×

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்-கண்ணனும் துர்வாசரும்


சென்ற இதழ் தொடர்ச்சி...


ஹம்ச - டிம்பகர்களே தங்கள் முடிவைத் தேடி, கண்ணனிடம் மோதினார்கள். ஆம்! தெய்வம் யாரையும் சுலபத்தில் தண்டித்து விடாது. நாமேதான் மேலும்மேலும் தவறுகளைச் செய்து, துயரப்பட்டு முடிவில் முடிந்து போகிறோம். இதில் அரச குமாரர்களான ஹம்ச-டிம்பகர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?ரிஷிகளின் ஆசிரமங்களில் அட்டூழியம் செய்து விட்டு, அரண்மனை திரும்பிய அரச குமாரர்கள் சில நாட்கள் ஆனதும்... தங்கள் முடிவிற்கான வழியைத் தாங்களே தீர்மானித்தார்கள்.

 இருவரும் தந்தையிடம் போய்,\”தந்தையே!நீங்கள் இந்த மாதத்திலேயே ராஜசூய யாகம் செய்ய முயற்சி செய்யுங்கள்! அதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் நாங்கள் செய்கிறோம். நான்கு திசைகளிலும் படைகளுடன் போய், அரசர்கள் அனைவரையும் ஜயித்து வருவோம்.அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்\” என்றார்கள். தந்தையும் ஒப்புக் கொண்டார். தகவல் தெரிந்து ஜனார்தனன் வருத்தப் பட்டான்; நண்பனான ஹம்சனிடம், \”நண்பா! நீங்கள் செய்வது தவறு. உன் முடிவை மாற்றிக்கொள்! எல்லா அரசர்களையும் வெல்வேனென்று வாய்ச்சவடால் விட்டுப் பயனில்லை.‘‘பீஷ்மர், ஜராசந்தன், யதுகுல வீரர்கள் என ஏராளமான பலசாலிகள் இருக்கிறார்கள்.

அவர்களையெல்லாம் வெல்வேன் என்பது நடக்காது. இருபத்தோரு தலைமுறை க்ஷத்ரியர்களை வேரறுத்த பரசுராமரையே ஜயித்தவர் பீஷ்மர். அவரை வெல்ல முடியுமா என்று யோசனை செய்!'' ‘‘யதுகுல வீரர்களில் கண்ணன் தலை சிறந்தவன். நாராயணனே கண்ணனாக வந்திருக்கிறான். உயிரின் மேல் ஆசையுள்ள எவனும் கண்ணனுடன் மோத மாட்டான். அவன் சகோதரன் பலராமன் என்பவன் அங்கிருக்கிறான். அவன் கோபம் கொண்டால், உலகையே அழித்து விடுவான். கண்ணனுக்குச் சொந்தக்காரனான சாத்யகி என்பவன் இருக்கின்றான். அவனை வெல்ல முடியாது.

‘‘மேலும் முன்பு நம்மால் அவமதிக்கப்பட்ட துர்வாசர் முதலான மஹரிஷிகள் எல்லாம், கண்ணனிடம் போய் முறையிட்டு இருக்கிறார்கள்.கண்ணனும் அவர்கள் குறையைத் தீர்ப்பதாக சபதம் செய்து இருக்கிறான்.'' ‘‘இதையெல்லாம் அங்கு போய்வந்த ஓர் அந்தணனிடம் இருந்து தெரிந்து கொண்டேன். ஆகையால் நான் சொன்னதையெல்லாம் மனதில் கொண்டு, மந்திரிகளுடன் ஆலோசித்து, ஒரு நல்ல முடிவிற்கு வா! அப்புறம் உன் இஷ்டம்”என நீளநெடுக அறிவுரை சொன்னான்.

40நண்பனின் அறிவுரைகளை லட்சியம் செய்யாத ஹம்சனோ பலமாகச் சிரித்தான்; ‘‘நண்பா! ஜனார்தனா! நன்றாகப் பேசுகிறாய்.உன் வாக்குப்படியே பீஷ்மரை,வீரரென்று வைத்துக் கொண்டாலும், அதெல்லாம் அவர் இளம் வயதில் செய்தது. இப்போது அவர் உடம்பெல்லாம் தளர்ந்து ஒடுங்கிப்போய், கிழவராகிவிட்டார். என் முன்னால் நிற்க, அவருக்குத் துணிவேது? யாராக இருந்தாலும் சரி! அவர்களையெல்லாம் நான் வெல்வேன். பயமே இல்லை எனக்கு.’’‘‘ஜனார்தனா! நீ ஓர் உதவி செய்! உடனே இங்கிருந்து புறப்பட்டு சீக்கிரமாகத் துவாரகைக்குப் போ! என்னவோ கிருஷ்ணன் என்றாயே; அவனிடம்போய் நான் சொன்னதாகச் சொல்!

‘‘என் தந்தை நடத்தும் ராஜசூய யாகத்திற்கு அவனை, நிறைய உப்பு மூட்டைகளைக் கப்பமாகக் கொண்டுவரச் சொல்! தாமதம் செய்யாமல் சீக்கிரம் வரச்சொல்! என் நண்பனான நீ எனக்காகத் துவாரகைபோய்க் கண்ணனிடம் கூறு! போ! சீக்கிரம்!” என்று வேண்டினான் ஹம்சன்.அதைக்கேட்ட ஜனார்தனன், ‘‘ஆகட்டும்! இன்றோ நாளையோ போகிறேன்” என்று சொல்லிவிட்டுத் தன் வீட்டிற்குப் போனான். போகும்போதே, தேவதேவனான கண்ணனைத் தரிசிக்கப் போவதை எண்ணி, சந்தோஷப்பட்டுக் கொண்டே போனான். கெட்டதிலும் நல்லதைப் பார்க்கும் மனோபாவம் அவனுக்கு.

 மறுநாள் காலை நேரம். தனி ஓர் ஆளாகக் குதிரை மீதேறி, துவாரகையை நோக்கிப் புறப்பட்டான் ஜனார்தனன். கடுமையான கோடை வெயிலில் தவிக்கும் ஒருவன், தூரத்தில் தண்ணீர் உள்ள குளத்தைப் பார்த்தால், எப்படி வேகமாகப் போவானோ, அதைப்போலப் போனான் ஜனார்தனன்.
 போகும் வழியெல்லாம் ஜனார்தனன், கண்ணனைப் பற்றிப் பலவாறாகச் சிந்தித்தபடியே போனான். (ஸ்ரீமத் பாகவதத்தில் கம்சனுக்காகக் கண்ணனைக் கூப்பிடப்போன அக்ரூரர் எந்த நிலையில் இருந்தாரோ, அந்த நிலையில் இருந்தான் ஜனார்தனன்) குதிரைமேல் ஏறி அமர்ந்ததும் ஜனார்தனன் தன் நண்பனான ஹம்சன் தனக்கு ஏற்படுத்திக்கொடுத்த பாக்கியத்தை நினைத்து, முதலில் சந்தோஷப்பட்டான்.

‘‘ஹம்சனால் அல்லவா, எனக்குக் கண்ணனைப் பார்க்கக்கூடிய பாக்கியம் கிடைக்கப் போகிறது! துவாரகையில் அவதரித்து விளையாடக்கூடிய பரப்பிரம்மமான கண்ணனைத் தரிசிக்கப் போகும் பாக்கியவான் நான்; என்னைப் பெற்றவர்களும் பாக்கியசாலிகள். அப்போது மலர்ந்த தாமரைப்பூவைப் போன்ற கண்களை உடைய திருமுகம், சங்கு, சக்கரம், கதை, பத்மம் ஆகியவற்றை உடைய கரங்கள்; வனமாலை அணிந்த திருத்தோள்கள்; நீலோற்பல மலரின் இதழைப்போல ஔி பொருந்திய திருமேனி ஆகியவற்றைக் கொண்ட கண்ணனைத் தரிசிக்கப் போகிறேன். என் பாவமெல்லாம் மறையப் போகின்றன.

குளிர்ந்த கண்களை உடைய கண்ணன், கடைக்கண்ணால் என்னைப் பார்ப்பாரா? நலமா என்று விசாரிப்பாரா? என்னிடத்தில் பிரியமாக இருப்பாரா? அல்லது விரோதிகளின் பக்கத்தில் இருந்து வந்தவன் என்று என்னை அலட்சியம் செய்துவிடுவாரா? அறிய முடியவில்லையே! கண்ணனின் திருவடித் தாமரைகளில் விழுந்து வணங்க, என் மனம் வேகவேகமாகப் போகிறது. கண்ணனைத் தியானித்துக்கொண்டே செல்லும் எனக்கு, எல்லா இடங்களிலும் கண்ணனைப் பார்ப்பது போலவே இருக்கிறது.

பச்சை மாமலைபோல் மேனி, தங்கத்தைப் போல ஔிவீசும் மஞ்சள் நிற ஆடை, முத்து மாலைகள், புன்சிரிப்புடன் கூடிய திருமுகம் முதலானவைகளுடன் திகழும் கண்ணன் என் முன்னால் போவது போலத் தெரிகிறதே! இது கனவா இல்லை நனவா? கண்ணனைக் கூப்பிட நாக்கு துடிக்கிறது. ஆனால் கூடவே பயமும் வருகிறதே! அகில உலகங்களுக்கும் அருள்புரியும் கண்ணனிடம்போய் ‘என் அரசனுக்குக் கப்பம் கொடு!’ என்று எப்படி நான் இரக்கமில்லாமல் தைரியமாகக் கேட்க முடியும்? கண்ணன் என்னைப்பற்றி என்ன நினைப்பான்?

ஸ்ரீமன் நாராயணனையே கப்பம் கட்டுமாறு உத்தரவிட ஒருவன்; அந்த உத்தரவை எடுத்துச் சொல்ல ஒருவன் என்று இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்றால், இது சிரிப்புக்கு இடமாகுமே! என்ன செய்வது? நான் செய்த பாவம், இப்படிப்பட்ட நண்பன் எனக்குக் கிடைத்தான். என்ன இருந்தாலும் சரி!  எல்லா ஜீவ ராசிகளிலும் அந்தராத்மாவாக வியாபித்து நிற்கும் பரமாத்மாவான கண்ணன், என் அந்தராத்மாவை மட்டும் அறியமாட்டாரா என்ன? எப்படியும் கண்ணன் என்னைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை முழுமையாக எனக்கு இருக்கிறது” என்று இப்படிப் பலவாறாக சிந்தித்தபடியே ஜனார்தனன் துவாரகையை அடைந்தான்.5 அங்கே காவலர்களின் அனுமதியைப்பெற்ற ஜனார்தனன், அரண்
மனைக்குள் நுழைந்தான்.

 அவன்போனபோது, கண்ணன் சிம்மாசனத்தில் வீற்றிருந்தார். பலராமன், சாத்யகி, நாரதர் ஆகியோர் அங்கு இருந்தார்கள். துர்வாசர் தெய்வீக நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். வேத வல்லுனர்கள் ஒருபுறம் சாமகானம் பாட, மற்றொரு புறம் துதி பாடகர்கள் கண்ணன் புகழைப் பாடிக் கொண்டிருந்தார்கள். அக்காட்சியைத் தரிசித்ததும், ஏற்கனவே கிருஷ்ண தியானத்தில் இருந்த ஜனார்தனன் பக்தியுடன் கண்ணன் திருவடிகளில் விழுந்து வணங்கி, ‘‘கண்ணா! அடியேன் ஜனார்தனன் என்ற பெயரை உடைய தாசன் வணங்குகிறேன்'' என்றான்; அதன் பிறகு பலராமன் முதலியவர்
களையும் வணங்கினான். பிறகு கண்ணனைப் பார்த்து, ‘‘தெய்வமே! அடியேன் ஹம்ச - டிம்பகர்களின் தூதுவனாக வந்திருக்கிறேன்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.

132 கண்ணன் புன்முறுவல் பூத்தார்; ‘‘அந்தணா! முதலில் நீ இந்த ஆசனத்தில் உட்கார்! அதன்பிறகு நீ வந்த காரியத்தைச்சொல்!” என்றார். மறுத்துப்பேச முடியுமா? ஜனார்தனன் ஓர் ஆசனத்தில் உட்கார்ந்தான். கண்ணன் தொடர்ந்தார், ‘‘ஜனார்தனா! நீ நலமா? உன்னைச் சேர்ந்தவர்கள் நலமா? உங்கள் அரசரான பிரம்மதத்த மகாராஜா நன்றாக இருக்கிறாரா? அவர் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களின் பராக்கிரமங்களை எல்லாம் நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்” என்றார்.

 அதைக் கேட்டதும் ஜனார்தனன் மெய்சிலிர்த்தான்; ‘பரவாசுதேவனுக்குத்தான், நம்மிடமும் நம்மைச் சார்ந்தவர்களிடமும் எத்தனை அன்பு!’ என நினைத்தான். தழுதழுத்த குரலோடு, ‘‘கண்ணா! பிரம்மதத்த ராஜா, என் பெற்றோர்கள் என எல்லோரும் நலமாக இருக்கிறார்கள். அந்த அரச குமாரர்களான ஹம்ச - டிம்பகர்களின்...” என்று சொல்லி மேலே பேச முடியாமல் வார்த்தைகள் தடைபட அப்படியே நிறுத்தினான், ஜனார்தனன். அப்போது கண்ணன் ஜனார்தனனுக்குத் தைரியம் கூறி, ‘‘ஜனார்தனா!  அந்த அரசகுமாரர்கள் என்ன சொன்னார்கள்? சொல்! பயப்படாதே! சொல்லத் தகுந்ததோ சொல்லத் தகாததோ எதுவாக இருந்தாலும் சரி! தயங்காமல் சொல்! தூதனாக வந்திருக்கும் நீ, தைரியமாகச் சொல்! அந்த அரச குமாரர்களின் விருப்பத்தை அறிந்து, அதற்குத் தகுந்தபடி நான் செய்கிறேன்” என்றார்.

ஜனார்தனன் மெல்லத் தொடர்ந்தான், ‘‘கண்ணா! அந்த அரச குமாரர்கள் சொன்னதை, இங்கே சொல்ல என் நாக்கு கூசுகிறது. நீ வற்புறுத்துவதால் சொல்கிறேன். உனக்குத் தெரியாததையா சொல்லப் போகிறேன்? அந்த ராஜ குமாரர்கள் ராஜசூய யாகம் செய்யப் போகிறார்களாம்; அதற்குக் கப்பமாக நீ, ஏராளமான உப்பு மூட்டைகளைத் தர வேண்டுமாம். அந்த உப்பு மூட்டைகளை நீயே எடுத்துக்கொண்டு நேரில் வர வேண்டுமாம். இதைச் சொல்லத்தான் என்னை அனுப்பினார்கள்” என்று சொல்லி முடித்தான்.

அதைக்கேட்ட கண்ணன் நீண்ட நேரம், கைகளை தட்டிச் சிரித்தார். ‘‘ஜனார்தனா! நன்றாகத்தான் சொன்னாய். அவர்களுக்குக் கப்பம் கட்ட வேண்டியதுதான். ம்... அவர்களுக்கு என்ன தைரியமும் அகம்பாவமும் இருந்தால், என்னை இப்படிக் கேட்க நினைப்பார்கள்! இதுவரையில் யாரும் இப்படி என்னிடம் கேட்டதுமில்லை; கேட்க நினைத்ததும் இல்லை.

சபையோர்களே! எல்லோரும் கேளுங்கள்! ராஜசூய யாகம் செய்ய நினைப்பவர் பிரம்மதத்த மஹாராஜா; அதைச் செய்பவர்கள் ஹம்ச - டிம்பகர்கள். அதற்காக உப்பு மூட்டை சுமந்து கப்பம் கட்ட வேண்டியது, யதுகுல திலகனான வாசுதேவன்! எப்படி இருக்கிறது பாருங்கள்! இந்த வேடிக்கையைக் கேட்டு எல்லோரும் சிரியுங்கள்!\” என்றார், கண்ணன்.சபை முழுவதும் கைகொட்டிச் சிரித்தது. ஜனார்தனன் முகமோ வெளிறியது.

அப்போது கண்ணன், ‘‘அந்தணா! நீ அஞ்சாதே! அந்த துஷ்டர்களிடம்போய், கண்ணன் கப்பம் கட்ட வருகிறான். ஆனால், உப்பு மூட்டைகளைக் கொண்டு அல்ல; சார்ங்கமென்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்பு மழைகளைக் கொண்டும், கூர்மையான கத்திகளைக் கொண்டும், சக்ராயுதத்தைக் கொண்டும், உங்கள் தலைகளையெல்லாம் கீழே உருட்டிக் கப்பம் கட்ட வருகிறேன் என்று சொல்!

‘‘அவனுக்குத் துணையாக யார் வந்தாலும் சரி! அவர்களை முதலில் வெல்வேன்; பிறகு ஹம்சனைக் கொல்வேன். புஷ்கர க்ஷேத்திரத்திலோ அல்லது கயையிலோ அல்லது மதுராபுரியிலோ படைகளுடன் சந்திக்கலாம் என்று உன் நண்பர்களிடம் போய்ச்சொல்! வேண்டாம்! வேண்டாம்! அவர்கள் உன் நண்பர்களானபடியால், நீ சொல்லத் தயங்குவாய். உனக்கு ஏன் வீண் சிரமம்? இதோ இந்த சாத்யகி உன்னுடன் வருவான். என் முடிவை அவனே அங்கு சொல்லுவான். உன் பக்தி எனக்குத் தெரியும். எனக்கும் உன்னிடம் அன்பு உண்டு. நீ இவ்வுலகில் நீடூழி காலம் நன்றாக வாழ்ந்து, என்னிடம் நிலையான பக்தி கொண்டவனாக விளங்குவாய்!” என்றார்.

அதன்பிறகு சாத்யகியை அழைத்து, ‘‘நண்பா! நீ இந்த ஜனார்தனனுடன் போ! இங்கு நடந்ததையெல்லாம் ஹம்ச - டிம்பகர்களிடம் சொல்லி, அவர்களை யுத்தத்திற்குத் தயாராக இருக்கும்படிச் சொல்லி விட்டு வா! வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு நீ தனி ஒருவனாகவே போய்விட்டு வா!” என்றார்.

ஜனார்தனன் கண்ணனை வணங்கி விடை பெற்றான். அதன்பிறகு அவனும் சாத்யகியும் புறப்பட்டு சால்வ நகரத்தை அடைந்தார்கள். அன்று இரவு முடிந்து பொழுது விடிந்ததும், காலை அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு ஜனார்தனனும் சாத்யகியும் அரண்மனையை அடைந்தார்கள். அங்கு போனதும் ஜனார்தனன் ஹம்ச-டிம்பகர்களிடம், ‘‘இவர்தான் சாத்யகி. கண்ணனுக்கு இடதுகரம் போல விளங்குபவர்” என அறிமுகப்படுத்தினான். அதைக் கேட்ட ஹம்சன், ‘‘சாத்யகியே! உங்கள் வரவைப் பற்றி, ஏற்கனவே எனக்குத் தெரியும். இப்போதுதான் நேரில் பார்க்கிறேன்.

வில் வித்தை, வேதம், சாஸ்திரம் முதலான பலவற்றில் நீங்கள் கை தேர்ந்தவர் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட உங்களை இப்போது நேரில் பார்த்த தில், மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கண்ணன்,பலராமன், உக்ரசேனர் முதலானோர் நலமாக இருக்கின்றார்களா?” எனக் கேட்டான்.
சாத்யகி, ‘‘நலமாக இருக்கிறார்கள்” என்றார். உடனே, ஹம்சன் ஜனார்தனனிடம், ‘‘நண்பா! நீ கண்ணனைப் பார்த்தாயா? போன காரியம் என்ன ஆயிற்று? கை கூடியதா? சொல் சீக்கிரம்” என்றான்.

அந்தக் கேள்வியைக் கேட்டதும் ஜனார்தனனுக்கு, கண்ணன் சபையில் தான் கண்டது கண்டபடி, அப்படியே வர்ணித்தான். அத்துடன், ‘‘ஹம்சா! இப்படிப்பட்ட காரியத்தில் நீ ஈடுபடுவது நல்லதல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. துவாரகை சபையில் நடந்ததை, சாத்யகி விவரிப்பார்” என்றான்.
அவன் வார்த்கைளைக் கேட்ட ஹம்சன் கோபப்பட்டான்; ‘‘அடேய்! அந்தணனே! கண்ணனின் மாயையில் சிக்கி, என் முன்னால் இப்படிப்பேச உனக்கு என்ன தைரியம்? நீ என் நண்பணானதால் உன்னை மன்னிக்கிறேன். என் முன்னால் நிற்காதே!

உடனே இங்கிருந்து போய்விடு. ஆயர்குலச் சிறுவனான கண்ணனையும் யாதவர்களையும் நான் வெல்வேன். சிறுவயது முதல் என்னுடன் உண்டு வாழ்ந்த நீ, அதன் பிறகாவது என் பராக்கிரமத்தை நன்றாகத் தெரிந்துகொள்!” என்று ஜனார்தனனிடம் கத்தி விட்டு ஹம்சன் சாத்யகியின் பக்கம் திரும்பினான். ‘‘யாதவனே! நீ எதற்காக இங்கு வந்தாய்? சொல்!” என்றான்.

சாத்யகி பதில் சொல்லத் தொடங்கினான்
‘‘கர்வம் பிடித்த ஹம்சனே! சொல்கிறேன். உணர்ந்து கொள்!

கண்ணனிடமே கப்பம் கேட்கும் உனக்கு, சங்கு-சக்ர-கதாபாணியான கண்ணனின் அம்புகளோ அல்லது கூரிய கத்தியோ கப்பம் கொடுக்கும். உன் தலையை வெட்டி வீழ்த்துவான் கண்ணன். கண்ணனிடம் கப்பம் கேட்பவர்கள் கதி இதுதான். சிவபெருமானிடம் பெற்ற வர பலத்தால், ஏதேதோ உளறுகிறாய் நீ. கண்ணனுக்கு சகாயம் செய்பவர்களாக நாங்கள் பத்து பேர்கள் இருக்கிறோம்.

பலராமன், சாத்யகியான நான், கிருதவர்மா, பலவானான நிசடன், பப்ரு, உத்கலன், மகாமேதாவியும் அஸ்திரங்களை நன்றாகத் தெரிந்தவனுமான தாரணன், சாரங்கன், விப்ருது, தைரியசாலியும் புத்திசாலியுமான உத்தவர் என்னும் நாங்கள் அனைவரும் கண்ணனைச் சூழ்ந்து வருவோம். உனக்குத் துணையாக யார் வந்தாலும் சரி! நீ தப்ப முடியாது. அதிகம் சொல்வானேன்? யுத்தத்திற்குத் தயாராக இரு! போர் எந்த இடத்தில் என்பதை அறிந்து வரும்படியாகத் தாான், கண்ணன் எனக்குக் கட்டளையிட்டு இருக்கிறான். புஷ்கரம் எனும் இடத்திலா? கோவர்தன மலையின் பக்கத்திலா?அல்லது வட மதுராவிலா? எந்த இடத்தில் போர் என்பதை, நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்! கண்ணன் இருக்கும்போது, எந்த முட்டாள்தான் ராஜசூய யாகம் செய்ய விரும்புவான்? உயிரின்மீது ஆசையிருந்தால், ராஜசூயம் செய்யும் ஆசையை விட்டுவிடு! நலமாக இருப்பாய்!” என்று மிகக் கம்பீரமாக சாத்யகியை எச்சரிக்கை செய்தான்.

சாத்யகியின் வார்த்தைகளைக் கேட்டு, ஹம்ச - டிம்பகர்கள் கோபத்தில் கொந்தளித்தார்கள்; ‘‘சாத்யகி! கண்ணன் உட்பட நீ சொன்னவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள்? சொல்! அவ்வளவு பேர்களையும் வதம் செய்வோம். நீ தூதனாக வந்தபடியால், உன்னை உயிருடன் விட்டேன். ஓடிப்போய் விடு. நாங்கள் இந்த உலகை ஆளப் பிறந்தவர்கள். எங்களைப் பற்றி உனக்குத் தெரியாது. சொல்கிறேன் கேள். சிவபெருமானிடம் இருந்தே வரம் பெற்றவர்கள் நாங்கள். இரண்டு மகாபூதங்கள் எப்போதும் எங்களைக் காப்பாற்று கிறார்கள். நான்கு வகைப் படைகளுடன், புஷ்கரம் எனுமிடத்தில் மோதலாம் என்று சொல். நீ பயப்படாதே. உன்னைக் கொல்ல மாட்டோம். சென்று வா!” என்றார்கள்.

 அதைக்கேட்ட சாத்யகியும் வார்த்தைகளால் வெடித்தான்; ‘‘ஹம்சனே! நான் போய்வருகிறேன். உங்களைக் கொல்ல நாளையோ அல்லது மறுநாளோ நானே வருவேன். நான் மட்டும் இப்போது தூதனாக வராவிட்டால், இப்போதே உங்களை யமனுக்கு விருந்தாகப் படைத்திருப்பேன். வருகிறேன்” என்று சொல்லி விட்டு, துவாரகையை அடைந்தான் சாத்யகி.அங்கு போனதும் சாத்யகி, கண்ணனை வணங்கி நடந்ததையெல்லாம் சொன்னான்.

கண்ணன் உடனே தன் சேனாதிபதிகளை அழைத்து, ‘‘நமது படைகள் தயாராகட்டும்” என உத்தரவிட்டார். அப்படியே படைகள் தயாராயின. படைகளின் முன்னால் கையில் ஆயுதங்களுடன் மிகுந்த கோபத்தோடு சாத்யகி நின்றான். தாருகனால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் கண்ணன் ஏறி அமர்ந்தார்; சார்ங்கம் எனும் வில், சங்கு, சக்கரம், கத்தி, கதை ஆகியவைகளை ஏந்தி, மஞ்சள் பட்டாடை அணிந்து, தாமரை மலர்களால் ஆன மாலையைக் கழுத்தில் அணிந்து நீருண்ட மேகம்போல இருந்த கண்ணனை அந்தணர்கள் ஆசிர்வதித்தார்கள்.

‘‘படைகள் எல்லாம் வடக்கு நோக்கிப் புறப்படட்டும்” என்று கண்ணன் உத்தரவிட்டார். படைகள் புறப்பட்டுப் புஷ்கரம் எனும் இடத்தை அடைந்தன. அங்கு போனதும் அங்கிருந்த துறவிகளையெல்லாம் வணங்கி, புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, அங்கே வசித்து வந்த வேதியர்களின் வேதகோஷங்களைக் கேட்டு மகிழ்ந்தார்கள்.

 ஹம்ச - டிம்பகர்களும் தாங்கள் சொன்னபடியே படைகளோடு புஷ்கரத்தை அடைந்தார்கள். அவர்களைக் காப்பாற்றுவதற்காக சிவபெருமானால் நியமிக்கப்பட்டிருந்த இரண்டு பூதங்களும் முன்னும் பின்னுமாகத் தொடர்ந்து சென்றார்கள். தேவேந்திரனையே நடுங்க வைத்த விசக்ரன் எனும் அசுரன் ஆயிரக்கணக்கான அரக்கர்களுடன் வந்தான்; ‘இடும்பன்’ என்ற அசுரன், எண்பத்தெட்டாயிரம் அரக்கர்களுடன் வந்தான். மறுநாள் காலையில், இருப் பக்கத்து படைகளும் கடுமையாகப் போரிட்டன.

ஹம்ச - டிம்பகர்களின் படை ஏராளமாக அழிந்தது. மறுநாள் போர் கோவர்தன மலையின் அருகில் என்ற தீர்மானத்தோடு, முதல்நாள் யுத்தம் முடிந்தது. அவரவர் இருப்பிடத்தை அடைந்தார்கள்.அதன்பிறகு ஹம்சனும் டிம்பகனும் அன்றிரவே கோவர்தன மலையை அடைந்தார்கள். மறுநாள் காலையில் கண்ணன் தன் அனுஷ்டானங் களை முடித்துக் கொண்டு, படைகளுடன் கோவர்தன மலையை அடைந்தார்.

கோவர்தன மலையின் வடக்குப் பக்கத்தில் யமுனா நதியின் கரையில் போர் தொடங்கியது. வளர்த்துவானேன்? ஹம்ச-டிம்பகர்களுக்குத் துணையாக வந்திருந்த இரு பூதங்களையும், கண்ணன் பிடித்துச் சுழற்றி வீசினார். அவை கைலாயத்தில் போய் விழுந்தன.ஹம்சன் பயந்தான்; ரதத்தில் இருந்து குதித்து ஓடி, யமுனா நதியில் காளிங்கன் வசி்த்த மடுவில் குதித்து முழுகினான். அதைப் பார்த்த கண்ணன் தானும் தேரில் இருந்து குதித்து ஓடிப்
போய், ஹம்சன் மீது பாய்ந்தார்; கைகளாலும் கால்களாலும் அடித்து, ஹம்சனைக் கொன்றார் கண்ணன்.

அதே சமயம்... பலராமனுடன் போரில் ஈடுபட்டிருந்த டிம்பகன், தன் சகோதரனான ஹம்சனின் மரணத் தகவலைக் கேட்டு, தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனான்.அதன் பிறகு கண்ணன் தன் உறவினர்களுடன் சில காலம், கோவர்தன மலையில் வாழ்ந்து திரும்பினார்.மஹான்களான பெரியவர்கள் அமைதியாக இருப்பதால், அவர்களை அவமானப்படுத்தவோ இகழவோ கூடாது. மீறி தவறான செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் எத்தனை பெரிய மனிதர்களாக இருந்தாலும் சரி! தெய்வம் அவர்களை விட்டு வைக்காது என்பதை, இங்கு துர்வாசரின் வரலாறு விளக்குகிறது.

பி.என். பரசுராமன்

Tags : characters ,Kannan ,Durvasar ,
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...