×

குடிநீர் அல்லாத உபயோகங்களுக்கு கோவை குளங்களில் இருந்து தண்ணீர் பயன்படுத்த திட்டம்

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 9க்கும் மேற்பட்ட குளங்கள்  உள்ளன. இந்த குளங்களில் உள்ள தண்ணீரை சுத்திகரிப்பு செய்து 2026ம்  ஆண்டுக்குள் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் அல்லாத  உபயோகங்களுக்கு தேவைப்படும் தண்ணீரில் 50 சதவீதம் பயன்படுத்த  திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளும்  ஐந்து மண்டலங்களும் உள்ளன. கோவை மாநகராட்சியில் சுமார் 18 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய தெருக்கள் உள்ளன. இதில் 30 லட்சத்திற்கும்  மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதுதவிர தென் இந்தியாவின்  மான்செஸ்டர் என அழைக்கக்கூடிய கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து  50 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில்  நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், பவர்லூம், வெட்  கிரைண்டர்ஸ், பம்புகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் என சுமார் 60 சதவீதம்  தொழிற்சாலைகள் கிராமப்புறங்களிலும், 40 சதவீதம் தொழிற்சாலைகள்  நகர்புறங்களிலும் செயல்படுகின்றன.இதில், கிராமப்புறங்களை சுற்றி சுமார்  325 பெரிய தொழில்நிறுவனங்களும், மாநகராட்சி பகுதிகளை சுற்றி சுமார் 100  பெரிய தொழில் நிறுவனங்களும் உள்ளன. கோவையில் உள்ள இத்தொழில் நிறுவனங்களில்  சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கோவையில் சிறு  குறுந்தொழில் முனைவோர்கள் மட்டும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை  உள்ளனர். அவர்களது தொழில் நிறுவனங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான  தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100  வார்டு பகுதிகளில் நாளொன்றுக்கு 265.70 எம்எல்டி குடிநீர் தேவைப்படுகிறது.  மாநகராட்சி பகுதிக்கு பில்லூர், பவானி மற்றும் ஆழியாறு திட்டங்களிலிருந்து  தற்போது 181.00 எம்எல்டி குடிநீர் பெறப்பட்டு விநியோகம் நடைபெற்று  வருகிறது. சிறுவாணி அணையில் இருந்து 101 எம்எல்டி குடிநீர் விநியோகம்  செய்யப்பட்டு வருகிறது. இத்துடன் மாநகராட்சி பகுதியில் தற்போதுள்ள 2,042  ஆழ்குழாய் கிணற்றில் இருந்து குடிநீர் அல்லாத உபயோகங்களுக்கும் கிணற்று  நீர் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர 200 புதிய ஆழ்குழாய் கிணறுகள்  அமைக்கப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  சிங்காநல்லூர் குளம், குறிச்சி குளம், நரசாம்பதி, கொலராம்பதி, வாலாங்குளம்,  கிருஷ்ணாம்பதி மற்றும் செல்வாம்பதி குளம், முத்தண்ணன் குளம், செல்வ  சிந்தாமணி குளம், பெரியகுளம் ஆகிய குளங்கள் உள்ளன. கோவை மாநகராட்சியில்  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்ட  உக்கம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், வாலாங்குளத்தின் ஒரு பகுதி,  புனரமைக்கப்பட்டு வரும் குமாரசாமி மற்றும் செல்வம்பதி குளத்தின் ஒரு பகுதி  ஆகியவற்றை மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள்  பயன்பாட்டிற்காக திறந்து வைத்தது. இதில் உக்கடம் பெரிய குளத்தின் கரையின்  மீது நடைபயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, இருக்கைகள், நிழற்குடைகள்  அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திறந்தவெளி அரங்கம், விளையாட்டுத் திடல்,  உணவுக்கூடங்கள், படகுத்துறை, மிதவை உணவகம், குளத்திற்கு வரும் கழிவுநீரை  சுத்தம் செய்ய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என பல்வேறு சிறப்பு  அம்சங்கள் ரூ.62.17 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. செல்வசிந்தாமணி  குளம் ரூ.31.47 கோடி மதிப்பீட்டிலும், வாலாங்குளம் குறுக்கே உள்ள சாலை  பகுதி ரூ.24.31 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது.  வாலாங்குளத்தின் கரையானது ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து  மேம்படுத்தப்பட்டுள்ளது. செல்வம்பதி மற்றும் குமாரசாமி குளங்கள் ரூ.31.25  கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. இக்குளங்களில்  பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் 2026ம்  ஆண்டுக்குள் மாநகராட்சி பகுதிகளில் 50 சதவீதம் தண்ணீர் குடிநீர் அல்லாத  உபயோகங்களுக்கு கோவை குளங்களில் இருந்து தண்ணீர் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து  மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவை மாநகராட்சியில் நாளுக்கு நாள்  மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. தொழில் நிமித்தமாக பல்வேறு  மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து கோவை மாநகர் பகுதிகளில்  குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவை மாநகரின் குடிநீர்  தேவைக்களுக்காக ஏற்கனவே உள்ள திட்டங்களுடன் பில்லூர் 3வது குடிநீர் திட்டம்  இணைக்கப்பட்டுள்ளது. பில்லூர் 3வது குடிநீர் திட்டம் நடைமுறைக்கு வரும்போது குடிநீர் தேவைகள் முழுவதுமாக கோடை காலங்களிலும் கூட பூர்த்தி  செய்யப்படும். அதே போல் குடிநீர் அல்லாத பிற உபயோகங்களுக்கு மாநகர்  பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில்  நீர்நிலைகளில் இருந்து குடிநீர் அல்லாத பிற உபயோகங்களுக்கு தண்ணீர் எடுக்க  திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சிக்குட்பட்ட குளங்களில்  சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்  இதற்கான திட்டம் உள்ளது. 2026ம் ஆண்டுக்குள் குளங்களில் இருந்து  சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குடிநீர் அல்லாத பிற உபயோகங்களுக்கு மாநகர்  பகுதிகளில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….

The post குடிநீர் அல்லாத உபயோகங்களுக்கு கோவை குளங்களில் இருந்து தண்ணீர் பயன்படுத்த திட்டம் appeared first on Dinakaran.

Tags : Coda ,Govai ,Govai Corporation ,Dinakaran ,
× RELATED முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு...