தனது தாய் விஜி சந்திரசேகருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய லவ்லின் சந்திரசேகர், ரயிலில் பயணிக்கும்போது டிக்கெட் பரிசோதகர் யோகி பாபுவை சந்திக்கிறார். நம் வாழ்க்கையில் தாய் என்பவள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் யோகி பாபு 4 சம்பவங்களை விவரிக்கிறார். இந்த 4 சம்பவங்களுக்கும் ஒரே தொடர்பு, தாய் என்பவள் மட்டுமே. உணர்வுப்பூர்வமான 4 சம்பவங்களில் நட்டி-கனிகா, ரியோ ராஜ்-ஆதிரா, பாரதிராஜா-வடிவுக்கரசி, சாண்டி-துளசி ஆகியோரின் நடிப்பு இயல்பாக இருக்கிறது. யோகி பாபுவின் குணச்சித்திர நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது.
லவ்லின் சந்திரசேகர், விஜி சந்திரசேகர், ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ்காந்த், காவ்யா அறிவுமணி, ஐரா கிருஷ்ணன், முல்லை அரசி, மைம் கோபி, ஆடுகளம் நரேன், சுரேஷ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி போன்றோரும் நன்கு நடித்துள்ளனர். காட்சிகளை இயல்பாக ஒளிப்பதிவு செய்துள்ள மல்லிகா அர்ஜூன், மணிகண்ட ராஜூவின் உழைப்பு திரையில் நேரத்தியாக இருக்கிறது. தேவ் பிரகாஷ் ரீகன் பின்னணி இசை கதையை மீறாமல் பயணித்துள்ளது. எடிட்டர் தமிழ் அரசன் பணி குறிப்பிடத்தக்கது. எழுதி இயக்கியுள்ள பிரிட்டோ ஜே.பி., 4 சம்பவங்களிலும் அம்மா சென்டிமெண்டை மட்டுமே சொல்லியிருக்கிறார். அதை சுவாரஸ்யமாகச் சொல்ல முயற்சித்திருக்கலாம். சம்பவங்களுக்கு இடையிலான பிளாஷ்பேக்குகள் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தினாலும், தாய்மையின் மேன்மையைச் சொல்கிறது படம்.