ஸ்ரீராமன காலத்தில் தீபாவளி உண்டா?

ஐப்பசி மாத அமாவாசை நாளில் நாம் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடி வருகிறோம். இப்பண்டிகைக்கான பல காரணங்களுள் பிரசித்தமான ஒன்று என்னவென்றால், இந்நாளில் தான் கண்ணன் நரகாசுரனை வதம் செய்தான்.    இதை எல்லோரும் வேடிக்கையாக ஒரு கேள்வி கேட்பார்கள், ஸ்ரீராமன் தனது தலை தீபாவளியை எங்கே கொண்டாடினார் அயோத்தியிலா மிதிலையிலா? நாம் ஏதோ ஒரு பதிலைச் சொன்னால், அது தவறு கிருஷ்ணாவதாரத்துக்குப் பின் தானே தீபாவளியே வந்தது.  ராமன் வாழ்ந்த காலத்தில் தீபாவளிப் பண்டிகையே கிடையாதே என்று சொல்லி விடுவார்கள். ஆனால் இந்தக் கூற்றின் உண்மைத் தன்மை சற்றே ஆராயப்பட வேண்டிய விஷயமாகும். ஏனெனில், ராமாவதாரத்துக்கு முன்பும் தீபாவளி கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது.

ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று தேவர் களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைகையில், அதிலிருந்து அமுதமும் லட்சுமி தேவியும் தோன்றினார்கள். அவ்வாறு தோன்றிய லட்சுமி தேவியை வரவேற்கும் விதமாகத் தேவர்களும் முனிவர்களும் வரிசையாகத் தீபங்களை ஏற்றி வைத்தார்கள். வடமொழியில் ‘ஆவளி’ என்றால் வரிசை. (இறைவனின் திருநாமங்களை வரிசையாகச் சொல்லும் போது அதை ‘நாமாவளி’ என்று சொல்கிறோம் அல்லவா?) லட்சுமி தேவியை வரவேற்கும் பொருட்டு வரிசையாகத் தீபங்கள் ஏற்றப்பட்டதால், ஐப்பசி அமாவாசை நாள் ‘தீபாவளி’ (தீப + ஆவளி, தீபங்களின் வரிசை) என்று பெயர் பெற்றது. ‘லட்சுமி பூஜை’ என்ற மற்றொரு பெயரும் தீபாவளி பண்டிகைக்கு உண்டு.

லட்சுமி தேவி தீபாவளி நன்னாளில் பாற்கடலில் இருந்து தோன்றியதால், அவளது வருகையைக் கொண்டாடும் விதமாக நிறைய இனிப்புப் பட்சணங்கள் செய்து தீபாவளிப் பண்டிகையை நாம் கொண்டாடுகிறோம். அனைத்து நோய்களையும் குணப்படுத்தவல்ல அமுதம் இந்நாளில் தோன்றியதன் நினைவாகத்தான் தீபாவளி மருந்து என்னும் லேகியம் தயாரிக்கப் படுகிறது. நான்கு யுகங்களுள் முதல் யுகமான கிருத யுகம் தொடங்கியே இந்த தீபாவளிப் பண்டிகை கொண்டாடப் பெற்று வருவதாகப் பாஞ்சராத்திர ஆகமம் கூறுகிறது. அப்பய்ய தீட்சிதர் தமது யாதவாப்யுதய விளக்க உரையிலும் இக்கருத்தைக் கூறியுள்ளார்.

இறக்கும் தருவாயில் நரகாசுரன் கண்ணனிடம், “நாளைய தினம் மக்களுக்கு நல்  விடிவாக விடியவுள்ளது. எனவே நாளை (ஐப்பசி அமாவாசை அன்று) விடியற்காலையில்  யாரெல்லாம் தலைக்கு எண்ணெய் தேய்த்து நீராடுகிறார்களோ, அவர்கள்  அனைவருக்கும் கங்கையில் நீராடிய புண்ணியத்தை நீ அருளவேண்டும். ஒவ்வொரு  வருடமும் இவ்வாறு ஐப்பசி அமாவாசை காலையில் எண்ணெய் தேய்த்து நீராடுவோர்க்கு  இவ்வருளை நீ புரிய வேண்டும்!” என்று வேண்டிக் கொண்டு உயிர்நீத்தான்.  கண்ணனும் அதை ஏற்று அவ்வரத்தை அளித்தான். இதன் விளைவாகவே ‘நரக  சதுர்த்தசி ஸ்நானம்’ என்பது ஏற்கனவே ஐப்பசி அமாவாசையில் கொண்டாடப்பட்டு  வந்த தீபாவளியோடு இணைக்கப்பட்டது. எனவே தீபாவளிப் பண்டிகை என்பது நரகாசுர  வதத்துக்கும் நீண்டகாலம் முன்பிருந்தே ஏற்பட்ட பண்டிகையாகும். கங்கா  ஸ்நானத்தை மட்டும் தான் அத்துடன் இணைத்தான் நரகாசுரன்.

அப்படியானால், ராமனின் காலத்திலும் தீபாவளிப் பண்டிகை உண்டு. சீதையுடன்  ஆனந்தமாக மிதிலைக்குச் சென்று, தனது மாமனார் வீட்டில் தனது தலை தீபாவளியை  நிச்சயமாக ராமன் கொண்டாடி இருப்பான் என்றே நாம் ரசிக்க வேண்டும்.

தொகுப்பு: திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Related Stories:

>