×

அனலில் அவதரித்த அழகன்

மும்மூர்த்திகளில் படைப்பின் கடவுளான பிரம்மனுக்கு தட்சன், காசிபன் என இரு புதல்வர்கள். இவர்களில் தட்சன் கடும் தவம்புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்று அவருக்கே மாமனாராகி, அதனால் உருவான அகந்தையால் மிக கர்வமுற்றான். சிவ அம்சத்தால் உருவான வீரபத்திரரால் கொல்லப்பட்ட தட்சனே அடுத்த பிறவியில் சூரபத்மனாக பிறந்தான். காசிபனும் தனது கடும் தவத்தால் சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றான். அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியாரால் அனுப்பப்பட்ட மாயை என்ற அழகியிடம் மயங்கிய காசிபன் தான் பெற்ற தவ வலிமைகளை இழந்தான். காசிபனும் மாயையும் முதல் சாமத்தில் மனித உருவில் இணைந்து சூரபத்மனையும், இரண்டாம் சாமத்தில் சிங்க ரூபத்தில் இணைந்து சிங்கமாசூரனையும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து தாரகனையும், நான்காம் சாமத்தில் ஆடு உருவில் இணைந்து அஜமுகி என்ற அசுரப் பெண்ணையும் பெற்றெடுத்தனர்.

தந்தையைப்போலவே சிவனை நோக்கி  தவம்புரிந்த நால்வரும் பல வரங்களைப் பெற்றனர். இவர்களில் சூரபத்மன் மேற்கொண்ட கடும் தவத்தால் 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என்றும் கேட்டான். பிறப்பால் தோன்றும் உயிர்கள் யாவும் இறப்பை அடைய வேண்டியது நீதி என்று சிவன் கூற, சூரபத்மன் புத்திசாலித்தனமாக, பெண் வயிற்றில் பிறவாத நபரால் தான்  தனக்கு அழிவு வரவேண்டும் எனக்கேட்டு பெற்றான். இதன்பின்  தனது அசுர குலத்தின் உதவியோடு அண்ட சராசரங்கள் அனைத்தையும் அடக்கி ஆண்டு கொடுங்கோல் ஆட்சி புரிந்தான். அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். பரமேஸ்வரன் தனது நெற்றிக் கண்ணைத் திறந்தார்.

(சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் சேர்த்தார். தீப்பொறிகள் ஆறு குழந்தைகளாக தோன்றின. அவர்களை கார்த்திகை பெண்கள் வளர்த்தனர். ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் கொண்ட ஆறுமுகனை பார்வதி தேவி ஓர் உருஆக்கினாள். தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்த முருகன், தாய், தந்தை ஆசியோடு, ஞான வேல் பெற்று முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன். தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரனோ, பாலகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் எனை வீழ்த்த முடியாது என்று வீராவேசமாகக் கூறினான்.

கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி வசித்து வந்த சூரனை வீழ்த்த வந்த வீரனை  பரிகசித்தான்.  தன் உருவத்தைப் பெரிதாக்கி பாலகன் முருகனை பயமுறுத்தினான். அவன் மீது சக்தி வாய்ந்த ஏழு பானங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான்.  நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்று கருதினான். கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். மாமரமாய் மாறிய அவன் மாயத்தோற்றத்தை ஞான வேலால் வீழ்த்தினார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்ததும் சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது.

உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும் என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அவனின் ஒரு பாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றி தனது வாகனமாகவும், கொடி சின்னமாகவும் ஆக்கினார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பி, கடற்கரையில் பஞ்ச லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதன்பின் கட்டப்பட்ட கோயில்தான் திருச்செந்தூர் கோயில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைமாறாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான்.

தொகுப்பு: ஆர்.அபிநயா

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?