×

ஆண்டாள் கோயிலில் அற்புத உற்சவங்கள்

பெரிய தேர், பெரிய கோபுரம், பெரிய தங்க விமானம், பெரியாழ்வார் இத்தனை பெரிய விஷயங்களை உள்ளடக்கியது விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர்.ஸ்ரீவில்லிப்புத்தூர் முன்னொரு காலத்தில் வராக ஷேத்ரம் என்று அழைக்கப்பட்டது. ஷேத்ரத்தின் ஒரு பகுதியாக காடும் இருந்தது. இப்பகுதியை ராணிமல்லி என்பவர் ஆட்சி செய்து வந்தார். ராணி மல்லிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். இவர்கள் ஒருநாள் வேட்டையாடி வரும்போது கண்டன், புலி ஒன்றை துரத்திச் செல்கிறான். அவனைப் புலி கொன்றுவிடுகிறது. இதை அறியாத வில்லி தன் தம்பியைத் தேடி அலைகிறான். சோர்வடைந்து மரத்தடியில் தூங்குகின்றான். அவன் கனவில் பெருமாள் தோன்றி கண்டனுக்கு நேர்ந்த நிலையைக் கூறுகிறார். பின்னர் தாம் இங்கு ‘காலநேமி’ என்ற அசுரனை வதம் செய்வதற்காக எழுந்தருளியதாகவும் பின்னர் இந்த ஆலமரத்தினடியில் உள்ள புதருக்குள் ‘‘வட பத்ரசாயி” என்கிற திருநாமத்துடன் காட்சி அளிக்கப் போவதாகவும் கூறி, இந்தக் காட்டை அழித்து நாடாக்கி தமக்கு கோயில் எழுப்பி ஆராதனை செய்து வரும்படி கூறி மறைகிறார். இதனால் இந்த ஊருக்கு ‘‘ஸ்ரீவில்லிப்புத்தூர்” என்று பெயர்வந்தது என்று தலபுராணம் கூறுகிறது.

ஒரு குழந்தையாக, ஆண்டாள், துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது, மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் என்னும் ஊரில் வசித்து வந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டாள். இந்த அந்தணர் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கென குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், குழந்தை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். அவர் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை. சிறு வயதிலேயே கண்ணன் மீதியிருந்த அளவற்ற அன்பு காரணமாக தன்னைக் கண்ணனின் மணப் பெண்ணாக நினைத்துப் பாவனை செய்து வந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுச்சித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா! என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் இருந்த இடத்தில் வைத்துள்ளார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன.

ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுச்சித்தர் கோதையைக் கடிந்து கொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கி விட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் உகப்பானவை எனவும், அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே ‘‘சூடிக் கொடுத்த சுடர்க் கொடி” என்றும் இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுச்சித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்து வருமாறு பணித்தார். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள்.

108 திவ்ய தேசங்களில் 90வது திவ்ய தேசம் ஆகும். இத்தலத்தில் மூலவர் வடபத்ரசாயி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் மட்டுமே ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய மூவரும் ஒரே ஸ்தானத்தில் காட்சியளிக்கிறார்கள்.திருமகளே தெய்வீகக் குழந்தையாக ஆண்டாள் என்று பிறந்ததின் காரணமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் என்று பெயரிடப்பட்டது, அது திருமகளைக் குறிக்கும் வண்ணம் தமிழ் வார்த்தையான “திரு” என்ற அடைமொழி கொண்டு திருவில்லிப்புத்தூர் என்று வழங்கப்பெற்றது.ஆண்டாள் கோயிலில் ஆண்டுக்கு பன்னிரண்டு மாதமும் திருவிழாக்கள்தான். அதில் முக்கியமானவைகள் : ஆண்டாள் அவதரித்த நாளான ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் தேர்த் திருவிழா நடைபெறும். ஒன்பது நாளும் ஆண்டாள் ஒன்பது உருவத்தில் வந்து சேவை சாதிக்கிறார். முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கும் விழாவில் இரண்டாவது நாளில் சூர்ய பிரபை வாகனத்தில் எழுந்தருளி அருட்பாலிக்கிறார்.

மூன்றாவது நாள் உற்சவத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட பரங்கி நாற்காலியில் அமர்ந்தபடி அருட்பாலிக்கிறார். நான்காவது நாளில் ஷேச வாகனத்திலும், ஐந்தாவது நாளில் அன்ன வாகனத்தில் ஆண்டாளும், கருட வாகனத்தில் ரெங்கமன்னாரும் எழுந்தருள்கின்றனர். 6வது நாளில் ஆண்டாள் விலையுயர்ந்த மூக்குத்தி அணிந்து சேவை சாதிக்கிறார். ஏழாவது நாளில் சயன உற்சவம் நடைபெறுகிறது. இந்த உற்ஸவத்தின்போது ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனித்து சேவை சாதிக்கிறார். எட்டாவது நாளில் பூப்பல்லாக்கு வாகனத்தில் ஆண்டாளும், குதிரை வாகனத்தில் ரெங்கமன்னாரும் எழுந்தருள்வார்கள். ஒன்பதாவது நாளில் தேரோட்டம் நடைபெறுகின்றது.புரட்டாசி மாதம் பெரிய பெருமாள் உற்சவம் பத்து நாட்கள் நடைபெறுகிறது.பங்குனி மாதத்தில் திருக்கல்யாண உற்சவம் பத்து நாள் நடைபெறுகிறது.

மார்கழி மாதத்தில் எண்ணெய்க் காப்பு உற்சவம் நடைபெறுகிறது.மார்கழி மாதம் தமிழ் திருவிழாவாகிய பகல் பத்து, ராப் பத்து மற்றும் ஆண்டாள் மார்கழி நீராட (எண்ணெய்க் காப்பு) உற்சவம் வருடந்தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு 7.1.2021ம் தேதி எண்ணெய்க்காப்பு உற்சவம் நடைபெறுகிறது. இதை மார்கழி நீராட்டு உற்சவம் என்றும் கூறுவர். ஆண்டாள் மார்கழி மாதம் பாவை நோன்பு இருப்பது தோழிகளுடன் திருமுக்குளத்தில் நீராடச் சென்றதை நினைவு கூரும் நிகழ்வாகும். எண்ணெய்க் காப்பு மார்கழி நீராட்ட உற்சவம், திருமுக்குளம் அருகிலுள்ள எண்ணெய்க் காப்பு மண்டபத்தில் நடைபெறும். ஆண்டாள் சந்நதியிலிருந்து புறப்பட்டு மாட வீதிகளில் வலம் வந்து, பெரிய கோபுர வாயிலில் அரையர் சேவை, தீர்த்தம், ஜடாரி, கோஷ்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆண்டாள் எண்ணெய்க் காப்பு மண்டபத்தை அடைவார். தைலக் காப்பு ஆண்டாளுக்கு சாத்தப்படும். இந்த தைலக் காப்புக்கு 61 வகை மூலிகைகள் அடங்கிய 40 நாட்களில் காய்ச்சிய தைலம் பயன்படுத்தப்படுகின்றது. நல்லெண்ணெய், பசும்பால், நெல்லிக்காய், தாழம்பூ, இளநீர் முதலான பல பொருட்கள் சேர்த்து ஏழுபடி எண்ணெய்விட்டு இரண்டு பேர் நாற்பது நாட்கள் காய்ச்சுவர். இதில் நாலுபடி தைலம் கிடைக்கும். மார்கழி மாதத்தின் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்கு இந்தத் தைலமே சாற்றப்படுகின்றது. மார்கழி மாதம் முடிந்த பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக இந்த தைலப் பிரசாதம் தரப்படுகின்றது.

பக்தர்களால் நோய் தீர்க்கும் மருந்தாக இந்தத் தைலம் நம்பப்படுகின்றது.இதையடுத்து நூறு பவுன் எடையுள்ள தங்கக் குடத்து நீரில் நீராட்டு உற்சவம் நடைபெறும். பின்னர் ஆண்டாள் தங்க சீப்புக் கொண்டு தலைவாரி அலங்கரித்துக் கொள்வார். படை பரிவாரங்களுடன், நாதஸ்வர மேள தாளத்துடன் ஆண்டாள் தாயார் நீராடி வருவதைக் காண கண்கோடி வேண்டும்.இந்த உற்சவத்தை அடுத்து மறுநாள் கள்ளழகர் உருவில் ஆண்டாள் பவனி வருவாள். மணக்கோலம் கொண்ட இளமங்கை தனது கணவனின் ஆடையை அணிந்து மிடுக்குடன் வருவது போல இருக்கும்.

எம். ஜெயராஜ்

பால்கோவாவை முதலில் கண்டதும், உண்டதும் தாயார் ஆண்டாளே

ஆண்டாள் திருமணம் ஆன பிறகு, பிறந்த வீட்டுக்குச் செல்லும் ஒரு சடங்கின்போது சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பாலை ஆண்டாளுக்குப் படைக்கிறார்கள். பால்கோவா தயாரிக்கும் முறையுடன் ஓரளவு ஒத்துப்போவதால் இந்த வழிபாட்டு மரபில் இருந்து பால்கோவாவின் வரலாறு பல நூற்றாண்டுப் பழமையானது எனலாம். இந்தப் பின்புலமும் ஸ்ரீவில்லிப்புத்தூர் பால் வளமும் பால்கோவா தோன்றலுக்கான காரணமாக இருந்திருக்கலாம். ஒரு கேன் பால் என்பது பத்து லிட்டர், இதில் ஒன்றேகால் கிலோ சர்க்கரையை போட்டு மெதுவாக கலக்குகிறார்கள். இதைச் செய்ய இன்றும் முந்திரி குப்பைகளை வைத்து எரிக்கிறார்கள். அதுவும் இந்த சுவைக்கு ஒரு காரணம் போலும்! மெதுவாக அந்த பாலை கிண்ட கிண்ட அது சுண்டிவருகிறது.

Tags : Andal Temple ,
× RELATED பங்குனி உத்திரத்தை ஒட்டி...