×

செந்தூரானின் அருளலையில் உதித்த வென்றி மாலைக் கவிராயர்!

‘கயிலைமலையனைய செந்தில்’ என்றும் ‘மஹா புனிதந்தங்கும் செந்தில்’ என்றும் அருணகிரியாரால் போற்றப்பட்ட திருத்தலம் செந்தூர். சூரபத்மனை வென்று பின் முருகப்பெருமான் இங்கு குடிகொண்டதால் ஜெயந்திபுரம் என்றும் அழைக்கப்படும் இத்தலம் எண்ணற்ற அற்புதங்களைத் தன்னுள் கொண்டது.

அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் சிவபெருமானாகத் தோன்றி நடன தரிசனம் அளித்த திருத்தலம்; முருகன், ‘‘தன் இஷ்ட தெய்வமான திருமாலைத் தவிர வேறு தெய்வங்களைப் பாடுவதில்லை’’ என்றிருந்த வைணவரைத் தடுத்தாண்டு, தன் மீது ‘சிறை விடு அந்தாதி’ எனும் நூலை பாடும்படிச் செய்த தலம்; ஷண்முகர், தன் பக்தர் கனவில் தோன்றி, இரண்டாண்டு காலமாகக் கடலுக்கடியில் கிடந்த தன்னை காட்டிக் கொடுத்து வெளிக் கொணரச் செய்த புண்ணியபூமி என்று இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம்.

அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல், செந்திலாண்டவன், ஏட்டறிவு சிறிதும் இல்லாத இளைஞனை, வடமொழியிலிருந்த செந்தூர்த் தலபுராணத்தைத் தமிழில் மொழிபெயர்க்கச் செய்த நிகழ்ச்சி இன்றளவும் பெரும் அற்புதமாகப் போற்றப்படுகிறது. அந்த பக்தரின் இயற்பெயர் பற்றி ஏதும் தெரியவில்லை. ஆனால், பிற்காலத்தில் வென்றிமாலைக் கவிராயர் என்ற பட்டம் பெற்றார்.

செந்தூர்க் கோயிலில் ஆராதனை  செய்யும் உரிமை பெற்றவர்கள் 20,000 பேர்; இவர்கள் திரிசுதந்திரர்கள் எனப்பட்டனர். இவர்களுள் ஒருவருக்கு முருகன் அருளால் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. வயதானபின்னும் அவனுக்குப் படிப்பில் நாட்டம் ஏற்படவில்லை. வயது வளரவளர, கோயிலைச் சுற்றுவதையும் அறுமுகனை அடிக்கடி வணங்கி எழுவதையும் தவிர வேறு எதிலும் அவனால் புத்தியைச் செலுத்த முடியவில்லை. தந்தை அவனை கோயில் மடப்பள்ளியில் வேலைக்குச் சேர்த்துவிட்டார். இதுவும் ஒரு புனிதப் பணி ஆதலால் செந்திலோனுடனான அவன் உறவு மேலும் மேம்பட்டது.

ஒரு நாள் நெடுநேரம் இறைத் தியானத்தில் ஆழ்ந்துவிட்ட இளைஞன், குறித்த காலத்திற்குள் நிவேதனத்தை செய்து முடிக்கத் தவறிவிட்டான். கோபமடைந்த கோயில் அதிகாரிகள் அவனைக் கைகால்களைக் கட்டிப் போட்டு அடித்து, வேலையிலிருந்தும் நீக்கிவிட்டனர். உடல் உபாதையினாலும், முருகனுக்குத் தொண்டு செய்ய முடியாமற்போன மன உளைச்சலாலும் கடலை நோக்கி விரைந்தான் இளைஞன். ‘நில், நில்’ என்று பின்னாலிருந்து கேட்ட குரலையும் மதிக்காமல் கடலில் குதித்தான்; ஆனால், பெருகி எழுந்த அலையொன்று அவனை மீட்டுக் கரையில் ஒதுக்கியது. ‘பூமிக்குப் பாரமான எனக்கு இறக்கக்கூடவா சுதந்திரம் இல்லாமற் போயிற்று’’ என்று கதறினான்.’’ அன்பனே!

நீ செவலூர் கிருஷ்ண சாஸ்திரியைச் சென்று பார்; செந்தூர்ப் புராணத்தை அழகிய தமிழில் பாடுவாயாக’’ என்று குரல் எழுந்த திக்கில் பார்த்த போது,
‘‘தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும் திண்கழல் சிலம்புடன் கொஞ்சவே நின் தந்தையினை முன் பரிந்தின் பவுரி கொண்டு நன் சந்தொடமணைந்து நின்றன்பு போலக் கண்டுற கடம்புடன்  சந்த மகுடங்களுங் கஞ்சமலர் செங்கையுஞ் சிந்து வேலும் கண்களு முகங்களுஞ் சந்திர நிறங்களுங் கண் குளிர என்றன் முன் சந்தியாவோ’’ என்ற செந்தூர்த் திருப்புகழில் வருவது போல் கண நேரம் காட்சியளித்து மறைந்தான் கந்தன்.

முருகனின் பெருங்கருணையை எண்ணி வியந்தவாறு செவலூர் சென்று கிருஷ்ண சாஸ்திரியைச் சந்தித்தான் பக்தன். ‘‘என் பக்தன் ஒருவன் வருவான்;’’ வடமொழியிலுள்ள செந்தூர்த் தல மாகாத்மியத்தைப் படித்து அவனுக்குப் பொருளுணர்த்துவாயாக’’ என்று முருகன் இன்று வைகறையில் கட்டளையிட்டான்; அந்த பக்தன் நீர்தானா?’’ என்று கேட்டு மகிழ்ந்த சாஸ்திரிகள் வடமொழிநூலை எடுத்து அதன் பொருளை விளக்கலானார். என்ன அற்புதம்! பக்தர் வாயினின்றும் தூய தமிழில், மடை சிறந்து வெள்ளம் போன்று, 900 பாடல்கள் வெளிவந்தன. வியந்து நின்ற சாஸ்திரிகள் அப்பாடல்களின்  சொல்லாட்சியைக் கண்டு மகிழ்ந்து ‘‘இன்று முதல் நீங்கள் வென்றிமாலைக் கவிராயர் என்று அறியப்படுவீர்கள்’’ என்று கூறி
ஆசீர்வதித்தார்.

சாஸ்திரியாரிடம் பிரியாவிடை பெற்றுத் திரும்பிய கவிராயர், அந்நூலைக் கோயிலில் அரங்கேற்ற விரும்பினார். ‘‘நேற்று வரை மடப்பள்ளியில் வேலை செய்த இவன் செந்தூர்த் தல புராணம் எழுதினானாம்’’ என்று எள்ளி நகையாடிய கோயில் நிர்வாகிகள் அந்நூலை ஏற்க மறுத்தனர். மனம் வெதும்பி, ஏடுகளனைத்தையும் கடலில் வீசி எறிந்த கவிராயர், கரையிலேயே தியானத்தில் அமர்ந்து முருகனடி சேர்ந்தார்.

முன்பு மதுரையில் சம்பந்தப் பெருமானது திருப்பதிகங்கள் எழுதப்பட்ட நூல், வைகையின் நீரோட்டத்தை எதிர்த்துச் சென்று திரு ஏடகத்தில் கரை ஒதுங்கியது. இன்று கவிராயர் இட்ட ஏடுகள் இலங்கைக் கரையில் ஒதுங்கின. அங்கு வந்த முருக பக்தர் ஏடுகளைத் தொகுத்துப் படித்துக் கண்ணீர் பெருக்கினார். ஏடுகளைப் பல்லக்கில் ஏற்றி எடுத்துச் சென்று, மங்கள வாத்தியங்கள் ஒலிக்கத் தம் வீட்டை அடைந்து, ஷோடஸ உபசாரம் செய்ததோடு, நாள்தோறும் பாராயணம் செய்யலானார்.

அக்காலகட்டத்தில், சக்கர சுவாசம் என்ற விஷக்காற்று ஊரெங்கும் பரவியது. செந்தூர்த்தலப் புராண ஏடுகள் வைக்கப்பட்டிருந்த தெருவை அது ஒன்றும் செய்யவில்லை. விவரமறிந்த பல பக்தர்கள், புராணத்தைப் பல பிரதிகள் எடுத்து ஆங்காங்கே அதை அரங்கேற்றினர். விஷக்காற்று மறைந்து பலரும் உயிர் பிழைத்தனர். வென்றிமாலைக் கவிராயரின் நூல் பிற்காலத்தில் தமிழகத்தையும் வந்தடைந்தது.

‘‘பனை ஓலையில் எழுதப்பட்ட நூல் அடைந்த முனை’’ எனும் பொருளில், ஈழ நாட்டில் நூல் ஒதுங்கிய இடம் ‘பனைமுறி’ என்ற பெயரில் உள்ளது.
‘ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் ’ என்பது போல, இங்கு வென்றிமாலைக் கவிராயரின் 898 ஆவது செய்யுளைப் படித்து இன்புறுவோம்.

‘‘நாலாறு குக தீர்த்தந் தன்னை, வேதநாடு  
சகந்நாதர் தமைத் திருமால் தன்னை
மேலான குருபரனை, வீரர் தம்மை,மின்னாரைத்
தோனகதனைச் செவ்வேல் தன்னைப்
பாலான நெடுஞ்சிகரந் தன்னைச் சந்தப்
பருப்பதத்தைத் திரிசுதந்தரத்தர் தம்மை  நூலாரு முனிவீர்தாள் !
ஆண்டு தோறும் சென்றேத்து மெனச்  
சூதன் உவன்றான் மாதோ’’


பொருள் : நூற்களை இடையறாத ஓதியுணர் முனிவர்களே ! இருபத்து நான்கு குக தீர்த்தங்களையும் நான்மறை தேடும் சகந்நாதரையும் , திருமாலையும், மேம்பாட்டால் உயர்ந்த குருபரனான குமரனையும், நவ வீரர்களையும், வள்ளி தெய்வயானையையும், ஞானசக்தியாம் வேற்படையையும், திருக்கோயிலையும், சந்தனாசலத்தையும், திரிசுதந்திரர்களையும் ஆண்டுதோறும் சென்று வழிபடுமின்கள் என்று, சூதமுனி வர், நைமிசாரண்ய முனிவர்கட்குத் திருவாய் மலர்ந்தனர்.’’

‘‘திங்களரவு நதி சூடிய பரமர்
தந்த குமர, அலையே  கரை  பொருத
செந்தினகரில் இனிதே மருவி வளர் பெருமாளே’’
என்று பாடிச் செந்திலாண்டவனைப் போற்றுவோமாக !


தொகுப்பு: சித்ரா மூர்த்தி

Tags : garland ,victory ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் தமிழச்சி...