தாய்லாந்து நாற்பெருங்குளம் சூழ நடுவண் அமைந்த சிவாலயம்

பல்வகை நீர்நிலைகளில் ஒன்றான குளம் என்பதனையும் மரங்களையும் கண் எனப் போற்றும் மரபு தமிழ்நாட்டில் மிகப் பழமையான காலந்தொட்டு தொடர்ந்து வந்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நாட்டு வேந்தர்கள் வெளியிட்ட அவர்தம் காசுகளில் நிச்சயமாக மீன்களோடும் ஆமைகளோடும் திகழும் குளங்களையும், அவரவர்க்குரிய வேலியிட்ட மரத்தினையும் காணலாம்.

சேரர், சோழர், பாண்டியர் காசுகளில் நிச்சயம் ஒரு பக்கத்தில் மன்னர்தம் காவற்குளமும், அவர்தம் மரமும் இடம்பெற்றிருக்கும். ஒரு மன்னவனின் தலையாய கடமைகளில் ஒன்றாகக் காவல் குளத்தினையும், மரத்தினையும் காப்பது என்பது பண்டு கருதப் பெற்றது. எதிரி மன்னனால் ஒரு காவல்குளமும் காவல்மரமும் அழிக்கப்படுமாயின் அதுவே அம்மன்னவனின் பெருந்தோல்வியாகக் கருதப்பெற்றது. இம்மரபு காரணமாகவே பேரரசர்கள் பின்னாளில் எடுத்த கோயில்களில் தீர்த்தக் குளமும், தலமரமும் அங்கு இடம்பெறுமாறு செய்து அவற்றைத் தெய்வத்தன்மைக்குரியவைகளாகப் போற்றிக் காப்பாற்றினர்.

தமிழ்நாட்டில் திருப்புகலூர், ஆலங்குடி, நண்டாங்கோயில் எனப்பெறும் திருத்துதேவன்குடி, உடையார்கோயில், தஞ்சைத் தளிக்குளத்து மகாதேவர் கோயில் போன்றவை நீர் அகழிசூழ நடுவண் அமைந்த கோயில்களாகப் பண்டு திகழ்ந்தன. திருவானைக்கா, தில்லைப் பெருங்கோயில், மதுரை சொக்கேசர் ஆலயம் போன்ற பல நூற்றுக்கணக்கான சிவாலயங்களின் வளாகத்திற்குள்ளேயே திருக்குளங்கள் அமைந்துள்ளன. மிக அரிதாக திருவெண்காடு சிவாலயத்தின் வளாகத்தினுள் ஒரே அளவுடையவைகளாக மூன்று திருக்குளங்கள் அமைந்துள்ளன.

அவற்றை ‘‘வெண்காட்டு முக்குளம்” என்பர். திருஞானசம்பந்தப்பெருமானார், அம்முக்குளத்தில் நீராடு

பவர்க்கு குழந்தைப்பேறு கிட்டுவதோடு, அனைத்து தீவினைகளும் அகலும் என்ற கருத்துடைய,

பேயடையா பிரிவு எய்தும், பிள்ளையினோடு உள்ள நினைவு

ஆயினவே வரம்பெறுவர் ஐயுறவு வேண்டா ஒன்றும்

வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்

தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே

-என்ற தேவாரப்பாடலோடு அமைந்த திருப்பதிகம் ஒன்றினை அங்கு

பாடியுள்ளார்.  

முக்குளத்தால் சிறப்புப்பெற்ற திருவெண்காடு போன்று நான்கு திருக்குளங்கள் ஒரு கோயில் வளாகத்தினுள் நான்கு புறமும் சூழ அமைந்திருக்க நடுவண் ஐந்து திருக்கோயில்களோடு அமைந்த சிவாலயம் ஒன்று சயாம் எனும் நாடாகிய தாய்லாந்து நாட்டில் உள்ளது அரிய அமைப்பாகும். சென்ற ‘ஆன்மிகம் பலன்’ இதழில் வாசகர்கள் தரிசித்த ஃபெனாம்ரங் எனும் கயிலாயநாதர் கோயில் திகழும் இடத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் பிரசாத் முவாங்தாம் எனும் இச்சிவாலயம் அமைந்துள்ளது. பூரிராம் மாகாணத்தில் பிரகான்சாய் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள இவ்வாலயம் கி.பி. 10 - 11ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில் கெமர் மரபு மன்னர்களால் எடுக்கப் பெற்றதாகும். ஹர்ஷவர்மன், இராஜேந்திரவர்மன், ஜெயவர்மன், சூர்யவர்மன் என்ற கெமர் அரசர்கள் வரிசையில் திகழ்ந்த ஒரு மன்னரால் இவ்வாலயம் தோற்றுவிக்கப் பெற்றதாகும்.

நாற்புறமும் மதில்சூழ கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய திசைகளில் நான்கு கோபுர வாயில்களோடு இவ்வாலயம் அமைந்துள்ளது. தமிழகத்துக் கோபுரங்கள் போன்று உயரமான மேற்கட்டுமானம் இல்லாமல் உயரம் குறைவுடைய இவ்வாயிலமைப்புகளின் பக்கவாட்டில் இருபுறம் இரு அறைகள் அமைந்துள்ளன. கோபுர வாயில்கள் வழி உள்ளே சென்று பார்க்கும்போது அவ்வளாகத்தின் நடுவே மீண்டும் நான்கு திசை கோபுர வாயில்களோடு திருச்சுற்று மாளிகை இணைந்த உள்கோயில் கட்டுமான அமைப்பு இடம் பெற்றுள்ளது.

 அவற்றுள் ஏதேனும் ஒரு வாயில் வழி உள்ளே சென்றால் மேற்குப் பகுதியில் நடுவாக சிவனார்க்குரிய பெரிய கருவறையும் அதன் பக்கவாட்டில் இரு கோயில்களும், பின்புறம் இரு கோயில்களும் என ஐந்து ஆலயங்கள் காணப்பெறுகின்றன. இவை செங்கல்லால் அமைந்த விமானங்களோடும், வாயிலின் நிலையும், உத்தரமும் கருங்கற்களால் அமைக்கப் பெற்றவைகளாகவும் திகழ்கின்றன. இவ்வைந்து கோயில்களுக்கும் உரிய அடித்தளம் (உபபீடம்) செம்பாறாங்கற்களால் கட்டப்பெற்றுள்ளன.

நடுவமைந்த மூலக்கோயிலின் கருவறை முற்றிலுமாக சிதைக்கப்பெற்றுள்ளது. எந்த ஒரு கருவறையிலும் தெய்வத் திருமேனிகள் காணப்பெறவில்லை. அவை அனைத்தும் பிற்காலத்தில் கொள்ளையர்களால் களவாடப்பெற்று கடத்திச் செல்லப்பட்டு விட்டன. இருப்பினும் நிலைப்படிகளின்

உத்திரக்கல்லின் முகப்பில் அந்தந்த கோயிலில் இடம்பெற்றிருந்த மூலதெய்வங்களின் உருவங்கள் மிக அழகுடைய தோரண வேலைப்பாடுகளுடன் காணப்பெறுகின்றன.

ஓர் உத்திர முகப்பில் இரு சிம்மங்கள் எழுந்து நின்று மேலுள்ள அலங்காரங்களைத் தாங்கி நிற்க நடுவே உள்ள யாளி முகம் தாங்கும் பீடத்தின் மேல் பெரிய காளை (இடபம்) நிற்க அதன் முதுகின் மேல் திரிசூலம் தாங்கியவராக சிவபெருமானும் அருகே அவரை அணைத்தவண்ணம் உமையம்மையும் அமர்ந்துள்ளனர். இரு கணங்கள் அக்காளையைப் பிடித்து நிற்கின்றனர். அழகிய வாத்துகள் மற்றும் நுட்பமிகு கலை வேலைப்பாடுகளுடன் வாயில் முகப்பு அமைந்துள்ளது.

இடபாரூடராக சிவபெருமான் காணப்பெறுவதுபோன்று ஒரு கோயிலின் வாயிலின் நிலை முகப்பில் மயில்மீது அமர்ந்த முருகப் பெருமானின் திருவுருவம் இடம் பெற்றுள்ளது. இதுபோன்றே மற்றொரு கோயிலின் நிலைமுகப்பில் கோவர்த்தனகிரியைத் தாங்கி நிற்கும் கண்ணபிரானின் திருவுருவம் அடியார்களுடன் காணப்பெறுகின்றது. இக்கோயில்கள் லிங்கப்பெருமான், திருமால், முருகன், துர்க்கை, இடபாரூடர் போன்ற தெய்வத்திருமேனிகளுக்காக எடுக்கப்பெற்றவையாகும்.

இவ்வைந்து கோயில்களுக்கும் முன்பாகவும், கிழக்குத் திருச்சுற்று வாயிலுக்கு எதிராகவும் நடுவண் அமைந்த பாதையின் இருபுறமும் இரண்டு நூலக கட்டடங்கள் உள்ளன. கெமர் மன்னர்கள் அமைத்த சயாம் மற்றும் காம்போஜ நாட்டுக் கோயில்கள் அனைத்திலும் இரண்டு இரண்டு

நூலகக் கட்டடங்கள் இருப்பதைக் காணலாம். பழங்காலத்தில் ஆன்மிகம் சார்ந்த நூல்கள் அவற்றில் சேகரிக்கப்பெற்று காக்கப் பெற்றன என்பதை அறிகிறோம். நம் தமிழகத்துக் கோயில்களிலும் நூலகங்கள் இருந்தன என்பதற்குத் தில்லைப்பெருங்கோயிலில் (சிதம்பரம் நடராஜர் கோயிலில்) உள்ள சோழர் மற்றும் பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுக்கள் சான்று பகர்கின்றன.

திருமாளிகைப்பத்தி என அழைக்கப்பெறும் முதல் பிராகாரத்தில் அமைந்த திருச்சுற்று மாளிகை வளைவு ஒட்டுக்கூரையுடனும், பக்கவாட்டுச் சுவர்களில் பலகணிகளுடனும் திகழ்கின்றது. வௌவால்நெற்றி மண்டபம் என நம் தமிழ்நாட்டுக் கோயில்களில் திகழும் வளைவு ஒட்டுக்கூரை அமைப்பை அங்கு கருங்கல்கொண்டே அமைத்துள்ளனர். பலகணிகளில் (ஜன்னல்களில்) கடைசல் பிடித்தது போன்ற கம்பி போன்ற அமைப்பு அற்புதமாக விளங்குகின்றன. இடிபாடுற்ற கருவறைகளின்மேல் இருந்த கல்லாலான கலசம் ஒன்று தரையில் உள்ளது. அதன் கலை வேலைப்பாடு அற்புதமானதாகும்.

ஐந்து கோயில்கள், இரண்டு நூலகக் கட்டடங்கள், நான்குதிசை திருவாயில்களோடு அமைந்த திருச்சுற்றுமாளிகை ஆகியவைகளுக்கு வெளியே பரந்த வெளியாக முதல் பிராகாரம் விளங்குகின்றது. அதில் நான்கு புறமும் ஒரே அளவுடைய பிரம்மாண்டமான நான்கு ‘ட’ வடிவத் திருக்குளங்கள் அமைந்துள்ளன. இந்த அமைப்பு ஒரு பேரதிசயமாகும். திருக்குளங்களில் நீராட வசதியாக மகரவாயில்களோடு கூடிய படிக்கட்டுகள் உள்ளன. குளங்களைக் காக்கும் கைப்பிடிச் சுவர்போல சுற்றிலும் கல்லாலான பாம்பு உடல்கள் காத்து நிற்கின்றன.

குளக்கரை கட்டுமான அமைப்பின் ஒவ்வொரு மூலையிலும் படமெடுக்கும் ஐந்து தலை பாம்பின் தலை அமைப்பு அழகிய சிற்பங்களாக அமைந்துள்ளன.இந்நான்கு குளங்களும் பரம பவித்திரமானவை என்பதைச் சுட்டிக் காட்டவே ஆதிசேடனின் இனமாகிய பாம்புகள் அவற்றைக் காத்து நிற்கின்றன. குளப்படிக்கட்டுகளில் அமைந்த கருங்கல்லாலான தோரண வாயில்கள் அழகிய சிற்ப வேலைப்பாடு களுடன் அமைந்துள்ளன. இந்த நான்கு குளங்களையும் பார்க்கும்போது நம் திருவெண்காட்டுக் கோயிலினுள் திகழும் முக்குளங்களையும், ஞானசம்பந்தப் பெருமானார் சுட்டும் புனிதத் தன்மையும் நம் நினைவுக்கு வரும்.

இக்கோயிலுக்கு வெளியே வந்து வடதிசையில் நோக்குவோமாயின் ஃபனாம்ரங் என நாம் சென்ற இதழில் தரிசித்த கயிலாய மலையும் அதன்மேல் திகழும் திருக்கயிலாயமாம் திருக்கோயிலும் தூரத்தே தெரியும் அந்த இடத்தில் மிகப் பிரம்மாண்டமாகத் திகழும் ஒரு நீர்நிலை (பேரேரி) நம் மனதைக் குளிர்விக்கும்.

முதுமுனைவர் குடவாயில்

பாலசுப்ரமணியன்

Related Stories:

>