×

கேதார கௌரி விரதம்

14-11-2020

உமையவள் தவமிருந்து சிவபெருமானின் உடலில் இடப்பக்கத்தைப் பெற மேற்கொண்ட தபசே, கேதார கௌரி விரதம். இந்த விரதத்தை, தற்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கடைபிடிக்கின்றனர். அவரவர் குடும்ப வழக்கப்படி கேதார கௌரி விரதத்தை
கடைபிடிக்கலாம். ஸ்ரீஉமா தேவி, தென்னாடுடைய சிவனாரை நினைத்து 21 நாட்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்ததால், இந்த பூஜையின் போது 21 எண்ணிக்கையில் அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, அதிரசம் என பூஜைப் பொருட்களை வைத்து, கலசம் வைத்து பூஜிக்கவேண்டும். இந்த பூஜையை 21 நாட்கள் செய்யவேண்டும்.

எனவே அவரவர் வசதிக்கேற்ப 21 நாட்களோ, 9 நாட்களோ, 5 நாட்களோ, 3 நாட்களோ அல்லது ஐப்பசி அமாவாசையன்றோ கேதார கௌரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபடுங்கள். ஆண்களும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கலாம். முதல் 20 நாளும் ஒரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி, இறுதி நாளாகிய சதுர்த்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்னர் விரதத்தை முடிக்கலாம்! தீபாவளி அன்று நோன்பிருப்பவர்கள் நாள் முழுவதும் உபவாசமிருந்து ஓம் நமசிவாய... சிவாய நம ஓம்... என்ற மந்திரம் ஜெபித்து, மாலை பிரதோஷ காலத்தில் நோன்பை முடிக்க வேண்டும். பூஜைக்காக முதலில் மஞ்சளில் பிள்ளையார் செய்து, அதற்கு சந்தனம், குங்குமம், புஷ்பம், அறுகம்புல் சார்த்தி, விநாயகரை பதினாறு நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்து, பின்னர் தூப தீபம் காட்டி தாம்பூலம், நைவேத்தியம் செய்து தீபாராதனையானதும் கேதாரீஸ்வரரை ஆவாகனம் செய்து வழிபடலாம்!
பூஜையில், முனை முறியாத விரலி மஞ்சள், வெற்றிலை, கொட்டைப் பாக்கு, அரளிப்பூ, அரளி மொட்டு, இலை, வாழைப்பழம், அதிரசம், வகைக்கு நாளுக்கு ஒன்று எனும் வீதமாக, 21 வகைகளை சமர்ப்பணம் செய்து, எலுமிச்சை பழம் இரண்டு, நோன்புக் கயிறு சார்த்தி, தேங்காய் இரண்டு (ஒன்று குல தெய்வத்திற்கு) கருகுமணி, காதோலை, சீப்பு, கண்ணாடி சமர்ப்பித்து, பிரசாதமாக 21 அதிரசம், அப்பம் அல்லது சொய்யம், வடை முதலியன நைவேத்தியமாக சமர்ப்பித்து, தேங்காய் உடைத்து புஷ்ப அர்ச்சனை செய்து, தூப தீபம் காட்டி நைவேத்தியம் தாம்பூலம் சமர்ப்பித்து கற்பூர தீபாராதனை காண்பித்து நோன்புக் கயிறை கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.

சிலர் வீட்டிலேயே கலசம் நிறுத்தி பூஜையை மேற்கொள்வார்கள். சிலர், பூஜைக்கான எல்லா வேலைகளையும் செய்துவிட்டு பூஜை பொருட்கள் மற்றும் நோன்புக் கயிறை ஆலயத்துக்கு எடுத்துச் சென்று, அங்கே பூஜித்து, கட்டிக் கொள்வார்கள். இந்தப் பூஜையை ஆத்மார்த்தமாகச் செய்தால், கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். இல்லறம் சிறக்கும். செல்வம் செழிக்கும்!

தொகுப்பு: எஸ். பவித்ரா ராஜ்

Tags : Kedar Gauri ,
× RELATED சுந்தர வேடம்