×

நரக சதுர்த்தசி என்கிற தீபாவளியின் மகிமை

நரகசதுர்த்தசி என்கிற தீபாவளி திருநாள் புண்ணியமும் கொண்டாட்டமுமான தினம் என்பதை அனைவரும் அறிவோம். அன்று சகல தீர்த்தங்களிலும் கங்கை கலக்கிறாள் என்பது பிரசித்தமான விஷயமாகும். இந்த நரகசதுர்த்தசி எனும் திதியோடு சேர்ந்து வரும் தீபாவளியன்று காவிரியில் நீராடல் என்பது மாபெரும் மகிமைமிக்க புண்ணிய செயலாகும். கங்கையின் மகாத்மியத்தை கேட்டிருப்போம். ஆனால், தீபாவளியன்று காவிரியின் மகாத்மியத்தையும், அன்று அதில் நீராடுவது என்பது எப்பேற்பட்ட பலன்களை எல்லாம் தரும் என்பதை பிரம்ம கைவர்த்த புராணத்திலுள்ள துலாக் காவிரி மகாத்மியம் மிக விரிவாக விளக்குகிறது.
 
அது என்னவென்று பார்ப்போமா?

சுமந்து எனும் முனிவரின் ஆசிரம வாயிலுக்கு அருகே தேவசர்மா என்கிற தீவிர தேடல் கொண்டவர் நின்றுகொண்டிருந்தார். இந்த தேவசர்மா என்பவரைப்பற்றி ஸ்கந்த புராணம் உட்பட பல்வேறு புராணங்கள் பேசுகின்றன. காசி மகாத்மியத்தில் கூட வந்து போவார். சுமந்து முனிவரைக் கண்டவுடன் பணிவோடு அவரின் பாதம் படர்ந்து எழுந்தார். ‘‘சத்குருவே எத்தனையோ தீர்த்தங்களை தரிசித்திருக்கிறேன். ஆனாலும், இந்த காவிரியின் மகிமையே தனிதான். அவளின் கரையோரம் எத்தனை ஆலயங்கள். ஆசிரமங்கள். பாகவதர்களின் அவதாரங்கள் என்று மெய்சிலிர்க்க வைக்கின்றன. காவிரியின் மகிமையையும், அதில் எப்போது நீராடுவது மிகுந்த புண்ணியத்தையும், ஞானத்தில் நாட்டத்தை அதிகரிக்க வைக்கும் என்பதையும் விளக்குவீர்களா’’ என்று சொல்லி நிறுத்தினார்.
சுமந்து கண்கள் மூடினார். மூச்சை இழுத்து விட்டார். அவரிடமிருந்து வாக்குகள் கணீரென்று பிறந்தன.

‘‘அரசனே, காவிரியின் பெருமையைச் சொல்லும்போதே அவளின் சிலுசிலுப்பு என் நெஞ்சை குளிர்விக்கிறது. காவிரியின் மகிமையை கேட்பதே சகல சௌபாக்கியங்களையும் அருளவல்லதாகும். புத்திரர்களையும், பௌத்திரர்களையும், நல்ல சுற்றம் சூழ வாழவைக்கும் மகிமையைக் கொண்டது. ஏனெனில், காவிரி சகல ஜனங்களுக்கும் இதம் செய்யவே விரும்புபவள். பதினான்கு உலகங்களிலுள்ள அனேக கோடி தீர்த்தங்களோடு சேர்ந்து காவேரி பிரவாக ஓடிக் கொண்டிருக்கிறாள். இப்படிப்பட்ட புண்ணிய தீர்த்தமான காவேரியின் பெருமையை கேட்பதாலேயே திவ்ய ஞானமுண்டாகும். ஏனெனில், கேட்கும்போது சித்தத்தில் அதன் சாந்நித்தியம் வந்து அமர்ந்து விடுகிறது என்பதை புரிந்துகொள். பூமியிலும் ஏன், மற்ற உலகங்களிலும் அனேக தீர்த்தங்கள் உள்ளன. அவையெல்லாம் காவிரியின் கலைக்கு  அதாவது 16-ல் ஒரு பாகத்திற்குக் கூட சமமாகாது எனில் அது மிகையில்லை.

பதினாராயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ளவர்கள் கூட காவிரி... காவிரி... என்று உச்சரித்தால் கூட அவன் காவிரியில் ஸ்நானம் செய்த புண்ணியத்தையும் பலத்தையும் இருந்த இடத்திலேயே பெற்று விடுகிறான். சகல பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான். இதில் நீராடுவது என்பது அத்தனை சுலபத்தில் யாருக்கும் வாய்க்காது என்றுதான் கூற வேண்டும். ஏனெனில், பொதுவாகவே சாதுக்களுக்கு காவிரி சுலபமானவள். அதாவது எளிதில் அவர்களை நீராட வைத்துவிடுகிறாள். அதே சமயம் ஐயோ... நிறைய பாவம் செய்து விட்டேனே என்றும், தன்னை பாவி என்று எண்ணுபவன் கூட  இதில் நீராடினால் தேவலோகத்தை அடைகிறான். வெகு தூரத்தில் இருப்பவன் நான் எப்போது காவிரிக்குச் சென்று நீராடுவேன் என்கிற தாபமும், ஏக்கமும் பெருக்க இருப்பவன் காவிரியில் நீராடிய பலத்தை சித்தத்திலேயே பெறுகிறான். மிக முக்கியமாக இன்னொரு விஷயத்தை இப்போது கூறப்போகிறேன். அதாவது நரக பயமடைந்த மனிதர்கள் இருக்கிறார்களல்லவா....’’ என்று காவிரியின் மகிமையை கூறி நிறுத்தி தேவசர்மாவையே உற்றுப் பார்த்தார்.

‘‘மனிதர்கள்தானே. ஏன் நரக பயமடைந்த என்று கூறுகிறீர்கள்’’ தேவசர்மா குழப்பத்தோடு கேட்டார். ‘‘நர என்றாலே மனிதன், மனித உடல் என்று பெயர். நர உடலை எடுத்து பாவங்களை செய்து வேறொரு அகமான நர - அகத்திற்கு செல்லும் மனிதர்களும், சதா நேரமும் உள்ளுக்குள் பொங்கும் பிரம்மானந்தத்தை மறந்து, பயத்தோடும் ஆசைகளோடும் அலையும் மனிதர்கள் என்பதைத்தான் நரக பயமடைந்த மனிதர்கள் என்று கூறுகிறேன். இப்படிப்பட்ட மனிதர்கள் ஆச்வயுஜ மாதம் என்கிற ஐப்பசி மாதத்தில் (துலா மாதம்) நரகசதுர்த்தசியான தீபாவளி தினத்தன்று நீராடினால் அப்படிப்பட்ட மனிதனின் புண்ணியத்திற்கு அளவேயில்லை. அந்த புண்ணியத்தை கணக்கிடவே முடியாது. அப்படி நீராடியவனை கண்டு நரக லோகமே இவனை எப்படி நாம் எடுத்துக் கொள்வது என்று பயப்படுகிறது. பாவங்கள் செய்யத் தூண்டும் இந்திரியங்கள் பலமிழக்கின்றன. இந்த நரகசதுர்த்தசியான தீபாவளியன்று அருணோதய முதல் ஸ்ங்கவம் எனப்படும் உதயாதி ஆறு நாழிகை வரையிலும் அறுபத்து ஆறு கோடி தீர்த்தங்களும் காவிரியில் ஸ்வயமாக விளங்கியிருக்கும். அன்று காவிரியில் ஸ்நானம் செய்து அன்றே காவிரியின் மகாத்மியத்தை ஒரு மனதோடு ஆனந்தமாககேட்பவனின் பாவ வினைகளெல்லாம் நசித்துப் போகின்றன.’’

‘‘வேறென்ன செய்ய வேண்டும் குருநாதா...’’ என்று விநயத்தோடு தேவசர்மா வாய்பொத்தி கேட்டார். ‘‘வேதங்கள் எப்போதுமே தானம் கொடுத்தலைப் பற்றி உரத்துப் பேசுகின்றன. தானம் கொடுப்பவனின் தியாக உணர்வு மேலோங்கி அகங்காரம் நசுக்கப் பெறுகிறான் என்று சொல்கின்றன. அதனால், அன்று வேதமறிந்த அந்தணர்களுக்கு நல்லெண்ணெயை தானமாகக் கொடுத்தால் அந்த எண்ணெயிலுள்ள துளிகளின் அளவிற்கு சமானமான வருஷங்கள் கயிலாயத்தில் சுகமாக இருப்பான். தம்மால் இயன்றளவு  பொருட்களை தானமாகச் செய்பவனுக்கு மோட்சத்தில் இச்சை பிறந்து ஞானவானாக வலம் வருவான்.’’‘‘அப்படி யாரேனும் தானம் செய்திருக்கிறார்களா. புராணத் தகவல்கள் ஏதேனும் உண்டா’’ தேவசர்மா உடனடியாகக் கேட்டார். ‘‘ஏன் இல்லை. முன்பொரு காலத்தில் செல்வந்த தம்பதியர் வசித்துவந்தனர். அதில் அந்த வீட்டுப் பெண்மணிக்கு மிகக் கடுமையான தலைவலி வெகுநாட்களாகவே இருந்து வந்தது. விடிந்தால் தீபாவளி. என்ன செய்வதென்று தெரியாமல் வைத்தியனை அழைத்தாள். வைத்தியனும் வந்தான்.

வெகு நாட்களாக எண்ணெய் தேய்த்துக்கொள்ளாமல் இருந்திருக்கிறீர்கள். இப்பொழுதே எண்ணெய் தேய்த்து நீராடுங்கள். தானாகச் சரியாகும் என்று சொன்னான்.
அந்தப் பெண்மணியும் துலாமாத கிருஷ்ண பட்ச நரக சதுர்த்தசியன்று நடுநிசிக்கும் விடியலுக்கும் நடுவேயுள்ள காலத்தில் எண்ணெய் தேய்த்து நீராடினாள். சட்டென்று தலைவலி நீங்கியது. அந்த மகிழ்ச்சியில் அப்போதே வைத்தியனுக்கு அரிசி, பணம் போன்றவற்றுடன் தாம்பூலத்தையும் கொடுத்தாள். அந்த புண்ணியத்தின் மகிமையாலேயே அவள் எந்தவித தியானமோ, மோட்சத்தில் இச்சையோ எதுவும் இல்லாமலேயே ஞானம் பெற்று சர்வேஸ்வரனோடு கலந்தாள். கேட்டது தலைவலிக்கான தீர்வு. கிடைத்ததோ சம்சார நிவர்த்திக்கான மோட்சம். ஏனோ அன்று மட்டும் சர்வேஸ்வரன் யாருடைய தகுதியையும் பார்க்காமலேயே தன்னோடு சேர்த்துக்கொள்கிறான். இப்படியாவது என்னை வந்து சேரட்டுமே என்றிருக்கிறான் போலிருக்கிறது. அதாவது நரகபீடையெனும் மற்றொரு பிறவி எடுத்தலையே இந்த நரகசதுர்த்தசியன்று செய்யும் காவிரி ஸ்நானம் தடுத்துவிடுகிறது. இதைவிடவும் இன்னொரு கதையை கூறுகிறேன் கேள்’’ என்றார்.
தேவசர்மாவின் காதுகளுக்குள் காவிரி மகிமையும் குளுமையும் பரவியபடி இருந்தது. காவிரியின் சரிதமே ஆனந்தத்தை அளித்தது.

நிச்சயம் காவிரியின் முன்பு நின்று இப்பேற்பட்ட பெருமை பெற்றவளா நீ என்று கைகூப்பி தொழ வேண்டுமென்கிற ஆவல் பொங்கியது. ‘‘தேவசர்மா.... இப்போது நரகசதுர்த்தசியின் இன்னொரு மகிமையை சொல்கிறேன் கேள். ஓர் வணிகன் நரக சதுர்த்தசியன்று விடியற்காலைக்கு முன்பேயே எண்ணெய்க் குடத்தை தலையில் வைத்து விற்றுக்கொண்டிருந்தான். அந்தக் குடத்தின் அடியில் சிறிய துவாரம் இருந்தது. அதிலிருந்து சொட்டுச்சொட்டாக எண்ணெய் கசிந்து அவனின் தலைவழியாக உடல் முழுவதும் பரவியது. வியாபாரத்தை முடித்துவிட்டு ஸ்நானம்செய்தான். தற்செயலாக ஒரு வேதியனுக்கு அரிசியோடு சேர்த்து பணத்தை தானமாகக் கொடுத்தான். அந்த புண்ணிய பலனே அவனை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றது. இதை ரிஷிகள் எல்லோரும் நேரடியாக தரிசித்தார்கள். யதேச்சையாக எந்த பலனையும் எதிர்பார்க்காமல் செய்தால் கூட அந்த நாளின் மகத்துவத்தால் மோட்சத்திற்கும், சொர்க்்கத்திற்கும் தானாக அந்த ஜீவன் செல்லும்’’

‘‘சத்குருவே... ஸ்ரீகிருஷ்ணர்கூட இந்த ஐப்பசி நரகசதுர்த்தசியன்று காவிரியில் நீராடினாராமே’’‘‘ஆமாம்... ஆமாம்... நரகாசுரனை ஸ்ரீ லட்சுமி தேவியை முன்னிட்டுக் கொண்டு வதம் செய்துவிட்டபின் வீரஹத்தி என்கிற பாவம் பெண்ணுருவம் கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரை தொடர்ந்தது. அதை ஒழிப்பதற்காக கயிலைக்கு சென்று ஈசனை நமஸ்கரித்தார். இந்த வீரஹத்தியை தொலைக்க என்ன செய்ய வேண்டுமென்று வினவினார். கயிலையிலிருந்த ஈசன் நேரடியாக காவிரியை காண்பித்து, இந்த துலா மாதமான ஐப்பசி மாதத்தில் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில் நீராடினால் தானாக அந்த பாவம் கரைந்துபோகுமே என்றார். சரி இந்த விஷயம் ஸ்ரீ கிருஷ்ணருக்கு தெரியாதா என்று கேட்கலாம். ஆனால், பரமசிவனே காவிரியின் கீர்த்தியையும் பெருமையையும் மகிமையையும் சொல்லட்டுமே என்று ஸ்ரீ கிருஷ்ணர் கேட்டார். ஒருவருக்கு இருவராக இப்படிப்பட்ட தெய்வ புருஷர்கள் கூறும்போதுதான் மானிடர்களுக்கும் அந்த விஷயத்தில் நம்பிக்கை பெருகும் என்பதற்காகவே புராணங்களில் தெய்வமே தெய்வத்திடம்போய் கேட்பதுபோல் அமைந்திருக்கிறது. கேட்டது மட்டுமல்லாமல் ஸ்ரீ கிருஷ்ணரும் காவிரியில் அந்த தினத்தில் வந்து ஸ்நானம் செய்தார்.

அதோடு மட்டுமல்லாது யதாசக்தி என்பார்களே அதுபோல ஒவ்வொருவராலும் அன்றைய தினம் என்னென்ன முடியுமோ அதை தானமாகச் செய்தால் இன்னும் நன்மையை அதிகரிக்கச் செய்யும்’’ என்று சுமந்து முனிவர் தேவசர்மாவிற்கு கூறி முடித்தார். தேவசர்மா சுமந்து முனிவர் கூறிய காவிரி மற்றும் நரகசதுர்த்தசியின்று காவிரியில் நீராடலை குறித்து கேட்டு ஆனந்தமானான். மீண்டும் நமஸ்கரித்து விடைபெற்று நேராக காவிரியை நோக்கிப் பயணமானான். நரகசதுர்த்தசியின் நடுநிசியில் காவிரி மகாத்மியத்தை மனதால் நினைத்து நீருக்குள் மூழ்கினான். சகல தீர்த்தங்களும் காவிரியோடு சேர்ந்திருப்பதை தன் திவ்யமான பார்வையில் பார்த்து ஆனந்தமடைந்தான்.

தொகுப்பு: வெ. கிருஷ்ணமூர்த்தி

Tags : Diwali ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...