×

சிம்பொனி மூலம் சாதனை படைத்த இளையராஜா: மொசார்ட், ஹெய்டன், பீத்தோவன் வரிசையில் இணைந்த முதல் இந்தியர்

லண்டன்: தமிழ் திரையுலகின் முன்னணி இசை அமைப்பாளர் இளையராஜா (81), ‘வேலியண்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ள சிம்பொனி இசையை, நேற்று லண்டனிலுள்ள அப்பல்லோ அரங்கில், உலகப் புகழ்பெற்ற ராயல் பிலார்மோனிக் குழுவுடன் இணைந்து அரங்கேற்றினார். இதன்மூலம் மேற்கத்திய இசையின் மும்மூர்த்திகளாக கொண்டாடப்படும் மொசார்ட், ஹெய்டன், பீத்தோவன் ஆகியோர் வரிசையில் இணைந்துள்ள முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார்.

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சிம்பொனி இசையை படைக்கக்கூடிய ஆற்றல், ஆசிய கண்டத்தில் பிறந்து வளர்ந்த இசைக்கலைஞர்களுக்கு இல்லை என்ற விமர்சனம் பல வருடங்களாக இருந்து வந்தது. அதை உடைக்க வேண்டும் என்பது இளையராஜாவின் நீண்ட நாள் கனவு. அதற்கு உயிர் தரும் வகையில், திரைப்பட இசையின் பாதிப்பின்றி, 35 நாட்களில் சிம்பொனி இசையை எழுதி முடித்திருப்பதாக கடந்த ஆண்டு அவர் அறிவித்தபோதே ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட தொடங்கிவிட்டது.

இந்நிலையில், இளையராஜாவின் மேற்கத்திய இசை யில் மட்டுமே உருவான ‘வேலியண்ட்’ என்ற பாரம்பரிய சிம்பொனி இசை நிகழ்ச்சி, இந்திய நேரப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு அரங்கேற்றப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த பிறகு உணர்ச்சிப்பெருக்குடன் பேசிய இளையராஜா, ‘சிம்பொனி அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அதை அனுபவித்தால்தான் புரியும். அதை நீங்கள் இன்று அனுபவித்திருக்கிறீர்கள்’ என்றார். அப்போது ரசிகர்கள் எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

Tags : Ilayaraja ,Mozart ,Hayden ,Beethoven ,London ,Apollo Arena ,Royal Philharmonic Orchestra ,
× RELATED மேடையில் இளையராஜா பாடலை பாடிய சிவராஜ்குமார்..!