×

பவானிசாகர் அருகே பரபரப்பு: நாயை வேட்டையாடிய சிறுத்தை, உடலை மரத்தில் வைத்துவிட்டு சென்றதால் அச்சம்

சத்தியமங்கலம்:  பவானிசாகர் அருகே நாயை வேட்டையாடிய சிறுத்தை பாதி தின்று  விட்டு பாதி  உடலை மரத்தின் மீது வைத்து விட்டு சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை  அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான சிறுத்தைகள் வசிக்கின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியைவிட்டு வெளியேறும் சிறுத்தைகள் கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு, காவல்நாய் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவது தொடர் கதையாக உள்ளது. பவானிசாகர் அருகே உள்ள புதுப்பீர்கடவு கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (46). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் 3 பசு மாடுகள், 20 வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தனது தோட்டத்தில் கால்நடைகளை கட்டி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை காவல் நாய் காணாமல் போனதை அறிந்து நாயை தேடியுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள புங்க மரத்தின் கிளையில் நாயின் பாதி உடல் காயங்களுடன் கிடந்ததை கண்டு விவசாயி சிவக்குமார் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது சிறுத்தை நடமாடியதும் சிறுத்தை காவல் நாயை வேட்டையாடி உடலை தூக்கிச் சென்று மரத்தின் மீது வைத்து பாதி உடலை தின்றுவிட்டு மீதி உடலை விட்டு  சென்றதும் தெரிய வந்தது. இது குறித்த தகவல் அறிந்த அப்பகுதி விவசாயிகள் பெரும் பீதியும் அச்சமும் அடைந்தனர். ஏற்கனவே இவரது தோட்டத்தின் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வனத்துறையினர் வைத்த கூண்டில் ஒரு சிறுத்தை சிக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் சிறுத்தை நடமாடியதால் வனத்துறையினர் கூண்டு வைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post பவானிசாகர் அருகே பரபரப்பு: நாயை வேட்டையாடிய சிறுத்தை, உடலை மரத்தில் வைத்துவிட்டு சென்றதால் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar ,Sathyamangalam ,Dinakaran ,
× RELATED தரமான விதை நெல் ரகங்கள் இருப்பு: விவசாயிகள் பயன்பெற அழைப்பு