×

தாய்லாந்து நாட்டு கயிலாயம்

இந்தியத் திருநாட்டின் நேர்கிழக்கில் மியான்மர் எனும் பர்மா நாடும், அதற்குக் கிழக்காக தாய்லாந்தும், அதற்குக் கிழக்காகக் காம்போஜம் எனப் பண்டு அழைக்கப் பெற்ற கம்போடியாவும் அதற்குக் கிழக்காக வியட்நாம் எனும் நாடும் உள்ளன. தாய்லாந்து நாட்டின் தென்பகுதி மலாக்கா எனப்பெறும் மலேசிய நாட்டுடன் இணைந்து திகழ்கின்றது. அப்பகுதியுடன் கூடிய தற்காலத்திய தாய்லாந்து நாட்டினைப் பண்டைய நாளில் சயாம் என அழைத்தனர்.

சயாம் நாட்டில் பூரிராம் என அழைக்கப்பெறும் மாகாணத்தில் உள்ள ஃபனோம்ரங் பகுதியில் உள்ள மலையை கயிலாய பர்வதமாகக் கருதி அதன்மேல் ஸ்ரீகயிலாசம் எனும் சிவாலயத்தை பண்டைய கெமர் அரசர்கள் கட்டியுள்ளனர். அங்கு மூலஸ்தானத்தில் இடம்பெற்றுள்ள சிவலிங்கமும், வாயில் நிலைக்கால் மேல் உள்ள ஆடல்வல்லானின் சிற்பத்தின் அருகே காணப்பெறும் காரைக்காலம்மையாரின் சிற்பமும், தமிழ்நாட்டுச் சிற்பிகளின் துணை கொண்டுதான் கெமர் நாட்டுக் கலைஞர்கள் அவ்வாலயத்தினை எடுத்தனர் என்பதை உறுதிசெய்ய இயலுகின்றது.

பல்லவர், சோழர் ஆகிய பேரரசர்களின் காலத்தில் சயாம் நாட்டோடு தமிழகத்திற்கு நெருங்கிய வணிகத் தொடர்பும், ஆன்மிக ரீதியான கலாச்சாரத் தொடர்பும் இருந்தமையால் தமிழ்நாட்டுக் கோயிற் கட்டடக்கலையும், சிற்பக்கலையும் அங்கு தழைத்தன. தமிழ்நாட்டிலிருந்து சயாம் நாட்டிற்குச் செல்லும் மரக்கலங்கள் (கப்பல்கள்) அங்கு முதலில் சென்றடையும் கடற்துறை தக்கோலம் எனும் இடமாகும். இதனைத் தற்காலத்தில் தகூபா என அந்நாட்டு மொழியில் குறிப்பிடுகின்றனர்.

இராஜேந்திரசோழனின் கல்வெட்டுகளில் அவன் கடல் கடந்து வென்ற இடங்களின் பட்டியலில் இத்துறைமுகம் தலைத் தக்கோலம் என்று குறிக்கப்பெறுகின்றது. எனவே, அந்நாட்டு முதல் துறைமுகமாக இதுவே நம்மவர்களால் கருதப்பெற்றது. இத்துறைமுகத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள பிரநராய் என்ற இடத்திற்கு ஆற்று நீர் வழியாக செல்லலாம். அங்கு சிவன், விஷ்ணு, ஸ்ரீதேவி போன்ற தெய்வ வடிவங்கள் திகழ்வதோடு அருகில் தமிழ்க் கல்வெட்டுப் பொறிப்புடன் உள்ள ஒரு பகுதி மட்டும் சிதைந்த கற்பலகையாகத் திகழ்வதை ஆய்வறிஞர்கள் கண்டனர்.

அதில்,‘‘….ய வர்மருக்கு…. மாந்தாந் நாங்கூருடையான் தொட்டகுளம், பேர் அவனிநாரணம். மணிக் கிராமத்தார்க்கும் சேனாமுகத்தார்க்கும்…. பதார்க்கும் அடைக்கலம்” என்று எழுதப்பெற்றுள்ளது. இக்கல்வெட்டு கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். இக்கல்வெட்டு குறிப்பிடும் நாங்கூர் என்பது காவிரிப்பூம்பட்டினத்தைச் சார்ந்த ஓர் ஊராகும். அவ்வூரினனாகிய ஒருவன் அங்கு சென்று திருமால், சிவன் ஆகிய தெய்வங்களுக்கு கோயில் எடுத்ததோடு ஒரு குளமும் தோண்டி அறப்பணி புரிந்துள்ளான்.

அவன் செய்த அந்த அறக்கொடையைக் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து சென்ற மணிக்கிராமத்து வணிகர்களும், அவர்களுக்குத் துணையாகச் சென்ற சேனாமுகத்தார் எனும் படைவீரர்களும் மற்றும் ஒரு குழுவினரும் எதிர்காலத்தில் காக்க வேண்டும் எனத் தன் வேண்டுகோளையும் அதில் பதிவு செய்துள்ளான். அவன் தோண்டிய குளத்திற்கு அவநிநாரணம் எனப் பெயரும் சூட்டியுள்ளான். இப்பெயர் பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த நந்திவர்மனைக் குறிப்பதாகும்.

தமிழ் மக்கள் அங்கு சென்று பல கோயில்களை எடுப்பித்தனர் என்பதற்கு அங்கு பல சான்றுகள் நமக்குக் கிடைக்கின்றன. தமிழ்நாட்டுக் கலைப்பாணியில் அமைந்த கணபதி, சிவலிங்கம், திருமால், தேவி போன்ற பல சிற்பங்கள் அங்குக் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டுப் பொன் வணிகர்கள் அங்கு சென்று வந்தனர் என்பதற்கு ஆதாரமாக குனஅலுக்பத் எனும் இடத்தில் தங்கத்தை உரசிப்பார்த்து மாற்று அறிய உதவும் ஒரு உரைகல் கிடைத்துள்ளது. அதில்”பெரும்பதன் கல்” என்ற கி.பி. 3ஆம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துப் பொறிப்பு காணப்பெறுகின்றது. பெரும்பதன் என்ற பொன் வணிகனுக்கு உரிய கல் என்பது இதன் பொருளாகும். மேலும் சயாம் நாட்டில் பல இடங்களில் கிடைத்த பானை ஓடுகளில் பண்டைய தமிழ் எழுத்துப் பொறிப்புகள் உள்ளமையைக் கண்டு நாம் மகிழலாம்.

கெமர் அரசர்கள் கட்டியுள்ள கோயில்களில் காணப்பெறும் சமஸ்கிருத கல்வெட்டுக்களில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆசார்யர்களும், சிற்பிகளும், நாட்டிய ஆசான்களும் அவர்களுக்குக் கலையை மேம்படுத்த உதவினர் என்ற செய்திகள் காணப்பெறுகின்றன.

தாய்லாந்து நாட்டுத் தலைநகரமான பாங்காக்கிலிருந்து பூரிராம் நகரம் செல்ல விமானப் போக்குவரத்து வசதிகள் உள்ளன. பூரிராமிலிருந்து 50 கி.மீ. தொலைவில் ஃபனோம்ரங் எனும் இடத்தில் உள்ளது. பூரிராமிலிருந்து நங்ரோங் அல்லது பிரகோன்சய் என்ற பேரூர்களுக்குப் பேருந்து வசதிகள் உள்ளன. அங்கிருந்தும் கயிலாய மலை திகழும் ஃபனோம்ரங் எனும் மலைப்பகுதிக்கு எளிதில் செல்லலாம்.

மலைமீது திகழும் 160 மீட்டர் நீள நடைபாதை வழியாக உயர்ந்த படிக்கட்டுகள் திகழும் பகுதியை அடையலாம். நடைபாதையின் தொடக்கப் பகுதியில் வலப்புறம் ஒரு கட்டடம் உள்ளது. அது பண்டு திருக்கோயிலுக்கு விழாக்காலங்களில் வரும் கெமர் அரசர்கள் தங்கும் இடமாகும். நடைபாதை கடந்து படிக்கட்டுக்கள் வழி கயிலாயக் கோயிலை அடைவதற்கு இரண்டு நாகப் பாம்புகள் காக்கும் பாலங்களைக் கடக்க வேண்டும். படி அமைப்புகளின் இருபுறமும் ஐந்து தலைகளையுடைய படமெடுத்த நீண்ட பிரம்மாண்டமான பாம்புகளின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

நிலவுலகையும், தெய்வத்தின் உறைவிடமான மேரு திகழும் ஸ்ரீகயிலாசத்தையும் பிரித்து நிற்பது இவ்விரண்டு பாம்புப் பாலங்களே. அக அழுக்கையும், புற அழுக்கையும் பாவனையாக நீக்குமிடம் இவையே. அனைத்துப் படிகளையும் கடந்து மேலே சென்றால் ஒரு பரந்த வெளியில் திருக்கோபுர வாயில்களும், அவைகளுக்கு எதிரே அல்லி மலர்களுடன் கூடிய சிறிய சிறிய நீர்நிலைகளையும் காணலாம். அங்கு அல்லி மலர்கள் மலர்ந்து பேரழகுடன் திகழ்கின்றன.

சிவபெருமான் லிங்க வடிவில் இக்கோயிலின் நடுவே அமைந்த உயரமான விமானத்துடன் கூடிய கருவறையுள் காணப்பெறுகின்றார். இக்கருவறைக்கு நான்கு திக்குகளிலும் வாயில்கள் அழகிய வேலைப்பாடமைந்த முகப்புக் கட்டடங்களுடன் திகழ்கின்றன. கிழக்கு வாயிலின் உட்புறம் ரிஷபமும் பலிபீடமும் உள்ளன. எந்த வாயிலின் முன்பு நின்று பார்த்தாலும் கருவறையின் மையப்பகுதியில் உள்ள லிங்கத்தைத் தரிசிக்கலாம். இவ்வகையான நான்கு வாயில்கள் உள்ள கோயிலமைப்பினை சர்வதோபத்ரம் என்பர். எலிபெண்டா குடைவரையில் இதேபோன்று நான்கு வாயில்களுடன் உள்ள பகுதியின் நடுவண் சிவலிங்கம் இருப்பதைக் காணலாம். தஞ்சைப் பெரியகோயில் கருவறையைச் சுற்றி அமைந்த சாந்தாரத்திற்கு நான்கு திருவாயில்கள் உண்டு. இவ்வமைப்புடைய கருவறை ஸ்ரீகயிலாசமாகவே கருதப்பெறுகின்றது.

கோயிலின் மையப்பகுதியில் திகழும் உயரமான ஸ்ரீவிமானம் மகாமேரு பர்வதமாகக் கருதப் பெறுவதாகும். சிவபெருமான் உமையோடும், கணங்களுடனும் உறையுமிடமே மகாமேரு பர்வதம் எனச் சைவ நூல்கள் குறிக்கின்றன. அது பொன்னாலாகிய மலை. பிரபஞ்சப் பெருவெளியில் திகழும் அம்மலையை ஊனக்கண்களால் காணல் இயலாது.

அதனால்தான் அப்பொன்மலையின் ரூபமாக இமயமலையில் திகழும் கயிலாச பர்வதத்தை நாம் மேருவாகத் தரிசிக்கின்றோம். அதனை வெள்ளிமலை எனக் குறிப்பிடுகிறோம். சூரியோதய காலத்தில் அவ்வெள்ளிமலை பொன்மலையாகவே தகதகக்கும். அதனைத் தரிசிப்போர் வெகுசிலரே. சிவானந்த அனுபவம் அப்போது மட்டு மே கிட்டும். அதன் வடிவமாகத்தான் ஃபனோம்ரங் மலைமீது திகழும் சிவாலயத்தை ஸ்ரீகயிலாச மேருவாக வடிவமைத்துள்ளனர்.

தமிழ்நாட்டுச் சைவாகமங்கள் வழி உருவாக்கப்படும் சிவலிங்க வடிவங்கள் சதுர அல்லது விருத்த (வட்டம்) வடிவ பீடத்தின் மையத்தில் நீண்ட உயரமான தூண் வடிவில் பாணத்துடன் திகழும். அந்த தூண் வடிவ அமைப்பின் கீழ்ப்பகுதி சதுரமாகவும், நடுப்பகுதி எண் பட்டை வடிவிலும், மேல்பகுதி வட்டமாகவும் திகழும். சதுரப்பகுதி பிரம்மனாகவும், எண்பட்டை வடிவப்பகுதி விஷ்ணுவாகவும், வட்டப்பகுதி மகாருத்திரனாகவும் ஆவாகிக்கப்பெறும். இவ்வமைப்பு தமிழ்நாட்டிற்கே உரியதாகும். சாளுக்கிய நாட்டில் சில கோயில்களில் தமிழகக் கலைத் தாக்கத்தால் இவ்வமைப்பில் திகழும் சிவலிங்கங்களைக் காணலாம். வடபுலத்து சிவலிங்க அமைப்பு முறை இதனின்று வேறுபட்டதாகும்.

ஃபனோம்ரங் பிரசாத் எனப்பெறும் இக்கயிலாய மேரு கோயிலில் அமைந்த மூலவரான சிவலிங்க வடிவம் தமிழ்நாட்டு ஆகம முறையில் வடிக்கப்பெற்றதாகும். இவ்வாலயத்து நான்கு பிரதான வாயில் முகப்புகளின் மேற்புறம் கலையழகு மிகுந்த தோரண அமைப்புகளுடன் தெய்வச்சிற்பங்கள் வடிக்கப்பெற்றுள்ளன. தெற்கு வாயிலின் முகப்பில் பத்துத் திருக்கரங்களுடன் சதுரத் தாண்டவமாகும் ஆடல்வல்லான் திருமேனியும் அவர் காலடியில் பேய்கணங்களுடன் காரைக்காலம்மையார் திகழும் காட்சியும் இடம்பெற்றுள்ளன. அம்மையின் தலை உடைக்கப்பெற்றுள்ளது. அங்குள்ள தகவல் பலகையில் தாய்லாந்து மொழியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பெற்றுள்ள குறிப்பில் நடராசர் வடிவம் பற்றியும், காரைக்காலம்மையார் அங்கு இடம் பெற்றிருப்பதும் சுட்டிக்காட்டப் பெற்றிருப்பது நமக்கு மகிழ்ச்சி தருவதாகும்.

இந்த மகர தோரணத்திற்குக் கீழாகப் பாம்புப் படுக்கையில் படுத்திருக்கும் திருமாலின் கோலமும் அவர் காலடியில் திருமகள் அமர்ந்திருக்க, அவர்தம் உந்தித் தாமரையில் பிரம்மன் வீற்றிருப்பதுமான காட்சிகள் உள்ளன. இந்த எழில்மிகு சிற்ப உத்திரப் பகுதியை சென்ற நூற்றாண்டில் சிலர் பெயர்த்து அமெரிக்க நாட்டிற்கு விற்று விட்டனர். அவ்வாறு உடைக்கும்போது சிற்பப்பகுதிகள் சில உடைந்துவிட்டன. களவாடப்பெற்ற அச்சிற்பத்தினைத் தாய்லாந்து அரசு சட்டப்படி மீட்டு மீண்டும் பெயர்த்த இடத்திலேயே பொருத்தியுள்ளது.

இச்சிற்பக்காட்சியில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக இரண்டு அன்னப்பறவைகள் உள்ளன. அவை தம் அலகுகளால் இரண்டு யானை
களைக் கொத்தி தூக்கி நிற்கின்றன. யானைகளோ வலு இழந்து பறவையின் வாயில் தொங்குகின்றன. இந்த சிற்பக்காட்சியினையும், தஞ்சை, கங்கைகொண்டசோழபுரம் ஆகிய கோயில்களில் உள்ள துவாரபாலர் காலடியில் உள்ள பாம்பு யானையை விழுங்கும் காட்சியையும் ஒப்பிட்டு நோக்கும்போது கயிலாய மலையின் பிரம்மாண்டத்தை நாம் உணரலாம்.

இதுபோன்று இவ்வாலயத்தில் திகழும் பல தெய்வத் திருமேனிகள், பலிபீடம், இடபம் போன்றவை தமிழகத்துக் கோயில்களை நமக்கு நினைவூட்டுகின்றன. யானைகளின்மீது அமர்ந்து செல்லும் கெமர் அரசர்களின் சிற்பமும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கோயில் அமைப்பில் அதிஷ்டான கட்டமைப்பு, கல் ஜன்னல்களின் அமைப்பு ஆகியவை நுட்பத்திறனுடன் வடிவமைக்கப் பெற்றவையாகும்.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் இவ்வாலயத்தில் பிரம்மாண்டமான விழா கொண்டாடப்பெறுகின்றது. அன்று காலை உதிக்கும் சூரியனின் ஔிக்கற்றைகள் கிழக்கு வாயில் வழியே சிவலிங்கத்தின்மீது விழுந்து அந்த லிங்கம் ஜோதி வடிவில் காட்சி நல்கும். மாலை அஸ்தமனத்தின்போதும் அதே ஜோதியைத் தரிசிக்கலாம். அன்று பகல் முழுவதும் அந்த ஆலயத்து பதினைந்து பலகணிகள் வழி சூரிய ஔி பாய்ந்து கோயிலின் உட்பகுதியைப் பிரகாசமடையச் செய்யும். இது ஓர் அபூர்வ நிகழ்வாகும். அன்றைய தினம் அந்நாட்டு நாட்டியப் பெண்கள் கூடி நாட்டியமாடி சிறப்பு வழிபாடு செய்கின்றனர். கோயிலின் முன்பு ஊர்வலமும் நிகழ்கின்றது.

தமிழ்நாட்டோடு வணிகத்தாலும், ஆன்மிக வழிபாடுகளாலும், பண்பாட்டுக் கூறுகளாலும் ஒன்றித் திகழ்ந்த சயாம் நாட்டு (தாய்லாந்து நாட்டு) திருக்கயிலாயமான ஃபனாம்ரங் பிரசாத் எனும் ஆலயத்தை இவ்விதழ் வாயிலாக அனைவரும் தரிசிப்போம்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

Tags : Thailand Country Hospital ,
× RELATED சுந்தர வேடம்