சுக ஸ்தானத்தில் சுக்கிர யோகம்!

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

?என் பேரன் தற்போது பி.இ., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறான். படிப்பில் ஆர்வம் இல்லை. நல்ல முறையில் படிப்பைப் பூர்த்தி செய்வானா? தொழில் மற்றும் எதிர்கால யோக பலன்களை தெரிவிக்கவும்.

- கந்தசாமி, சேலம்.

உங்கள் பேரனின் ஜாதகத்தை துல்லியமாகக் கணிதம் செய்து பார்த்ததில் குரு பகவானின் வக்ர சஞ்சாரமும், வித்யாகாரகன் புதனின் சாதகமற்ற அமர்வு நிலையும் கல்வியில் ஆர்வத்தை குறைத்திருப்பதை உணரமுடிகிறது. உத்திரம் நட்சத்திரம் முதல் பாதம், சிம்மராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் அவருக்கு தற்போது செவ்வாய் தசை நடந்துவருகிறது. லக்னாதிபதி செவ்வாய் 12ல் அமர்ந்து தசையை நடத்துவதால் சிறப்பான பலன்களை தற்போதைய சூழலில் எதிர்பார்க்க இயலாது.

என்றாலும் அவரது எதிர்காலம் என்பது சிறப்பாக இருக்கும். அடுத்தவர்களிடம் கைகட்டி வேலை பார்க்கும் பணியை விரும்பமாட்டார். அவரது ஜாதகப் பலனின்படி சுயதொழில் செய்வதில்தான் ஆர்வம் இருக்கும். கல்விநிலையைப் பற்றி நீங்கள் பெரிதாக கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவர் படிக்கும் படிப்பின் அடிப்படையில் அவரது தொழில் அமையாது. தனது தகப்பனார் சார்ந்த தொழிலை கையிலெடுப்பார். உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் ஜீவன ஸ்தானம் ஆகிய பத்தாம் வீட்டில் பித்ரு ஸ்தான அதிபதி ஆகிய சந்திரன் பித்ரு காரகன் சூரியனின் சாரம் பெற்று அமர்ந்திருப்பதால் மேற்சொன்ன பலன் என்பது உண்டாகிறது.

சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிரன் அவரை என்றென்றும் சுகவாசியாக வாழ துணைபுரிவார். நீங்கள் கடிதத்தில் கேட்டுள்ளபடி அவருக்கு தன்னுடைய சுயசம்பாத்யத்தின் துணைகொண்டு சொந்தவீடு கட்டும் யோகம் என்பதும் உண்டு. பேரனைப் பற்றிய கவலை ஏதும் வேண்டாம். தற்போதைய கிரகசஞ்சார நிலையின்படி அவரது நட்பு வட்டத்தில் கூடுதல் கவனம் கொள்ளுங்கள். நண்பர்கள் மூலமாக பிரச்னையை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளச் சொல்லி அறிவுறுத்துங்கள். மற்றபடி அவரது ஜீவன ஸ்தானம் சிறப்பாக உள்ளதால் எதிர்காலம் என்பது நன்றாகவே அமைந்திருக்கிறது. கவலை வேண்டாம்.

?எங்களுக்கு திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகிறது. முதல் குழந்தை பிறந்து 2 நாட்களில் இறந்துவிட்டது. பின்பு 3 முறை மூன்று மாத கால அளவில்

கருச்சிதைவு ஏற்பட்டது. எங்களுக்கு எப்போது குழந்தை பாக்யம் கிடைக்கும்? எங்கள் திருமணம் உறவு முறையில் நடந்துள்ளது.

- சக்திவேல், திருப்பத்தூர்.

உறவுமுறையில் திருமணம் செய்ததால் பிள்ளைப்பேற்றில் சிரமம் உண்டாகலாம் என்ற கருத்து ஜோதிட சாஸ்திரத்தில் கிடையாது. உங்கள் இருவரின் ஜாதகங்களிலும் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்துள்ள கேது பரம்பரையில் உள்ள பிரச்னையைத் தெரிவிக்கிறது. திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் பிள்ளைப்பேற்றினைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் பாவக அதிபதி செவ்வாய் புத்ரகாரகன் குருவின் வீட்டில் அமர்ந்துள்ளார். அதே நேரத்தில் புத்ர காரகன் குரு வக்ரம் பெற்றுள்ளார்.

பரணி நட்சத்திரம், மேஷராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மனைவியின் ஜாதகத்தில் ஐந்தாம் பாவக அதிபதி சுக்கிரன் மூன்றிலும், புத்ர காரகன் குரு நீசம் பெற்ற நிலையில் எட்டிலும் அமர்ந்திருப்பது அத்தனை உசிதமான நிலை அல்ல. இருவர் ஜாதகங்களிலும் பல்வேறு விதமான இடையூறுகள் காணப்படுகின்றன.

என்றாலும் சந்தானப்ராப்தி என்பது உண்டு என்பதால்தான் முதல் குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் கழித்து இறந்திருக்கிறது. அதன் பின்னர் தொடர்ச்சியாக மூன்று குழந்தைகள் கருவில் உருவாகி மூன்று மாத காலத்தில் கருச்சிதைவும் ஏற்பட்டு வந்திருக்கிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது பரம்பரையில் உண்டான சாபத்தால் இதனை எதிர்கொண்டு வருகிறீர்கள் என்பது புரிகிறது. சிறிது காலம் இந்தப் பிரச்னையை கையில் எடுக்காமல் ஆறப் போடுங்கள்.

உங்கள் இருவரின் ஜாதக பலனின்படியும் தற்போது நடந்து வரும் நேரம் அத்தனை உசிதமாக இல்லாததால் சிறிது காலம் கழித்து குழந்தைப்பேறுக்கு தயாராவது நல்லது. 07.09.2021ற்குப் பின் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று அதன்பிறகு குழந்தைப் பேற்றினைப் பெறுவதே நல்லது. திங்கட்கிழமையும் அமாவாசையும் சேருகின்ற நாட்களில் தம்பதியர் இருவரும் குளித்து முடித்து ஈரத்துணியுடன் அரசமரமும் வேப்ப மரமும் இணைந்திருக்கின்ற இடத்தில் உள்ள நாகருக்கு பூஜை செய்து 108 முறை அஸ்வத்த பிரதக்ஷிணம் செய்து வணங்குங்கள்.

மாதந்தோறும் வருகின்ற அமாவாசை நாட்களில் தம்பதியராக இணைந்து கோயில் வாசலில் அமர்ந்திருக்கும் சாதுக்களுக்கு உங்களால் இயன்ற அன்னதானத்தினையும் செய்து வாருங்கள். பரம்பரையில் உள்ள சாபம் விலகுவதோடு 2022ம் ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் பிள்ளைப்பேற்றினை பெறுவீர்கள் என்பதை உங்கள் இருவரின் ஜாதகங்களைக் கொண்டு தெளிவாக உணர முடிகிறது.

?எனக்கு அப்பா வழியில் பூர்வீகச் சொத்து உள்ளது. எனது தகப்பனார் 2005ல் இறைவனடி சேர்ந்தார். ரியல் எஸ்டேட் புரோக்கர்கள், இடம் வாங்குபவர்கள் வந்து பார்த்துவிட்டு செல்கிறார்கள். ஆனாலும், விற்க முடியாமல் உள்ளது. இதனால் சகோதரர்களிடையே மனஸ்தாபம் ஏற்படுகிறது. எதனால் தடை உண்டாகிறது என்பதை சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும்.

- சுப்ரமணியன், தூத்துக்குடி.

நீங்கள் அனுப்பியிருக்கும் உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்ததில் ஒன்பதாம் பாவக அதிபதி குரு பகவான் நீசம் பெற்றிருப்பதைத் தவிர வேறு பெரிய குறை ஏதும் தென்படவில்லை. உங்கள் ஜாதகக் கணிதத்தின்படி தற்போது குருதசையில் சனி புக்தி நடந்துவருகிறது. சனி வக்ரம் பெற்று புக்தியை நடத்துவதால் சிறிது காலம் பொறுத்திருங்கள். மேலும் ஒன்பதாம் பாவக அதிபதியின் நீசபலம் என்பது முன்னோர்கள் விஷயத்தில் சிறு குறை உள்ளதையும் எடுத்துக் காட்டுகிறது. முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கடன்களை சகோதரர்கள் மற்றும் பங்காளிகள் எல்லோரும் பிரதி வருடந்தோறும் சரிவர செய்து வருகிறீர்களா என்பதை ஒருமுறை பரிசோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.

அவ்வாறு சரிவர செய்யாத பட்சத்தில் அதனை சரிசெய்ய முயற்சியுங்கள். பிரதி மாதந்தோறும் வருகின்ற அமாவாசை நாளில் குடும்ப புரோகிதருக்கு அரிசி, மளிகை சாமான்கள், காய்கறிகள் வாங்கித் தந்து நமஸ்காரம் செய்யுங்கள். குலதெய்வ ஆராதனையையும் தொடர்ந்து செய்து வாருங்கள். பூர்வீகச் சொத்தினை விற்று வரும் தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவு குலதெய்வம் கோயிலுக்குத் தருவதாக பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். 09.03.2021க்குப் பிறகு பூர்வீக சொத்தினை விற்பதில் எந்தவிதமான தடையும் உண்டாகாது என்பதையே உங்களது ஜாதகம் தெளிவாக உணர்த்துகிறது.

?எனது மகள் படிப்பில் ஆர்வம் காட்டுவதில்லை. படிப்பு மற்றும் ஆரோக்யம் ஆகியவற்றில் முன்னேற்றம் காண என்ன செய்ய வேண்டும்? நாங்கள் மிகவும் கவலையாக உள்ளோம்.

- ஜெயா, சேலையூர்.

நீங்கள் அனுப்பியிருக்கும் பிறந்த தேதி, நேரம் ஆகியவற்றைக் கொண்டு உங்கள் மகளின் ஜாதகத்தை கணிதம் செய்து பார்த்ததில் அவர் பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, கடக லக்னத்தில் பிறந்தவர் என்பது தெரிய வருகிறது. தற்போது ஏழரைச் சனி நடந்து கொண்டிருந்தாலும் தசாபுக்தி என்பது நன்றாக உள்ளது. தற்சமயம் நடந்து கொண்டிருக்கும் சுக்கிர தசையில் குரு புக்தி யின் காலம் என்பது அவர் விரும்புவதைப் பெற்றுத் தரும். சுக்கிரன் சுக ஸ்தானம் ஆகிய நான்காம் வீட்டில் ஆட்சிப் பலத்துடனும், பாக்ய ஸ்தானம் ஆகிய ஒன்பதாம் வீட்டில் குரு ஆட்சிப் பலத்துடனும் சஞ்சரிப்பதால் தற்போது நடந்துவரும் நேரம் என்பது மிகவும் சிறப்பான நேரமே.

லக்னாதிபதி சந்திரன் ஆறாம் வீட்டில் செவ்வாய் மற்றும் ராகுவோடு இணைந்திருப்பது என்பது உடல் ஆரோக்யத்தில் சற்று சிரமத்தைத் தரும். உடல் ஆரோக்யம் நன்றாக இருந்தால் கல்வி நிலையும் நன்றாகவே இருக்கும். அதோடு ஏழரைச் சனியின் காலம் உடம்பில் சோம்பல்தன்மையையும் அதிகமாகத் தந்துகொண்டிருக்கும். உங்கள் குடும்பத்தில் அவரை மிகவும் செல்லமாக வளர்த்து வருகிறீர்கள். சின்னஞ்சிறு பெண் என்பதால் அவரும் மிகவும் சுகவாசியாக வளர்ந்துவருகிறார்.

அவரது உடல் சுறுசுறுப்பாக இயங்கும் வகையில் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு ஆகியவற்றில் மிகவும் கவனம் செலுத்துங்கள். வயிற்றுக்கு கேடு விளைவிக்கும் சாக்லேட், பிஸ்கட், ஐஸ்கிரீம், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் தின்பண்டங்கள் எதையும் வாங்கித் தராதீர்கள். அவரது ஜாதக பலனைக் கொண்டு ஆராயும்போது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளாலும் ஹார்மோன்களில் உண்டாகும் மாற்றங்களினாலும் அவதிக்குள்ளாவார் என்பது தெளிவாகத் தெரிகிறது. வீட்டில் சமைக்கப்படும் உணவுகளைத் தவிர வெளியில் விற்கும் உணவுப் பண்டங்களை அவருக்குத் தராதீர்கள்.

பத்தாவது வயதில் இருக்கும் அவர் மீது தற்போது கல்வியைத் திணிப்பதை விட உடல் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஆரோக்யம் நன்றாக இருந்தாலே கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்பதையே அவரது ஜாதகம் நமக்கு உணர்த்துகிறது. தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

ஆன்மிகம், தபால் பை எண். 2908,

மயிலாப்பூர், சென்னை - 600 004

தொகுப்பு: சுபஸ்ரீ சங்கரன்

Related Stories:

>