வள்ளுவரின் வழிநடந்தால் அன்னை லட்சுமி அருள்புரிவாள்!

குறளின் குரல்: 135

திருவள்ளுவர் தம் திருக்குறளில் மிகச்சில தெய்வங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இந்திரனைப் பற்றியும் லட்சுமி தேவியைப் பற்றியும் திருக்குறள் வழியே நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.

'ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும் புளார் கோமான்

இந்திரனே சாலுங் கரி’ (குறள் எண் 25)

- என்கிற குறள் இந்திரனைப் பற்றிப் பேசுகிறது. ஐம்புலனை அடக்கிய தவ முனிவர்களின் ஆற்றலுக்கு வானகத்தோரின் அரசனான இந்திரன் வாழ்வே சாட்சி என்கிறது, குறள். கெளதம முனிவரால் இந்திரன் சாபம் பெற்ற கதை இங்கு நினைவுகூரப்படுகின்றது.லட்சுமி தேவியைப்பற்றிச் சொல்லும் வள்ளுவர் அன்னை லட்சுமியை 'செய்யாள்’, 'செய்யவள்’ 'தாமரையினாள்’`திரு’ என்று பல பெயர்களால் குறிப்பிடுகிறார்.

'அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்!’ (குறள் எண் 84)

மலர்ந்த முகத்துடன் விருந்தினர்களை வரவேற்று நல்ல முறையில் உபசரிக்கிறவர்களின் வீட்டில் லட்சுமிதேவி அவன் உள்ளம் மகிழுமாறு வாசம் செய்வாள்.

இந்தக் குறள் நடைமுறையிலும் செயல்படுவதை நாம் பார்க்க முடியும். வரும் விருந்தினர்களை நல்ல முறையில் உபசரிப்பவர்களுக்கு அந்த விருந்தினர்கள் மிக நெருங்கிய நண்பர்களாகி விடுகிறார்கள். இயல்பாகவே எல்லா உதவிகளையும் அவர்கள் மனமுவந்து செய்யத் தொடங்குவார்கள். அத்தகைய உதவிகள் கிடைக்கும்போது, பல நல்லவர்களின் கூட்டுறவோடு அவன் செய்யும் எந்தத் தொழிலும் செழிப்படையும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, அவன் செல்வ வளம் பெறுவதும் உறுதிதானே?

'அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்!’ (குறள் எண் 167)

பொறாமை உள்ளவன் வீட்டில் திருமகள் தங்க மாட்டாள். தன் அக்கா மூதேவிக்கு அவள் கைகாட்டி விடுவாள். எனவே, மூதேவிதான் பொறாமையுள்ளவன் வீட்டில் குடிபுகுந்து வாழத் தொடங்குவாள். பொறாமையுள்ளவன் தன்னைவிடச் செல்வ வளம் மிக்கவர்களைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பானே அல்லாது தான் உழைக்கத் தொடங்க மாட்டான். பொறாமையை நீக்கியவன் தன் உழைப்பில் கவனம் செலுத்துவான். எனவே, பொறாமை கொண்டவர்கள் வீட்டில் திருமகள் தங்கமாட்டாள் என வள்ளுவம் சொல்வது உண்மைதானே?

'மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்

தாள் உளாள் தாமரையினாள்!’ (குறள் எண்: 617)

சோம்பல் உள்ளவனிடம் மூதேவிதான் குடியிருப்பாள். சோம்பல் இல்லாமல் அயராது உழைப்பவனின் காலடியில் வாசம் செய்வாள் தாமரைச் செல்வியான திருமகள்.

சோம்பல் உள்ளவனிடம் செல்வம் எப்படி வந்துசேரும்? வறுமைதான் அவன் வாழ்வாக அமையும். கடுமையாக உழைப்பவனிடமே செல்வ வளம் பெருகும். இது என்றும் உள்ள ஓர் உண்மை நிலை அல்லவா?

 

' இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திருநீக்கப் பட்டார் தொடர்பு!’ (குறள் எண்: 920)

இருவகைப்பட்ட மனம் உடைய பொதுமகளிரிடம் கொள்ளும் உறவு, கள்ளுண்ணல், சூதாடுதல் ஆகிய இந்த மூன்று வகையான தீய பழக்கங்களைக் கொண்டிருப்பவர் யாராயினும் அவரை விட்டு லட்சுமி தேவி விலகிவிடுவாள். அவர்கள் ஒருபோதும் செல்வ வளம் பெற இயலாது. பரத்தையர் சகவாசம் உடல்நலனையும் பொருள் வளத்தையும் அழிக்கக் கூடியது. கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய பாடல், பரத்தையர் எப்போதும் பொருளையே நாடுவர் என்பதை விளக்குகிறது.

'கதவைச் சாத்தடி - கையில்

காசில்லாதவன் கடவுளானாலும்

கதவைச் சாத்தடி...

மதியும் குளிர் நதியும் சடை

மருவியமுக் கண்ணன்

மாயவனாங் கண்ணன் சுப்ர

மண்யன் அவன் அண்ணன்

துதி புரியும் மனிதர்களும்

சொர்ண புஷ்பம் தராவிடில்

துரத்தியடித்து இழுத்து

கதவைச் சாத்தடி...

இரவல் விசிறி மடிப்பு வேட்டிக்கு

இடம் கொடுக்காதே - இயல்

இசை நாடகக் கலைஞர் தமது

இணக்கம் விடாதே!

அறிவில்லார் ஆதரவை

அன்புகொண்டு தேடு

அதனாலே மேம்படும்

அதிர்ஷ்டம் உன்னை நாடும்

பொருள் தருவாரோடு

உறவே கொண்டாடு

பூமிமீது போலியுண்டு

காலியுண்டு ஆளைக்கண்டு

கதவைச் சாத்தடி!’

கள்ளுண்ணலும் சூதாடுதலும் செல்வத்தைத் தொலைக்கும் வழிகள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. சூதாடிச் செல்வத்தைத் தொலைத்த கதைதான் மகாபாரதம். அதில் வரும் பஞ்ச பாண்டவர்களும் மகாபாரதக் கிளைக் கதையான நள சரிதத்தில் வரும் நளனும் சூதாட்டத்தால் அரச வாழ்வை இழந்தவர்கள். எனவே லட்சுமி கடாட்சத்தைப் பெற விரும்புகிறவர்கள் பரத்தைமை, கள், சூது மூன்றையும் நாடக் கூடாது என்பது வெள்ளிடைமலை.

லட்சுமி கடாட்சமாகிய செல்வம் என்பது வெறும் பொருட்செல்வம் மட்டுமல்ல. சரஸ்வதி தேவி தரும் கல்வி கூட ஒருவகை அறிவுச் செல்வம்தானே? அதனால்தான் லட்சுமியை வித்யாலட்சுமி என்ற பெயரிலும் வணங்குகிறோம். சென்னை பெசன்ட் நகரில் அஷ்ட லட்சுமி கோயில் அமைந்திருக்கிறது. எட்டு வகையான லட்சுமி தேவியர் அந்த ஆலயத்தில் தெய்வங்களாகப் பூஜிக்கப்படுகிறார்கள்.

அஷ்ட லட்சுமிகள் யார் யார் தெரியுமா? அவர்களின் வடமொழிப் பெயர்களுக்கு இணையான தமிழ்ப் பெயர்கள் உண்டு. தமிழ்ப் பெயர்களும் எழில் நிறைந்தவை. இதோ அஷ்ட லட்சுமிகளின் நாமங்கள்:ஆதிலட்சுமி (முந்து திரு), தான்ய லட்சுமி (தானியத் திரு), வீர லட்சுமி (திறல் திரு), கஜலட்சுமி (வேழத் திரு), சந்தானலட்சுமி (அன்னைத் திரு), விஜயலட்சுமி (வெற்றித் திரு), வித்யாலட்சுமி (கல்வித் திரு), தனலட்சுமி (செல்வத் திரு).

சீதாதேவியை சீதாலட்சுமி என்றே கூறுகிறோம். அவள் பாற்கடலில் பிறந்த லட்சுமியின் அவதாரம். ராமாயணத்தில் பாதுகை பெறுவதற்காக பரதன் வருகிறான். தான் கொண்டுவந்த ரத்தினங்கள் பதித்த பாதுகையில் ராமனை ஒருமுறை கால்வைத்து நின்று பின் பாதுகையைத் தனக்கு வழங்குமாறு வேண்டுகிறான்.ராமன் சீதாதேவியை அழைத்து பாதுகையின் அழகைக் குனிந்து பார்த்து ரசிக்க வைக்கிறான். பாதுகையை சீதை ரசிக்க வேண்டும் என்பதல்ல ராமனின் நோக்கம். சீதை லட்சுமி அல்லவா? அவள் அயோத்தியை விட்டுக் கானகம் வந்துவிட்டதால் அயோத்தியின் செல்வ

வளம் குன்றாமல் இருக்க வேண்டுமே?

சீதை பாதுகையைப் பார்த்ததால் பாதுகை லட்சுமி கடாட்சம் பெற்றதாக மாறிவிடுகிறது. அந்த லட்சுமி கடாட்சம் பெற்ற பாதுகை அரியணையில் ஏறி ஆட்சி செய்யும்போது அயோத்தியின் செல்வ வளம் குன்றாது. அதன்பொருட்டு ராமன் செய்த சூட்சுமமே அது.இதுபோன்றதொரு சூட்சுமத்தைப் பின்னாளிலும் ராமன் நிகழ்த்துகிறான். சீதை சுந்தர காண்டத்தில் அசோகவனத்தில் இருக்கிறாள். போர் முடிந்து விட்டது. ராமன் வெற்றி பெற்று விட்டான். சீதையை அழைத்துவர விபீஷணனை அனுப்புகிறான் ராமன்.

விபீஷணன் சென்றபின் லட்சுமணன் ராமனைக் கேள்வி கேட்கிறான். அனுமனை அனுப்பாமல் அண்ணியை அழைத்துவர விபீஷணனை அனுப்பியது ஏன் என்பதே அவன் கேள்வி. அதற்கு ராமபிரான் இரண்டு காரணங்களைக் கூறுகிறான். ஒன்று, இலங்கையில் சீதையைச் சிறை வைத்தது முந்தைய அரசனான ராவணன். எனவே அவளை விடுவிக்கும் கடமை இப்போதைய அரசனான விபீஷணனுக்கே உண்டு என்பது. இன்னொன்று, போரால் மாபெரும் இழப்பு நேர்ந்து இலங்கை தன் செல்வ வளத்தையெல்லாம் இழந்துள்ளது. சீதை லட்சுமி அல்லவா? அவள் பார்வை மன்னன் விபீஷணன் மேல் பட்டால் இலங்கை மறுபடி செல்வ வளம் அடையும் என்பது. லட்சுமி கடாட்சத்தின் மகத்துவம் அத்தகையது.

ராம பட்டாபிஷேகத்திற்குப் பிறகும் சீதை லட்சுமிதேவியே தான் என்பது பற்றிய குறிப்பு ஓர் அபூர்வ ராமாயணக் கதையில் வருகிறது. துணிவெளுப்பவன் சொன்ன அபவாதத்தினால் சீதாலட்சுமி கானகத்திற்கு அனுப்பப் படுகிறாள். லட்சுமி நாட்டை விட்டுப் போனதால் அயோத்தியில் கடும் பஞ்சம் ஏற்படுகிறது. அதனாலேயே அஸ்வமேத யாகம் செய்ய வேண்டிய சூழலும் நேர்கிறது.

இந்தக் கதைப் பகுதி மூலம் ராமாயணம் இன்னொரு நீதிக் கருத்தையும் வலியுறுத்துகிறது. பெண்கள் மீது பொய்யான குற்றச் சாட்டுகளைப் பரப்புபவர்கள் வாழும் நாட்டில் செல்வ வளம் இருக்காது என்பதே அந்த நீதி. சரஸ்வதிக்கென்று சரஸ்வதி பூஜை என ஒரு நாள் வைத்து அன்னை சரஸ்வதியை பூஜித்து வழிபடுகிறோம். அதுபோல் லட்சுமி தேவிக்கும் ஒரு தினம் உண்டு. அந்த தினமே வரலட்சுமி விரத தினம். விரதமிருந்து லட்சுமியைக் குறிப்பிட்ட நாளன்று வழிபடுபவர்கள் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஆன்மிகவாதிகளின் நம்பிக்கை.

அலைமகள், கலைமகள், மலைமகள் என முப்பெருந்தேவியரைக் குறிப்பிடுகிறோம். அலைமகள் என்பவள் பாற்கடலின் அலைகளின் இடையே தோன்றிய லட்சுமி தேவி. கலைமகள் என்பவள் எல்லாக் கலைகளுக்கும் அதிபதியான சரஸ்வதி தேவி. மலைமகள் என்பவள் மலையனைய சக்தி படைத்தவளும் மலையத்துவசன் மகளாய்ப் பிறந்து இமய மலையில் குடியிருக்கும் சிவபெருமானை மணந்தவளுமான பார்வதி தேவி.

லட்சுமிதேவியை அலைமகள் எனக் குறிப்பிடுவதில் இன்னொரு பொருளும் உண்டு. அவள் அலைகளையுடைய பாற்கடலில் பிறந்தவள் மட்டுமல்ல. ஓர் இடத்தில் நில்லாமல் அலைபவளும் அவளே. பணம் ஓரிடத்தில் நிரந்தரமாய்த் தங்காமல் இடம் விட்டு இடம் ஓடிக் கொண்டே இருக்கிற தன்மை உடையது அல்லவா? எனவே அவள் அலைமகளாகிறாள்.

என்.எஸ். கிருஷ்ணனின் 'எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்'என்ற புகழ்பெற்ற திரைப்பாடல், ஓரிடத்திலும் நில்லாத பணத்தின் தன்மையைப் பற்றி விரிவாகப் பேசுகிறது.

'கறுப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ

கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ

கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ

அண்டின பேர்களை ரெண்டும் செய்யும் பணத்தை

எங்கே தேடுவேன்...’

அன்னை லட்சுமி தேவியைத் திடமான மனத்தோடு தியானம் செய்தால் செல்வ வளம் பெறலாம் என்கிறார் மகாகவி பாரதியார்.

'செல்வத் திருமகளைத் திடம்கொண்டு

சிந்தனை செய்திடுவோம்!

செல்வமெல்லாம் தருவாள் - நமதொளி

திக்கனைத்தும் பரவும்!’

லட்சுமிதேவியின் எழில்நிறைந்த சித்திரத்தையே ஒரு கவிதையில் பாரதியார் சொல்லோவியமாகத் தீட்டிக் காண்பித்து விடுகிறார்.

'பாற்கடலிடைப் பிறந்தாள் - அது

பயந்த நல் அமுதத்தின் பான்மைகொண்டாள்

ஏற்குமோர் தாமரைப்பூ - அதில்

இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்

நாற்கரந் தானுடையாள் - அந்த

நான்கினும் பலவகைத் திருவுடையாள்!

வேற்கரு விழியுடையாள் - செய்ய

மேனியள் பசுமையை விரும்பிடுவாள்!’

*'இருளும் ஒளியும்'திரைப்படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பி.சுசீலா குரல்களில் ஒலிக்கும் கண்ணதாசன் திரைப்பாடல் ஒன்று திருமகளைப் போற்றிப் புகழ்கிறது.

'திருமகள் தேடி வந்தாள் இன்று

புதுமனை குடிபுகுந்தாள்

குலமகள் குங்குமத்தில் தேவி

கோவில்கொண்டாட வந்தாள்!

மங்கல மங்கையர் குங்குமமும் அவர்

மஞ்சளும் தாலியும் மனையறமும்

பொங்கி நலம்பெற அருள்புரிவாள் எங்கள்

புதுமனை வாழ்வில் வளம் தருவாள்! ’

*வாரியார் சுவாமிகள் செந்தாமரைப் பூவில் லட்சுமி தேவி வீற்றிருப்பாள் என விவரித்துப் பேசிக் கொண்டிருந்தபோது ஓர் அன்பர் எழுந்து கேள்வி கேட்டார்:

'சுவாமி! தாமரைப் பூவோ மிக மிக மென்மையானது. லட்சுமி தேவி எவ்வளவுதான் பெரிய தாமரைப் பூவென்றாலும் அதில் எப்படி வீற்றிருக்க முடியும்? தாமரை மலர் எப்படி அந்த கனத்தைத் தாங்கும்? ’ கேள்வி கேட்ட அன்பரைக் கனிவோடு பார்த்த வாரியார் சுவாமிகள் சிரித்தவாறே விளக்கலானார்:

'தேவர்களுக்கு நம்மைப் போல் எலும்பாலும் சதையாலுமான உடல் கிடையாது. அவர்கள் ஒளியுடல் படைத்தவர்கள். அவர்களுக்கு எடையே கிடையாது. நளனது சுயம்வரத்தில் தமயந்தி நளனைப் போலவே இருந்த தேவர்களிடமிருந்து தன் காதலனான நளனை எப்படிக் கண்டுபிடித்தாள் தெரியுமா? தேவர்கள் உடலில் ஒளி ஊடுருவியதால் அவர்களின் நிழல் கீழே விழவில்லை. மனித நளனின் நிழல்தான் கீழே விழுந்தது என்கிறது நளபுராணம். லட்சுமிதேவியும் ஒளியுடல் படைத்த தேவிதான். எடையே இல்லாதது ஒளியுடல். எனவே செந்தாமரையில் லட்சுமி வீற்றிருப்பதில் எந்தச் சங்கடமும் இல்லை!’சரியான விளக்கத்தைத் தெரிந்துகொண்ட அன்பர் கைகூப்பி வணங்கினார்.

அன்னை லட்சுமிதேவியை மன ஒருமைப்பாட்டோடு வழிபடுவதாலும் சோம்பல் இல்லாது அயராமல் உழைப்பவனின் காலடியில் தான் லட்சுமி தேவி வாசம் செய்வாள் எனத் திருவள்ளுவர் சொன்ன கருத்தை ஏற்று ஓயாமல் உழைப்பதாலும் அனைவரும் லட்சுமி கடாட்சம் பெற முடியும். செல்வ வளத்தை மட்டுமல்ல, அஷ்ட லட்சுமிகளின் அருளால் அனைத்து மங்கலங்களையும் பெற்று ஆனந்தமாக வாழ முடியும்.

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

Related Stories:

>