×

97 வது ஆஸ்கர் விழா கோலாகலம்: 5 விருதுகள் தட்டியது அனோரா; சிறந்த படம்; இயக்குனர், நடிகை; திரைக்கதை, படத்தொகுப்புஇந்திய குறும்படம் வெளியேறியது

லாஸ்ஏஞ்சல்ஸ்: அகாடமி விருதுகள் என்று அழைக்கப்படும் 97வது ஆஸ்கர் விருதுகள் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர் அரங்கில் கோலகலமாக நடைபெற்றது.
இதை பிரபல அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளரான கோனன் ஓ’பிரையன் தொகுத்து வழங்கினார். மனைவியை கிண்டல் செய்ததற்காக வில் ஸ்மித், தொகுப்பாளரின் கன்னத்தில் அறைந்தது, ஜான் சீனா ஆடைகளின்றி மேடைக்கு வந்தது என கடந்த இரண்டு ஆஸ்கர் விருது விழாவும் சர்ச்சையாகியிருந்தது. இம்முறை எந்த சர்ச்சைகளுமின்றி சிறப்பாக நடந்தது.

சிறந்த படம், இயக்குனர், நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு என அனோரா ஹாலிவுட் திரைப்படம் மொத்தம் ஐந்து விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது. 2002ஆம் ஆண்டு வெளியான ‘தி பியானிஸ்ட்’ படத்தின் மூலம் பிரபலமான அட்ரியன் பிராடி, ‘தி புரூட்டலிஸ்ட்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். அனோரா படத்தின் இயக்குர் சியன் பேக்கர் சிறந்த இயக்குநருக்கான விருதைத் தட்டிச் சென்றுள்ளார். இத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை மிக்கி மேடிசன் வென்றுள்ளார்.

‘டியூன் 2’ திரைப்படம் விஷுவல் எஃபெக்ஸ்ட், சிறந்த ஒலி என இரண்டு விருதுகளை வென்று கவனம் பெற்றுள்ளது. பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள், போர் பாதிப்பால் மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்ததை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘நோ அதர் லேண்ட்’ ஆவணப்படம், சிறந்த ஆவணத் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்று கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இந்த ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் 13 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டு பலரது கவனத்தையும் பெற்றிருந்தது ஸ்பானிஷ் திரைப்படமான எமிலியா பெரெஸ்.

இத்திரைப்படம் ஆங்கில மொழி அல்லாத திரைப்படங்களில் அதிகமாக நாமினேட் செய்யப்பட்ட திரைப்படம் என்ற புதிய சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படத்தில் நடித்த கார்லா சோஃபியா காஸ்கான்தான் ஆஸ்கர் விருது பட்டியலுக்கு தேர்வாகும் முதல் திருநங்கை என்பது கூடுதல் சிறப்பு. இதை தாண்டி புரூட்டலிஸ்ட்என்ற ஆங்கிலத் திரைப்படம் 11 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டது. விக்கட் என்ற திரைப்படமும் 10 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டது. கான்கிளேவ்மற்றும் எ கம்பிளிட் அன்னோன் திரைப்படங்கள் 9 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறது.

எமிலியா பெரெஸ், விக்கட், டியூன் இரண்டாம் பாகம், தி புரூட்டலிஸ்ட் திரைப்படங்களெல்லாம் சிறந்த திரைப்படம், இயக்கம், நடிகர், நடிகை பிரிவுகளில் போட்டியிட்டதால் இத்திரைப்படங்கள் இடையே கடும் போட்டி நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனோரா படம் மற்ற படங்களை பின்னுக்கு தள்ளி ஜெயித்திருக்கிறது. இந்தியா சார்பில் பிரியங்கா சோப்ரா மற்றும் குனீத் மோங்கா தயாரித்த `அனுஜா’ என்ற குறும்படம் மட்டும் `சிறந்த குறும்படம் (லைவ் ஆக்ஷன்)’ பிரிவில் போட்டிக்கு தேர்வாகியிருந்தது. ஆனால் இந்த படத்துக்கு விருது கிடைக்கவில்லை. ‘ஐஅம் நாட் ரோபோட்’ குறும்படம் விருதை தட்டியது.

* அனோரா கதை என்ன?
ப்ரூக்லினில் வசிக்கிறார் பாலியல் தொழிலாளியான அனோரா. ரஷ்ய பணக்கார வீட்டுப் பையனான வான்யா சக்காரோவை ஒரு டான்ஸ் பாரில் சந்திக்கிறார். அதன் பிறகு அவர்களின் வாழ்க்கை மாறுகிறது. வான்யா, அனோராவை தனியே அழைத்து செல்கிறான். அவர்களுக்குள் காதலும் உறவும் ஏற்படுகிறது. தன்னுடன் ஒரு வாரத்துக்கு தங்க அனோராவை அழைக்கிறான். அதற்கு 15,000 டாலர் தருவதாக சொல்கிறான். அப்போது லாஸ் வேகாசுக்கு சுற்றுலா செல்கிறார்கள். திருமணம் செய்யும் முடிவுக்கும் வருகிறார்கள். இதையெல்லாம் அறிந்து வான்யாவின் பெற்றோர் ரஷ்யாவிலிருந்து அமெரிக்கா வருகிறார்கள். கூலிப்படையை ஏவி இவர்களை பிரிக்க முயல்கிறார்கள். அதன் பிறகு கதை போகும் திசை வேறு மாதிரியான அனுபவங்களை தரும்.

* மற்ற விருதுகள் வென்றவர்கள்
சிறந்த துணை நடிகர் – கிரண் கல்கின் (எ ரியல் பெயின்). சிறந்த அனிமேஷன் திரைப்படம் – ஃப்ளோ. சிறந்த அனிமேஷன் குறும்படம் – இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ். சிறந்த ஆடை வடிவமைப்பு – பால் டேஸ்வெல் (விக்கிட்). சிறந்த அசல் திரைக்கதை – சீன் பேக்கர் (அனோரா). சிறந்த தழுவல் திரைக்கதை – பீட்டர் ஸ்ட்ராகன் (கான்க்ளேவ்). சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – தி சப்ஸ்டன்ஸ். சிறந்த எடிட்டிங் – சீன் பேக்கர் (அனோரா). சிறந்த துணை நடிகை – ஜோ சல்டானா (எமிலியா பெரெஸ்). சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – விக்டு. சிறந்த அசல் பாடல் – எல் மால் (எமிலியா பெரெஸ்). சிறந்த ஆவணப்பட குறும்படம் – தி ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா. சிறந்த ஆவணப்படம் – நோ அதர் லேண்ட். சிறந்த ஒலி – டூன்: பகுதி இரண்டு. சிறந்த காட்சி விளைவுகள் – டூன்: பகுதி இரண்டு. சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் – ஐ யம் நாட் எ ரோபோட். சிறந்த ஒளிப்பதிவு – தி ப்ரூடலிஸ்ட். சிறந்த சர்வதேச திரைப்படம் – ஐ யம் ஸ்டில் ஹியர் (பிரேசில்).

* வரலாறு படைத்த ஆடை வடிவமைப்பாளர்
அகாடமி விருதுகளில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கார் விருதை வென்ற முதல் கறுப்பின மனிதர் என்ற வரலாற்றைப் படைத்தார் பால் டாஸ்வெல். ‘விக்கிட்’ திரைப்படத்திற்காக அவர் இவ்விருதை வென்றுள்ளார். ‘‘வெஸ்ட் சைட் ஸ்டோரி”க்காக ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட டாஸ்வெல், ஏற்கனவே எம்மி விருது (‘‘தி விஸ் லைவ்”) மற்றும் டோனி விருது (‘‘ஹாமில்டன்”) ஆகியவற்றைப் பெற்றுள்ளார். சக ஆடை வடிவமைப்பாளர்களான ஏரியன் பிலிப்ஸ் (‘‘எ கம்ப்ளீட் அன்னோன்”), லிண்டா முயிர் (‘‘நோஸ்ஃபெராட்டு”), லிஸி கிறிஸ்டல் (‘‘கான்க்ளேவ்\”) மற்றும் ஜான்டி யேட்ஸ் மற்றும் டேவிட் கிராஸ்மேன் (‘‘கிளாடியேட்டர் II”) ஆகியோரை அவர் வென்றார்.

Tags : 97th Oscars ,Kolagalam ,Anora ,Los Angeles ,97th Academy Awards ,Academy Awards ,Dolby Theatre ,Los Angeles, USA ,Conan O'Brien ,
× RELATED சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை,...