×

குழந்தை கனவில் வந்த அம்மன் : வாசகரகளின ஆனமிக அனுபவம

பக்கத்துணை இருக்கிறார் பட்டினத்து அடிகள்

நான், பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது கூடை பந்தாட்டம் ஆடுகையில் எனக்கு வலது தோள் பகுதியில் அடி பட்டு வலது கையை தூக்க முடியாத நிலை உருவானது. மிகவும் சிரமப்பட்டேன். என் பெற்றோர் எனது சிறுவயது முதலே எனக்கு தெய்வ நம்பிக்கையை புகட்டினர். இருப்பினும் எனக்கு அதில் அதிகளவு நம்பிக்கை இல்லை. என்னை சிறு வயது முதலே தூக்கி வளர்த்த என் தாத்தா மீது எனக்கு பாசம் அதிகம். அவர் மறைவிற்கு பிறகு அவரைத்தான் தெய்வமாக பார்த்தேன். வணங்கினேன். என் பெற்றோரையும் வணங்கி வருவேன். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத முடியாதோ என வருந்தினேன்.

அப்போது தான் ஒரு நாள் என் தந்தை தூங்கப்போகும் முன்பு பட்டினத்தாரை வணங்கி விட்டு தூங்கச்செல் நிச்சயம் பலனளிக்கும் என்றார். எதார்த்தமாக அவரை வணங்கினேன். அன்றிரவு நான் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது கையில் கரும்போடு, இடையில் மட்டும் வேட்டி அணிந்த ஓர் உருவம் என் அருகே தோன்றியது. சில விநாடிகளில் அது பிரகாசமான ஒளியோடு என்னுள் புகுந்தது. திடுக்கிட்டு விழித்து என் தந்தையிடம் இது பற்றி கூறினேன். என் அப்பாதான் சொன்னார். அவர் தான் பட்டினத்து அடிகள் என்று. அன்றிலிருந்து பதினைந்தாவது நாள் என் உடல் நிலை சரியானது. கை மீண்டும் பழைய நிலைக்கு வந்தது. மருத்துவமனைக்கு சென்றபோது டாக்டர் அறுவை சிகிச்சை எதுவும் வேண்டாம். பேண்டேஜ் மட்டும் போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினார். கை விரைந்து குணமாகியது. தேர்வை நல்ல முறையில் எழுதி வெற்றிபெற்று மேற்படிப்பு படித்து இன்று நல்ல வேலையில் உள்ளேன். எல்லாம் அந்த பட்டினத்து அடிகளின் மகிமை தான். இன்றும் எனக்கு பக்கத்துணையாய் இருக்கிறார் அந்த பட்டினத்து மகான்.

- H. கிரிகுமார், மயிலாப்பூர், சென்னை.

நிலுவைத் தொகையை வரவைத்த ஈசன்

‘‘சிவன் பக்தனாகிய எனக்கு நான் பணி புரிந்த அலுவலகத்தில் என் உடன் பணி புரிந்த சக அலுவலர்கள் அவர்களுக்கு சேர வேண்டிய நிலுவை தொகையை சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்து அதன் பின்னர் மேற்படி தொகையை பெற்றனர். ஆனால் நான் ‘‘நீதி மன்றம்’’ செல்ல விருப்பமில்லாமல், நான் வணங்கும் சிவபெருமானிடம் ஒரு மண்டலம்’’ ‘‘முறையிட்டு’’ தொடர்ந்து பூஜித்ததின் பலனாக எங்கள் அலுவலகத்தில் ‘‘சிவனின்’’ பெயரை கொண்ட (மகாலிங்கம்) அலுவலரால் மேற்படி ‘‘நிலுவைத் தொகையை எவ்வித தடையில்லாமல் எனக்கு கிடைத்தது.
- T. புனிதன், செங்கம்.

பூதத்தார் அருளால் மனவலிமை கிடைத்தது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பக்கம் அம்பலசேரியில் நான் வசித்து வருகின்றேன். குல தெய்வ வழிபாடு கோடி புண்ணியம் என்று சொல்லுவார்கள். சுமார் ஐந்து தலைமுறையாக எங்கள் ஊரில் எங்கள் வீட்டின் முன் சிவனணைத பெருமாள் கோயில் உள்ளது. அதுதான் எங்கள் குலம் காக்க வந்த தெய்வங்கள் தளவாய் மாடசாமி, சங்கிலி பூதத்தார், முத்து பட்டன் என்று 21 பந்திக்காரர்கள் அமைந்திருக்கும் ஸ்தலம். எனக்கு மிகவும் பிடித்த தெய்வம் சங்கிலி பூதத்தார். என் வாழ்வில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் மலை போல் வரும் இன்னல்களை பனிபோல ஆக்கிவிடுவார். மேலும் கஷ்டங்களை தாங்கக் கூடிய மனவலிமைகளையும் கூடவே தந்து என்னையும் எங்கள் குடும்பத்தையும் காக்கும் தெய்வம் அழகு ராஜன் சங்கிலி பூதத்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோட்டையில் இருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த கோயில். மாதம் ஒரு முறை அங்கு சென்று வழிபடுவது என்னுடைய வழக்கம்.2015ல எங்க அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் ஒரு பெரிய விபத்து. இப்ப கூட எங்க அப்பாவுக்கு இருதய பிரச்னை இப்படி என்ன வந்தாலும் எங்களை காப்பது எங்கள் குலதெய்வங்கள் தான்.ஒரு மூனு வருசத்துக்கு முன்னாடி எங்க அம்மாவுக்கு கல்லடைப்பு இருப்பதாக ஆபரேஷன் பண்ணணும்னு ஆஸ்பத்திரில சொன்னாங்க ஆபரேஷன் பண்ணுறதுக்கு முன்னாடி சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு போய்விட்டு வந்தோம். பிறகு ஆஸ்பத்திரில செக்கப் பண்ணுனதுக்கு அப்புறம் கல் கரைஞ்சிட்டு ஆபரேஷன் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. கடவுளை நம்பினோர் ஒருபோதும் கைவிடப் பட மாட்டார்கள்.
- S.சரவணவேல், அம்பலசேரி, சாத்தான்குளம்.

குழந்தை கனவில் வந்த அம்மன்
 
2002 -ஆம் ஆண்டு என் பெரிய மகனுக்கு அம்மை போட்டது. உடல் முழுவதும் ஒரே எரிச்சல். குழந்தை ரொம்ப அவஸ்தைப்பட்டான். என்ன செய்வதென்று தெரியவில்லை. பக்கத்து வீட்டிலுள்ளவர்களும், உறவினர்களும், முத்து மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து தீர்த்தம் கொண்டு வந்து மூன்று நாளைக்கு கொடுக்குமாறும், சமையல் செய்யும்போது தாளிக்காமல் செய்யுமாறும் சொன்னார்கள். அதன்படி செய்தோம்.பத்து நாட்களில் அம்மை படிப்படியாக சரியாகி விட்டது. அப்போது குழந்தைக்கு அம்மை சரியானால் அம்மனுக்கு புடவை சாத்துவதாக வேண்டுதல் வைத்திருந்தோம். ஆனால் ஆறேழு மாதங்களாக மறந்து விட்டோம். திடீரென்று ஒருநாள் அதிகாலை 4 மணிக்கு என் மகன் கனவில் அம்மன் தோன்றி எனக்கு ஒரு புடவைக் கூட இல்லையே என கேட்டதாக சொன்னான். அப்பொழுது தான்எங்களுக்கு ஞாபகம் வந்தது. மறுநாளே வெள்ளிக்கிழமை பெரியபாளையம் சென்று அர்ச்சனை செய்து அம்மனுக்கு புடவை சாத்தினோம்.இன்றைக்கு நினைத்தாலும் மெய்சிலிர்க்கும். அன்றிருந்து இன்று வரை பெரிய பாளையம் சென்று அம்மனை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.

- V. பாஸ்கர் சாந்தா, சென்னை
.

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி