×

கட்டபொம்மன் வழிபட்ட ஜக்கம்மா

வீரபாண்டிய கட்டபொம்மன். இவரின் குலதெய்வம் ஜக்கம்மா.இஸ்லாமிய மன்னன் ஒருவன் கம்பளத்து சமுதாயப் பெண்  ஒருவரை விரும்பி மணமுடித்துத் தரும்படி கேட்டதாகவும், தங்கள் சமுதாயப்  பெண்ணின் பாதுகாப்பிற்காக தெற்கு நோக்கி வந்தனர். அப்பொழுது துங்கபத்திரா  நதிக்கரையை கடக்க முடியாமல் இருந்தனர். பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  பின்னால் கம்பளத்தார் கூட்டம் வடகரையில் தங்களது குல தெய்வமான எல்லம்மா  தேவியை வழிபட்டனர். அப்போது மலைப் பகுதியில் இருந்து சிறு குழந்தை வந்து  நீங்கள் இந்த கரையை கடக்க உங்களுக்கு மரங்கள் பாலமாக அமையும், நீர்  வழிவிடும், தெற்கு சீமைக்கு சென்று மேன்மையோடு ஆட்சி செய்து வாழுங்கள்,  உங்கள் கூடவே இருந்து உங்களை காப்பேன் என்றும் கூறி மறைந்தது.
அதே போல நீர் வழிவிட்டு, மரங்கள் பாலமாக அமைந்து தெற்கு கம்பள நாட்டுக்கு வந்து ஆட்சியும் செய்தனர். சின்ன குழந்தை வடிவாக வந்தவள்தான் ஜக்கம்மா.


யார் இந்த ஜக்கம்மா?

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகாவிலுள்ளது எருமார்பட்டி ஊராட்சி. இங்குள்ள எருமார்பட்டி, அம்மமுத்தன்பட்டி, ரெங்கசாமிப்பட்டி பகுதிகளை உள்ளடக்கிய பகுதியே முன்பு வையாபுரி கிராமம் என்று அழைக்கப்பட்டது. வையாபுரி கிராமத்தில் ஆடு, மாடு, விவசாயம், என ஓரளவு செல்வத்துடன் வசித்து வந்தது ஜக்கம்மாளின் குடும்பம்.இந்த வையாபுரி கிராமத்திலிருந்துதான் ஜோதிநாயக்கனூர் ஜமீன் குதிரைகளுக்கு கொள்ளு மற்றும் நவதானியப்பயறுகள்  அனுப்பப்பட்டு வந்தது. அந்தப்பயிர்களை விளைவிக்கும் முன் ஜமீன்தார் வந்து விதைகளை பார்ப்பதும், பயிர்கள் நன்கு வளர துவங்கியதும், அதை பார்வையிடவும் தயார் நிலைக்கு வந்து விட்டது உடனே அறுவடை செய்யுங்கள் என உத்தரவு இடவும் கூட ஜமீன்தார் இந்த கிராமத்திற்கு அடிக்கடி வந்து செல்வார்.

ஒருமுறை ஜமீன்தார் வையாபுரி கிராமத்திற்குள் குதிரையில் நகர்வலம் வந்தபோது, பதினாறு வயது நிரம்பிய அழகு தேவதையாக இருந்த ஜக்கம்மாளை கண்டார். தாவணி அணியாத முந்தைய பருவம் பாவாடை சட்டையில் நின்று அந்தி நேரம் வீட்டு முற்றத்தை பசும் சாணம் தெளித்து சீர்படுத்திக் கொண்டிருந்தாள். அவளை வைத்த கண் மூடாமல் ஜமீன்தார் பார்த்துக்கொண்டிருந்தார். எதிரே, வந்த ஊர் முக்கியஸ்தர், ஜமீன்தார் ஐயா, என்று அழைத்ததும் சகஜ நிலைக்கு வந்த ஜமீன்தார், குதிரையிலிருந்து இறங்கி நடந்தபடி பேசினார். “புள்ள அழகா இருக்கு, யாரு மகா இது” என்று கேட்டார். அதற்கு ஊர் முக்கியஸ்தர், ஜக்கம்மாவின் குடும்ப விபரம் குறித்து விளக்கினார். உடனே ஜோதிநாயக்கனூர் ஜமீன்தார், ஊர் முக்கியஸ்தருடன் ஜக்கம்மா வீட்டுக்கு சென்றார்.

ஜமீன்தார் வருகையை எதிர்பார்க்காத ஜக்கம்மாவின் தாயார், கரம் கூப்பி வணங்கி, “ஜமீன்தாரய்யா வாருங்க, உடன் வந்திருக்கும் ஊர் பெரியவங்களும் வாங்க” என்றபடி, வீட்டில் இருந்த பிரம்பு நாற்காலியை ஜமீன் தாருக்கு கொடுக்க, அதில் அமர்ந்த ஜமீன்தார், ஊர் முக்கியஸ்தரை பார்க்க அவர் பேசலானார். ஜக்கம்மாவின் தந்தையை அழைத்து வருமாறு கூற, ஆட்டு மந்தைக்கு சென்று ஆடுகளுக்கு தழைகளை வைத்துக்கொண்டிருந்த ஜக்கம்மாவின் தந்தையையும், மாட்டு தொழுவத்திலிருந்த அவளது அண்ணனையும் வீட்டுக்கு அழைத்து வந்தாள் ஜக்கம்மாவின் தாய். அவர்கள் வந்த பிறகு ஊர் முக்கியஸ்தர் பேசலானார். “வீட்டு முற்றத்தில் நின்ற உங்க ஜக்கம்மாவ, நம்ம ஜமீன்தார் பார்த்திருக்கிறார். அவள கல்யாணம் செஞ்சுக்க ஆசப்படுகிறாரு, அதுக்குத்தான் பொண்ணு கேட்டு வந்திருக்கிறாரு.”

“ஐயா, என் மவ, விளையாட்டு புள்ள, குடும்பம் நடத்துற அளவுக்கு இன்னும் பக்குவப்படலிங்களே,” என்ற ஜக்கம்மாவின் தந்தையின் பேச்சுக்கு இடையே குறுக்கிட்ட அவளது, தாய், “புருஷன், பொஞ்சாதி பேசி எடுத்து இருக்கிற அளவுக்கு புள்ளைக்கு உடம்புலயும் தெம்பு இல்லிங்க” என்றாள். “அதெல்லாம் ஜமீன்தார் பார்த்துக்குவார். பெரிய வீட்டு சாப்பாடுன்னா சும்மாவா, பத்து நாளையில உம் புள்ள தடிச்சிருவா,” என்றதும், ஜக்கம்மாவின் அண்ணன், “நாங்க, கொஞ்சம் யோசனை பண்ணிட்டு சொல்லுறோம்.” என்றதும் சினம் கொண்ட ஜமீன்தார். “என்ன யோசனை வேண்டி கிடக்கு, வருகிற பௌர்ணமியில கல்யாணம் சொல்லிப்புட்டேன். ஆமா” என்றபடி சினம் கொண்டு, உடன் வந்தவர்களுடன் வெளியேறினார் ஜமீன்தார். அவர்கள் சென்ற பின் ஜக்கம்மா, தனது தாயின் அருகே வந்தமர்ந்து அழுதாள். எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் என்றுகூறி அழுதாள்.

பௌர்ணமிக்கு இன்னும் ஏழு நாட்களே உள்ள நிலையில் ஜமீன்தார் ஆட்களும், ஊர்  முக்கியஸ்தர்களும் பல விதத்திலும் ஜக்கம்மாவின், தந்தை மற்றும் அண்ணன் ஆகியோரிடம் கடுமையாக எச்சரிக்க தொடங்கினர். காலை, மாலை பாராமல் அடிக்கடி வீட்டுக்கு சென்று நச்சரித்தனர். ஜமீனை பகைச்சுக்கிட்டு எப்படி ஊருல வாழுறது என்றெல்லாம் பலவாறு பேசி பயத்தை ஏற்படுத்தினார்கள். இவற்றையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஊரெல்லாம் பொங்கலுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் போது முந்தையநாள் இரவு தூங்கப்போகும் முன்பு ஜக்கம்மாவின் தந்தை, தனது மனைவியிடம் ஆலோசனை செய்கிறார். பின்னர் ஊரைவிட்டு போக முடிவு செய்கின்றனர். அன்றிரவு ஆடு, மாடு கன்றுகளோடு, பாத்திர, பண்டங்களோடு, ஜக்கம்மாளுடன் அவரது குடும்பத்தினர் மேற்குத்தொடர்ச்சி மலையிலேறி அதன் பின்பக்கம் உள்ள லிங்கநாயக்கன்பட்டி மலைப்பகுதிக்கு சென்றனர். அப்போது இவர்கள் தங்கிய இடத்தில் கடுமையாக மழை பெய்தது. இதனால் இவர்கள் இருப்பிடம் இல்லாமல் அவதிப்பட்டனர். பாறையின் அருகே ஜக்கம்மாவும், அவளது அண்ணன்,
அண்ணியுடன் ஒதுங்கி நின்றனர்.

அப்போது ஜக்கம்மாளின் அண்ணன் மனைவி, ‘‘நல்லா வாழ்ந்த குடும்பம் இவளால்தான் இன்னைக்கு தெருவும் திண்ணையுமா நிக்குது. சாய்ந்திரம் நேரம் என்னைப்பாரு, என் அழகைப்பாருன்னு மினிக்கிக்கிட்டு யாரு போய் இவள தெரு முற்றத்துல நிக்கச் சொன்னது’’ என்று புலம்பினாள். இதைக்கேட்டு மனம் உடைந்த ஜக்கம்மா, ஆறுதல் தேடி சற்று தொலைவில் ஆலமரத்தின் அடியில் ஒதுங்கி நின்ற தாய், தந்தையிடம் சென்றாள். தாயின் மடியில் தலைவைத்து படுத்தது போல் பாவனை செய்த ஜக்கம்மா கனத்த இதயத்தோடு குமரி அவள் குமறிக்கொண்டிருந்தாள். திடீரென வேகமாக எழுந்தாள். என்னம்மா என்ற தாயிடம், இப்ப வாரேன் என்ற கூறிவிட்டு, யாருக்கும் தெரியாமல் மீண்டும் வந்த வழியே மலையேறி, மலை உச்சியில் அமர்ந்து வையாபுரி கிராமத்தை பார்த்து அழுதுகொண்டிருந்தாள். அன்று மாட்டுப்பொங்கல். இன்று ஊரிலிருந்தால் எப்படி இருந்திருக்கும் எங்கள் குடும்பம். என்று நினைத்தவள், பழைய நினைவுகள், சிறுவர்களோடு ஓடி, ஆடி விளையாடியது, மாடு, கன்றுகளை தந்தையோடு சேர்ந்து கம்மாக்கரையில் குளிப்பாட்டியது என எல்லா நிகழ்வுகளையும் அசைபோட்டு ஓ, வென கதறி அழுதாள். தங்கள் குல தெய்வமும், சக்தியின் அம்சமுமான அந்த அம்மனை மனதில் நினைத்து மனமுருக வேண்டிய ஜக்கம்மா. நமது குடும்பம் கெட்டதற்கு ஜமீன்தான் காரணம். குதிரை இருப்பதனால்தானே, குதிரையில் வந்து என்னைப்பார்த்து எனது குடும்பத்தையே அழித்து விட்டனர் என கோபம் தலைக்கேறிய நிலையில், வெத்தலையை போட்டு பாறையில் காரி உமிழ்ந்து, இந்த பகுதியில் இனி எள்ளு விளைஞ்சாலும் கொள்ளு விளையக்கூடாது.

குதிரைக்கு பட்டம் சூட்ட ராஜா இருக்கக்கூடாது. ராஜா பட்டம் சூட்டிய குதிரை இருக்கக்கூடாது. என்று கூறியபடியே மலை உச்சியிலிருந்து குதித்தாள். உயிரற்று உடல் பாறையில் உருண்டு உருண்டு மலையடிவாரம் வந்து சேர்ந்தது. அவரது உடலை எரியூட்டுவதற்காக குடும்பத்தினரும், உறவினர்களும் தூக்கிக்கொண்டு வந்தனர். வரும் வழியில் அம்மமுத்தன்பட்டியில் உள்ள பாறைக்கல்லில் இறக்கி வைத்து, மீண்டும் தூக்கி வந்து இப்போதுள்ள ஜக்கம்மாள் கோயில் இருக்கும் இடத்தில் எரியூட்டினார்கள். வேதனையில் இறந்த ஜக்கம்மாளின் சேலை மட்டும் தீயில்
கருகவில்லை.

ஜக்கம்மா இறந்த எட்டாவது நாள் வையாபுரி கிராமத்தில் உள்ள சிறுமி அருள் வந்து ஆடினாள். ‘‘நான், ஜக்கம்மா வந்திருக்கேன். எனக்கு துணி, மணிகளும், வளையலும், சாந்தும் எடுத்து வச்சு பூஜை பண்ணி வணங்கி வாங்க, உங்கள காப்பாத்தி கரை சேர்ப்பேன். நான் இ்ப்படி நடக்குமுன்னு தெரியாம ஜமீன்தார் வரும்போது அந்தி சாயும் போது சந்தி முத்தத்தில நின்னதுனால என் குடும்பமே தெருவுல நின்னுச்சு. அதனால, இனி, யாருக்கும் அந்த நிலைமை வரக்கூடாது. உங்க வாழ்க்கையில பின்னாடி என்ன நடக்கும். எப்படி முன்னாடி யோசிச்சு நடக்கணும் முன்னு என்னை நம்பி வணங்குவோர் நாக்குல வந்து வாக்கு சொல்லுவேன். என பேர சொல்லி, அடுத்தவங்களுக்கு வாக்குச்சொல்ல முன் வந்தா, அவங்க நாக்குலயும் நான் வந்தமர்ந்து குறிப்பறிந்து வாக்குசொல்ல வைப்பேன் என்றாள் ஜக்கம்மாள்.

ஜக்கம்மாளின் சாபத்தால்தான் இந்த பகுதியில் இதுநாள் வரை கொள்ளு பயறு விளைந்ததில்லை. அப்பகுதியை பூர்வாங்கமாக கொண்ட விவசாயிகளும் அதை விளைவிப்பதில்லை. அவர்களை வாழ வைக்கும் ஜக்கம்மாளை தெய்வமாக வணங்கி வருகின்றனர்.‘‘ஜக்கம்மாள் இறந்த தமிழ் மாதமான தை 2ம் தேதி ஒவ்வொரு வருடமும் ஆண்கள் எல்லோரும் மல்லு வேட்டி, காதோலை கருகுமணி, பழம் தேங்காய் கொண்டு வந்து ஜக்கம்மாளுக்கும் படைத்து வழிபடுகின்றனர். அங்கு பூசாரி பக்தர்கள் கொண்டு வந்த மல்லுவேட்டியை கிழித்து கொடுப்பார். அதனை எடுத்து வந்து ஊரில் உள்ள
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கொம்பில் கட்டி ஜல்லிக்கட்டில் விடுவார்கள். அப்போது காளையை அடக்கி கொம்பில் உள்ள ஜக்கம்மாள் துணியை எடுப்பவனே வீரனாக இப்பகுதி பெண்கள் ஏற்றுக்கொள்கின்றனர். மேலும் ஊர் முழுவதும் வரிபோட்டு ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 3வது புதன்கிழமை ஜக்கம்மாளுக்கு படையல் செய்து பூஜிக்கின்றனர்.

‘‘ஜக்கம்மாள் எரிக்கப்பட்ட இடம் சுடுகாடுக்கு சமம் என்பதனாலும், அண்ணன் மனைவியின் கொடுமையினால் இறந்ததனாலும் பெண்கள் யாரும் ஜக்கம்மாள் கோயிலுக்கு செல்வதில்லை என
கூறப்படுகிறது. பின் நடப்பதை முன்னே சொல்பவள் ஜக்கம்மா மிக சக்தி வாய்ந்த தெய்வம் என்ற நம்பிக்கை ஜோதிட நம்பிக்கையுடைய பலருக்கும் உண்டு. குடுகுடுப்பை, கைரேகை ஜோதிடம்,
மாந்திரிகம், கோடாங்கி பார்த்தல் போன்ற வேலைகள் ஜக்கம்மா பெயரைச் சொல்லித்தான் தொடங்கப்படுகிறது. வீரபாண்டிய கட்டபொம்மனும் ராஜகம்பளம் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இவரின் குல தெய்வமாக ஜக்கம்மாவே இருந்துள்ளார்.
படங்கள்: சிவ. ராமமூர்த்தி

சு.இளம் கலைமாறன்

Tags : Jakkamma ,Kattabomman ,
× RELATED வீரபாண்டிய கட்டபொம்மன் முன்னேற்ற இயக்கம் திமுகவுக்கு ஆதரவு