குரு பெயர்ச்சி பொதுப்பலன்கள்

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

நிகழும் மங்கள கரமான ஸ்ரீசார்வரி வருஷம் ஐப்பசி மாதம் 30-ஆம் நாள். ஆங்கில தேதி 15.11.2020 அன்று சுக்கில பட்ச பிரதமையும், அனுஷ நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு 9.48 மணியளவில் மிதுன லக்கினத்தில் குரு பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சி சஞ்சார காலம் ஏறத்தாழ ஒரு ஆண்டாகும். அதன் பிறகு பிலவ வருடம், ஐப்பசி மாதம் 27-ஆம் நாள், 13.11.2021 சனிக்கிழமை அன்று கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள்

ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகமாக பலன் தரக்கூடியவர் வியாழன் என்று அறியப்படும் குரு பகவான். இவருக்கு பல அதிகார, ஆதிக்கங்கள் இருந்தாலும். தனம் என்ற பணத்திற்கும் புத்திரயோகம் என்ற குழந்தை பாக்கியத்திற்கும் கர்த்தாவாக இருப்பவர். தெய்வீக அறிவிற்கும், வேதாந்த ஞானத்திற்கும் மூலப்பொருளாக உள்ள கிரகம் குருவாகும். வேகம், விவேகம், அந்தஸ்து, ஆற்றல் தரக்கூடியவர். சாதனைகள் செய்ய வைப்பவர், நல்லோர் சேர்க்கையையும், நாடாளும் யோகத்தையும், சகல  சாஸ்திர ஞானத்தையும் அருளக்கூடியவர். பொன்னன் என்று அழைக்கப்படும் இவருக்குரிய உலோகம் தங்கம் எனும் பொன். கஜானாவை (வங்கி) விளங்க வைப்பவர் உயர்ந்த ரத்தினமான புஷ்பராகத்திற்கு உரிமை உடையவர்.

இந்த வருட குருபெயர்ச்சி, குரு பகவான் தன்னுடைய நீச வீடான மகர ராசிக்குள் பிரவேசம் செய்கிறார். 12-ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நீச ராசி சஞ்சாரம் இருக்கும். இந்த வருடம் சனியுடன் இணைந்து இருப்பதால். இந்த குரு பெயர்ச்சி பரிவர்த்தனை யோகத்திலும் அதன் பிறகு சனி, குரு இருவரின் சேர்க்கை காரணமாக, நீச்சன் நின்ற ராசி நாதன் ஆட்சி உச்சம் பெற்றிடில் நீச்ச பங்க ராஜயோகம் என்ற அமைப்பு குருவிற்கு உண்டாகிறது. இந்த மகர குருவின் பொதுப் பலன்களை பார்க்கும் போது உலக அரங்கில் இந்தியா மிகவும் பலம் வாய்ந்த நாடாக நிமிர்ந்து நிற்கும். இந்திய ராணுவத்தின் பலம் அதிகரிக்கும். புதிய ராக்கெட்டுக்கள், ஏவுகணைகளை இந்தியா தயாரிக்கும்.

கொரோனா வைரஸ், மற்றும் பல தொற்று நோய்கள் கட்டுக்குள் வரும். குரு, சந்திரனின் வீட்டைப் பார்ப்பதும், சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும் நல்ல விஷயமாகும். மக்களிடையே ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கும். இயற்கை உணவு பாரம்பரிய உணவு வகைகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வரும். குருவின் ஜல ராசி அமைப்பு காரணமாக இடி, மின்னல், சூறாவளிக்காற்றுடன் மழை பொழியும், அதிகாலை நேரத்திலும், அஸ்தமன நேரத்திலும் மழை கொட்டும் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக அதிகரிக்கும். மத்திய அரசின் கை ஓங்கும், பல புதிய திட்டங்கள் வரும். மத, இனக்கலவரங்கள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பிரச்னைகள் இருக்காது.

அரசு அதிகாரம், நீதிமன்ற தலையீடு காரணமாக எல்லாவற்றிற்கும் நல்ல தீர்வு உண்டாகும். பொருளாதாரம் படிப்படியாக ஏற்றம் அடையும். வியாபாரிகள், விவசாயிகள் நல்ல பலன் அடைவார்கள். கல்வி வகையில் முன்னேற்றம், வளர்ச்சி இருக்கும். நீண்ட கால நதிநீர் பிரச்னைகள் தீரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் கோயில், புண்ணிய தலங்களில் கூட்டம் அதிகரிக்கும். சந்நியாசிகள், ஆன்மிக வாதிகளுக்கு பல சலுகைகள் கிடைக்கும். கோயில் அறநிலையத்துறை சம்பந்தமாக புதிய நடைமுறைகள் வரும்.

அரசாங்கத்திற்கு பூமிக்கு அடியில், கடலில் புதையல் கிடைக்கும். மருத்துவ துறையில் புதிய மருத்துகள், தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வரும். இயற்கை மருத்துவம், சித்தா, யுனானி, ஆயுர் வேதம் சம்பந்தமான மருத்துவம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும். ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி அடையும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் தொழில் கை கொடுக்கும். விவசாயம், விவசாயம் சார்ந்த விஷயங்கள் அபிவிருத்தி அடையும். பொதுவாக எல்லா பிரச்னைகளுக்கும் நல்ல விடிவு காலம் பிறக்கும். இந்த குரு பெயர்ச்சி எல்லோருக்கும் நல்ல மாற்றங்கள், ஆரோக்கியம், ஐஸ்வர்யத்தை தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, வணங்கி பிரார்த்திக்கிறேன். 

Related Stories:

>