×

சனிப் பெயர்ச்சி பொதுப் பலன்கள்

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

நிகழும் சுப மங்கள சார்வரி வருடம் மார்கழி மாதம் 12ம் நாள். ஆங்கில தேதி 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.22 மணிக்கு திரயோதசி திதி, கிருத்திகை நட்சத்திரம், அமிர்த யோகம் கூடிய சுப தினத்தில் ஆயுள் காரகனும், அனுக்கிரக மூர்த்தியுமான ஸ்ரீசனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி தனுசு ராசியில் இருந்து தனது சொந்த வீடான மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சனி பகவான் தனுசு ராசியில் இருந்து பெயர்ச்சியாகி தனது சொந்த வீடான மகர ராசியில் ஆட்சி பலம் பெற்று சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக உலக அரங்கில் இந்தியா பலம் வாய்ந்த நாடாக நிமிர்ந்து நிற்கும். பங்கு வர்த்தகம் ஸ்திரமாக இருக்கும். இரும்பு, எண்ணெய், பெட்ரோல், ரசாயனம் சம்பந்தமான விஷயங்கள் ஏற்றத்தாழ்வுடன் இருக்கும்.

தகவல் தொழில் நுட்பம், செல்போன், எலக்ட்ரானிக், எலக்ட்ரிக்கல் சம்பந்தமான விஷயங்கள் வளர்ச்சியடையும். மருத்துவத்துறை அபார வளர்ச்சியடையும். புதிய மருந்துகள், தடுப்பூசிகள் மக்களின் பயன்பாட்டிற்கு வரும். இயற்கை மருத்துவம், சித்தா, யுனானி மூலிகை பயன்பாடுகள் அதிகரிக்கும். இயற்கை சீற்றங்கள் அதிகரிக்கும். இடி, மின்னல், சூறாவளிக் காற்றுடன் மழை பொழியும். அதிகாலை நேரத்திலும், அஸ்தமன நேரத்திலும் மழை பொழிவு அதிகம் இருக்கும். மத்திய அரசின் கை ஓங்கும். பல புதிய திட்டங்கள், சட்டங்கள் வரும். பொருளாதாரம் படிப்படியாக ஏற்றம் அடையும்.

நீண்ட கால நதி நீர் பிரச்னைகள் தீரும். விவசாயம், விவசாயம் சார்ந்த விஷயங்கள் அபிவிருத்தி அடையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கோயில்கள், புண்ணிய தலங்களில் கூட்டம் அதிகரிக்கும். முக்கிய பிரச்னைகளில் நீதிமன்றங்களின் தலையீடு, அதிரடியான தீர்ப்புகள் மூலம் எல்லாவற்றிற்கும் நல்ல தீர்வு உண்டாகும். பொதுவாக இந்த சனிப் பெயர்ச்சி எல்லோருக்கும் நல்ல மாற்றங்கள், ஆரோக்கியம் மற்றும் சுப மங்களத்தையும், ஐஸ்வர்யத்தையும் தர எல்லாம்வல்ல இறைவனை வேண்டி பிரார்த்திக்கின்றேன்.

சனி பகவான் ஸ்தான பலன்கள்

மேஷ ராசிக்காரர்களுக்கு  தசம ஸ்தான சனியாக பலன் தருகிறார்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு  பாக்கி ஸ்தான சனியாக பலன் தருகிறார்.
மிதுனம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம ஸ்தான சனியாக பலன் தருகிறார்.
கடகம் ராசிக்காரர்களுக்கு  சப்தம ஸ்தான சனியாக பலன் தருகிறார்.
சிம்மம் ராசிக்காரர்களுக்கு  சஷ்டம ஸ்தான சனியாக பலன் தருகிறார்.
கன்னி ராசிக்காரர்களுக்கு  பஞ்சம ஸ்தான சனியாக பலன் தருகிறார்.
துலாம் ராசிக்காரர்களுக்கு  சதுர்த்த ஸ்தான சனியாக பலன் தருகிறார்.
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு  திரிதிய ஸ்தான சனியாக பலன் தருகிறார்.
தனுசு ராசிக்காரர்களுக்கு  தன ஸ்தான சனியாக பலன் தருகிறார்.
மகரம் ராசிக்காரர்களுக்கு  ஜென்ம ஸ்தான சனியாக பலன் தருகிறார்.
கும்பம் ராசிக்காரர்களுக்கு  விரய ஸ்தான சனியாக பலன் தருகிறார்.
மீன ராசிக்காரர்களுக்கு  லாப ஸ்தான சனியாக பலன் தருகிறார்.
மிதுன ராசிக்கு அஷ்டம சனி தொடங்குகிறது.
துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது.
தனுசு ராசிக்கு 7½ சனியில் தன ஸ்தானத்து சனி தொடங்குகிறது.
மகர ராசிக்கு 7½ சனியில் ஜென்ம சனி தொடங்குகிறது.
கும்பம் ராசிக்கு 7½ சனியில் விரய சனி தொடங்குகிறது.

சனிப்  பெயர்ச்சி சஞ்சாரம் விளக்கங்கள் சனி  நட்சத்திர சஞ்சாரம்

27-12-2020- உத்திராடம் 2 மகர ராசி
24-1-2021  - உத்திராடம் 3 மகர ராசி
25-2-2021 - உத்திராடம் 4 மகர ராசி
10-4-2021 - திருவோணம் 1 மகர ராசி
12-5-2021 - திருவோணம் 1 மகர ராசி - சனி வக்கிரம் ஆரம்பம்.
24-6-2021- உத்திராடம் 4 மகர ராசி
26-9-2021 - சனி வக்கிர நிவர்த்தி
19-11-2021 - உத்திராடம் 4 மகர ராசி
28-12-2021 - திருவோணம் 1 மகர ராசி
27-1-2022 - திருவோணம் 2 மகர ராசி
26-2-2022 - திருவோணம் 3 மகர ராசி
3-4-2022  -  திருவோணம் 4 மகர ராசி
25-5-2022 - சனி வக்கிரம் ஆரம்பம்.
24-7-2022 - திருவோணம் 3 மகர ராசி
9-9-2022 - திருவோணம் 2 மகர ராசி
9-10-2022 - சனி வக்கிரம் நிவர்த்தி
7-11-2022  - திருவோணம் 3 மகர ராசி
26-12-2022 - திருவோணம் 4 மகர ராசி  
27-1-2023 - அவிட்டம் 1 மகர ராசி
25-2-2023 - அவிட்டம் 2 மகர ராசி
29-3-2023 - அவிட்டம் 3 கும்ப ராசிக்கு சனிப் பெயர்ச்சி.

சனி பார்க்கும் ராசிகள்

சனி பகவான் மகர ராசியில் இருந்து குரு  வீடான மீன ராசியையும், சந்திரன் வீடான கடக ராசியையும், சுக்கிரன் வீடான துலா ராசியையும் பார்க்கிறார்.
சனி பகவான் நட்சத்திர சாரம் சூரியன் நட்சத்திரமான உத்திராடத்திலும், சந்திரன் நட்சத்திரமான திருவோணத்திலும், செவ்வாய் நட்சத்திரமான அவிட்டத்திலும் தனது மகர ராசி சஞ்சாரத்தை செய்கிறார்.

பலனளிக்கும் பரிகாரங்கள்

பரிகாரங்கள் பல வகைப்படும். பூஜை, ஹோமம், விரதம், பிரார்த்தனை வழிபாடு என்ற பல வகைகளில் இறைவனை நினைத்து நம் பிரச்னைகள் தீர செய்யும் வழிமுறைகளே பரிகாரங்களாகும். அதேநேரத்தில் இல்லாதவர், இயலாதவர்களுக்கு செய்யும் உதவிகளை மிகப் பெரிய பரிகாரமாக ஆண்டவன் ஏற்றுக் கொள்கிறான். ‘‘ஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்’’ என்பது ஸ்ரீரமணபகவான் வாக்கியம். நீ ஒருவருக்கு செய்யும் உதவி, தர்மம் வேறு வடிவில் உனக்கே திரும்ப கிடைக்கும்.

பிரார்த்தனைகளில் மிக உயர்ந்தது பொறுமை. பொறுத்தார் பூமி ஆள்வார். அதைவிட உயர்ந்தது, சிறந்தது சரணாகதி. இது சற்று கடினமான நிலைதான் என்றாலும், எல்லாவற்றிற்கும் காரணமான மனதை சரண் அடைவதற்கு பக்குவப்படுத்த வேண்டும். மனதில் தோன்றும் ‘‘நான்’’ என்ற ஆணவம், அகங்காரமே பல வித இன்னல்களுக்கு காரணம். இந்த ஈகோ நம்மிடமிருந்து கொஞ்சம், கொஞ்சமாக விலகினாலே எல்லாப் பிரச்னைகளும் தீரும். பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், நோயாளிகள், தொழு நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றவர்கள், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் சுமப்போர், கட்டிட வேலை செய்பவர்கள், துப்புரவுத் தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனி பகவானுக்கு மிகவும் பிடித்தமானதாகும்.

சனித் தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம். சனிக்கிழமை வரும் பிரதோஷத்தன்று புளியோதரை, கருப்பு உளுந்து கலந்த கிச்சடி செய்து தானம் தரலாம். நவதிருப்பதிகளில் பெருங்குளம் சனி பரிகார ஸ்தலமாகும். சனி பிரதோஷத்தில் சிவனுக்கு வில்வ மாலை சாத்தி வழிபடலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை, வெண்ணெய் காப்பு செய்து வணங்கலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி 8 சிதறு தேங்காய் உடைத்து வழிபடலாம். ஏழைகளுக்கு, குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் தரலாம். இல்லாதோர், இயலாதோருக்கு கருப்பு நிற குடை, செருப்பு வாங்கி தரலாம். இரும்பு சட்டி வாங்கி தரலாம். சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம், வேஷ்டி, புடவை, போர்வை, கம்பளி தானம் செய்வது சிறப்பு.

Tags :
× RELATED சுந்தர வேடம்