×

மரவள்ளிக் கிழங்கு (ெ)வந்த கதை

மரவள்ளிக் கிழங்கு மாவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் குருணை வடிவ பொருள்தான் ‘ஜவ்வரிசி’ ஆனால், இதற்கும், இந்தப் பெயருக்கும் சம்பந்தமே இல்லை. இன்னும் சொல்லப்போனால், இது போலியான பெயர். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (M.I.D.S) முன்னாள் இயக்குநர் எஸ்.நீலகண்டன் மற்றும் ஆய்வு மாணவர்கள் இணைந்து தமிழ்நாட்டுக்கு மரவள்ளிக் கிழங்கு வந்த வரலாற்றை ஆய்வறிக்கையாகப் பதிவு செய்துள்ளார்கள். இது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் நூலகத்தில் உள்ளது. இனி, மரவள்ளிக் கிழங்கு கதைக்குள் செல்வோம். ஜவ்வரிசிக்கு சேகோ (Sago) என்பதுதான் உண்மையான பெயர். இந்தோனேசியா நாட்டில் உள்ள மெட்ரோசைலான் ஸாகு (Metroxylon Sagu) என்ற ஒருவகைப் பனைமரத்தின் பதநீரைக் காய்ச்சும்போது மாவு போன்ற ஒரு பொருள் கிடைக்கிறது. இந்த மாவைச் சிறுசிறு உருண்டைகளாக்கி சேகோ தயாரிக்கப்படுகிறது. இது ஜாவா தீவிலிருந்து இறக்கப்பட்டதால் அது ‘ஜாவா அரிசி’ என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் ‘ஜவ்வரிசி’ என ஆகிவிட்டது. நாம் பாயசத்தில் பயன்படுத்தும் ஜவ்வரிசி 1940ம் ஆண்டு வரை ஜாவா தீவிலிருந்து இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போர் தீவிரம் அடைந்த நேரத்தில், ஜவ்வரிசி வரத்து நின்றுபோனது. இதுமட்டுமல்ல, மைதா மாவும் அமெரிக்காவிலிருந்து வருவது நின்றுபோனது. ஆனால், சந்தையில் மைதா மாவுக்குத் தேவை அதிகம் இருந்தது. இதைக் கவனித்த சேலத்தைச் சேர்ந்த மாணிக்கம் செட்டியார், கேரளாவுக்குச் சென்று மரவள்ளிக் கிழங்கு மாவை வாங்கி வந்து, நன்றாகச் சலித்து அதை மைதா மாவு என்ற பெயரில் விற்பனை செய்தார். மைதா மாவைக் காட்டிலும் மரவள்ளிக் கிழங்கு மாவு விற்பனை பன்மடங்கு பெருகியது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு போர்த்துகீசியர்கள் மூலம் கேரளாவுக்கு மரவள்ளிக் கிழங்கு அறிமுகமாகியிருந்தது. அங்கு பயிரிடும் விவசாயிகளையும் சிலரையும் மரவள்ளிக் கிழங்கு குச்சியையும் தமிழக பகுதிக்கு வரவழைத்து, மரவள்ளிச் சாகுபடியைத் தொடங்கி வைத்தார்கள். இந்தச் செய்தி மலேசியா வரை சென்று சேர்ந்தது. மலேசியாவுக்கும் இந்தோனேஷியா நாட்டின் ஜாவா தீவிலிருந்து ஜவ்வரிசி வருவது நின்றுபோயிருந்தது. மைதா மாவுக்கு மாற்று கண்டுபிடித்த மாணிக்கம் செட்டியாரை அணுகினால், ஜவ்வரிசிக்கும் மாற்றுப் பொருள் கண்டுபிடிக்கலாம் போப்பட்லால் ஷா என்ற தொழிலதிபர் நினைத்தார். உடனே, சேலம் புறப்பட்டு வந்து மணிக்கம் செட்டியாரைச் சந்தித்து, தனது கோரிக்கையை வைத்தார். என்ன ஆச்சர்யம், ஜாவா தீவிலிருந்து வந்த ஜவ்வரிசியைக் காட்டிலும் மரவள்ளிக் கிழங்கு மாவு ஜவ்வரிசி பளீர் வெண்மை நிறத்தில் இருந்தது. உடனடியாக, நாடு முழுவதும் மரவள்ளிக் கிழங்கு ஜவ்வரிசி விற்பனைக்குச் சென்றது. உண்மையான ஜவ்வரிசியைக் காட்டிலும் மரவள்ளி ஜவ்வரிசிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு கட்டத்தில் இரண்டாம் உலகப்போர் முடிந்து ஜாவா தீவிலிருந்து ஜவ்வரிசி இந்தியாவுக்கு இறக்குமதியானது. ஆனால், நம் மக்கள் அதை வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. விலை மட்டும் கூடுதல் இல்லை. நிறமும் கொஞ்சம் மங்கலாக இருந்தது. மரவள்ளி ஜவ்வரிசி வெண்மை நிறத்தில் கண்ணைப் பறித்தது. இதனால், ஜாவா ஜவ்வரிசிக்கு வரவேற்பு குறைந்துபோனது. தொகுப்பு:- காரிகா

The post மரவள்ளிக் கிழங்கு (ெ)வந்த கதை appeared first on Dinakaran.

Tags : Tapeoca ,NE ,
× RELATED சிறுகதை-என் உயிரிலே நீ கலந்தாய்…