×

புட்லூர் பகுதியில் ரயில்வே மேம்பால பணிகள்; விறுவிறு விரைவில் திறக்க ஏற்பாடு

திருவள்ளூர்: புட்லூர் பகுதியில் ரயில்வே மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எனவே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை – அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் திருவள்ளூருக்கு முந்தைய ரயில் நிலையம் புட்லுார். இந்த புட்லுார் ரயில் நிலையத்தின் அருகே ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் வழியாக, தினமும், ஆயிரக்கணக்கான மக்கள், வேலை, மருத்துவ சிகிச்சை, அங்காளம்மன் கோயில் உள்ளிட்ட தேவைகளுக்காகவும் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கடந்து செல்கின்றனர். இந்த ரயில் தண்டவாளம் வழியாக நாள்தோறும் 250க்கும் மேற்பட்ட புறநகர் ரயில் சேவை மற்றும் விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், காலை, மாலை நேரங்களில், நீண்ட நேரம் ரயில்வே கேட் மூடப்படுகிறது. இந்த சமயத்தில் அவசர பணிக்கும் மருத்துவ தேவைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. இதனால் புட்லூர் ரயில் நிலையம் அருகில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதே நேரத்தில் புட்லூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால் சென்னை மார்க்கத்தில் இருந்து வரும் பக்தர்கள், திருத்தணி அரக்கோணம் மார்க்கத்தில் இருந்து வரும் பக்தர்கள் அனைவரும் இந்த ரயில்வே கேட்டை கடந்து தான் செல்கின்றனர். இதனால் அடிக்கடி ரயில் விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கும் சம்பவமும நடந்துள்ளது. இதனையடுத்து ரயில்வே நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் கடந்த 2015ம் ஆண்டு, காக்களூர் – புட்லூரை இணைக்கும் வகையில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்ட அனுமதி வழங்கினர். இதன்படி, 620 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் உடைய பாலம் கட்டும் பணி அதே ஆண்டு துவங்கியது. ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில், இரண்டு தூண்கள் அமைக்கப்பட்டு, பணி நிறைவடைந்து விட்டது. ஆனால், நெடுஞ்சாலை துறை பகுதியில், 14 தூண்கள் அமைக்கும் பணிக்கு, நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் நீடித்தது. 4 ஆண்டுகளாக போராடி நெடுஞ்சாலைத்துறையினர் நிலங்களை கையகப்படுத்தினர். இதனையடுத்து பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரயில்வே மேம்பாலப் பணிகள் பெருமளவு முடிந்த நிலையில் தற்போது மேம்பால இறக்கத்தில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. எனவே கூடிய விரைவில் புட்லூர் ரயில்வே மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது….

The post புட்லூர் பகுதியில் ரயில்வே மேம்பால பணிகள்; விறுவிறு விரைவில் திறக்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Putlur ,Thiruvallur ,Promotion ,Wrigley ,
× RELATED உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டதால்...