சென்னை: பின்னணிப் பாடகரும், நடிகரும் இசையமைப்பாளருமான டி.எஸ். ராகவேந்திராவின் மகளான கல்பனா, தெலுங்கு சினிமாவில் பிரபல பாடகி. சமீபத்தில் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு கவலைக்கிடமாக இருந்த இவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.இது தொடர்ந்து சோசியல் மீடியாவில் பாடகி கல்பனா குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக செய்திகள் பரவியது. அவரது தற்கொலை முயற்சிக்கு கணவர்தான் காரணம் என்றும் கூறப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்துள்ள பாடகி கல்பனா வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அதில், ‘‘என்னைப்பற்றியும் என் கணவரை பற்றியும் சோசியல் மீடியால ஒரு தவறான வதந்தி பரவி வருகிறது. அதுபற்றி விளக்கம் கொடுப்பதற்காக தான் இந்த பதிவை நான் போட்டு இருக்கேன். நான், இந்த வயசுல பிஎச்டி, எல்எல்பி என நிறைய விஷயங்களை பண்ணிக்கிட்டு இருக்கேன், அதுமட்டுமில்லாமல், என்னுடைய இசை துறையின் மீதும் நான் ரொம்ப நம்பிக்கை வைத்திருக்கிறேன். இதனால எனக்கு நிறைய மன அழுத்தங்கள். இதனால கடந்த சில ஆண்டுகளாகவே நான் சரியா தூங்கல. தூங்க முடியாத பிரச்னையால் நான் அவதிப்பட்ட போது, டாக்டரிடம் சென்றேன். அவர், இது இன்ஃபோமேனியா பிரச்னை என்றார். அதற்கு, டாக்டர் சில மருந்துகளை எனக்கு கொடுத்திருந்தார். அன்றைய தினம் நான் தூங்க எட்டு மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். ஆனால் அது உதவவில்லை.
இதனால் நான் மேலும் 10 மாத்திரைகளை உட்கொண்டதால் அது என்னுடைய நுரையீரலை பாதித்து விட்டதால், சுயநினைவை இழந்து விட்டேன். ஆனால், நான் இன்னைக்கு உயிரோட திரும்பி வந்து அனைவரிடமும் பேசுகிறேன் என்றால், அதற்கு காரணம் என் கணவர் எனக்காக பட்ட பாடு தான். என்னை காப்பாற்றுவதற்காக அவர் பட்ட கஷ்டம் சொல்லவே முடியாது. அதுமட்டுமல்லாமல், மீடியா, போலீஸ் என அனைவரும் கஷ்டப்பட்டு என்ன காப்பாத்தினாங்க. இதனால நான் உயர் தப்பிச்சேன். தயவு செய்து எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்’’ என தெரிவித்துள்ளார்.