிறது. அதேநேரத்தில் பெண்களின் ஜாதகத்தில் செவ்வாயின் விளையாட்டு காரணமாக காதல், காமம் என வசப்படுகிறார்கள். மொத்தத்தில் செவ்வாய் வீரியம், அக்னி, கனல், நெருப்பு, சுக்கிரன் குளிர்ச்சி, காமம், போதை, தவிப்பு ஆகையால் இந்த இரண்டு கிரகங்களின் நிலைகள் ஜாதகத்தில் சரியாக இல்லையென்றால் எல்லாமே நிலைகுலைந்து போகும்.

சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை எந்த கட்டத்தில் இருக்கிறது. இருவருக்கும் என்ன ஆதிபத்தியம், என்ன லக்கினம், நவாம்ச லக்கினம் என்ன என்பதை பார்த்து அந்த ஜாதகத்தின் தன்மை, குணாதிசயங்களை முடிவு செய்ய வேண்டும்.பொதுவாக லக்கினத்திற்கு ஐந்தாம் வீட்டைப் புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று சொல்வார்கள். இது தவிர அந்த வீட்டிற்கு பல முக்கியமான காரக அம்சங்கள் உள்ளன. இந்த வீட்டில் 6, 8, 12ம் அதிபதிகள், ராகு, கேது, நீச்ச கிரகங்கள், கூட்டுக் கிரகங்கள், பார்வைகள் இல்லாமல் இருப்பது சிறப்பு. இது வெறும் ராசிக் கட்டம் மட்டும் அல்லாமல் நவாம்ச கட்டத்திலும் நல்லபடியாக இருப்பது அவசியம். குறிப்பாக சனி 5ல் இருப்பது திருமண வாழ்க்கையில் சில சங்கடங்கள், பிரச்னைகள், பிரிவுகளை ஏற்படுத்திவிடும்.

குரு நின்ற இடம் பாழ், சனி நின்ற இடம் விருத்தி, குரு பார்க்கும் இடம் விருத்தி, சனி பார்க்கும் இடம் பாழ் என்பது ஜோதிட சாஸ்திர விதியாகும். சனி 5ஆம் வீட்டில் இருந்தபடி களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டையும், தன் குடும்ப வாக்கு ஸ்தானமான இரண்டாம் வீட்டையும் பார்ப்பதால் திருமண வாழ்க்கையில் பல நிம்மதியற்ற சூழ்நிலைகள் உண்டாகும். தன் வாக்கினாலே பல சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். நாக்கில் சனி என்று சொல்வது இவர்களை போன்றவர்களைத்தான்.

எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசி பின்பு வருந்துவார்கள். திருமண உறவில் சிக்கல், பிரிவுகள், சங்கடங்கள், கசப்பு, வெறுப்பு, சலிப்பு, விரக்தி, சுய பச்சாதாபம், நெறிதவறிய பேச்சுக்கள், வாழ்க்கை, தொடர்புகள். விவாகரத்து, ஜீவனாம்ச வழக்கு. நீச்ச தொடர்பு, அற்ப சிநேகிதம் போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு இந்த 5ஆம் வீட்டில் இருக்கும் சனி காரணமாகின்றது. மேலும், லக்னாதிபதி, இரண்டு, ஏழாம் இடங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகிறது. ஆகையால், எந்த ஜாதகத்தில் சனி 5ல் இருந்தாலும் அந்த ஜாதகத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகுதான் திருமணப் பொருத்தம் பார்க்கும் விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டும்.

ஆண் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சனி, புதன் இருவரும் சேர்க்கை அல்லது சனி, சந்திரன் இருவரும் சேர்க்கை பெற்றால் மகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை அமையும். இருவரின் விருப்பங்கள், ரசனைகள் மாறுபடும். அன்யோன்ய பொருத்தம் சரியாக அமையாது. திருப்தியற்ற நிலை, சஞ்சல, சபல மனம் இருக்கும். ஏதாவது ஒரு காரணத்திற்காக முதல் திருமணம் விவாகரத்து ஆவதற்கு வாய்ப்புள்ளது. இரண்டாம் திருமணம் அமையும், வயதில் மூத்த பெண் அமைய வாய்ப்புள்ளது. விதவைக்கு வாழ்வு கொடுப்பார், அல்லது விதவைப் பெண்ணின் தொடர்பு உண்டாகும்.

பெண் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் சுக்கிரனும், சந்திரனும் சேர்ந்திருந்தால் அந்த கிரக பலத்திற்கேற்ப பலன்கள் இருக்கும். அதிக வயது வித்தியாசத்தில் கணவர் அமைவார், அல்லது இரண்டாம் தாரமாக வாழ்க்கை பட வேண்டியிருக்கும். சுமார் 40 வயதிற்கு மேல் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் வரலாம். ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி, எட்டாம் அதிபதி, இரண்டாம் அதிபதி சம்பந்தப்பட்ட தசை நடக்கும்போது பலவிதமான பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. விபத்துக்கள் காரணமாக அறுவை சிகிச்சை ஏற்படும். வழக்கு, பிரிவுகள் வரலாம். தீராத நாட்பட்ட நோய்கள் வாட்டும். மறுமணத்திற்கான அமைப்பு உள்ளது. சந்தேகப் புத்தி, கூடா நட்பு உண்டாக வாய்ப்புள்ளது.

பெண் ஜாதகத்தில் அஷ்டம ஸ்தானம் எனும் மாங்கல்ய ஸ்தான தசை நடக்கும்போது உடல் ஆரோக்யம் பாதிக்கப்படலாம், அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது வரும். விபத்து, கீழே விழுந்து அடிபடுவதன் மூலம் சில சமயம் முடக்கம் ஏற்படும். கணவருக்கு விபத்து ஏற்படலாம்.

ராகு - கேது  இருவருடன்  பிற  கிரகங்கள் சேரும் பலன்கள்

சூரியனுடன் ராகு :

ஜாதகக் கட்டத்தில் சேர்ந்து இருந்தால் தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடுகள் வரும். அடிக்கடி தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்படலாம். அரசாங்கத்திற்கு எதிராக செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள். சட்ட விரோதமான எண்ணங்கள் மனதில் தோன்றும். நீச சம்பந்தமான பொருட்கள் விற்பதில் பணம் சேரும். ஒரு சில நாட்களாவது தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். நீதிமன்றங்கள் மூலம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படலாம்.

சூரியனுடன் கேது :

ஜாதகக் கட்டத்தில் சேர்ந்திருந்தால் மருத்துவ சம்பந்தமான துறையில் ஜீவனம் அமையும். ஆங்கில மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற வகைகளில் படிப்பு அமையும். வேதவேதாந்த தத்துவ ஞானியாக இருப்பார்கள். சாஸ்திரங்களில், கலைகளில், பண்பாடு நாகரீகம், மதம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபாடு இருக்கும். மாய, மந்திர, தந்திர விஷயங்களில் தேர்ச்சி அடைவார்கள். பக்தி மார்க்கம், கர்ம மார்க்கம், யோக மார்க்கம், ஞானமார்க்கம், ஜோதிடம், குறி சொல்லுதல் என வாழ்க்கை அமையும்.

சந்திரனுடன் ராகு:

ஜாதகக் கட்டத்தில் சேர்ந்திருந்தால் எந்தக் கட்டத்தில் எந்த ராசியில் சேர்ந்து இருக்கிறார்கள் என்பதை வைத்து பலன்கள் கூடும், குறையும். தாயார் உடல்நலம் பாதிக்கப்படலாம். தாய் வழி, தாய் மாமன் வகையில் பிரச்னைகள் இருக்கும். உள்ளம் பாதிப்பதால் உடல் நலம் பாதிக்கும். மாய, மந்திர, தந்திர, சித்து வேலைகளில் மனம் லயிக்கும். இவர்களின் குணாதிசயங்கள் நேரத்திற்கு நேரம் மாறுபடும். காளி, பிரத்யங்கிரா, வாராகி போன்ற உக்கிர தெய்வங்களை உபாசனை செய்வார்கள். வெளிப்படையாகப் பேசுவதுபோல எல்லாவற்றையும் மறைத்துப் பேசுவார்கள்.

சந்திரனுடன் கேது:

மருத்துவத்துறையில் படிப்பு, ஜீவனம் அமையும். அதீத சிந்தனையுடையவர்கள். நிமிடத்தில் மன நிலையை முடிவுகளை மாற்றிக் கொள்வார்கள். விரக்தி, சோர்வு, சலிப்பு, சுய பச்சாதாபம். அதிகம் இருக்கும். தனிமையை அதிகம் விரும்புவார்கள். எந்த விஷயத்திலும் எல்லையை மீறி நடந்து கொள்வார்கள். மகிழ்ச்சி என்றால் அதீத குதூகலத்துடன் இருப்பார்கள். சோகம் என்றால் அதீத விரக்தியுடன் இருப்பார்கள். இவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வது மிகவும் கடினம். அடிக்கடி தற்கொலை எண்ணங்கள், முயற்சிகள் உண்டாகும்.

செவ்வாயுடன் ராகு:

எந்த ராசியில், எந்த ஸ்தானத்தில் சேர்ந்திருந்தால் அதற்கேற்ப குணநலன்கள் இருக்கும். பொதுவாக லக்கினம், 2, 4, 7, 8 போன்ற இடங்களில் அதிக பிரச்னைகள் உண்டாகும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற செயல்பாடுகள் அதிகம் இருக்கும். உணர்ச்சி வசப்பட்டு காரியங்களை கெடுத்துக்கொள்வார்கள். சினிமா சம்பந்தப்பட்ட துறைகளில், வீரதீரச் செயல்கள் செய்வார்கள். வீண் வம்பு, வழக்குகளை சந்திப்பார்கள். ரசாயனம், மதுபானத் தொழில்கள் கூடிவரும். மருத்துவத் துறையில் ஈடுபாடு இருக்கும். உடலில் தீக்காயம், இரத்தக் காயம், வெட்டுக் காயங்கள் உண்டாகும்.

செவ்வாயுடன் கேது :

ஜாதகக் கட்டத்தில் சேர்ந்து இருந்தால் எந்த ராசி, எந்த ஸ்தானத்தில் இருக்கிறார்கள் என்பதை பொறுத்து நிறைகுறைகள் இருக்கும். பெட்ரோல், மதுபானம், ரசாயனம், மருந்துக்கடை போன்ற தொழில்களில் தொடர்பு உண்டாகும். இரண்டாம் வீட்டில் இருந்தால் தன் பேச்சாலேயே பல இடையூறுகளை ஏற்படுத்திக் கொள்வார். கண்பார்வைக் கோளாறுகள் உண்டாகும். நான்காம் வீட்டில் இருந்தால் உடல்நலம் பாதிக்கும், ஜீரண கோளாறுகள் வரும். இல்லறத்தில் பிரிவுகள், பிரச்னைகள் வரும். மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சை நிபுணராகும் யோகம் உண்டு.

குருவுடன் ராகு:

ஜாதகக் கட்டத்தில் சேர்ந்து இருந்தால் பலவிதமான பிரச்னைகள் இருக்கும். குருவின் பலம் குறைவாக  இருந்தால் பலன்கள் மோசமானதாக இருக்கும். தெரியாததை தெரிந்ததாக காட்டிக் கொள்வார்கள். புத்திரதோஷம், புத்திர சோகம் இருக்கும். சாஸ்திரத்திற்கு விரோதமாக நடப்பார்கள். தங்கள் காரியம் கைகூடி வருவதற்காக எந்த கீழ்நிலைக்கும் இறங்கி வருவார்கள். சட்டத்திற்குப் புறம்பாக, நீச்ச வகையில், தர்மத்திற்கு விரோதமான முறையில் பணம் சேரும்.

குருவுடன் கேது:

ஜாதகக் கட்டத்தில் சேர்ந்து இருந்தால் ஜாதகர் பல சாதனைகள் புரிவார். லக்கினம், ஐந்து, ஒன்பது, பத்து போன்ற இடங்களில் இருந்தால் சாஸ்திர ஞானம் உண்டாகும். இயல், இசை, நாடகம், கலைத்துறை, சாஸ்திரிய சங்கீதத்தில் உச்சத்தைத் தொடுவார். கோடீஸ்வர யோகம், உச்சநிலை. மந்திரி, நாடாளும் யோகம், மருத்துவத் தொழில். ஆன்மிகத்தில் உச்சநிலை, தர்ம ஸ்தாபனங்கள் அமைப்பது போன்ற பலன்கள் அமையும்.

சுக்கிரனுடன் ராகு:

ஜாதகக் கட்டத்தில் சேர்ந்திருந்தால் நிறைகுறைகள் இருக்கும். லக்கினத்திற்கு இரண்டு, ஐந்து, ஏழு, எட்டு போன்ற இடங்களில் இல்லாமல் இருப்பது நல்லது. களத்திர தோஷம், தன் சந்தோஷம் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள எதையும் செய்யத் துணிவார்கள். அடக்கி ஆளும் குணம் இருக்கும். ஆண், பெண் தகாத நட்பு, தொடர்பு, காமம், காதல் தீய பழக்க வழக்கங்கள் உண்டாகும். கலைத்துறையில் ஜீவனம் அமையும்.

சுக்கிரனுடன் கேது :

ஜாதகக் கட்டத்தில் சேர்ந்திருந்தால் நிம்மதியற்ற, மகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை அமையும். பிரிவுகள், சட்ட போராட்டங்கள், ஜீவனாம்ச வழக்குகள், விரக்தி, வெறுப்பு, இயலாமை என மனப் போராட்டம் இருக்கும். தனிமையை நாடுவார்கள், இரண்டாம் தாரம், இரண்டாம் திருமணம், வயதில் மூத்த பெண்களுடன் சேர்க்கை, தொடர்பு இருக்கும்.

புதனுடன் ராகு:  

ஜாதகக் கட்டத்தில் சேர்ந்து இருந்தால் நன்மை, தீமை உண்டு. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் டெக்னீஷியனாக புகழ் அடைவார்கள். அடிக்கடி விரக்தி உண்டாகும். தாய், தாய் மாமன் வகையில் பிரச்னைகள் வரும். கல்வியில் தடை வந்து தொடரும். சிலர், எல்லாம் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்வார்கள். அனுபவ அறிவு கைகொடுக்கும்.

புதனுடன் கேது:

ஜாதகக் கட்டத்தில் பலமாக அமைந்துவிட்டால் மிகப் பெரிய ஆராய்ச்சியாளர்களாக வருவார்கள். எந்தத் துறையில் இருந்தாலும் அந்தத் துறையில் உச்சத்தை தொடுவார்கள். நல்ல சிந்தனையாளர்கள், பேச்சாளர்கள் வேதாந்த ஞானம் இருக்கும். அதீத ஞாபக சக்தி உண்டு. நகைச்சுவை அகட விகடம் கூடி வரும். கல்வியில் உயர்ந்த பட்டங்கள், சமூகத்தில் நல்ல மதிப்பு இருக்கும்.

சனியுடன் ராகு :

விரக்தி, சோர்வு, தெளிவு, உத்வேகம் எனக் கலவையான குணநலன்கள் இருக்கும். டெக்னிக்கல், மெக்கானிக்கல் இன்ஜினியராக வரலாம். எண்ணெய், ரசாயனம் சம்பந்தமான தொழில்கள் அமையும். இரண்டு, ஏழாம் இடத்தில் இருப்பது இல்லற வாழ்க்கையில் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

சனியுடன் கேது :

ஞான மார்க்கம், பக்தி மார்க்கத்தில் மனம் லயிக்கும். தர்க்க வாதம், சந்நியாசி யோகம், வேதாந்த விஷயங்களில் ஈடுபாடு, தர்ம புண்ணிய காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள். இல்லறத்தில் நாட்டம் குறையும். திருமண பந்தம் அமையாமல் போக வாய்ப்புள்ளது.

Related Stories:

>