×

தீமைப்பிணி தீர உவந்த குருநாதா

அருணகிரிநாதரின் ‘‘கும்பகோண மொடாரூர்’’ எனத் துவங்கும் க்ஷேத்ரக் கோவைப் பாடலில், திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக குறிப்பிட்டிருக்கும் தலம் ‘‘திரு ஏடகம்’! மதுரையிலிருந்து  NH - 85 மேலக்கல் சாலையில் இருபது கி.மீ. பயணித்து, வைகை வடகரையிலுள்ள இத்தலத்தை அடையலாம். இறைவன் திரு ஏடகநாதர்; இறைவி ஏலவார் குழலி. ஞான சம்பந்தப் பெருமான், வைகையில் சமணர்களை எதிர்த்துப் புனல்வாதம் செய்து வெற்றி பெற்ற திருத்தலம்.

மதுரையில் பல திருப்புகழ்ப் பாக்களைப் பாடியுள்ள அருணகிரிநாதர் இத்தலத்திற்கும் வந்து பாடி அப்பாடல்கள் நமக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம். ‘புகலியில் வித்தகர் போல அமிர்தகவித் தொடை பாட’ முருகன் அருளை வேண்டியவராயிற்றே அவர்!
ஏடகநாதர் கோயிலில் அம்பிகைக்கும் ஈசனுக்கும் தனித்தனி கோபுரங்களுடன் கூடிய சந்நதிகள் உள்ளன. பாலகணபதி, தட்சிணா மூர்த்தி, ஆறுமுகன், சோமாஸ்கந்தர் ஆகியோரின் தனிச் சந்நதிகள் தெற்கைப் பார்த்து ஒன்றும், வடக்கைப் பார்த்து ஒன்றுமாக உள்ள துர்கையின் இரு திருவுருவுங்கள் ஆகியவற்றைக் காணலாம்.

அருணகிரியார் சம்பந்தப் பெருமானை முருகனாகவே பாவித்துத் தான் தன் குறிப்புகளைத் திருப்புகழிலும் கந்தர் அந்நாதியிலும் பாடியுள்ளார். ‘‘முன்பின் தென்னவன் அங்கம் நன்னீற்றால் திருத்தியதென்ன’’, என்று பாடுகிறார் அந்தாதியில் ‘‘தன் உண்மை அடியார்களுக்கு நல்ல நெறியாகத் தேவாரப் பதிகங்களை அருளியவரும், விபூதியின் மகிமையை உணராத வருமான சமணர்களைக் கழுவேறும்படி வாதில் ஜெயித்தவருமான முருகனைத் தவிர வேறு பிரத்யக்ஷ தெய்வங்கள் இல்லை என்று பாடியுள்ளார். பாண்டிய மன்னனின் வெப்பு நோயைத் திருநீறு பூசிக் குணமாக்கினார் சம்பந்தப் பெருமான்.
    
‘‘பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப்
பொறியிலச் சமணரத் ...... தனைபேரும்
பொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப்
புகலியிற் கவுணியப் ...... புலவோனே’’
- என்று பாடுகிறார் அருணகிரிநாதர். ‘சிவமணப் பொடி’ என்கிறார் திருநீற்றை !

சமணர்கள் கையிலிருந்து மயிற்பீலி, குண்டிகை நீர், அசோகந்தளிர் இவை யாவும் பாண்டியனுக்கு உற்ற சுரத்தின் வெப்பத்தால் வெந்து போயின.
 ‘‘பிண்டியும் தண்டும் பாயும் பீலியுங் குடையும் வெந்து
கையில் குண்டிகை நீரும் நின்று கொதித்திடக் கண்டார் குண்டர்’’
திருவாலவாயுடையார் புராணம்.

‘‘தீரத்திரு  நீறு  புரிந்து  மீனக் கொடியோனுடல் துன்று
தீமைப்பிணி தீர உவந்த குருநாதா’’
என்பது சீகாழித்  திருப்புகழ்.

தோல்வியை ஒத்துக் கொள்ளாத சமணர்கள் சம்பந்தப் பெருமானை ‘அனல் வாதம் செய்ய அழைத்தனர். அரசன் முன்னிலையில் தீ மூட்டப்பட்டது. தம் பதிசுங்கள் அடங்கிய சுவடிகளில் கயிறு சாத்திப் பார்த்தபோது, ‘போகமார்த்த பூண்முலையாள்’ என்று தொடங்கும் பதிகம் வந்தது. ‘தளிரிள வளரொளி’ எனத் துவங்கும் பதிகத்தையும் பாடி, சிவனாரை மனத்தில் துதித்து நள்ளாற்றுப் பதிகத்தை கொழுந்து விட்டெரிந்த தீக்குண்டத்தில் இட்டார். அது தீயில வேகாது நின்றது. எனவே ‘பச்சைப் பதிகம்’ எனப்பட்டது. அருணகிரியாரும் திருநள்ளாற்றுத் திருப்புகழைப் ‘பச்சையொண்’ என்றே துவங்கியுள்ளார்.

வயலூர்  பாடலில் அனல்வாதம் பற்றிய  குறிப்பு முருகனே
ஞான சம்பந்தன் எனும் கருத்து பற்றிய  குறிப்பும் வருகிறது.
‘‘புத்த ரமணர்கள் மிகவே கெடவே
தெற்கு நரபதி திருநீ றிடவே
புக்க அனல்வய மிகஏ டுயவே ......
உமையாள்தன்’’

புத்ர னெனஇசை பகர்நூல் மறைநூல்
கற்ற தவமுனி பிரமா புரம்வாழ்
பொற்ப கவுணியர் பெருமா னுருவாய் ...... வருவோனே ’’
- என்கிறார்.
‘‘சமணர்கள்  மிகவும் அழிவுற, பாண்டிய  அரசன்  திருநீறு  இட, அனலில்  இடப்பட்ட ஏடு எரிபடாது பச்சையாய், ஊறு இலாது விளங்கியது.
உமைமைந்தன் என்று சொல்லும்படி, இசைத் தமிழால் சொல்லப்பட்ட வேதம் அனைய தேவார பெயருள்ள சீகாழியில் வாழ்ந்த அழகனே! கவுணியர் குலத்துப் பெருமான் என்னும் திருவுருவுடன்
வந்தவனே’’ என்று பாடியுள்ளார்.

‘‘எரியிடில் இவை பகுதிலை  மெய்ம்மைேய’’ என்று பாடி நெருப்பிலிட்ட பதிகம் வேகாது இருந்த போதும் கூட சமணர்கள் தோல்வியை ஒத்துக் கொள்ளாமல், சம்பந்தப் பெருமானை புனல் வாதம் செய்ய அழைத்தனர்.

பாண்டியன் ஞானசம்பந்தரையும், சமணர்களையும் நோக்கி, ‘அவரவர் தம் சமயக் கருத்துக்களை எழுதி ஏடுகளை வைகை ஆற்றில் விடுங்கள்’ என்றான். சம்பந்தப் பெருமான் ‘வாழ்க அந்தணர்’ எனத் துவங்கும் பதிகத்தைப்பாடி ஆற்றில் இட அது நீரின் வேகத்தை எதிர்த்துச் சென்றது.

‘‘திருவுடைப் பிள்ளையார்  தம்
திருக்கையால் இட்ட  ஏடு
மருவுறும்  பிறவி  ஆற்றில்
மாதவர் மனம் சென்றாற்போல்
பொரு  புனல்  வைகை  ஆற்றில்
எதிர்ந்து நீர் கிழித்துப் போகும்
இரு  நிலத்தோர்  கட்கு  எல்லாம்
இது  பொருள்  என்று காட்டி . . . ’’
என்பது பெரிய புராணக் குறிப்பு.
ஏடு எதிரேற விட்டது பற்றிப் பல பாடல்களில் அருணகிரியார் பாடுகிறார்.

‘‘சீட்டை யெழுதிவை யாற்றி லெதிருற
ஓட்டி யழல்பசை காட்டி சமணரை
சீற்ற மொடுகழு வேற்ற அருளிய ......
குருநாதா!’’
[ தீர்த்தமலை]
பீலி வெந்துய ராலி வெந்தவ
சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
பீதி கொண்டிட வாது கொண்டரு ......
ளெழுதேடு
பேணி யங்கெதி ராறு சென்றிட
மாற னும்பிணி தீர வஞ்சகர்
பீறு வெங்கழு வேற வென்றிடு ......
முருகோனே
[ பழநி]

‘மயில் பீலியும் வெந்து, உயர்ந்துள்ள குண்டிகை நீரும் வெந்து கொதித்து, அசோகந்தளிர்களும் வெந்தன். இவ்வவமானத்தால் சமணர்கள் ஊமைகளாய், நெஞ்சிலே பயம் கொள்ளுமாறு வாது செய்து, இறைவன் திருவருளால், பாசுரம் எழுதிய ஏடு யாவரும் மகிழும்படி வைகை ஆற்றை எதிர்த்துச் சென்றது. இதனால் பாண்டியன் தன் கூன் மறைந்து குணம் பெறவும், சமணர்கள் உடலைக் கிழிக்கின்ற கொடிய மரத்தில் ஏறவும் வெற்றி கொண்ட முருகனே’ என்கிறார்.

திருக்குட வாயில் திருப்புகழில், சமணர்கள் வசப்பட்டிருந்த மன்னனோடு மக்களையும் திருந்தச் செய்து, மீண்டும் வைசம் மதுரையில் தழைக்கும்படிச் செய்த சம்பந்தப் பெருமானைப் போற்றுகிறார்.

‘‘கருது மாறிரு தோள்மயில் வேலிவை
கருதொ ணாவகை யோரர சாய்வரு
கவுணி யோர்குல வேதிய னாயுமை ......
கனபாரக்
களப பூண்முலை யூறிய பாலுணு
மதலை யாய்மிகு பாடலின் மீறிய
கவிஞ னாய்விளை யாடிடம் வாதிகள் ...... கழுவேறக்’’

அனைவராலும் துதிக்கப்படும் பன்னிரு தோள்கள், மயில், வேல் இவற்றை மறைத்து காழிப்பதி அரசாக, கவுணிய குலத்தினருள் சிறந்து வேதியனாக வந்தான். உமாதேவியின் பாலை உண்டு, மிக்க பாடல்கள்  பாடுவதில் எவரினும் மேம்பட்ட கவிஞனாய், திருவிளையாடல்கள் செய்து சமணர்கள் கழுவேறக் காரணமாயினான்.

‘‘குருதி யாறெழ வீதியெ லாமலர்
நிறைவ தாய்விட நீறிட வேசெய்து
 கொடிய மாறன்மெய் கூனிமி ராமுனை ...... குலையாவான்
குடிபு கீரென மாமது ராபுரி
யியலை யாரண வூரென நேர்செய்து
குடசை மாநகர் வாழ்வுற மேவிய ......
பெருமாளே’’.

சமணர்கள் ரத்தம் ஆறாகப் பெருகவும் வீதிகளிலெல்லாம் பூமாரி பொழியவும், திருநீற்றை யாவரும் இடும்படிச் செய்து அறநெறியிலிருந்தும் சைவ நெறியிலிருந்தும் வழுவிழந்த பாண்டியனுடைய கூன் பட்ட உடல் நிமிர்ந்து விளங்கவும், சமண் பகையை ஒழித்தான்.பொன்னுலகில் குடி புகுவீர்களாக எனச் சிறந்து மதுரையின் முன்பு சமண் ஆளுகைக்கு உட்பட்டிருந்த நிலையை மாற்றி, ஊரைச் செம்மையான நெறியில் சேர்ப்பித்தான சம்பந்தராக வந்த முருகப் பெருமான்.    

புனல் வாதத்தில்,வேந்தனும் ஓங்கும்’ என்று சம்பந்தப் பெருமான் பாடிய போது தான் பாண்டியனின் கூன் நிமிர்ந்தது. கூன் பாண்டியன் எனும் பெயர் மறைந்து நின்ற சீர் நெடுமாறன் என்று பெயர் பெற்றான். அவனது மந்திரி குலச்சிறையார் ஏடு போகும் திசையில், காற்றினும் வேகமாகச் செல்லும் குதிரையில் ஏறிச் சென்றார். சம்பந்தப் பெருமான் ‘வன்னியு மத்தமும்’ என்று துவங்கிப் பதிகம்பாட, நீரை எதிர்த்துச் சென்ற ஒரு ஏடு கரை ஒதுங்கியது.
அவ்விடமே திருஏடகம் என்று அழைக்கப்படுகிறது.

விநாயகர், பெரிய மீன்வளை நாலாபுறமும் மிதக்கச் செய்து ஏட்டின் ஓட்டத்தை நிறுத்தினார் என்றும் அவரே ‘வாதில் வென்ற விநாயகர் என்ற பெயரில் கோயிலின் வெளியில் தனிச் சந்நதியில் உள்ளார் என்றும் கூறுவர்.குலச்சிறையார் திருஏடகத்திலிருந்து ஏட்டினைத் தலைமிசை வைத்து மகிழ்ந்த வண்ணம் கொண்டு வந்தார் என்பதை அழகாகப் பாடுகிறார் சேக்கிழார்.

‘‘தலைமிசை வைத்துக் கொண்டு
தாங்கரும் மகிழ்ச்சி பொங்க
அலைபுனற் கரையில் ஏறி
அங்கினி தமர்ந்த மேருச்
சிலையுடை யவர்தாள் போற்றி
மீண்டுசென் றணைவார் தெய்வ
மலைமகள் குழைத்த ஞானம்
உண்டவர் தம்பால் வந்தார்’’
‘‘எடுத்த ஏட்டினைத் தம் தலைமேல் வைத்து ஏற்றுக்கொண்டு பெருமகிழ்ச்சியுடன் கரை ஏறினார். அங்கு குடி கொண்டிருந்த சிவபெருமானை (மேருவை வில்லாக வளைத்தனர்) வணங்கி மீண்டு சென்று மதுரையை அடைந்தார். உமை எனும் மலைமகள் அன்புடன் ஊட்டிய ஞானப்பாலை உண்ட ஆளுடைப் பிள்ளையாரிடம் வந்தார்.

புனல் வாதத்திலும் இவ்வாறு தோற்றுப்போன சமணரை, முன்பு  அவர்களே கூறியிருந்தபடிக் கழுவிய ஏறுமாறு ஆணையிட்டான் அரசன். சைவ அடியார்கள்  மதுரை எல்லையில் தங்கியிருந்த மடத்திற்குத் தீ  வைத்த ஒரே காரணத்தினால் சம்பந்தப் பெருமானும் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது உண்மை.

‘‘பால றாத்திரு வாயா லோதிய
ஏடு நீர்க்கெதிர் போயே வாதுசெய்
பாடல் தோற்றிரு நாலா மாயிர ......
சமண்மூடர்
பாரின் மேற்கழு மீதே யேறிட
நீறி டாத்தமிழ் நாடீ டேறிட
பாது காத்தரு ளாலே கூனிமி ......
ரிறையோனும்
ஞால மேத்திய தோர்மா தேவியும்
ஆல வாய்ப்பதி வாழ்வா மாறெணு
ஞான பாக்கிய பாலா வேலவ ...... மயில்வீரா!’’
[ இரு நாலாம் ஆயிர சமண் மூடர் = சமணர்கள் எண்ணாயிரம் பேர்]
இப்பாட்டில், ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து, சைவம் மீண்டும் தழைக்க மூலக்காரண கர்த்தாவாக விளங்கிய அரசி மங்கையர்க்கரசியை ‘‘ஞாலம் ஏத்திய தோர் மாதேவி’’ என்று குறிப்பிடுகிறார்.

[ உலகெலாம் போற்ற நின்ற ஒப்பற்ற மாதேவி
பாண்டியனின் மனைவி மங்கையர்க்கரசியார்]
சைவம் தழைத்தோங்கும்படிச் செய்த திருஏடகநாதரையும் , ஏலவார்குழலி அம்மையாரையும் வாதில் வென்ற விநாயகரையும் வணங்குவோம்.

(உலா தொடரும்)

சித்ரா மூர்த்தி

Tags : Evil Coast Guard ,Kurunatha ,
× RELATED கனகசபை மேவும் எனது குருநாதா